கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

2 மார்ச், 2020

ஆயிரமும் அரசாங்கமும்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்குவது தொடர்பான முத்தரப்பு கூட்டு ஒப்பந்தம் ஜனாதிபதி செயலகத்தில் கடந்த வியாழக்கிழமை காலை 11 மணிக்கும் பகல் 12 மணிக்கும் இடையில் கைச்சாத்திடப்படவிருப்பதாக அறிவிப்புச் செய்யப்பட்ட நிலையில் திடிரென அந்நிகழ்வு இடைநிறுத்தப்படுவதாகவும் எதிர்வரும் வாரத்தில் கைச்சாத்திடப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்க்ஷ தனது தேர்தல் வாக்குறுதிகளில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 1000 ரூபாவாக உயர்த்தப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்த கோட்டாபய ராஜபக்க்ஷ கடந்த ஜனவரி மாதம் தோட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச நாளாந்த சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கு மார்ச் முதலாம் திகதி முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவித்திருந்தார். ஆனால் அந்த 1000 ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கான பொறிமுறை எவையும் முன்வைக்கப்படவில்லை. தற்போதுள்ள கூட்டு ஒப்பந்தமானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் மீண்டும் புதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். தற்போதைய கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்து சம்பளவுயர்வு வழங்கப்படுமாயின் 2023 ஆம் ஆண்டிலேயே ,அடுத்த கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட வேண்டிய நிலை காணப்படும்.

ஜனாதிபதியின் 1000 ரூபா அறிவிப்புக்கு பலரும் ஆதரவு தெரிவித்தாலும் எதிரான வாதங்களும் உண்டு. தற்போது தேயிலை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் 1000 ரூபாவை வழங்க முடியாதென முதலாளிமார் சம்மேளனம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. 1000 ரூபாவை வழங்காவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அரச தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருந்தனர். அவ்வாறு பெருந்தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதும் இலகுவான காரியமாக இல்லையெனவும் முதலாளிமார் சம்மேளனம் அறிவித்திருந்தது. அத்துடன் 1000 ரூபா சம்பள விவகாரத்தில் முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் முன்னுக்குப்பின்னான கருத்துக்களை பிரதமரும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வில் முன்வைத்திருந்தனர்.

’சுபீட்சத்தின் நோக்கு’ என்னும் கொள்கை பிரகடனத்தின் மூலம் பெருந்தோட்டத்துறையில் சேவை புரிபவர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா எனும் ஆகக்குறைந்த ஊதியமொன்றை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2020 மார்ச் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக பெருந்தோட்டத்துறையில் சேவை புரிபவர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா என்னும் ஆகக்குறைந்த ஊதியமொன்றை செலுத்தும் பொருட்டு ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் 2020.01.14 அன்று அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

தற்போதைய 2019 ஆம் ஆண்டுக்கான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாவதற்கு இன்னும் ஒரு வருடங்கள் காணப்படுகின்ற நிலையில் புதிய 1000 ரூபா சம்பள அதிகரிப்பு எந்த அடிப்படையில் வழங்கப்படுமென்ற தெளிவுபடுத்தல்கள் முன்வைக்கப்படவில்லை. தற்போதைய கூட்டு ஒப்பந்தத்தின்படி தொழிலாளர்களுக்கு நாளாந்த கொடுப்பனவு வீதத்தில் உடல் ரீதியாக வேலை செய்யும் தொழிலாளர்கள் செயற்படும் திகதியிலிருந்து பின்வரும் கொடுப்பனவுப் பொதியினைப் பெறுவர் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான வேதனம் ரூபா 700. இதன் மீது EPF மற்றும் ETF நலன்களும் கொடுப்பனவு செய்யப்படும் எனவும் இரண்டாம் பகுதியினர் உடன்படுவதாவது, முதலாம் பகுதியினரால் அடிப்படைச் சம்பளத்தை 40% மாக மீள ஆய்வு செய்தும் வரவு ஊக்குவிப்பு மற்றும் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு ஆகியன தொழிலாளர் பதம் மற்றும் நிபந்தனைகளின் பகுதியாகக் கருதப்படக்கூடாது என எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க தழுவப்பட்ட மற்றும் கட்டுப்பட்ட தொழிலாளர்கள் இதனால் கிடைக்கவுள்ள கொடுப்பனவுகளுக்கு தகைமையற்றவர்கள் ஆவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதோடு நாளொன்றுக்கு ரூபா 50 தொகையான நிலையான விலைப்பங்கு மிகை நிரம்பலும் கிலோவுக்கு மேலான தேயிலைக்கு வீதம் ரூபா 45 ஆக இருக்கும். மேலே குறிப்பிட்ட கொடுப்பனவுகள் EPF,ETF போன்ற விளைவுசார் நலன்களின் கொடுப்பனவுக்காக பணியாளரின் உழைப்பின் பாகமாக அமைய முடியாது. ஞாயிற்றுக்கிழமை ஒன்றில் செய்யும் வேலைக்கு தொழில் தருனர் அடிப்படை வேதனமாக ரூபா 700 இன் 1 1/2 மடங்கையும் நிலையான களுளு ஆன 50 ரூபாவின் 1 1/2 மடங்கையும் கொடுப்பனவு செய்வார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான வேதனம் ரூபா 700. இதன் மீது EPF மற்றும் ETF நலன்களும் கொடுப்பனவு செய்யப்படும். இரண்டாம் பகுதியினர் உடன்படுவதாவது, முதலாம் பகுதியினரால் அடிப்படைச் சம்பளத்தை 40%மாக மீள ஆய்வு செய்தும் வரவு ஊக்குவிப்பு மற்றும் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு ஆகியன தொழிலாளர் பதம் மற்றும் நிபந்தனைகளின் பகுதியாகக் கருதப்படக்கூடாது என எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க தழுவப்பட்ட மற்றும் கட்டுப்பட்ட தொழிலாளர்கள் இதனால் கிடைக்கவுள்ள கொடுப்பனவுகளுக்கு தகைமையற்றவர்கள் ஆவர். நாளொன்றுக்கு ரூபா 50 தொகையான நிலையான விலைப்பங்கு மிகை நிரம்பல். கிலோவுக்கு மேலான இறப்பருக்கு வீதம் ரூபா 45 ஆக இருக்கும். மேலே பந்திகளில் குறிப்பிட்ட கொடுப்பனவுகள் EPF, ETF போன்ற விளைவுசார் நலன்களின் கொடுப்பனவுக்காக பணியாளரின் உழைப்பின் பாகமாக அமைய முடியாது. ஞாயிற்றுக்கிழமை ஒன்றில் செய்யும் வேலைக்கு தொழில் தருனர் அடிப்படை வேதனமாக ரூபா 700 இன் 1 1/2 மடங்கையும் நிலையான களுளு ஆன 50 ரூபாவின் 1 1/2மடங்கையும் கொடுப்பனவு செய்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு 2019 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தில் பிரிவு விதந்துரைக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக  ஏனைய கொடுப்பனவுகள் எதுவும் இருக்காது எனவும் மேலே கூறப்பட்டவாறு தீர்மானிக்கப்பட்ட ஊதியப் பொதியானது (நாளொன்றுக்கான வேதனம்) 2019, தை மாதம் 28 ஆம் திகதியிலிருந்து வலுவுக்கு வந்து தொடர்ச்சியாக குறைந்தது இரு வருட காலத்திற்கு ஏற்புடையதாக இருப்பதுடன் யாதேனும் பங்குபற்றுனரால் மறு பகுதியினருக்கு ஒருமாத அறிவித்தல் கொடுத்து இரத்துச் செய்யப்படாதவிடத்து தொடர்ந்தும் வலுவுள்ளதாக இருக்கும் என பங்காளர்கள் இணங்கி இத்தால் உடன்பட்டுக் கொள்வதாகவும் இவ்வுடன்பாடானது முடிவுக்கு வரும் வரையான நேரம் வரையில் தற்பொழுது ஏற்புடையதாகவுள்ள தொழிலாளர்களின் யாதேனும் நேரடிப் பணக்கொடுப்பனவுகளை அல்லது ஊதியப் பொதியை யாதேனும் முறையில் சேர்க்கவோ, சேர்ப்பதற்கு முயற்சிக்கவோ, மாற்றம் செய்யவோ, திருத்தம் செய்யவோ எப்பகுதியினரேனும் முயலக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இலங்கை தேசிய பெருந்தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் பொதுச் செயலாளர்கள் மற்றும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரினால் கையொப்பமிடப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டுமாயின் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்க தரப்புகள் ஒருமாத அறிவித்தல் கொடுக்க வேண்டும் அல்லது பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்று சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் இரண்டும் மார்ச் முதலாம் திகதிக்குள் நிறைவடையும் வாய்ப்புக்கள் குறைவாகவேயுள்ளன. அதேவேளை 1000 ரூபா சம்பளம் வழங்குவதையும் பெருந்தோட்டங்களை மீண்டும் அரசாங்கத்துக்கு கையளிப்பதையும் இலகுவான விடயமல்லவென முதலாளிமார் சங்கத்தின் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்துள்ளார். ஆனால் 1000 ரூபா வழங்கப்படுமென தொடர்ச்சியாக அரசாங்கம் வலியுறுத்தி கூறிவருகின்றது.

மறுபுறம் 1000 ரூபா சம்பளமானது, அடிப்படைச் சம்பளமாக வழங்கப்படுமா அல்லது மொத்தச் சம்பளமாக வழங்கப்படுமா என்பதில் தொழிலாளர்கள் அதிகளவுக்கு குழப்பமடைந்திருக்கிறார்கள். ஒருவேளை 1000 ரூபா வழங்கப்பட்டுவிட்டால் வேலைநாட்கள் குறைக்கப்பட்டு விடுமோ என்ற கவலையிலும் இருக்கின்றார்கள். அடிப்படைச்சம்பளம் 750 ரூபா வழங்கும்போதே தொழிலாளர்களுக்கான அனைத்து சலுகைகளும் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டன. 1000 ரூபா என்றால் இவையெல்லாம் இன்னும் பெரிதாக இருக்குமே என்று தொழிலாளர்கள் கவலைப்படுவது நியாயமானது. மொத்தச் சம்பளம் 1000 ரூபாவாக மாற்றப்படுமாயின் தொழிலாளர்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை. தற்போது அடிப்படைச் சம்பளத்தில் 40 வீத அதிகரிப்பை மேற்கொண்டு 700 ரூபாவும் தேயிலை மற்றும் இறப்பர் விலைக் கொடுப்பனவாக 50 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 750 ரூபா சம்பளத்துடன் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கான 105 ரூபாவினையும் சம்பளத்துடன் சேர்த்தே 855 ரூபா மொத்த சம்பளமாக காண்பிக்கப்பட்டுள்ளது. எனவே மொத்தமாக 1000 ரூபா சம்பளம் வழங்கப்படுமாயின் இன்னும் 145 ரூபாவே அதிகரிக்கப்பட வேண்டும். மாறாக நாளொன்றுக்கான சம்பளம் 1000 ரூபா வழங்கப்படுமாயின் விலைக்கேற்ற கொடுப்பனவு 50 ரூபா என 1050 ரூபா வழங்கப்படுவதுடன் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன அதிகரிக்கப்படவும் வாய்ப்பிருக்கின்றன.

ஆனால் இவையனைத்தும் தற்போது வரையில் நம்பமுடியாத கதைகளாகவே இருக்கின்றன. இதேவேளை 1000 ரூபா நாளாந்த சம்பளம் நிச்சயம் கிடைக்குமெனவும் கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கடந்த 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். கடந்த வருடம் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்பாக 1000 ரூபா கோரிக்கையானது போராட்டமாக உருவெடுத்திருந்தது. இளைஞர்கள் ஒன்றிணைந்த காலி முகத்திடல், பெருந்தோட்டங்கள் மற்றும் நாடுமுழுவதும் பலராலும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அப்போராட்டங்கள் எவற்றையும் கவனத்தில் கொள்ளமால் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் செயற்பட்டதுடன் இறுதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. தற்போது அரசாங்கம் கம்பனிகளுக்கு கொடுக்கின்ற அழுத்தத்தை அப்போதைய தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் கொடுக்கத்தவறியதுடன் 50 ரூபா அதிகரிப்பினைகூட பெற்றுக்கொடுக்க முடியாத நிலையிலேயே இருந்தார்கள் என்பது யாவருக்கும் தெரிந்த விடயம்.

1000 ரூபா என்பது தோட்டத் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரத்தையும் மாற்றிவிடாது. அதேவேளை இந்த 1000 ரூபா அதிகரிப்பில் தொழிலாளர்கள் நன்மையடையவேண்டுமாயின் வருடத்துக்கு 300 நாட்களுக்கான வேலை நாட்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் (அதாவது மாதத்துக்கு 25 நாட்கள்). தற்போதைய நிலையில் 15 - 20 நாட்கள் வரையான வேலைநாட்களை பெற்றுக்கொள்வதே தொழிலாளர்களுக்கு மிகப்பெரும் பிரச்சினையாக இருக்கின்ற நிலையில் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கியும் வேலைநாட்கள் குறைக்கப்படுமாயின் அதன்மூலம் தொழிலாளர்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை. தற்போது பிரதமர் மற்றும் ஆறுமுகன் தொண்டமானின் இந்திய விஜயத்தின் காரணமாகவே முத்தரப்பு ஒப்பந்தம் பிற்போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இன்னும் உடன்பாடுகள் எட்டப்படவில்லையென்றே தெரிகின்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்துக்கு முன்னராகவே 1000 ரூபா வேதனம் வழங்குவது தொடர்பான திட்டத்தினை முதலாளிமார் சம்மேளனம் கடிதம் மூலம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு அறிவித்திருந்தும் அது நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய 1000 ரூபா சம்பளவுயர்வு அரசியல் நலனுக்கானதெனவும் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்திருந்தார். இவ்வாறு 1000 ரூபாவானது பல்வேறு கட்டங்களில் ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்களை கொண்டிருந்தது. எதிர்வரும் வாரங்களில் 1000 ரூபாவுக்கான வாய்ப்பு தொழிலாளர்களுக்கு கிட்டுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக