கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

27 ஜனவரி, 2020

மலையக விளையாட்டுத்துறை மாற்றமடைய வேண்டும்

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக எப்படி போராடுகின்றார்களோ, அதுபோலவே மலையக சிறுவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் வாய்ப்புக்களுக்காக போராடுகின்றனர். மலையகத்தில் தற்போது பல்வேறு துறைகளிலும் திறமையாளர்கள் வளர்ந்து வருகின்றார்கள். ஆனால் அவர்களுக்கான வாய்ப்புகள் தான் சமூகத்தால் மறுக்கப்பட்டு வருகின்றன. இதில் விளையாட்டுத்துறை மிக முக்கியமாகும்.  தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் விளையாட்டுக்களில் சாதித்த பலருக்கு இன்னும் உரிய கௌரவம் வழங்கப்படவில்லை. தேசிய அணிக்காக பங்குபற்றும் வாய்ப்புகள் தொடர்ச்சியாக எமக்கு மறுக்கப்பட்டு வருகின்றன. மைதானமே இல்லாத ஊர்களுக்கு மட்டையும் பந்தும் வழங்கும் அரசியல் கலாசாரமே மேலோங்கி வருகின்றது. இவற்றை எவ்வாறு கலைவது. பாடசாலைகளில் பல்வேறு திறமைகளை விளையாட்டுக்களில் நிரூபிக்கும் மாணவர்கள் பலர் பாடசாலை மட்டத்தை தாண்டிச் செல்லாதது ஏன்?, அதிலும் கடும் முயற்சியில் வலய மட்டத்துக்குச் சென்றாலும், அந்த மட்டத்துடனேயே தமது திறமைகளை முடக்கி கொள்வது ஏன்? இதற்கெல்லாம் விடைதேட வேண்டிய கட்டாயத்திலேயே நாம் இருக்கின்றோம்.

எமது பெருந்தோட்டப் பாடசாலைகளில் மைதானமே இல்லாத பாடசாலைகள் அதிகம் இருக்கின்றன. மைதானங்கள் இருந்தாலும் அவை பாவனைக்கு அற்றவகையில் சேறும் சகதியாகவும் இருக்கின்றன. இன்னும் பாதைகளிலேயே நாம் விளையாடுகிறோம். பாடசாலைகளில் விளையாட்டு அறை என்ற வகையே கிடையாது. ஒவ்வொரு வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கு மட்டுமே பாடசாலைகளில் விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்படும் மற்றும் பயிற்சிகள் வழங்கப்படும். மற்றையபடி புத்தக கல்விக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. அதேபோலவே பெற்றோரும் பிள்ளைகளின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிப்பதில்லை. எந்நேரமும் அவர்களை புத்தகங்களுக்குப் பின்னாலேயே விரட்டுகின்றார்கள். பாடசாலைகளும் பெறுபேறுகளில் 100 வீதத்தை காட்டுவதற்கே முயற்சிக்கின்றனவே தவிர இணைப்பாடவிதானங்கள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. இதுவும் விளையாட்டு நிகழ்வுகளில் பிள்ளைகள் சாதிக்காமைக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

இலங்கையில் விளையாட்டுத்துறை அமைச்சும், இளைஞர் வலுவூட்டல் அமைச்சும் தேசிய ரீதியான விளையாட்டுக்களுக்கும் நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் வழங்குகின்றனவே தவிர அவை பின்தங்கிய பிரதேசங்களுக்கான விளையாட்டு அபிவிருத்தியில் கவனம் கொள்வதில்லை. விளையாட்டுத்துறை அமைச்சும் திறமையானவர்களை உருவாக்குவதற்காக செயற்படுவதில்லை. அவர்களை ஒருங்கிணைப்பதற்கு மாத்திரமே செயற்படுகின்றது. எனவே அந்நிலை மாற்றமடைய வேண்டும். இவ்வாறான சூழ்நிலையிலேயே மலையக பெருந்தோட்டப் பாடசாலைகளுக்காக கல்வி அமைச்சால் வழங்கப்பட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம் ஒரு வாய்ப்பாக காணப்படுகின்றது. இந்நியமனத்தின் மூலம் உள்வாங்கப்பட்டவர்கள் மலையக மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை முன்கொண்டுசெல்ல உறுதுணையாகவிருக்க வேண்டும். நாடு முழுவதுமுள்ள 3868 பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான வெற்றிடங்களுக்காக 22.05.2017 ஆம் ஆண்டு விண்ணப்பம் கோரப்பட்டு 2019 ஆம் ஆண்டிலேயே தகைமையானவர்கள் தெரிவு செய்யப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.

விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் தொடர்பான விபரங்களை கோரி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கல்வி அமைச்சிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைவாக (RTI/AFF /2019/088) இக்கட்டுரையினை எழுத முடிந்தது. விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் நியமனத்துக்கு 23851 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்த நிலையில் பிரதான தகைமை கொண்ட 15070 விண்ணப்பதாரர்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 3868 பேர் வெற்றிடங்களுக்கு நியமனம் பெற்றிருந்தனர். வெற்றிட எண்ணிக்கையில் 20 வீதம் மகளிர் உத்தியோகத்தர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இதன்படி மத்திய மாகாணத்துக்கு 302 பேரும் சப்ரகமுவ மாகாணத்துக்கு 406 பேரும் பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது பெருந்தோட்டப் பாடசாலையொன்றில் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றும் ஒருவரை தொடர்பு கொண்டு அப்பதவிக்குரிய கடமைகள் மற்றும் பாடசாலையின் வளங்கள் தொடர்பில் கேட்டபோது பின்வரும் விடயங்களை அறிய முடிந்தது. பாடசாலைகளில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களின் கடமைநேரமானது இருகட்டங்களை கொண்டுள்ளது. காலை 6 மணி முதல் 11 மணிவரையும் ஒரு கட்டமாகவும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை ஒரு கட்டமாகவும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பாடசாலைக்கு ஒருவர் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தின் மூலம் சகல மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதென்பது சாத்தியமில்லை. திறமையின் அடிப்படையில் தேர்வுகளை மேற்கொண்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பாடசாலைகளில் தினந்தோறும் காலையில் இடம்பெறுகின்ற காலைக்கூட்டங்களை இவர்களே ஏற்பாடு செய்கின்றனர். கல்வி அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமைவாக உடற்பயிற்சிகள் காலையில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

ஆனால் இவர்களால் பாடங்களை கொண்டு நடத்த முடியாது. பயிற்சிகளை மாத்திரமே வழங்க முடியும். ஒரு PT ஆசிரியரினால் கல்வியியற் கல்லூரியில் பெற்றுக்கொண்ட அறிவினைப் பயன்படுத்தி பாடங்களை மாத்திரமே நடத்த முடியும். செயன்முறை விடயங்களை கொண்டு நடத்த முடியாது. தற்போது விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் பாடசாலைகளில் எதிர் நோக்கும் முக்கிய சவாலாக வளப்பற்றாக்குறையே காணப்படுகின்றது. இது மாணவர்களுக்கும் சவாலான விடயமாக அமைந்துள்ளது. குறைந்தது 100 மீற்றர் ஓட்டப்பாதையை கூட போடமுடியாதளவுக்கு மைதானங்கள் மிக குறுகலானவையாக காணப்படுகின்றன. விளையாட்டு பயிற்றுவிப்பை மேற்கொள்வதற்கான உபகரணங்கள் கூட இல்லை. பெரும்பாலான மாணவர்களுக்கு உபகரணங்கள் பற்றி தெரியாத நிலையே காணப்படுகின்றது. உயரம் பாய்தலை மேற்கொள்ள அதற்கான மெத்தை இல்லை. இதனால் மாணவர்கள் இன்னும் கத்திரி பாய்ச்சலை மாத்திரமே பழகிக் கொண்டிருக்கிறார்கள். நீளம் பாய்தலுக்கான பகுதியை மைதானத்தில் அமைக்க முடியாதுள்ளது. மழைக்காலங்களில் அப்பகுதியில் நீர் மற்றும் சேறு நிரம்புவதால் மீண்டும் அதனை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றன.

தற்போது அரசாங்கத்தில் வளங்களை கோர முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனங்களை ஐ.தே.க. அரசாங்கமே வழங்கியது. தற்போதைய ஆட்சி மாற்றத்தின் காரணமாக அப்பதவிக்குரிய தன்மை அறிந்தவர்கள் அமைச்சுக்களில் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் பாடசாலையிலும் சரி, அமைச்சிலும் சரி இவர்களுடைய குறைபாடுகளை நிவர்த்தித்துக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. தற்போது மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதே முக்கியமான விடயமாக இருக்கின்றது. மாணவர்கள் சகலருக்கும் ஓடத் தெரிந்திருந்தாலும் மாகாண, தேசிய ரீதியில் வெற்றி பெறுவதற்கான உத்தி தெரிந்தவர்களாக சகலரும் இருப்பதில்லை. பிள்ளைகளின் விளையாட்டு திறமைகளை ஊக்குவித்து செயற்படுவதற்கு பெற்றோர் தயாரில்லை. செலவு செய்யவும் தயாரில்லை. விளையாட்டு வீரர்களுக்கு காலை உணவு மிக முக்கியம். ஆனால் இங்கு மாணவர்கள் காலை உணவு இல்லாமலேயே பயிற்சிக்கு வருகின்றார்கள். என்னால் தேடிக்கொடுக்கக்கூடிய பழங்களை மாணவர்களுக்கு இலவசமாக பெற்றுக் கொடுக்கின்றேன் எனவும் தற்போதைய மாணவர்கள் புகையிலையையும் சுண்ணாம்பினையும் வாயில் வைத்துக் கொள்ளும் போதைக்கு பழக்கப்பட்டிருப்பதால் அவர்களை அதிலிருந்து மீட்டெடுத்து நல்வழிப்படுத்துவதும் அவசியமென பெருந்தோட்டப் பாடசாலையொன்றில் கடமை புரியும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டமை முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இருந்தாலும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவர்களுடைய நிலை கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. நியமனத் திகதி தொடக்கம் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் 05 வருடங்களுக்குள் கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் விளையாட்டு மற்றும் உடற்கல்வி தொடர்பான 02 வருடகால டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்திருக்க வேண்டும். (இதனை சேவையில் ஈடுபடும்போது வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறை காலங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.) என்று கூறப்பட்டுள்ளது. பெருந்தோட்டப் பாடசாலைகளை அண்மித்தோ அல்லது மாவட்ட தலைநகரங்களிலோ விளையாட்டு தொடர்பான டிப்ளோமாவை முன்னெடுப்பதற்கு தகுதியான நிறுவனங்கள் இல்லை. தூர இடங்களுக்கு சென்றே அவற்றினை முன்னெடுக்க வேண்டும். அதற்கான இலவசமான வாய்ப்புக்களை கல்வி அமைச்சு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பொது நிர்வாக சுற்றறிக்கை 3/2016 (BN1  2016) இற்கமைவாக விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான மொத்த சம்பளம் 45540 ரூபாவாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் 2020.01.01 இன் பின்னரே இச்சம்பள உயர்வுகளுக்கு உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர்.
பாடசாலைகளில் நிலவுகின்ற வளப் பற்றாக்குறைகள், பெற்றோரின் அக்கறையீனம், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கான வளங்களை பெற்றுக்கொடுக்காமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் தற்போதும் பெருந்தோட்டப் பாடசாலைகளில் காணப்படுகின்றன.

தகைமையானவர்களுக்கு இடம் கிடைக்கவில்லையென புலம்புவதைவிடவும் சமூகத்தில் நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்பதையும் பார்க்க வேண்டும். விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனம் வழங்கிவிட்டதால் மாத்திரம் மலையகத்தின் விளையாட்டுத்துறை முன்னேற்றமடைந்துவிடும் என்று பொறுப்புக்களை அவர்கள் மீது சுமத்திவிடமுடியாது. பாடசாலை நிர்வாகமும் பெற்றோரும் பிள்ளைகளின் திறமைகளை ஊக்குவிப்பதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். குறைந்தது உடற்பயிற்சிக்குத் தேவையான சத்தான உணவுகளையாவது பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு பெற்றோர் தயாராக இருக்க வேண்டும். நமது சமூகத்தை முன்னேற்றுவதற்கு தனியொருவர் மட்டுமல்லாது, மொத்த சமூகமும் முயற்சிக்க வேண்டும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக