கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

4 ஜூன், 2025

ஆட்சியை தீர்மானிப்பது யார்? ஆசன பங்கீட்டில் பங்காளிகள் முரண்பாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவு பெற்று மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையிலும் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையே கடுமையான போட்டி நிலவி வருவதை அவதானிக்க முடிகின்றது.

மறைமுகமாக இது அதிகாரத்துக்கான போட்டியாக இருக்கவில்லை. தேசிய மக்கள் சக்தி தனிப்பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் ஆட்சியமைத்துள்ள நிலையில் அதனை வலுவிழக்கச் செய்யும் வகையில் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சியை உள்ளூராட்சி மன்றங்களில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக விமர்சனங்களும் இருக்கின்றன.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஆரம்பமாகவுள்ளமையால் அன்றைய தினம் அல்லது ஆணையாளர் தீர்மானிக்கும் ஒரு திகதியில் பெரும்பான்மை பெற்றுக் கொள்ளப்படாத உள்ளூராட்சி மன்றங்களில் வாக்கெடுப்பு மூலம் தலைமைப் பதவி தீர்மானிக்கப்படவுள்ளது. இதனால் அன்றைய தினத்தில் பெரும்பான்மையை எதிர்க்கட்சிகள் நிரூபித்து தலைமைப் பதவியை பெற்றுக் கொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள 12 உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி 131 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 82 ஆசனங்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 39 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 19 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி 18 ஆசனங்களையும் சுயேச்சைக்குழு ஒன்று 11 ஆசனங்களையும் சர்வஜன பலய 8 ஆசனங்களையும் மக்கள் கூட்டணி 6 ஆசனங்களையும் ஜனநாயக தேசிய கூட்டணி 4 ஆசனங்களையும் ஈரோஸ் 3 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
 
தேசிய மக்கள் சக்தி 08 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை பெற்றிருந்தாலும் தனி பெரும்பான்மையை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களுடன் கூட்டணி அமைக்க முயற்சிக்கவில்லையெனவும் சுயேச்சைக் குழுகளுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாகவும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கடந்த தேர்தலை விடவும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி கணிசமான ஆசனங்களை இம்முறை கைப்பற்றியுள்ளமை விசேடமாகும். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கூட்டணியாகவும் தனித்தும் போட்டியிட்ட மலையக மக்கள் முன்னணிக்கு தலவாக்கலை - லிந்துலை நகர சபையில் 3 ஆசனங்கள் கிடைக்கப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது.

எனினும் வலப்பனை, ஹங்குராங்கெத்த, கொத்மலை பிரதேச சபைகள் மற்றும் நுவரெலியா மாநகர சபைகளில் தேசிய மக்கள் சக்திக்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. வலப்பனை பிரதேச சபையில் 30 ஆசனங்களையும் ஹங்குராங்கெத்த பிரதேச சபையில் 22 ஆசனங்களையும் கொத்மலை பிரதேச சபையில் 22 ஆசனங்களையும் நுவரெலியா மாநகர சபையில் 12 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இதனால் தாம் முன்னிலைப் பெற்றுள்ள உள்ளூராட்சி மன்றங்களில்  ஆட்சியதிகாரத்தை நிறுவுவதற்கான முயற்சிகளையும் தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்து வருகின்றது.

இதனடிப்படையில் ஆளும் தேசிய மக்கள் சக்தியை விடவும் எதிர்க்கட்சிகள் அதிகம் ஆசனங்களை பெற்றுள்ள சபைகளில் ஆட்சியை தீர்மானிப்பதற்கான முயற்சிகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ளன. எனினும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைமைப் பதவியை பங்கிடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை காரணமாக பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பல உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை கைப்பட்டுவது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்திருந்தது.

அந்தக் கலந்துரையாடலின் போது கொட்டகலை, நுவரெலியா, அக்கரபத்தனை மற்றும் நோர்வூட் பிரதேச சபைகளின் தலைவர் பதவியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு வழங்குவது என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
 
எனினும் ஹட்டன் - டிக்கோயா நகர சபை, தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் தலைமைப் பொறுப்புக்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ{க்கு வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.  அதிக எண்ணிக்கையிலான ஆசனங்களை கொண்ட உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர் பதவியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைப்பற்றுவதை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்றுக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர் பதவியை சமமாகப் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொள்ளவில்லை என்றால், எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திலும் அதிகாரத்தை நிறுவுவதில் எந்தக் கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் அந்த உள்ளூராட்சி நிறுவனங்களில் எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக எதிர்க்கட்சிகளிடையே இன்னும் உடன்பாடு எட்டப்படாத நிலை தோன்றியுள்ளது. 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொத்மலை - 08, நோர்வூட் - 06, அக்கரப்பத்தனை - 04, கொட்டகலை - 05, நுவரெலியா பிரதேச சபை - 06, நுவரெலியா மாநகர சபை - 02, ஹட்டன் - டிக்கோயா - 02, தலவாக்கலை - லிந்துலை - 02, அம்பகமுவ - 02, ஹங்குராங்கெத்த - 02 என்றளவில் ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி மஸ்கெலியா பிரதேச சபையில் அதிக ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது. குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியானது, வலப்பனை - 15, கொத்மலை - 17, மஸ்கெலியா - 06, நோர்வூட் - 05, அம்பகமுவ - 06, அக்கரப்பத்தனை - 04, கொட்டகலை - 04, நுவரெலியா - 05, ஹங்குராங்கெத்த - 09, ஹட்டன் - டிக்கோயா நகரசபை - 05, தலவாக்கலை - லிந்துலை நகரசபை - 02, நுவரெலியா நகரசபை - 04 என ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.

இதேவேளை கடந்த முறை மஸ்கெலியா பிரதேச சபையை கைப்பற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரசால் வேட்புமனு தாக்கலில் ஏற்பட்ட குளறுபடிகளால் மஸ்கெலியா பிரதேச சபையில் போட்டியிட முடியவில்லை. வலப்பனை பிரதேச சபையிலும் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை. அவற்றை தவிர்த்து ஏனைய அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தனித்து களமிறங்கியிருந்தது. இதனடிப்படையில் கொட்டகலை, நோர்வூட் ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து  கொட்டகலை, மஸ்கெலியா, அக்கரப்பத்தனை, நோர்வூட் ஆகிய பிரதேச சபைகளிலும் தலவாக்கலை - லிந்துலை, ஹட்டன் - டிக்கோயா நகரசபைகளிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றிருந்தது.
 
கடந்த காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைப்பற்றிய சில உள்ளூராட்சி மன்றங்களில் இடம்பெற்ற நிர்வாக முறைக்கேடுகள், ஊழல் குற்றச்சாட்டுக்கள், அதிகார துஷ்பிரயோகம் என்பன இம்முறை தேர்தலில் தாக்கம் செலுத்தியுள்ளது. அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களில் தலைமைப் பதவியை வழங்குவதிலும் பட்டியல் உறுப்பினர்களை நியமிப்பதிலும் கட்சிக்குள் உட்பூசல்கள் அதிகரித்துள்ளன. கடந்த காலங்களில் தலைமைப் பதவிகளை வகித்தவர்கள் இம்முறையும் தலைமைப் பதவியை கோருவதும் இதற்கு காரணமாகும்.

கூட்டணி கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தையின் போது, தலைமைப் பதவியை பெற்றுக் கொள்வது தொடர்பிலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கவனம் செலுத்துவதாகவும் உள்ளூராட்சி மன்றத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக கவனம் செலுத்தவில்லையெனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை பட்டியல் உறுப்பினர்கள் நியமனத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் அதன் பங்காளிக் கட்சியான மலையக மக்கள் முன்னணிக்கும் இடையில் முரண்பாடுகள் உருவாகியிருப்பதையும் அறியமுடிகின்றது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மலையக மக்கள் முன்னணி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் தனித்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்தும் போட்டியிட்டது. தனித்து போட்டியிட்ட இடங்களில் அதிக உறுப்பினர்களை பெற்றுக் கொண்டது.

குறிப்பாக நுவரெலியா மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்த நிலையில் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் மாத்திரமே வட்டாரத்தை வெற்றி கொண்டார். இவ்வாறான ஒரு நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி தற்பொழுது போன்ஸ் ஆசனங்களை பெற்றுக் கொடுப்பதில் பங்காளி கட்சிகள் அனைத்திற்கும் பாகுபாடின்றி அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதனை முறையாக பங்கீடு செய்ய  ஐக்கிய மக்கள் சக்தி தவறும் பட்சத்தில் கட்சி பல பின்விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதனை கருத்தில் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட வேண்டும் எனவும் மலையக மக்கள் முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய முற்போக்கு கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன இணைந்து பெரும்பான்மையை நிரூபிக்கும் போது ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை தக்க வைக்ககூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. குறிப்பாக தலவாக்கலை - லிந்துலை நகரசபை, கொட்டகலை பிரதேச சபை, நோர்வூட் பிரதேச சபை, ஹட்டன் - டிக்கோயா நகர சபை, அம்பகமுவ பிரதேச சபை, அக்கரப்பத்தனை பிரதேச சபை, நுவரெலியா பிரதேச சபை, கொத்மலை பிரதேச சபை  ஆகியவற்றில் கூட்டணி மூலம் ஆட்சியை தக்க வைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. எனினும் கட்சித் தலைமைகளின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கின்றது என்ற அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் இதற்கான தீர்வு எட்டப்படலாம்.

உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை தக்கவைப்பது என்பது அதிகாரத்துக்கான போட்டியல்ல. மக்களுக்கு சேவையாற்றக்கூடிய வகையில் அதனை மாற்றியமைப்பதற்கான தேவையாகும். தங்களுடைய ஆட்சி பரப்புகளை தாங்களே தீர்மானிக்கும் சக்தியை வழங்குவதாகும். அதிக தமிழ் மக்களை கொண்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை தமிழர்கள் கைப்பற்றுவதன் மூலம் அதன் மூலமான அபிவிருத்திகளை மக்களுக்கு கொண்டு செல்வதில் சிரமம் இருக்காது என்ற அடிப்படையிலேயே பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு, கூட்டணி கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.

ஆனால் தற்போதைய செயற்பாடுகள் மூலம் அவ்வாறு இடம்பெறுவதாக தெரியவில்லை. கடந்த காலங்களில் ஊழல்வாதிகளாக அறியப்பட்டவர்களை மீண்டும் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரமிக்க பதவிகளுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை கூட்டணி கட்சிகள் கொண்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான விமர்சனங்களை தாண்டி மக்களுக்கு சேவையாற்றக்கூடிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதற்கு நுவரெலியா மாவட்டத்திலுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக