கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 ஜூலை, 2019

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சிடம் 50 ரூபா இல்லை

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெளிவானது




பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை மிக நீண்டதொரு அத்தியாயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பல தரப்பு பேச்சுவார்த்தைகளும் பலதரப்பு அரசியல்வாதிகளின் கருத்துக்களும் தற்போது 50ரூபாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 1000 ரூபா சம்பளவுயர்வினை  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வலியுறுத்தி கடந்த காலங்களில் பல போராட்டங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அவை பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன் தொடர்ச்சியாக 700 ரூபா அடிப்படைச் சம்பளமாகவும் விலைபங்கீட்டு கொடுப்பனவாக 50 ரூபாவும்  EPF/ETF கொடுப்பனவு 105 ரூபாவும் என கணக்கிடப்பட்டு மொத்தமாக 855 ரூபாவுக்கான கூட்டு ஒப்பந்தம் அலரிமாளிகையில் இரகசியமாக கைச்சாத்திடப்பட்டது.

இந்நிலையில் கூட்டு ஒப்பந்தம் மூலம் நிர்ணயிக்கப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளமானது, அவர்களின் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதற்கு போதாமையின் காரணமாக அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் 50 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது. இதற்காக இலங்கை தேயிலைச்சபை நிதியிலிருந்து 1.2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுமென நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த வரவு - செலவுத்திட்ட உரையின்போது குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான செயற்பாடுகள் இன்றுவரையும் கிரமமாக முன்னெடுக்கப்படவில்லை.

இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட 50 ரூபா விடயம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலமாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சிடம் (MPI/Admin/19/Right to Information) 31.05.2019 அன்று முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கையில் எவ்விதமான பதில்களும் குறித்த அமைச்சில் இல்லையென்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. தகவல் கோரிக்கையின்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா சம்பளவுயர்வினை பெற்றுக்கொடுக்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு பெற்றுக்கொண்ட அமைச்சரவை அனுமதி தொடர்பான விபரம் மற்றும் அமைச்சரவைப் பத்திரத்தின் நகல், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா கொடுப்பனவினை இன்னும் வழங்காததற்கான காரணம் என்ன?, இலங்கை தேயிலைச்சபையின் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு ஒதுக்குவதாக கூறப்பட்ட நிதிதொடர்பான விபரம் மற்றும் அதற்கான ஆவணங்களின் நகல் போன்ற விடயங்களே கோரப்பட்டிருந்தன.

ஆனால் அவ்வாறானதொரு எந்த விடயங்களும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இல்லையென அமைச்சால் வழங்கப்பட்ட மேன்முறையீட்டு பதிலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்விடயம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் அமைச்சரவைப் பத்திரங்களை குறிப்பிட்ட அமைச்சரவையிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியுமென அமைச்சரவை அலுவலகம் தெரிவித்திருக்கும் நிலையில் அமைச்சின் மேன்முறையீட்டுக்கான பதில் பொறுப்பற்ற தன்மையினையே வெளிப்படுத்துகின்றது. குறைந்தது இக்கொடுப்பனவு இதுவரையும் வழங்கப்படாததற்கான காரணம் கூட அமைச்சிடம் இல்லை. தற்போது 50 ரூபாவினை வழங்குவதற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்கவும் இராஜங்க அமைச்சர் வடிவேல் சுரெசும் தடையாக இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்ப்பதாகவே அப்பதில்கள் அமைந்திருக்கின்றன.

தோழிலாளர்களின் சம்பளவுயர்வு தொடர்பான விடயங்களில் ஆரம்பம் முதலே எதிரான விடயங்களையே அமைச்சர் நவீன் திஸாநாயக்க முன்வைத்து வருகின்றார். இ.தொ.கா.வின் நெருங்கிய நட்பான இவர் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் தொழிலாளர்களுடைய சம்பள விவகாரம் தொடர்பில் பொறுப்பற்ற வகையிலேயே நடந்து கொண்டார். தொழிலாளர்களுடைய சம்பளப் பிரச்சினையானது, அரசாங்கத்தின் நிர்வாகப் பிரச்சினையாக இருந்திருந்தால் இதற்கான தீர்வில் அனைத்து தரப்புக்களும் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால் இவை அரசியல் பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பதால், ஆட்சியாளர்களால் தமக்கான இலாபத்தினை மாத்திரம் கணக்குப் போடுகிறார்கள்.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் இத்தகைய பதில்களானது, பெருந்தோட்ட தொழிலாளர்கள் மீதான அக்கறையின்மையையே காட்டுகின்றது. சிறு தோட்ட உரிமையாளர்களை ஊக்குவிப்பதற்காக எடுத்துக்கொள்ளும் அக்கறையை கூட இவர்கள் மீது காட்டுவதில்லை. சிறுதோட்ட உரிமையாளர்களை பாதுகாப்பதற்காக அமைச்சின் கீழ் அதிகாரசபையும் இயங்கி வருகின்றது. ஆனால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழில் நிலையினை பாதுகாப்பதற்கு எந்தவொரு அரசநிறுவனங்களும் செயற்படுவதாக தெரியவில்லை. அரசால் வழங்கப்படுவதாக கூறப்பட்ட 50 ரூபா நிவாரணக்கொடுப்பனவின் மூலம் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரமோ, வாழ்வாதாரமோ உயர்ந்து விடப்போவதில்லை. ஆனால் வருமானத்தில் அவர்களுக்கு இருக்கும் ஒருசில தட்டுப்பாடுகளையாவது நீக்க முடியும்.

இந்த தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சிடம் கோரிய நான்கு கேள்விகளில் இறுதி கேள்வியான, அரசாங்கத்தின் முகாமைத்துவத்தின் கீழ் இயங்குகின்ற பெருந்தோட்டங்களில் தொழிலாளர் ஒருவர் பெற்றுக்கொள்கின்ற நாளாந்த சம்பளம் எவ்வளவு என்பதற்கு, அடிப்படைச்சம்பளம் 700 ரூபாவும் விலைபங்கீட்டு கொடுப்பனவாக 50 ரூபாவும் EPF/ETF கொடுப்பனவு 105 ரூபாவும் என மொத்தமாக 855 ரூபா வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் எந்தளவுக்கு உண்மையிருக்கிறது என்பதை ஆணைக்குழுவுக்கு முறையிடுவதன் மூலமே அறிந்து கொள்ள முடியும்.

எனவே பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சானது, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலன்களில் எவ்வித அக்கறையும் கொண்டிருக்கவில்லையென்பதும் தோட்டத் தொழிலாளருக்கு பெற்றுத் தருவதாக கூறப்பட்ட நாளாந்த 50 ரூபா கொடுப்பனவிலும் அக்கறையில்லாமல் இருப்பதுமாகவே தெரிகிறது. இதனால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நிர்வாகத்தினை கண்காணிப்பதற்கு புதியதொரு அரசகட்டமைப்பு தேவைப்படுகிறது. தொழிற்சங்கங்களிலும் தொழிற்சங்க தலைமைகளிடமும் தங்கியிருக்காத வகையில் சுயாதீன ஆணைக்குழுக்கள் மூலமான தீர்வுத் திட்டத்தினை நிபுணர்கள் முன்வைக்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக