- சுவிகரிக்கப்பட்டுள்ள 44 தோட்ட மருத்துவ நிறுவனங்களில் 22 மட்டுமே இயங்கி வருகின்றன.
- 44 வைத்தியசாலைகள் காணி சட்டத்துக்கமைய சுவிகரிக்கப்படவில்லை.
- 2005 - 2010 காலகட்டத்தில் தோட்டத்துறை வைத்தியசாலைகளை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகள் இடைநிறுத்தம்.
பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டுமென்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரப்படும் நிலையில் 2007 ஆம் ஆண்டுக்குப்பின்னர் இதுவரையும் எவ்விதமான பெருந்தோட்ட வைத்தியசாலைகளும் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெருந்தோட்ட வைத்தியசாலைகள் உட்பட பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள 450 சுகாதார நிலையங்கள் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டு, அறிக்கையானது சுகாதாரம் மற்றும் மனித சேமநலம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் குறித்த அறிக்கையை சுகாதார அமைச்சிடம் கையளிப்பதற்கும், அதன் பின்னர் பெருந்தோட்ட வைத்தியசாலைகள் உள்ளிட்ட 450 சுகாதார நிலையங்களை பகுதி பகுதியாக சுகாதார அமைச்சின் கீழ் கையகப்படுத்தவும் துறைசார் மேற்பார்வைக்குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் 19.02.2020 அன்று பாராளுமன்றத்தில் சுகாதாரம் மற்றும் மனித நல நோம்புகை, சமூக வலுவூட்டுகை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தோட்ட மருத்துவ அலகுகளை சுவீகரித்தல் பற்றிய அறிக்கையானது, குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜினால் சமர்ப்பிக்கப்பட்டது.
அத்துடன், இந்த நாட்டின் பெருந்தோட்டங்களில் 220,000 இற்கும் கூடுதலான குடும்பங்கள் உள்ளன. பெருந்தோட்டத் துறையிலுள்ள தொழிற்படையின் 90 சதவீதமானோர் பெண்களை உள்ளடக்கியுள்ளதுடன், அந்தப் பிரதேசங்களில் வாழும் பிள்ளைகளினதும் கர்ப்பிணி தாய்மார்களினதும் போக்ஷாக்கு நிலைமையானது நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைவான மட்டத்தில் உள்ளது. ஆதலால், பெருந்தோட்டத்துறையில் சுகாதார வசதிகளை தரமுயர்த்துவதற்கான முன்னுரிமையினை வழங்கும் தேவைப்பாடு இனங்காணப்பட்டுள்ளது. தற்போது பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் கிட்டத்தட்ட 450 தோட்டபுற சிகிச்சை நிலையங்கள் உள்ளதுடன் கூறப்பட்ட சிகிச்சை நிலையங்களை தரமுயர்த்துவதன் மூலம் பெருந்தோட்ட மக்களின் சுகாதார நிலைமையை முன்னேற்றுவதற்கு பிரேரிப்பொன்று செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க, ஏனைய கிராமபுற மற்றும் நகர்புற மக்களுக்கு அரசாங்கத்தினால் சேவைகள் வழங்கப்படுவதைப் போன்ற விதத்தில் சுகாதார சேவைகளை பெருந்தோட்டத்துறை மக்கள் வசதி வாய்ப்பாக பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அரசாங்கத்தின் சுகாதார வலையமைப்புடன் பெருந்தோட்ட சுகாதார வலையமைப்பை ஒன்றிணைக்கும் பொருட்டும் பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் சகல பெருந்தோட்ட சுகாதார நிறுவனங்களையும் கட்டம் கட்டமாக அரசாங்கத்திற்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டும் முன்னாள் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித்த சேனாரத்னவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு 2018.05.15 அன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு தொடர்ச்சியாக 450 பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசுடைமையாக்கி கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் இதுவரையும் எவ்வித திட்டங்களும் முழுமையடையவில்லை என்பதே உண்மையாகும். 1879 இல் ஆளுனரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தோட்டங்களுக்கான மருத்துவ முறை போதியளவானதல்ல எனக் கூறியதுடன் அதை சீர்திருத்துவதற்கான சில விதந்துரைகளையும் செய்தது. 1893 இல் மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குடிவரவு தொழிலாளர் மத்தியில் இடம்பெற்ற மரண விகிதம் நாட்டு மக்கள் மத்தியில் இடம்பெற்ற மரண விகிதம் நாட்டு மக்கள் மத்தியில் நிகழ்ந்த மரணங்களின் விகிதத்தை விஞ்சியிருந்தது. இதனால், மருத்துவனை இறப்பு விகித அளவீட்டு ஆணைக்குழு, தோட்டத் தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக, முடிந்தவரை அவர்களின் வேலைத்தளங்களுக்கு அண்மையில் அவ்வசதிகளை நிறுவ வேண்டும் எனப் பரிந்துரைத்தது. இவ்வாறே 1893 ஆம் ஆண்டில் தோன்றிய 15 மருந்தகங்கள், 1906 ஆம் ஆண்டில் 143 ஆக விரிவாக்கம் பெற்றது. இதன் வாயிலாக தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு அண்மையில் மருந்தகங்கள் நிறுவப்படவேண்டும் என்ற பரிந்துரை செயற்படுத்தப்பட்டது. (பெருந்தோட்டத்துறை சுகாதார நிலை பற்றிய கொள்கை மீள்நோக்கு)
அவ்வாறு ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பெருந்தோட்ட வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்கள் பலவும் அரசாங்கத்தால் பொறுப்பேற்பதற்கான திட்டத்தில் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்தி சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சிடம் தகவல் கோரப்பட்டிருந்த நிலையில் (PA/E&UH/D/05/2020) சிலத்தகவல்களை பெற்றுக் கொள்ளமுடிந்தது. அதனடிப்படையில் 44 பெருந்தோட்ட வைத்தியசாலைகள் 1994 - 2007 வரையான காலப்பகுதியில் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. இறுதியாக 2007 ஆம் ஆண்டு 35 வைத்தியசாலைகள் பெறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட வைத்தியசாலைகளில் கண்டி மாவட்டத்தில் வெஸ்டோல், மடுல்கெல்ல வைத்தியசாலைகளும் நுவரெலியா மாவட்டத்தில் அக்கரப்பத்தனை, டயகம மேற்கு, புரடொப், கோணபிட்டிய, ஹய்பொரஸ்ட், வடக்கு மடகும்புர, முல்லோயா வைத்தியசாலைகளும் பதுளை மாவட்டத்தில் கனவரெல்ல, தம்பேதென்ன, டவுன்சைட், தெமோதர, க்ளெனோர், ஹக்கல, ஹொப்டன், மஹாடோவ, பூணாகலை, ரோபேரி, சரணியா, ஸ்பிரிங்வெளி, தெல்பேத்த, கிர்க்லீஸ், உனுகல்ல, உடவரிய, யூரி, ஊவா ஹைலண்டஸ், மீதும்பிட்டிய, கேகாலை மாவட்டத்தில் ஹல்கொல்ல, கிரிபொருவ, சபுமல்கந்த, இரத்தினபுரி மாவட்டத்தில் அலுபொல, எந்தான, ராசாகல்ல, மாதம்பே, தும்பர, கிரிபத்கல, சூரியகந்த, பலம்கோட்டை, மாரதென்ன, களுத்துறை மாவட்டத்தில் நிவ்செட்டல், கீகியானகந்த, றைகம் ஆகிய 44 பெருந்தோட்ட வைத்தியசாலைகளே அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கண்டி மாவட்டத்தில் இரண்டும் நுவரெலியா மாவட்டத்தில் ஏழும் பதுளை மாவட்டத்தில் பத்தொன்பதும் கேகாலை மாவட்டத்தில் மூன்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் பத்தும் களுத்துறை மாவட்டத்தில் மூன்றும் உள்ளடங்குகின்றன.
1908 ஆம் ஆண்டு 36 இலக்க மருத்துவ பதிவு (திருத்தச்) சட்டத்தின் கீழ் பிரித்தானிய காலப்பகுதியில் பெருந்தோட்டத்துறை சுகாதாரம் மற்றும் மருத்துவம் கவனிக்கப்பட்டது. ஆனால் இன்று பெருந்தோட்டங்கள் பல தனியார்துறையின் கீழ் இயங்குவதால் தோட்ட நிர்வாகமே சுகாதாரத்துறையை கவனிக்கும் நிலை உருவானது. தற்போதைய பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பிரதி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் 51 பெருந்தோட்ட வைத்தியசாலைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டதுடன், 23 மருத்துவமனைகள் அரசுடைமையாக்கப்பட்டிருந்தன. அதன்பின்னர் எவ்விதமான அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படவில்லை. இன்று பெருந்தோட்டங்களில் 179 மகப்பேற்று விடுதிகளும் 450 பெருந்தோட்ட வைத்தியசாலைகளும் காணப்படுகின்றன. அவற்றை அரசாங்கம் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் அறிக்கை ரீதியாக தயார்படுத்தப்பட்டுவிட்டாலும் இன்னும் செயற்பாட்டு ரீதியாக முன்னெடுக்கப்படவில்லை.
சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, 44 பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அரசுடைமையாக்கப்பட்டிருந்தாலும் அவற்றுக்குரிய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன. அத்துடன் பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு செயற்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்படும் வைத்தியசாலைகள் உள்ளூராட்சி நிறுவனங்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் அவை பிராந்திய சுகாதார நிலையங்களின் கீழ் செயற்பட்டுவருகின்றமையால் அவ்வைத்தியசாலைகளிலுள்ள ஆளணியினர் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் தகவல்கள் காணப்படவில்லை. உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளுக்குத் தேவையான கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவை ஆரம்பக்கட்டத்தில் இருந்து வருகின்றன.
அத்துடன் பெருந்தோட்ட சுகாதார சேவையினை மேம்படுத்துவதற்காக சுகாதார அமைச்சில் தோட்ட மற்றும் நகர சுகாதார பிரிவொன்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளதுடன், அப்பிரிவின் மூலம் தோட்டபுற மக்களுக்கான சுகாதார சேவைகள் முன்னெடுக்கப்படும். பெருந்தோட்ட மக்கள் இலவசமாகவும் தடைகளில்லாமலும் எந்தவொரு அரசாங்க சுகாதார பராமரிப்பு நிலையங்களிலும் பாகுபாடில்லாது நோய்நீக்கும் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம். நாட்டின் பிற பகுதிகளை போன்றே பிரதேச பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் பொது சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் விக்ஷேடமான சுகாதார தேவைகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படுகின்றது. குறிப்பாக ஊட்டச்சத்து விருத்தி மற்றும் தமிழ் மொழியை விருத்திசெய்வதற்காக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான விக்ஷேட பயிற்சிகள் போன்ற நடவடிக்கைகள் பெருந்தோட்ட சுகாதார சேவையினை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் பெருந்தோட்ட வைத்தியசாலை என வகைப்படுத்தவில்லையெனவும் அவையாவன, போதனா வைத்தியசாலை -மாகாண வைத்தியசாலை, மாவட்ட பொது வைத்தியசாலைகள்/மாவட்ட ஆதார வைத்தியசாலைகள், பிரதேச வைத்தியசாலைகள் - அ/ஆ/இ, ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவு என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் மனித நல நோம்புகை, சமூக வலுட்டுகை பற்றிய துறைசா மேற்பார்வைக் குழுவின் தோட்ட மருத்துவ அலகுகளை சுவீகரித்தல் பற்றிய அறிக்கையில், 2017 ஜூலை 07 ஆம் திகதி இடம்பெற்ற மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி பற்றிய உப குழுவின் நான்காவது கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களில் 2005 - 2010 காலகட்டத்தில் நடைபெற்ற தோட்டத்துறைசார்ந்த வைத்தியசாலைகளை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தோட்டத்துறைசார்ந்த 500 வைத்தியசாலைகளை 10 வருடங்களுக்குள் முழுமையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஒவ்வொரு வருடமும் 50 வைத்தியசாலைகளை சுவீகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது தெரிய வந்தது ஆனால் 2008 ஆம் ஆண்டு அப்பொறிமுறை இடைநிறுத்தப்பட்டதாகவும் கைப்பற்றப்பட்ட 50 வைத்தியசாலைகளுள் 35 - 40 எண்ணிக்கை மட்டுமே இயங்கு நிலையில் உள்ளதாகவும் தோட்டத்துறைசார்ந்தவர்கள் தவிர்ந்த இளைய பணியாட்தொகுதி உறுப்பினர்கள் பணியிலிருந்து நீங்கிவரும் நிலை, தோட்ட மருத்துவ உதவியாளர்களுக்கு மேலதிக பயிற்சிகளை பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாமை போன்ற குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2019 செப்டம்பர் 16 ஆம் திகதி சுகாதாரம் மற்றும் மனித நல நோம்புகை, சமூக வலுவுட்டுகை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முப்பத்து ஆறாவது கூட்டத்தில், 59 நிறுவனங்களை கைப்பற்றும் செயற்பாட்டினை (57 அடிப்படை சிகிச்சை அலகுகள் மற்றும் 2 பிரதேச வைத்தியசாலைகள்) 3 வருடங்களுக்குள் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதுடன் மொத்தம் 450 சுகாதார நிறுவனங்கள் 5 வருடங்களுக்குள் சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 அக்டோபர் 23 ஆம் திகதி கூட்டத்தில் இதுவரை அரசாங்கத்தினால் 44 (450) வைத்தியசாலைகள் சுவீகரிக்கப்பட்டுள்ள போதிலும் அவை காணி சட்டத்துக்கு அமைய சுவீகரிக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் கீழ் உள்ள தோட்டங்கள் மற்றும் நகர அலகுகளினால் தோட்ட மருத்துவ அலகுகளுக்கு தேவையான மருந்துகள் வழங்கப்படுகின்ற போதும் ஏனைய மருத்துவ சேவைகளுக்கான வசதிகள் வழங்கப்படுவதில்லை என அவதானிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட வகையில் பெருந்தோட்ட சுகாதார நிலையங்கள் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்படும் பட்சத்தில், பெருந்தோட்ட மக்களுக்கான சுகாதார சேவையினை உயர்த்திகொள்ள முடியுமென்பதுடன் தேசிய சுகாதார கட்டமைப்புக்குள் உள்வாங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். அத்துடன் தற்போது பயிற்சியற்ற நிலையில் தோட்டபுற சுகாதார நிலையங்களில் கடமையாற்றிவரும் உதவியாளர்கள், மருந்தாளர்கள் மேலதிக பயிற்சிகளை பெற்றுக்கொள்ளவும் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும் சந்தர்ப்பமும் ஏற்படும். எனவே அரசாங்கம், சுகாதாரம் மற்றும் மனித நல நோம்புகை, சமூக வலுவூட்டுகை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தோட்ட மருத்துவ அலகுகளை சுவீகரித்தல் பற்றிய அறிக்கையினை செயற்பாட்டு ரீதியில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக