க .பிரசன்னா
பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தாலும் தென்னாசிய நாடுகளில் இலங்கையிலேயே பெண்களின் அரசியல் பங்குபற்றுகை மிகக்குறைவாகும். குறிப்பாக மலையகத்தில் பெண்கள் காலங்காலமாக தேயிலை, இறப்பர் தோட்டங்களுக்குள்ளும் குடும்ப பராமரிப்புக்குள்ளும் முடக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். தேசிய மற்றும் உள்ளூர் அரசியல் நீரோட்டத்தில் மலையகப் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகும். கட்சிகள் வேட்பாளர் பட்டியலில் பெண்களின் பெயர்களை உள்வாங்குவதை தவிர்க்கின்றமை சமூகம் விரும்பாமை என்பன அவர்களின் பங்களிப்பு குறைந்திருக்கின்றமைக்கு பிரதான காரணங்களாகும்.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பெண்களுக்கு 25 வீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென உள்ளூராட்சி திருத்தச்சட்டத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டங்களின் மூலமே பெண்களின் பிரதிநிதித்துவத்தை இலங்கையில் அதிகரிக்க வேண்டிய சூழல் காணப்படுகின்றது. இலங்கையிலுள்ள மொத்த வாக்காளர்களில் 51-52 வீதமானவர்கள் பெண்களாக இருக்கின்ற போதும், அரசியல் ஈடுபாடு மற்றும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அவர்களில் பலரும் ஆர்வம் கொள்வதில்லை. அவ்வாறு பெண்களுக்கு ஆர்வம் இருந்தாலும் அதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு அரசியல் கட்சிகள் முன்வருவதில்லை. ஆண்களுக்கே அதிகமுக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் தற்போது பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 9 வீதமாகவும் மாகாண சபைகளில் 4 சதவீதமாகவும் காணப்படுகின்றது. இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின்படி 2 சதவீதமான பெண்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மொத்த வாக்காளர்களில் 51-52 வீதமாக இருக்கின்ற பெண்களுக்கு அவர்களுடைய விகிதாசாரத்துக்கேற்ப தேர்தல்களில் போட்டியிட இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கைகள் மேலெழுந்த நிலையில் தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் 25 வீத இட ஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவை மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றம் வரையில் விஸ்தரிக்கப்பட வேண்டும்.
இலங்கையில் பெண்கள் அரசியல் பிரதிநிதித்துவம் 1931 ஆம் ஆண்டு எடலின் டொனமூர் வெற்றி பெற்றதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் 17 வருடங்கள் கழித்து இலங்கை சுதந்திரமடைந்தது. அன்றுமுதல் இன்றுவரை தேசிய அரசியலில் பெண்களின் பங்குபற்றுகை காணப்பட்டாலும் அவை விகிதாசார ரீதியில் போதுமானதாக இல்லை. நுவரெலியாவை தளமாகக் கொண்ட சிங்களத் தமிழ் கிராமப்புற பெண்கள் ஹெட்வேர்க் அமைப்பானது, 1999 ஆம் ஆண்டு மாகாண சபைத்தேர்தலில் சுதந்திரமான பெண்கள் குழுவாக போட்டியிட்ட முதலாவது அமைப்பாகும். இது சமுதாயம் சார்ந்ததொரு அமைப்பாகும். வறுமை ஒழிப்பு, நுண்நிதிக்கடன், சுகாதாரம், கல்வி, சுற்றாடல் மற்றும் சமாதானம் தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தது. 29,000 உறுப்பினர்களைக் கொண்ட இவ்வமைப்பானது மரக்கறி பயிர்ச்செய்கையாளர்கள் வறுமையானவர்களாகவும் ஒதுக்கிவைக்கப்படுபவர்களாகவும் அப்பகுதியில் இருப்பதை பிரதான உரையாக கொண்டு தேர்தலில் களமிறங்கியது. ஆனால், ஒரு ஆசனத்தைக் கூட பெற்று வெற்றிபெறவில்லை. இதேபோலவே இரு சுதந்திர பெண்கள் குழு 2000 ஆம் ஆண்டு கொழும்பு மாநகரசபைத்தேர்தலிலும் 2006 ஆம் ஆண்டு குருநாகல் பிரதேச சபைத்தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தன. தற்போது பாராளுமன்றத்திலும் மாகாணசபைத்தேர்தலிலும் பெண்களின் அங்கத்துவம் காணப்படுகின்றது. ஆனால் இதுவரையும் மலையகத்திலிருந்து எந்தவொரு இந்திய வம்சாவளி பெண்ணும் பாராளுமன்றம் சென்றதில்லை.
கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த திருமதி அனுஷியா சிவராஜா சுமார் 45,450 வாக்குகளை பெற்றிருந்தாலும் வெற்றிபெறும் வாய்ப்பு தட்டிப்பறிக்கப்பட்டிருந்தது. அதேதேர்தலில் பிரஜைகள் முன்னணி சார்பில் 11 பெண்வேட்பாளர்கள் உள்வாங்கப்பட்டு தேர்தல் களத்துக்கு கொண்டுவரப்பட்டாலும் அவர்களால் மொத்தமாக 2250 வாக்குகளே பெற்றுக்கொள்ள முடிந்தது. இதில் சுயநல அரசியல் கலந்திருந்தாலும் பெண்களின் உள்ளீர்ப்பு பாராட்டத்தக்கதாகும்.
2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் அதிகமாக கொழும்பில் 147 பெண்கள் போட்டியிட்டிருந்தனர். மிக குறைந்தளவில் பதுளையில் 3 பெண்கள் போட்டியிட்டிருந்தனர். 1931 இல் இலங்கையில் சர்வசன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டு ஆண்களுக்குக்கும் பெண்களுக்கும் ஏக காலத்தில் வழங்கப்பட்டிருந்தது. இருந்தும் கூட இலங்கையில் பெண்களின் பிரதிநிதித்துவம் இதுவரையும் 6.5 வீதத்தை தாண்டியதில்லை. இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருக்கும் பெண்களில் 9 பேர் ஆண் உறவுமுறை அரசியல் செல்வாக்கு பின்னணியுடையோர். 4 பேர் புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.
ஐ.நாவினால் 1979 இல் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு எதிரான அனைத்து பாரபட்சங்களையும் இல்லாதொழிப்பதற்கான பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டிருக்கிறது. 1993 இல் பெண்கள் பிரகடனம் கொண்டுவரப்பட்டது. 2005 இலும் பெண்களுக்கான சில சிறப்பு சட்டங்கள் கொண்டுவரப்பட்டும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. நோர்வே பாராளுமன்றத்தில் பெண்பிரதிநிதித்துவம் 50 சதவீதம் வரையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை எமது நாட்டிலும் உருவாக்க முடியும் எதிர்வரும் 10 வருடங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 50 வீதமாக உயர்த்த எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தேசிய பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில் தெற்காசிய நாடுகள் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன. இன்டர் பார்லிமென்ட் யூனியனின் தகவல்களின்படி, 190 நாடுகளை உள்ளடக்கிய பெண்களின் அரசியல் பங்களிப்பு தொடர்பான தரவுகளில் நேபாளம் 48 ஆவது இடத்திலும் ஆப்கானிஸ்தான் (54), பாகிஸ்தான் (70), பங்களாதேஷ் (91), இந்தியா (148), பூட்டான் (170), மாலை தீவு (179) என்றளவிலும் இலங்கை 180 ஆவது இடத்திலும் இருந்து வருகின்றது. 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பெண்களின் அபிவிருத்தி, சமூக நலன் தொடர்பில் வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் 9 சதவீதமான பெண்களே பொதுத் தேர்தலை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தனர். 6151 வேட்பாளர்களில் 556 பெண்வேட்பாளர்களே உள்ளடங்கியிருந்தனர்.
225 ஆசனங்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 13 பெண்கள் மாத்திரமே அங்கத்துவம் பெற்றுள்ளனர். அதேபோல் 4.1 வீதமான அங்கத்துவமே மாகாணசபையில் காணப்படுகின்றது. ருவாண்டா மற்றும் மத்திய அமெரிக்க குடியரசில் பெண்களின் வலுவூட்டல் மிக உயர் நிலையில் இருக்கின்றது. ருவாண்டாவில் 60 வீதமான பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்களாவர். 1994 முதல் ருவாண்டா இனப்படுகொலை நிறுத்தப்படும் வரை சமாதானமாக நாட்டை உருவாக்குவதில் பெண்களின் பங்களிப்பு மிக உயர்ந்தளவில் காணப்பட்டது.
ஆபிரிக்காவில் அமைச்சர்களின் நியமனத்தில் 19.7 வீதமானோர் பெண்களாக இருக்கின்றனர். ஆசியாவில் 11 வீதமாகவும் காணப்படுவதோடு, சவூதி அரேபியாவிலும் 9.7 வீதமான பெண்கள் உயர்மட்ட அதிகாரிகளாக இருப்பதோடு, டுனிசியாவில் 23.1 வீதமும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் 26.7 வீதமாகவும் ஐரோப்பாவில் 22.5 வீதமாகவும் பெண்களின் பங்களிப்பு காணப்படுகின்றது. மாகாண சபைகளை பொறுத்தவரையில் ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகளில் இந்தியவம்சாவளி பெண்களின் பிரதிநிதித்துவம் இதுவரையும் காணப்பட்டதில்லை. மத்திய மாகாணத்தில் 2004 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதியாக அனுஷியா சிவராஜா தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
2010 ஆம் ஆண்டு மீண்டும் மாகாண சபை உறுப்பினராக தெரிவானதுடன் மத்திய மாகாண கல்வி, இந்து கலாசார அமைச்சராகவும் பதவிவகித்திருந்தார். 2013 ஆம் ஆண்டு மத்திய மாகாணசபைத் தேர்தலில் தொழிலாளர் தேசிய சங்கம் சார்பில் போட்டியிட்ட சரஸ்வதி சிவகுரு வெற்றிபெற்று இன்றுவரையும் செயற்பட்டு வருகின்றார். அத்தோடு நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளின் பெண்களின் பிரதிநிதித்துவமானது மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
இலங்கையில் உள்ளூராட்சி அலகுகளில் 6000 பதவி நிலைகள் காணப்படுகின்றன. தற்போது பெண்களுக்கு 25 வீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் 2000 ஆசனங்கள் பெண்களுக்கு உரித்தானதாக காணப்படுகின்றன. ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் காலங்களில் உள்ளூராட்சி அலகுகளின் தொகை அதிகரிக்கப்படுவதால் பெண்களுக்கான ஆசனங்களில் அதிகரிப்பு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. 2004 ஆம் ஆண்டு நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினராகவிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த மெரினா ரோஸ் என்பவர் ஒரு வருடம் பிரதேச சபையின் தலைவராகவும் கடமையாற்றியிருந்தார். அதன்பின்னர் அவ்வாறானதொரு சந்தர்ப்பம் பெண்களுக்கு அமையவில்லை.
1994 ஆம் ஆண்டு மேல் மாகாணசபைத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியான திருமதி வேலம்மாள் செல்லச்சாமி வெற்றி பெற்றதுடன் இந்திய வம்சாவளியாக மேல் மாகாணத்துக்குத் தெரிவான முதல் பெண்ணாக இருந்ததுடன், இறுதியாகவும் அங்கத்துவம் வகித்திருந்தார். இவ்வாறு இலகுவில் வரையறுக்கக்கூடிய பெண்கள் பிரதிநிதித்துவமே மலையகத்தில் இதுவரை காலமும் இருந்து வந்துள்ளது. வெறுமனே கட்சி ரீதியில் மகளிர் அணி தலைவிகளாகவும் ஒருங்கிணைப்பாளராகவும் மாத்திரமே பெண்களைக் கட்சிகள் பயன்படுத்திவந்துள்ளன. தற்போதைய உள்ளூராட்சி திருத்தச் சட்டத்துக்குப் பிறகே பெண்களை கட்சிகள் தேடத் தொடங்கியிருக்கின்றன.
இலங்கையில் மொத்த சனத்தொகையில் 51 வீதத்தினர் பெண்களாவர். இவர்களில் 83 வீதமானோர் எழுத்தறிவு பெற்றவர்கள். 49 வீதமானோர் பல்கலைக்கழக அல்லது உயர்கல்வியினைப் பூர்த்தி செய்தவர்கள். ஆனால் பெருந்தோட்டங்களில் வசிக்கின்ற பெண்களில் 53 வீதத்தினர் ஆரம்பக் கல்வியினையும் 24 வீதத்தினர் இரண்டாம் நிலைக்கல்வியையும் 40 வீதமானோர் சாதாரண கல்வியை பெற்றவர்களாகவுமே இருக்கின்றனர். தற்போது பெருந்தோட்டங்களில் தொழில் புரிவோரில் 54 வீதமானோர் பெண்களாவர். மலையகப் பெண்களில் 8 வீதமானோர் வீட்டுப்பணிப்பெண்களாகவும், ஆடைத்தொழிற்சாலைகளிலும், அங்காடிகளிலும் பணிபுரிகின்றனர்.
இன்றும் கூட மலையக லயன்களில் எட்டு அடி காம்பிராக்களிலேயே தமது வாழ்வைக் கழித்து வருகிறார்கள். தொழிற்சங்கங்களுக்கு கிடைக்கும் 78 வீதமான சந்தாப்பணம் பெண்களுடையதாகும். உலகளவில் 40 வீதமான பெண்கள் தொழிற்சங்க உறுப்பினர்களாக இருந்தாலும் ஒரு வீதத்தினரே தொழிற்சங்க தலைவர்களாக இருக்கின்றனர். இன்று கட்சி ரீதியிலும் பெண்களுக்கான பதவிநிலைகள் மிகக்குறைவாகவே இருக்கின்றன. ஆண்களுக்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவத்தில் சரிபாதியேனும் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை.
எனவே, முதலில் கட்சி ரீதியில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும். பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளை இன்னொருவரிடம் ஒப்புவித்து தீர்வுக்காக காத்திருக்கும் நடைமுறை மாற்றப்பட்டு பெண்களே தங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளக்கூடிய அரசியல் பலம் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும். உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 வீத இட ஒதுக்கீடு தேசிய அரசியலிலும் அதிகரிக்கப்பட வேண்டும். அவர்களுடைய வாழ்க்கை மாற்றத்துக்கு அரசியல் பிரதிநிதித்துவம் எவ்வாறு உதவிபுரிகிறதென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
..............................................................................
அரசாங்கம் 25 வீதத்தை ஒதுக்குவதற்கு முன்பாகவே கட்சியின் பொதுச்செயலாளர் கட்சி ரீதியாக பெண்களுக்கு 30 வீதத்தை ஒதுக்கியிருந்தார். ஆனால் பெண்கள் முன்வரவில்லை. தற்போது கட்சி ரீதியில் தேர்தலொன்றை ஒழுங்கு செய்திருக்கின்றோம். இதில் அனைத்து பெண்களையும் பங்குபற்றுமாறு வலியுறுத்தியிருக்கின்றோம். இது உள்ளூராட்சி தேர்தலுக்கான ஆயத்த நடவடிக்கையாகும். பெண்கள் அரசியலில் பங்குபற்றாமைக்கு கலாசாரத் தடைகளும் ஒரு காரணமாகும். இதற்காக விழிப்புணர்வு கருத்தரங்குகளை முன்னெடுத்து வருகின்றோம். இதில் இளைய தலைமுறையினர் ஆர்வமுடன் பங்குபற்றுகின்றனர். இளைஞர்கள் யுவதிகளுக்கு தன்னம்பிக்கை உருவாக வேண்டும். பிரதேச சபையில் உறுப்புரிமை பெறுவதால் என்ன நன்மைகளை நாம் பெறுவோம்? மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்? என்பது தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்துகின்றோம். இனியும் இன்னொரு கையை எதிர்பார்த்து இருக்க வேண்டியது இல்லை. உறுதியுடன் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டும்.
திருமதி.அனுஷியா சிவராஜா
மகளிரணித் தலைவி
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்.
...........................................................................
பெண்களுக்கு 25 வீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை நான் வரவேற்கின்றேன். பெண்கள் ஆர்வத்துடன் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவும் 25 வீத இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டுமென்பதற்காகவும் பல அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளேன். 225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் கூட 13 பெண்களே இருக்கின்றனர். இதில் மலையகப் பெண்கள் இல்லை. எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் 12 பெண்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். இலங்கை சனத்தொகையில் பெண்களே அதிகம். கட்சி அங்கத்துவத்திலும் தோட்டத் தொழிலாளர்களிலும் பெண்களே அதிகம்.ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தை மீறி பெண்களால் அரசியலுக்குள் நுழைய முடியவில்லை. இதற்காக ஒருநாள், அரைநாள் பயிற்சி கருத்தரங்குகளை நடத்தி வருகின்றோம். இதுவரையும் கிராமப்புறங்களில் மாத்திரமே இருந்த பெண்கள் அபிவிருத்தி சங்கங்களை மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினூடாக தோட்டப்புறங்களிலும் உருவாக்கியுள்ளோம். ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் ஒன்றென்ற வகையில் 35 பெண்கள் அபிவிருத்திச் சங்கங்களை உருவாக்கி, அவற்றை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
இச்சங்கங்களின் தலைவிகளை ஒன்றுதிரட்டி அரசியல் தொடர்பான விளக்கங்களை அளிக்கின்றோம். அரசியல் என்றால் பயம், காசு செலவிடவேண்டும் என்ற நிலைப்பாட்டை மாற்றி பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
திருமதி சரஸ்வதி சிவகுரு
மத்திய மாகாணசபை உறுப்பினர்
தொழிலாளர் தேசிய சங்கம்.
..............................................................................
எதிர்வரும் தேர்தலில் போட்டியிடக்கூடிய பெண்களை நாம் அழைத்திருக்கின்றோம். ஆனால் பெண்கள் முன்வருவது மிகவும் குறைவு. இதனால் கஷ்டப்பட்டு அவர்களை முன்கொண்டு வரவேண்டியுள்ளது. பெயர்ப் பட்டியலில் 25 வீதம் பெண்களை உள்ளடக்க வேண்டும். இல்லையெனில் அவை நிராகரிக்கப்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது. வெறுமனே பெயருக்காக மாத்திரம் பெண்களை உள்வாங்காமல் அவர்களுக்கு முறையான பயிற்சிகள், விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். மலையகத்தில் வசிப்போரில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் பெண்களாக இருக்கின்றனர். எனவே அவர்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். ஆனால் தேடிப்பிடிப்பதே கஷ்டம். அதற்கு செயலமர்வு, கருத்தரங்குகளை முன்னெடுக்க வேண்டும்.
மலையகத்தில் மட்டுமல்ல வடகிழக்கு மற்றும் பெரும்பான்மையின பெண்கள் சமுதாயத்திலும் இந்நிலை காணப்படுகின்றது. இதற்காக இதை விட்டுவிட முடியாது. 40 வீத விகிதாசார தேர்தல் முறையில் ஆண்-பெண்-ஆண்-பெண் என்ற வகையில் பெயர்ப்பட்டியலைத் தயாரிப்பது கட்டாயமாகும். எனவே அரசியல் தலைவர்கள், சிவில் சமூகங்கள், அரசார்பற்ற நிறுவனங்கள் திறமையான பெண்களை அடையாளம் காண வேண்டும். தேவையான சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நிதியுதவிகளையும் வழங்கி முன்கொண்டுவரவேண்டும்.
ஏ.லோரன்ஸ்
பொதுச் செயலாளர்
மலையக மக்கள் முன்னணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக