கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூலை, 2019

உயிர்த்த ஞாயிறு மூலம் அரசாங்கம் நன்மையடைந்திருக்கிறது

2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் தங்களுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பது எப்படி, தனது ஜனாதிபதி பதவியை மீண்டும்
நனவாக்கிக் கொள்வது எப்படி, தனக்கு இல்லாமல் போன ஜனாதிபதி கதிரையை எப்படி பிடிப்பது என்று பிரதமர் ரணிலும் யோசித்தார்களே தவிர
நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லையென்பதை ஜே.வி.பி. தொடர்ந்து வலியுறுத்துவதாக ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திர சேகரன் தெரிவித்துள்ளார். ஞாயிறு தினக்குரலுக்கு அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு :

  • இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜே.வி.பி. என்ன கருதுகின்றது?

கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் காயமடைந்தும் இருக்கும் ஒரு நிலைமையில், இந் நிலைமைக்கு மக்கள் விடுதலை முன்னணி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அதே நேரத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு கூடிய சீக்கிரத்தில் சுகமடைய வேண்டுமென்றும் பிரார்த்திக்கின்றோம். அதே நேரத்தில் இந்த தாக்குதல் என்பது, இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாத கும்பலின் செயற்பாடு, அதேபோன்று இந்த தாக்குதலின் மூலமாக
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உரிய நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இந்த மிலேச்சத்தனமான, காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை மனித நேயமுடைய யாரும் நியாயப்படுத்த முடியாது. இந் நிலைமையை தோற்கடிப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து முன்னெடுக்க வேண்டுமென்பதுதான் மக்களுடைய நிலைப்பாடு.


  • தாக்குதலுக்கு இலக்கான இரு ஹோட்டல்களில் தாக்குதல்களை மேற்கொண்ட இருவர் ஜே.வி.பி. தேசிய பட்டியல் எம்.பி. யின் மகன்கள் என்று கூறப்படுகிறதே?


சங்கிரிலா ஹோட்டல் தாக்குதலுக்கும் சினமன் கார்டன் ஹோட்டல் தாக்குதலுக்கும் பொறுப்பானவர்கள், இப்ராஹிம் ஹாஜியார் என்பவருடைய மகன்கள் என்பது தெரிய வருகின்றது. இந்த இப்ராஹிம் ஹாஜியார் என்பவர் 2015 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியுடைய தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர். அதை நாங்கள் பல இடங்களில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அதேவேளையில் 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது மக்கள் விடுதலை முன்னணியான நாங்கள், பாராளுமன்றத்துக்கான தேசிய பட்டியலுக்கு பெயரிட்டவர்கள் அனைவருமே கட்சியின் உறுப்பினர்கள் அல்ல. அனைவரும் ஒவ்வொரு தொழில் துறையை பிரதிநிதித்துவம் செய்பவர்கள்.

நேர்மையான அரசாங்க அதிகாரியான கணக்காய்வாளர் மாயதுன்ன கூட தேசிய பட்டியலில் இருந்தார். ஆனால், அவர் ஜே.வி.பி. உறுப்பினர் அல்ல. ஜே.வி.பி. க்கான தேவை இந்நாட்டின் புத்திஜீவிகள், கலைஞர்கள் என அனைவரின் பங்களிப்பு. இதில் இப்ராஹிம் ஹாஜியார் என்பவர் மிக முக்கியமான நபர். இங்குள்ள வர்த்தகர்களிடையே மிக பிரபலமானவர். பல்வேறு பட்டங்கள், பதக்கங்கள் வாங்கியவர். புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் முக்கிய புள்ளியாக இருந்தவர். அதுமட்டுமல்லாது அவர் அனைவருடனும் நல்ல மனிதராக செயற்பட்டார். அவரை கைது செய்தபோது கூட பக்கத்திலுள்ளவர்கள் அனைவரும், இவரை கைது செய்ய வேண்டாம். அவர் உண்மையில் நல்ல மனிதர் என்று குறிப்பிட்டனராம். எனவே அவருக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இருக்காது என்பதை இப்போதும் நம்புகின்றோம்.

இப்ராஹிம் கட்சியின் உறுப்பினர் கிடையாது. அதேநேரத்தில் ஹாஜியார் உண்மையிலே தங்கள் மகன்களுடன் சேர்ந்து ஏதாவது இந்த சம்பவங்களுக்கு நேரடியாக தொடர்புபட்டிருந்தால், அது சட்ட ரீதியான நடவடிக்கையெடுக்க சட்டத்துறைக்கு உரிமையுண்டு. அவ்வாறு உரிய நடவடிக்கைகள் எடுக்கும் போது ஜே.வி.பி. ஒரு போதும் தலையிடாது.


  • இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் ஏற்கனவே முன்னறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருந்தும் அவை தொடர்பில் அலட்சியம் செய்ததாகக் கூறப்படுகிறதே?


உண்மையிலேயே இவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெறுமென்று பலநாட்டு உளவுப்பிரிவுகள் அறிவித்திருக்கின்றனர். இந்தியா, இலங்கையிலுள்ள துருக்கி தூதரகம், இச்சம்பவம் தொடர்பான சகல விடயங்களையும் வெளியிட்டிருந்தது. ஆனால், எமது நாட்டுப் புலனாய்வுப் பிரிவு கூட இச்சம்பவம் தொடர்பாக அறிவித்திருக்கிறது. இவ்வாறான விடயங்களை தெரிந்து கொண்டுதான் எமது நாட்டு ஜனாதிபதி வெளிநாடு செல்கின்றார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நுவரெலியாவுக்கு ஓய்வு பெற செல்கின்றார். இவ்வரசாங்கத்தின் அமைச்சரான ஹரின் பெர்ணான்டோ, எனது அப்பா நாளைக்கு தேவாலயத்துக்குச் செல்ல வேண்டாமென கூறியதாகச் சொன்னார். அப்படியெனில், இந்நாட்டின் அரசியல்வாதிகள் அனைவரும் பொறுப்பற்ற அரசியல்வாதிகளாவர். மக்களுக்கு பொறுப்பு கூறாதவர்களாவர். அதனால் தான் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் ஜனாதிபதியும் பிரதமருமேயாகும். இவர்கள் இத்தாக்குதலுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்று ஜே.வி.பி. கருதுகிறது.

2015 இல் இவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல், தங்களுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பது எப்படி, தனது ஜனாதிபதி பதவியை மீண்டும் நனவாக்கிக் கொள்வது எப்படி, தனக்கு இல்லாமல் போன ஜனாதிபதி கதிரையை எப்படிப் பிடிப்பது என்று பிரதமர் ரணிலும் யோசித்தார்களே தவிர நாட்டு மக்களின் பிரச்சினைகளை முன்னெடுக்கவில்லை என்பதை ஜே.வி.பி. தொடர்ச்சியாக வலியுறுத்துகிறது.


  • இத்தாக்குதல்களின் மூலமாக நன்மையடைந்திருப்பது யார்?


இன்றைக்கு 10 வருடங்களுக்கு முன்பு தமிழ் சமூகம் அனுபவித்த இன்னல்கள், கண்ட இடத்தில் கைது செய்யப்படுகின்ற சூழல் என்பன இன்று இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களின் பள்ளிகள், வீடுகள் போன்ற சகலவற்றிலும் எங்கு வாள் இருக்கின்றது என்று தேடுகின்ற ஒரு நிலைதான் இங்கு இருக்கின்றது.

ஆனால், நமக்கெல்லோருக்கும் தெரியும் இந்நாட்டினுடைய தேசியக் கொடியான சிங்கத்திடம் கூட ஒரு வாள் இருக்கின்றது. அப்படியெனில் தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தையும் கூட கைது செய்ய வேண்டும். வாள், கத்தி என்பது ஒவ்வொரு வீடுகளிலும், விசேடமாக கிராமப் புறங்களில் இவ்வாறான பொருட்கள் எமக்குத் தேவை. இதனால் இத்தாக்குதலின் மூலம் முஸ்லிம் மக்களுக்கோ, சிங்களவர்களுக்கோ, தமிழ் மக்களுக்கோ எவ்வித நன்மையும் கிடையாது. இம்மூவின மக்களும் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.


  • இத்தாக்குதல் திட்டங்களினால் அரசாங்கம் எத்தகைய விளைவினை எதிர்கொண்டுள்ளது?


அரசாங்கத்துக்கு நன்மை ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலத்தில் மக்களுடைய போராட்டங்கள் அனைத்தையும் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் மூடி மறைத்திருக்கின்றது. இதன்மூலம் அரசாங்கத்துக்கு நன்மை கிடைத்திருக்கிறது. இந்நாட்டில் இன, மத வாதம் மூலமாக நீச்சலடித்து மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதற்கான காய் நகர்த்தல்களை முன்னெடுத்து வந்த ராஜபக்ஷாக்களுக்கு மறைமுக ஆசீர்வாதமாக இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கின்றது. கடந்த கால சம்பவத்தை நோக்கும் போது தௌஹீத் ஜமாத் அமைப்பை உருவாக்கியவர்கள், அதற்குப் பின்னால் இருந்தவர்கள், ஆதரவளித்தவர்கள் யாரென்று தேடிப் பார்க்கும் போது ராஜபக்ஷ ஆட்சியிலேயே இவை அனைத்தும் முன்னெடுக்கப்பட்டது.

அதேபோலே சிங்கள இனவாத அமைப்பான பொதுபல சேனாவை உருவாக்கியவர்களும் அவர்களே. தாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆட்சியதிகார கனவை நனவாக்குவதற்கு இது வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது போன்று முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக் கூட, ராஜபக்ஷக்கள் இருந்த காலத்தில் புலனாய்வுப் பிரிவு சிறப்பாக இருந்ததாகவும் கூறியிருப்பது, சிங்கள மக்களின் வாக்குகளை பெற பிரசார மேடையாக இவை பயன்படுத்தப்படுவதுடன் அதன் பிரசாரகராவும் ரொபட் ஓ பிளேக் செயற்படுகின்றார்.

இந்த ராஜபக்ஷாக்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு சாதகமான நிலைமையை தோற்றுவிக்கின்ற நிலையை காணக்கூடியதாக இருக்கிறது. அத்தோடு இந்தியா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளின் உளவுப் பிரிவினரும் இன்று இலங்கையை முற்றுகையிட்டுள்ளனர். முற்றுகையிடுவது மட்டுமல்லாது, இதன் மூலம் தங்களுடைய நாட்டின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கும், இலங்கையில் தங்களுடைய மூக்கை நுழைத்துக் கொள்வதற்காக வாய்ப்பை உருவாக்கியிருக்கிறார்கள். ஏனென்றால், உலக பயங்கரவாத அமைப்புகளுக்கு பின்னால் இருக்கின்ற, உலகத்தின் மனித உரிமையை மீறுவதில் முன்னணி வகிப்பது அமெரிக்காவாகும். அதனால் இதற்குப் பின்னால் நன்மையடைவது வெளிநாட்டு சக்திகள். ஆனால், இந்நிலைமை உடனடியாக தோற்கடிக்கப்பட வேண்டும். அது மாத்திரமல்ல இன, மதங்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கின்ற முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு ஏதுவான சூழலைக் கட்டியெழுப்ப வேண்டும்.


  • தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு எவ்வாறான வகையில் ஜே.வி.பி. யால் உதவ முடியமென நினைக்கின்றீர்கள்?


இந்நிலைமையினால் முழு நாடும் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளது. பாடசாலை, தொழில், நகரங்கள் என எதற்கும் செல்ல முடியாத நிலை இருக்கின்றது. எதற்கும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலைமை காணப்படுகின்றது. புலிகள் அமைப்பு இருக்கின்ற காலத்தில் கூட எவ்வித பயமும் இல்லாமல் பாடசாலைக்கு பிள்ளைகள் சென்றார்கள். அப்படியிருந்தும் இன்று பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாததற்கு கூறும் கதை சாய்ந்தமருது தாக்குதல். தங்களுடைய பிள்ளையை கூட தங்களுடன் வைத்துக் கொண்டு தற்கொலை செய்பவர்களாக இருந்தால், அடுத்தவர்களின் பிள்ளைகள் இவர்களுக்கு பொருட்டல்ல. இந்த பீதியிலிருந்து மக்களை மீட்டெடுப்பது என்பது மிகவும் இக்கட்டான நிலையாகும். அதனால், இந்நிலைமையை மாற்றுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என ஜே.வி.பி. கருதுகிறது. அதேவேளை நாட்டின் பொருளாதாரம் சிதைந்திருக்கிறது. சுற்றுலாத்துறையே இவர்களுடைய பிரதான பொருளாதார தந்திரோபாயமாகும்.

இதற்காக அவர்களுக்கு காணிகள், வரிச் சலுகைகள் என அனைத்தும் வழங்கப்பட்டு, கடந்த 21 ஆம் திகதி வரை இவர்களை நம்பியிருந்தார்கள். அதுமட்டுமல்லாது, ராஜபக்ஷ காலத்தில் 25 இலட்சம் பேர் உல்லாசப் பயணிகளாகக் கொண்டு வருவதற்கு தாங்கள் முயற்சித்ததாக கூறினார்கள். கடந்த கால ஆய்வு ஒன்றில் இலங்கைக்கு வருகைதந்த உல்லாசப் பயணிகளில் 83 வீதமானோர் பாலியல் தேவைக்காகவும் 17 வீதமானோரே உல்லாச பயணங்களுக்காக வந்திருக்கிறார்கள். இதனால் போதை, விபச்சாரம், சூதாட்டம் என்பன தலைவிரித்தாடும் ஒரு நிலைமை காணப்படுகிறது. ஆனால், இவர்களால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார தந்திரோபாயம் இன்று சுமார் ஒரு மணி நேரத்தில் தரைமட்டமாக்கப்பட்டு விட்டது. ஆனால், இன்று நாட்டில் மீன்பிடி, விவசாயம் என்பவற்றை உயர்த்தி நகர்த்துவதற்குப் பதிலாக செயலிழந்து போகக்கூடிய பொருளாதார கொள்கையை எமது நாடு கொண்டுள்ளது. அதனால் பொருளாதார ரீதியில் கூட நிலையற்ற அரசாங்கமாகவே இருக்கிறது.

அதேவேளை, தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே ஒற்றுமையை கட்டியெழுப்புவதில் இந்த அரசாங்கம் தோல்வி அடைந்திருக்கின்றது. மறுபுறம் தங்களுடைய நிகழ்ச்சி நிரலை முன்னிறுத்தி செயற்படுகிறது. ஆனால், இலங்கையில் தாக்குதல் நடைபெற்ற பின்பு கத்தோலிக்க பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்களுடைய பங்களிப்பு முக்கியமானதாகும். இவரின் மூலம் இனவாதம் தடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே இந்த நல்லிணக்கத்துக்கு எதிராக இருப்பவர்களே இந்த அரசியல்வாதிகள். இந்த இனங்களும் மதங்களும் ஒன்று சேருமாக இருந்தால் அதன்பிறகு இந்நாட்டு மக்கள் நாட்டை பற்றி சிந்திப்பார்கள், எதிர்காலம் பற்றி சிந்திப்பார்கள், பரம்பரை தொடர்பாக சிந்திப்பார்கள், அவ்வாறு சிந்திக்கும் போது கடந்த 71 வருட கால அரசியல் பற்றியும் சிந்திப்பார்கள், அவ்வாறு திரும்பிப் பார்க்கும் போது இந்த நாட்டை நாசமாக்கியவர்கள், இனங்களுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தியவர்கள் வேறுயாருமல்ல கடந்த 71 வருடம் ஆட்சி செய்த ஆட்சியாளர்களாவர்.

அதனால் இந்த ஆட்சியாளர்களிடமிருந்து மீள்வதற்கான வாய்ப்பு நல்லிணக்கத்தினால் ஏற்படும். இதனை எமது ஜே.வி.பி. உணர்ந்திருக்கிறது. இஸ்லாமிய பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும். சகலரையும் ஒன்று திரட்ட வேண்டும். இந்நிலைமைகளை தோற்கடிக்கவும், இதனை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும் இன்று முதல் இனவாதத்தை தோற்கடிப்பதற்கும் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எங்களின் கடமை என்ற தலைப்பிலான உரையாடல் எங்களுடைய கட்சித் தலைவரின் தலைமையின் கீழ் அனைத்து நகரங்களிலும் கிராம மட்டத்திலும் கொண்டு செல்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

ஏனென்றால் இந்த அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் மூலமாக, நமது அரசியலும் இனவாதத்திலேயே தங்கியிருக்கிறது. எனவே, அந்த இனவாத அரசியலிலிருந்து மக்களை மீட்க ஜே.வி.பி. அதற்கான உரையாடலை ஆரம்பித்திருக்கின்றது. எதிர்வரும் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் கூட இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறோம். அதற்கு ஏதுவாக இங்குள்ள ஜம்மியதுல் உலமா அமைப்பினரை சந்தித்தோம். கருத்துப் பரிமாறியிருக்கின்றோம். ஆயர்களுக்கு கருத்துக்களைக் கூறியிருக்கின்றோம். தேரர்களை சந்திப்பதற்கு
நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம். அதேபோன்று இந்துமத குருக்கள் அனைவரையும் சந்திப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம். இந்த நேரத்தில் இந்த
சமூகம் இனவாதத்தை, மதவாதத்தை, நோக்கி நகர்ந்திருக்கிறது. இவ்வாறான நேரத்தில் மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்கின்ற வேலையை ஜே.வி.பி. முன்னெடுத்திருக்கிறது.


  • 13 ஆம் திகதி மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியிருக்கிறாரே?


ஒரு உண்மை இருக்கின்றது. இந் நாட்டில் சம்பவம் இடம்பெறுகிற போது, இடம்பெற்ற பிறகு இது தொடர்பான வதந்திகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வதந்திகள் பரவுவதற்கான பல்வேறு வசதிகளும் இன்று மக்களுக்கு இருக்கின்றது. அதனால், மீண்டும் ஒரு 13 ஆம் திகதி தாக்குதல் பற்றி பேசுகின்றார்கள். இதன்மூலமாக இந்நாட்டு மக்களை பீதியில் வைத்துக் கொள்கிறார்கள். எங்களைப் பொறுத்த வரையில் இலங்கையில் இருக்கின்ற பாதுகாப்பு படைப்பிரிவினர், மிகவும் திறமையானவர்கள். போதைப்பொருள் வலைப்பின்னல், சஹ்ரானின் வலைப்பின்னல் போன்றவற்றின் தகவல்களை மிக குறுகிய நேரத்தில் பெற்றுக் கொள்கின்ற திறமை இருக்கின்றது. ஆனால், இன்று தேசிய பாதுகாப்பை பிரயோகிப்பதில் அரசாங்கமும் அரசியல்வாதிகளும் பின்னடைவை எதிர்நோக்கியிருக்கிறார்கள். இவ்வாறான சூழலில் வதந்திகள் பரவுவதைத் தடுக்க முடியாது. எனவே, வதந்திகளை நம்ப வேண்டாமென மக்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.


  • ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அவசர காலச் சட்டம் தொடர்பான சட்டமூலம் எவ்வாறானது?


கடந்த காலத்தில் அவசரகாலச் சட்டம், பயங்கரவாத தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது, ஓரிரு மாதங்களில் முடிந்துவிடுமென கூறியது. ஆனால், இன்று 40 ஆண்டுகளாகியும் இச்சட்டம் இருக்கின்றது. இந்த நாட்டில் இருக்கின்ற தமிழ், சிங்கள இளைஞர்கள் பலியாகியிருக்கின்றார்கள். கிட்டதட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஜே.வி.பி. சார்ந்தவர்கள் இறந்திருக்கிறார்கள். இந்த சட்டங்களினால் நாடே இளைஞர்களின் இரத்தத்தால் ஊறிப்போயிருக்கிறது. எனவே, இனியும் இந் நாட்டு மக்கள் இரத்தம் சிந்தத் தேவையில்லை. ஆனால், இச்சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்துகின்ற ஐ.தே.க. வினர் இந்த அவசரகாலச் சட்டத்தை பயங்கரவாத சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். இதன் மூலம் மக்களுடைய ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதற்கு ஏதுவான நடவடிக்கையாகவே இதைப் பார்க்கிறோம். இதனால் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக