கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

27 ஜனவரி, 2020

முழுமையாக விடுபடாத வட, கிழக்கு காணிகள்

இலங்கையில் யுத்தம் நிறைவுக்கு வந்து ஒரு தசாப்தம் கடக்கின்ற நிலையிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இழந்தவைகளுக்கான நிவாரணங்கள் முழுமையாக சென்றடையவில்லை. இவற்றைவிடவும் யுத்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெரும்பாலான காணிகள் மீண்டும் அவர்களுக்கு திருப்பியளிக்கப்படாமலும் விடுவிக்கப்படாமலும் இருப்பதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் வசித்து வந்த குடியிருப்பு காணிகள், ஆலயம், பாடசாலைகள் அமைந்திருந்த காணிகள் படையினரால் கைப்பற்றப்பட்ட நிலையிலும் அதனை விடுவிப்பதற்கும் அவற்றில் காணி உரிமையாளர்கள் குடியேறுவதையும் அரசாங்கமும் படையினரும் விரும்பாத ஒரு போக்கே காணப்படுகின்றது. ஆனால் தொடர்ச்சியாக பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவே அரசாங்கம் கூறி வருகின்றது.

இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் சுவீகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்வதற்காக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பாதுகாப்பு அமைச்சை (MOD/LEG/RTI/(2019) 48) வினவிய போது பின்வரும் சில தகவல்கள் கிடைக்கப்பெற்றன. வட மாகாணத்தில் முகாம்கள் அமைப்பதற்காக காணிகள் கைப்பற்றுவதற்கு ஆரம்பிக்கப்பட்ட இடங்கள் தொடர்பில் அட்டவணை 01 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஆனால் வடக்கு, கிழக்கில் கைப்பற்றப்பட்ட பல காணிகளில் படையினரின் முகாம்கள் மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய நிறுவனங்கள் அமைந்திருப்பதால் தேசிய பாதுகாப்பினை காரணம்காட்டி அவற்றை விடுவிப்பதை தொடர்ச்சியாக அரசாங்கமும் பாதுகாப்பு படைகளும் மறுத்து வருகின்றன. இதேவேளை காணி உரித்துடையவர்கள் தங்களது காணியுறுதியின் பிரதியுடன் வடமாகாண ஆளுநரால் (முன்னாள்) வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து செப்டெம்பர் 09 ஆம் திகதிக்கு முன்னராக அனுப்பி வைக்கும்படி கேட்கப்பட்டிருந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் துரிதப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் படையினர் மற்றும் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் யாழ். மாவட்டத்திலுள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரித கதியில் விடுவிப்பதற்கான நடவடிக்கையெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவை தொடர்பான தீர்மனங்கள் எவையும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

வடக்கு மாகாணத்தில் முகாம்கள் அமைப்பதற்காக கைப்பற்றப்பட்ட காணிகளில் 2019.06.30 ஆம் திகதி வரை விடுவிக்கப்பட்ட காணி தொடர்பான விபரங்கள் அட்டவணை 02 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட இழப்பீடுகள் தொடர்பான விபரங்கள் பாதுகாப்பு அமைச்சில் இல்லையென தெரிவிக்கப்பட்டிருந்தது. காணி கையகப்படுத்தும்போது குறித்த பிரதேச செயலகம் அல்லது காணி கையகப்படுத்தல் அதிகாரிகளாலேயே இழப்பீடு வழங்கப்படுவதால் அத்தகவல் பாதுகாப்பு அமைச்சில் இல்லையென தெரிவிக்கப்பட்டது.

2018.05.09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய மோதல் நிலவிய காலப்பகுதியில் முப்படையினரினால் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு நோக்கங்களுக்காக தொடர்ந்தும் தேவைப்படாத வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள 4992.84 ஏக்கர் தனியார் மற்றும் அரசாங்க காணிகளை பாதுகாப்பு அமைச்சினதும் உடன்பாட்டுடன் ஏற்கனவே அவற்றின் உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களிலும் தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் இடையூறுகளுக்கு மத்தியில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள 522 ஏக்கர் தனியார் காணிகளை மேலும் விடுவிப்பதற்கு இலங்கை தரைப்படை உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைவாக, இந்த தனியார் காணிகளை விடுவிக்கும் போது அவற்றில் தாபிக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை வேறு இடங்களில் மீண்டும் தாபிப்பதற்கு செலவாகும் 866.71 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகையினை இலங்கை தரைப்படைக்கு வழங்கும் பொருட்டு முன்னாள் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் முன்னாள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை கடந்த ஜனவரி 16 ஆம் திகதி (2019) இலங்கை இராணுவத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய ஜனவரி 21 ஆம் திகதி முல்லைத்தீவு மற்றும் வடக்கு மாகாணங்களில் 1201.88 ஏக்கர் நிலப்பரப்புகள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் கிளிநொச்சியில் 972 ஏக்கர் நிலமும் முல்லைத்தீவில் 120 ஏக்கர் இராணுவ பண்ணைகள் இயங்கிவந்த நிலப்பரப்புகளும் யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் 46.11 ஏக்கர் நிலமும், யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் 63.77 ஏக்கர் தனியார் நிலமும் முல்லைத்தீவில் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாகவும் நாச்சிக்குடா, வேளான்குளம் மற்றும் உடயார்கட்டுகுளம் இராணுவ பண்ணை நிலப்பரப்பில் உள்ள 1201.88 ஏக்கர் நிலங்கள் உத்தியோகபூர்வமாக வடமாகாண ஆளுநர், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களின் பங்களிப்புடன் இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 85 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டதாக அரசாங்கத்தால் கூறப்பட்டாலும் அவை நம்பகத்தன்மையற்ற தகவல்களாகவே இருக்கின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டில் மாத்திரம் 45,581 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்னர் 2009  2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 35 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எனவே இதுவரையில் சுமார் 80 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தற்போது 2000 ஏக்கர் காணிகள் மாத்திரமே எஞ்சியுள்ளன. அதில் 900 ஏக்கர் காணிகள் யாழ்ப்பாணத்திலேயே காணப்படுவதாகவும் அவற்றை விடுவிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டு வருவதாகவும் கடந்த வருடம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட (அப்போதைய) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் 6 ஆவது அமர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த வருடம் ஏப்ரல் 6 ஆம் திகதி இடம்பெற்றது. அதன் போது இலங்கையில் 2009 ஆம் ஆண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு படைகள் வசம் இருந்த 84,675 ஏக்கர் காணிகளில் 71,178 ஏக்கர் காணிகள் கடந்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் 81 சதவீதமானவை அரசுக்குச் சொந்தமானவை என்றும் 90 வீதமானவை தனியாருக்குரியவையெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்தோடு வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்ட காலப்பகுதியிலிருந்து இதுவரையும் 6951 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருப்பதுடன், இன்னும் 475 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாகவும் தற்போது படைகள் வசம் 13,497 ஏக்கர் காணிகளே உள்ளதாகவும் அவற்றில் 11,039 ஏக்கர் அரச காணிகள் எனவும் கடந்த அரசாங்கம் தெரிவித்திருந்தது.

தற்போது வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள பாதுகாப்பு படைகளின் முகாம்கள் மற்றும் பயிற்சி நிலையங்கள் போன்றவற்றை அகற்றுவதற்கு அரசாங்கம் தயாரில்லை. அதேபோல முகாம்கள் மற்றும் பயிற்சி நிலையங்கள் மக்களுடைய அல்லது தனியார் காணிகளில் அமையப்பெற்றிருக்குமாயின் அவற்றை விடுவிப்பதற்கும் தயாரில்லை. ஆனால் மாற்றுக்காணிகள் வழங்குவதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டாலும் கூட அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் தயாரில்லை. ஏனெனில் அவை மக்களின் பூர்வீக காணிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன. எனவே மக்களுக்கான தீர்வீனை நியாயமாக பெற்றுக்கொடுக்கும் வகையில் காணிவிடுவிப்புகள் மேற்கொள்ளப்படுவது காலத்தின் தேவையாகும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக