- கர்ப்பிணிப் பெண்களுக்கு தாய் - சேய் சிகிச்சை நிலைய வசதிகளோ,
- கிரமமான மருத்துவ ஆலோசனை வசதிகளோ இல்லை. தோட்ட மருத்துவ உதவியாளர்கள் அதற்கான தகுதிகளை கொண்டிராமையும் தேவையான மருத்துவமனை உட்கட்டமைப்பு வாகன போக்குவரத்திற்கு உகந்த பாதை வசதிகளும் இன்மையே இதற்கு காரணம். அதே வேளை பல பெருந்தோட்டங்களில் கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்கு கூட பிரசவ விடுதிகளுக்கு கொழுந்து லொறிகளிலேயே கொண்டு செல்லப்படுகின்றனர். 2010 ஆம் ஆண்டில் ரம்பொட புரட்டாசி தோட்டத்தைச் சேர்ந்த புஷ்பமலர் என்ற கர்ப்பிணி பெண் புசல்லாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட லொறியிலேயே குழந்தையை பிரசவித்தாள். தோட்டத்தில் அம்புலன்ஸ் வாகனமோ வெறெந்த பாதுகாப்பான போக்குவரத்து வசதியோ இல்லாமையினாலேயே அப்பெண் லொறியில் ஏற்றிச் செல்லப்பட்டாள். எனினும் குழந்தை லொறியிலேயே பிறந்து இறந்துவிட்டது. மேற்படி தோட்டத்தில் இவ்வாறான விடயங்கள் பலமுறை நிகழ்ந்துள்ளன. ஆதாரம் - வீரகேசரி (04/07/2010), தினக்குரல் (21/06/2010)
- கடந்த வருடம் கண்டி கலஹாவில் ஒன்றரை வயது குழந்தை இறந்த சம்பவத்தில் மேலதிக அவசர சிகிச்சைக்காக குழந்தையை பேராதனை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு அம்புலன்ஸ் வசதி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றிருந்தாலும் இன்றுவரை பல பெருந்தோட்ட மக்களின் சுகாதார வசதிகள் மேற்கூறிய வகையிலேயே இருக்கின்றன. கர்ப்பிணிப் பெண்களையும் நோயாளர்களையும் காவிச் செல்வதற்கு உகந்ததல்லாத வண்டிகளே அதிகம் தோட்டப்புறங்களில் பாவிக்கப்படுகின்றன. இதில் கொழுந்து ஏற்றும் லொறிக்கு அதிக முக்கியத்துவமுண்டு. பெருந்தோட்டப் புறங்களிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் மற்றும் மருந்து சாலைகள் என்பன பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழேயே இயங்குவதால் நவீன முகாமைத்துவமின்றி ஆங்கிலேயர் கால பராமரிப்புகளையே கொண்டுள்ளன.
பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென்ற நீண்டநாள் கோரிக்கை கூட இன்றுவரை நிறைவேற்றப்படாமலேயே கிடப்பில் கிடக்கின்றது. அரசாங்க இலவச மருத்துவம் மற்றும் தனியார் மருத்துவம் என்பன பரந்தளவில் காணப்பட்டாலும் அவை நகர்புறத்தை அண்டியதாகவே காணப்படுகின்றன. இதனால் தோட்டப்புறங்களிலுள்ள கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயாளர்களை வாடகை வாகனங்கள் அல்லது லொறிகளிலேயே கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஆனாலும் பாறைகள் சீரின்மையால் மேலும்
நெருக்கடிகள் ஏற்படுகின்றன. ஆரம்ப சிகிச்சைகளை வழங்கக்கூடிய அம்பியுலன்ஸ் வசதிகள் கூட இல்லை.
இதன் காரணமாகவே 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை வருகைத் தந்திருந்த இந்தியப் பிரதமரிடம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இலவச அம்பியுலன்ஸ் வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. 2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்ட 1990 இலவச அம்பியுலன்ஸ் சேவையான சுவசெரிய தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் அமைச்சிடம் கோரிய போது பல தகவல்களைப் பெற முடிந்தது. இந்த இலவச அம்பியுலன்ஸ் சேவைக்கு 88 அம்பியுலன்ஸ்களை கொள்வனவு செய்வதற்காக முதற்கட்டமாக 7.6 மில்லியன் அ. டொலர்கள் இந்தியாவால் வழங்கப்பட்டது. பின்னர் இச்சேவையை நாடு முழுவதும் விஸ்தரிக்கும் வகையில் மேலதிகமாக 15.02 மில்லியன் அ.டொலர்கள் ஒதுக்கப்பட்டன.
இதன்படி 2018 ஜுலையில் வட மாகாணத்திலும் ஆகஸ்ட் மாதத்தில் ஊவா மாகாணத்திலும் வடமத்திய மாகாணத்தில் செப்டெம்பர் மாதத்திலும் வடமேல் மாகாணத்தில் அக்டோபர் மாதத்திலும் மத்திய மாகாணத்தில் நவம்பர் மாதத்திலும் 2019 ஜனவரி மாதத்தில் சப்ரகமுவ மாகாணத்திலும் ஜுன் மாதத்தில் கிழக்கு மாகாணத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களை மையப்படுத்தியே இந்த இலவச அம்பியுலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி நாடு முழுவதும் 297 அம்பியுலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. (அட்டவணை 1) ஒரு அம்பியுலன்ஸ் 20957 அ.டொலர்கள் பெறுமதியானவையாகும்.
இச்சேவையானது பொலிஸ் நிலையங்களை மையப்படுத்தி வழங்கப்படுகின்றமையானது நகர்ப்புற வாசிகளுக்கு வரமாக அமைந்திருக்கின்றது. ஆனால் பெருந்தோட்டப்புறங்களிலும் அவ்வாறான முறையினை பின்பற்றியிருப்பது சிறப்பான சேவையினை பெற்றுக் கொள்வதில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. பெருந்தோட்டங்கள் பெரும்பாலானவை நகர் புறங்களிலிருந்து 15 - 20 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்து காணப்படுகின்றது. சாதாரணமாக நோயுற்ற ஒருவரை காவி வர வேண்டுமாயின் அண்ணளவாக அம்பியுலன்ஸ் வண்டி 30 கிலோ மீற்றர்களை கடக்க வேண்டும். இதனால் நோயாளரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது இயலாத காரியமாகிறது. அதேவேளை அம்பியுலன்ஸ் வண்டியில் முதலுதவிச் சிகிச்சைகளை வழங்க முடியுமே தவிர அவசர சிகிச்சையினை வழங்க முடியாது.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களான 2012 மத்திய மாகாணம் (18.9 வீதம்) ஊவா மாகாணம் (12.8 வீதம்) சப்ரகமுவ மாகாணம் (8.1 வீதம்) தென் மாகாணம் (1.7 வீதம்) எனும் அடிப்படையில் மத்திய மாகாணத்தில் 73473 பேருக்கு ஒரு அம்பியுலன்ஸ் என்ற வகையிலும் ஊவா மாகாணத்தில் 45231 பேருக்கு ஒரு அம்பியுலன்ஸும் சப்ரகமுவ மாகாணத்தில் 66505 பேருக்கு ஒரு அம்பியுலன்ஸ் என்ற வகையிலேயே சுவசெரிய அம்பியுலன்ஸ்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீடுகளுக்கு அமைவாக 297 அம்பியுலன்ஸ்களையே எம்மால் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. எனவே இத்தோடு நிறுத்திவிடாமல் மேலதிக நிதியொதுக்கீடுகளை இந்திய அரசாங்கத்திடம் கோரியோ வேறு நாடுகளிடமோ அல்லது இலங்கை அரசாங்கமோ ஒதுக்கி இன்னும் அதிகமான அம்பியுலன்ஸ்களை கொள்வனவு செய்து இச்சேவையை விஸ்தரிக்க வேண்டும்.
தற்போது ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களை மையப்படுத்தி வழங்கப்பட்டுள்ள இந்த அம்பியுலன்ஸ்களை காலப்போக்கில் கிராம சேவகர் பிரிவுக்கு ஒன்று என்ற அடிப்படையிலும் பின்னர் தோட்டங்களுக்கு ஒன்று என்ற அடிப்படையில் வழங்கி முகாமைத்துவம் ஆளணி கொடுப்பனவு என்பவற்றை பெருந்தோட்ட நிர்வாகங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இது அரசுக்கான செலவீனத்தை ஓரளவுக்கு குறைக்க உதவும். பெருந்தோட்டங்களில் இங்கும் வைத்திய சாலைகள் மற்றும் மருந்து சாலைகளில் போதியளவான வளங்கள் இல்லை. சகல வளங்களுக்கும் தோட்ட நிர்வாகத்தை எதிர்பார்த்து இருக்க வேண்டியிருப்பதால் வளங்கள் இல்லாத நிலையிலேயே இயங்க வேண்டியுள்ளது.
தோட்டப்புறங்கள் என்ற ரீதியில் சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவைகள் விஸ்தரிக்கப்படும் பட்சத்தில் மேலதிகமாக பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு மாற்றுத் துறைகளில் வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் சூழல் உருவாகும். 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 இல் 1266 ஊழியர்கள் சுவசெரிய மன்றத்தில் பணியாற்றுவதுடன் அவர்களுக்கான சம்பளத்தொகையாக 57.6 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மார்ச் 19 இல் 1279 ஊழியர்களுக்காக 55.5 மில்லியன் ரூபாவும் ஏப்ரல் 19 இல் 1349 ஊழியர்களுக்காக 62.9 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றில் பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளும் இணைந்து கொள்ளப்படும் பட்சத்தில் அவர்களும் அரச ஊழியர்களாக செயற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
1908 ஆம் ஆண்டு 36 ஆம் இலக்க மருத்துவ பதிவு (திருத்தச்) சட்டத்தின் கீழ் பிரித்தானிய ஆட்சிக்காலப்பகுதியில் பெருந்தோட்டத்துறை சுகாதாரம் மற்றும் மருத்துவம் கவனிக்கப்பட்டது. ஆனால் இன்று பெருந்தோட்டங்கள் தனியார் துறையின் கீழ் இயங்குவதால் தோட்ட நிர்வாகமே சுகாதார துறையை தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருக்கிறது. பிரதி சுகாதார அமைச்சராக வடிவேல் சுரேஷ் இருந்த காலப்பகுதியில் 51 பெருந்தோட்ட வைத்தியசாலைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டதுடன் 23 மருத்துவமனைகள் அரசுடைமையாக்கப்பட்டன. ஆனால் தற்போது பெருந்தோட்ட சுகாதாரத்துறை சீர்குலையும் நிலை தோன்றியிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக பெருந்தோட்டத்துறை சுகாதார கட்டமைப்பை அரசுடைமையாக்குவதுடன் அரச உடமையான சுவசெரிய சேவையை பெருந்தோட்டத்துக்குள்ளும் விஸ்தரிக்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக