2020 ஆம் ஆண்டில் இலங்கையை நிலக்கண்ணிவெடியற்ற நாடாக பிரகடனப்படுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை அரசாங்கமும் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டுவருகின்றன. இலங்கையில் விடுதலைப் புலிகள், இந்திய அமைதிகாக்கும் படையினர் மற்றும் இலங்கை ஆயுதபடையினர் ஆகியோரால் புதைக்கப்பட்ட நிலக்கண்ணிவெடிகள் காணப்பட்ட நிலையில் அவற்றை அகற்றும் நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. யுத்த காலத்தின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார்1302 சதுர கிலோமீற்றர் பரப்பளவுகளில் புதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது அவ்வெடிகளை அகற்றுவதற்கான நிலப்பரப்பு 18 சதுர கிலோமீற்றராக எஞ்சியுள்ளதாக கடந்த அரசாங்கம் தெரிவித்திருந்தது. 2020 ஆம் ஆண்டளவில் நிலக்கண்ணிவெடியற்ற நாடாக இலங்கையை பிரகடனப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதுடன் 1997 ஆம் ஆண்டு கண்ணிவெடி தடைசெய்யும் பிரகடனம் ஒஸ்லோவில் மேற்கொள்ளப்பட்டது. நிலக்கண்ணிவெடிகளற்ற உலகை கட்டியெழுப்புவதற்கான ஒட்டாவோ பிரகடனத்தில் 163 ஆவது நாடாக 2017 ஆம் ஆண்டு இலங்கையும் இணைந்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் தற்போது நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சிடம் (தற்போதைய நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு) கோரப்பட்ட தகவலின் மூலம் (பதிவு இல.176) பல விடயங்களை பெற்றுக்கொள்ள முடிந்தது. அதன்படி இலங்கையில் யுத்த காலப்பகுதியில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்ததாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பான விபரங்களை அட்டவணை 01 இல் அறிந்துகொள்ளலாம்.
வெடிக்காத நிலக்கண்ணிவெடிகள் உலகில் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள உள்ளூர் மக்கள் தங்கள் நிலங்களில் வாழ்வதையும் வேலை செய்வதையும் தடுக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் இந்த ஆயுதங்களால் 7000 பேர் தங்கள் உயிர்களை இழக்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைகின்றனர். இலங்கையிலும் நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக மக்களை மீள்குடியேற்றுவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. வடக்கில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் இதுவரை அகற்றப்படாமல் இருக்கும் கண்ணிவெடிகளை அகற்றி அக்காணிகளுக்குரிய உரிமையாளர்களிடம் காணிகளை கையளிக்குமாறு அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவன அதிகாரிகளுக்கும் இராணுவ உயரதிகாரிகளுக்கும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அண்மையில் பணிப்புரை விடுத்திருந்தார்.
2019.02.26 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தில், இலங்கையானது மனிதர்களை அழிக்கும் நிலக்கண்ணி வெடிகளைப் பயன்படுத்துதல், தொகைகளைப் பேணுதல், உற்பத்தி செய்தல் உட்பட ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதை தடை செய்தல் மற்றும் அவற்றை ஒழித்தல் சம்பந்தமாகவுள்ள சமவாயத்தை (ஒட்டாவா சமவாயம்) இலங்கையில் நடைமுறைப்படுத்தவதற்கு ஏற்றுக்கொண்டுள்ளதோடு, இது 2018 ஜூன் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து இலங்கையில் அமுலுக்கு வந்துள்ளது. இந்த சமவாயத்தின் 9 ஆம் பிரிவின் மூலம் ஆட்களினால் இந்த சமவாயத்தின் வரையறை அல்லது கட்டுப்பாட்டின் கீழ் ஏதேனும் தேச எல்லையொன்றில் மேற்கொள்ளப்படும் சமவாயத்தின் கீழ் அரச தரப்பொன்றுக்கு தடை செய்யப்பட்டுள்ள அத்தகைய ஏதேனும் செயற்பாடொன்றைத் தடுத்தல் மற்றும் தடுப்பதற்கான தண்டனைகளை விதித்தல் அடங்கலாக சகல பொருத்தமான சட்ட, நிர்வாக மற்றும் பிற நடவடிக்கைகளை எடுப்பதற்கு தரப்பொன்றாக இலங்கை கட்டுப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த சமவாயத்திலுள்ள ஏற்பாடுகளை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் சட்டமூலமொன்றை தயாரிக்கும் பொருட்டு இதற்கு முன்னர் வழங்கப்பட்ட சட்டவரைஞரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கமைவாக, உரிய சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
நிலக்கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் அவ்வளவு இலகுவானதல்ல. மிகவும் பொறுமையுடனும் நுட்பத்துடனும் கையாளவேண்டிய விடயமாகும். நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான முறையான தரவுகளை பெற்றுக்கொள்ளமல் இச்செயற்பாடுகளை முன்னெடுப்பது சவாலானதாகும். இதன்மூலம் உயிராபத்துக்களும் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். தற்போது இலங்கையில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளில் இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையான SLA HDU, தேசிய நிலக்கண்ணிவெடி செயற்பாட்டு நிலையம் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களான SHARP, MAG, HELO Trust, DASH என்பன செயற்பட்டு வருகின்றன. SLA HDU சார்பாக 474 பேர் நிலக்கண்ணி வெடி அகற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளர். அதேவேளை SHARP சார்பாக 101 பேரும், MAG சார்பாக 607 பேரும், HELO Trust சார்பாக 816 பேரும், DASH சார்பாக 427 பேருமாக மொத்தம் 2425 பேர் நிலக்கண்ணி வெடி அகற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
2019.03.26 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தின்படி, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களின் பெறுபேறாக மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நிலக்கண்ணிவெடிகள் மற்றும் யுத்த பிரதேசத்தில் எஞ்சிய வெடி பொருட்கள் என்பவற்றினால் சுமார் 3000 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதற்கு மேலதிகமாக நிலக்கண்ணிவெடிகளைத் தவிர்த்தல் பற்றிய ஒட்டாவா சமவாயத்தில் தரப்பொன்றாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் தேவைப்படும் உதவியினை வழங்குவதற்கு அரசாங்கமானது அர்ப்பணிப்புடன் உள்ளது. சுமார் 1302 சதுர கிலோமீற்றர் பிரதேசத்தில் நிலக்கண்ணிவெடிகள் பரவியிருந்ததன் காரணமாக அபாயகரமானதென ஐயம் கொண்ட பிரதேசங்களிலிருந்து 25 சதுர கிலோமீற்றர்கள் தவிர மீதி பரிசோதனை செய்யப்பட்டு நிலக்கண்ணிவெடியற்ற பிரதேசமாக மாற்றுவதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கை சர்வதேச ரீதியில் மெச்சப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2020 ஆம் ஆண்டளவில் இலங்கையை நிலக்கண்ணிவெடியற்ற நாடாக மாற்றும் பொருட்டு நிலக்கண்ணிவெடிகள் இருக்குமென சந்தேகிக்கப்படும் பிரதேசங்களிலிருந்து நிலக்கண்ணி வெடிகளை அகற்றுதல் மற்றும் அவற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குதல் என்பன பொருட்டு நிலக்கண்ணி வெடிகள் பற்றி செயலாற்றும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
2016 ஆம் ஆண்டு நிலக்கண்ணி வெடியில் சிக்கி பொதுமக்கள் இருவர் உயிரிழந்ததுடன் 2018 ஆம் ஆண்டு நிலக்கண்ணி வெடியகற்றும் செயற்பாட்டின்போது இருவர் உயிரிழந்திருந்தனர் . அத்துடன் 2015 - 2019 ஆம் ஆண்டுவரை நிலக்கண்ணி வெடியகற்றும் செயற்பாட்டின்போது 16 பேர் காயமடைந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு காயமடைந்த ஒருவருக்கு SHARP நிறுவனம் 11430 ரூபாவை இழப்பீடாக வழங்கியுள்ளது. 2017 - 2018 வரையான காலப்பகுதியில் நிலக்கண்ணி வெடியகற்றும் செயற்பாட்டின்போது காயமடைந்த ஐவருக்காக DASH நிறுவனம் 19,150,000 ரூபாவினை இழப்பீடாக வழங்கியுள்ளதோடு 2015 - 2019 வரையான காலத்தில் HELO Trust நிறுவனம் மூவருக்கு (11548.48 x3) 34,645.44 ரூபாவினை இழப்பீடாக வழங்கியுள்ளது.
இலங்கையில் நிலக்கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகளுக்காக தேசிய நிலக்கண்ணிவெடி செயற்பாட்டு நிலையத்துக்கும் SLA HDU க்கும் அரசாங்கம் 307.94 மில்லியன் ரூபா நிதியினை பெற்றுக் கொடுத்துள்ளது. அதேவளை அரசசார்பற்ற நிறுவனங்களான SHARP 2017 - 2019 காலப்பகுதியில் 232,213,759.33 ரூபா நிதியினையும் 2,097,170,376.74 ரூபா நிதியினையும் HELO Trust நிறுவனம் 26,032,633 அ.டொலர்களையும் DASH நிறுவனம் 8,262,558 அ.டொலர்களையும் வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
2015 - 2019 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் அம்பாறை, அநுராதபுரம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, பொலனறுவை, புத்தளம், திருகோணமலை, வவுனியா போன்ற மாவட்டங்களில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றி வீவிக்கப்பட்ட காணிகளில் கைகளால் அகற்றப்பட்டவை 13,343,293 Sqm ஆகவும் யுத்தப் பகுதியில் அகற்றப்பட்டவை 17,914,083 Sqm ஆகவும் பரப்புக்குறைப்பானது 6,879,685 Sqm ஆகவும் இரத்துச்செய்யப்பட்ட பகுதியாக 61,245,108 Sqm ஆகவும் காணப்பட்டதுடன் 951 பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தன. (அவற்றின் மேலதிக விபரங்களை அட்டவணை 02 இல் காண முடியும்). தற்போது பெரும்பாலான பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இன்னும் எஞ்சியிருக்கும் பகுதிகள் பின்வரும் அடிப்படையில் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு பிரித்தளிக்கப்பட்டுள்ளன. அம்பாறை, அநுராதபுரம், மட்டக்களப்பு, யாழப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா, மாவட்டங்களிலுள்ள பகுதிகளில் 13,216,518 சதுர கிலோமீற்றர் பகுதிகளில் பணி நடைபெற்று வருவதுடன் 1,811,102 சதுர கிலோமீற்றர் பகுதிகளில் பணிகள் இடைநிறுத்தப்பட்டு காணப்படுகின்றது. 9,639,034 சதுர கிலோமீற்றர் பகுதிகளில் எதிர்காலப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் முழுமையாக நிலக்கண்ணிவெடி அகற்றப்படாததன் காரணமாக 300 குடும்பமளவில் மீள்குடியேற்றப்படாமல் உள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரசன்கேணி, வேம்படுகேணி, கிளாலி, முகமாலை ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் நிலக்கண்ணிவெடி ஆபத்துள்ள பிரதேசங்களாகவுள்ளன. இப்பிரிவுகளில் நிலக்கண்ணிவெடி அபாயம் காரணமாக மக்கள் மீள்குடியேற்றப்படாதுள்ளதுடன் அவர்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களிலும் தற்காலிக வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதும் மக்களை மீள்குடியேற்றுவதும் சவாலான விடயமாக இருக்கின்றது. நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் இறுதி கட்டத்துக்கு வந்திருந்தாலும், மீதமுள்ள செயற்றிட்டங்களை பூர்த்தி செய்வதற்கு பெருந்தொகை பணமும் தேவைப்படுகின்றது. அண்மையில் கனடா 2 மில்லியன் அ.டொலர்களை இத்திட்டத்துக்கு நன்கொடையாக வழங்கியிருந்தது. இலங்கை நிலக்கண்ணிவெடியகற்றல் பணியில் ஈடுபட்டுள்ளோரில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் பெண்களாவர். 2020 ஆம் ஆண்டில் இலங்கையை நிலக்கண்ணிவெடியற்ற நாடாக பிரகடனப்படுத்த வேண்டுமாயின் அடையாடளம் காணப்பட்ட பகுதிகள் அனைத்திலும் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டுமென்பதுடன் அவை மீளாய்வுக்கும் உட்படுத்தப்பட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக