கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 ஜூலை, 2019

வாடகை வீடுகளாகும் தனி வீடுகள்

மலையகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் தனிவீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் இலங்கை அரசாங்கத்தால் பசும்பொன் வீடமைப்புத் திட்டங்களும் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில்  மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டத்தில்  2016/01/09 ஆம் திகதி தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 23 குடும்பங்களுக்கான தனி வீட்டுத்திட்டங்கள் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு , 2017 மே 28 ஆம் திகதி பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டிருந்தது.

பின்னர் நீர், மின்சாரம் என்பன காலப்போக்கில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.  ஆனால் பல இடர்களுக்கு மத்தியில் இந்த வீட்டுத்திட்டத்தை பெற்றிருந்தாலும் சமீப காலமாக இந்த வீட்டுத்திட்டங்களிலுள்ள சில வீடுகள் வாடகைக்கு விடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன்  ஒரு சில வீடுகள் 3000 ரூபாவுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. தனி வீடுகளை வாடகைக்கு விடுவதற்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக வீடுகளும் காரணமாக இருக்கின்றது.


தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே புதிய வீட்டுத்திட்டம் பெற்றுக் கொடுக்கப்பட்டது.  அதற்கு முன்பாக அவர்கள் தற்காலிக குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.  புதிய வீட்டுத்திட்டம் கிடைக்கப்பெற்ற பின்பு பலர் அவற்றிலிருந்து வெளியேறி விட்டாலும் ஒரு சிலர் இன்னும் வெளியேறாமல் இருந்து வருவதுடன் தற்காலிக குடியிருப்பையும் சொந்த குடியிருப்புகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  இவர்களே வீடுகளை வாடகைக்கும் விடத் தொடங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் வளங்களை இவ்வாறு துஷ்பிரயோகம்  செய்வதால் தோட்டத்திலுள்ள ஏனைய மக்களும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.  தனி வீடுகளை வாடகைக்கு விடவும் தற்காலிக குடியிருப்புகளை சொந்தமாக மாற்றுவதும் எரிந்த வீடுகளிலேயே மீண்டும் தங்கியிருப்பதும் சட்டவிரோதமானதாகும். எனவே இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு தோட்ட நிர்வாகமும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வீடுகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள் சிலர் அதனை முறையாகப் பராமரிப்பதில் கூட கவனம் செலுத்தவில்லை.

எனவே தோட்டத்திலுள்ள ஒரு சில மக்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் எவ்விதமான அரசாங்க உதவிகளும்  தமக்குக் கிடைக்காமல் போகலாம் என கவலை தெரிவிக்கின்றனர்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக