கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

3 ஜூலை, 2019

காதலனால் கொலையுண்ட காதலி

வெசாக் நிலவு பூமியை எட்டிப்பார்ப்பதற்கு சில மணித்தியாலங்களே காணப்பட்டன. பொலநறுவை மாவட்ட பிரதேசமொன்றில் வானத்தையும் பூமியையும் கதிகலங்க வைக்கும் குற்றமொன்று இடம்பெற்றிருந்தமை காரணமாக பொதுமக்கள் அல்லோலகல்லோலப்பட்டனர்.

பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் தொழில் புரிந்து வந்த யுவதி ஒருவர் வயலொன்றுக்கு அருகில் பாழடைந்த காட்டில் பார்ப்பவர் மனம் பதைபதைக்க கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு பின் அந்தச் சடலம் பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்டிருந்தது. இந்தக் கொடூரச் செயலைச் செய்தவன் யுவதியின் காதலன் என்று கூறப்படும் ஒரு பிள்ளையின் தந்தையாவான். இந்தத் தகவல் பொலிஸாரின் மேலதிக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. ஒரு மாத காலத்துக்கு மேலாக வெலிதலாவ பிரதேசத்தில் இருந்து இந்த குற்றச்செயலுக்கான காரணத்தை புலஸ்திபுர பொலிஸார் தங்களது விசாரணைகள் மூலம் அறிந்துகொண்டனர். பொலிஸ் பரிசோதகர் கே.பி.பி. பத்திரண தலைமையில் பொலிஸ் அதிகாரிகளின் திறமையால் மேற்படி குற்றத்துக்கான காரணம் கண்டறியப்பட்டது.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் உயிரிழந்த யுவதி  டபிள்யூ. எம். ஏ.ஜி. அயேஷா கௌசல்யா மதுமாலி (23 வயது) ஆவார். இவளை அழகு தேவதை என்று கூறினால் கூட போதாது. அந்தளவுக்கு வசீகரமானவள். அவள் தனது தாய் , தந்தை, மூத்த சகோதரி மற்றும் குட்டித் தம்பியொருவருடன் பொலநறுவை பி.ஓ.பீ. 316, தல்பொத கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள கலுவரகஸ் ஹந்திய என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தாள். தந்தை டபிள்யூ. எம். ஏ.ஜி. பிரேமரத்ன (50 வயது) , இலங்கை இராணுவத்தில் பல ஆண்டுகாலமாக இராணுவ வீரராக செயற்பட்டு தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். தாய் ஜி.எல். அனுஷா கீதாஞ்சலி (46 வயது) , வீட்டுப் பணிப்பெண்ணாக இருக்கிறார். அயேஷா தனது ஆரம்பக் கல்வியை கிராமப் பாடசாலையான பி.ஓ.பீ. 316, தல்பொத ரத்தனசார வித்தியாலயத்திலேயே கற்றார். அங்கு மிகவும் திறமைசாலியாக செயற்படுவது மட்டுமன்றி கல்விச் செயற்பாடுகளிலும் மிகவும் ஆர்வமாக செயற்படுவாள் என பாடசாலை சமூகம் கூறியது. சாதாரணதரப் பரீட்சையில் மிகவும் திறமையான சித்தியை பெற்ற அயேஷா , உயர்தரம் கற்பதற்காக வேண்டி கலைத்துறையை தேர்வு செய்தாள். அதற்காக வேண்டி தனது தாயின் கிராமத்துக்கு அண்மித்துக் காணப்பட்ட வெலிவேரிய பிரதேசத்தில் அமைந்துள்ள மந்துமபண்டார  மகா வித்தியாலயத்தை தெரிவு செய்திருந்தால் என அவளது பெற்றோர் பொலிஸாருக்கு தெரிவித்தனர்.


தொல்பொருளியல் துறையில் கவ்வி கற்று எதிர்காலத்தில் நாட்டுக்கு சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்கும் வகையில் மிகவும் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் உயர் தரத்தில் கல்வி கற்ற அயேஷாவுக்கு அந்தத் துறையில் திறமை சித்தியை பெறமுடியாமல் போய்விட்டது. இருப்பினும் தனது விடாமுயற்சியை கைவிடாத அயேஷா,  வெளிவாரி பட்டதாரிக் கல்வியைத் தொடர களனி பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்திருந்ததாகவும் அவளின் பெற்றோர் தெரிவித்தனர். இதற்கு மேலதிகமாக பொலநறுவை தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து தங்கம் மற்றும் தங்காபரணம் தொடர்பில் பாடநெறியொன்றையும் கணினி பாடநெறியொன்றையும் கற்றதோடு, இத்துறைகளில் திறமைச் சித்தியை பெற்றிருந்ததாகவும் அறியக் கிடைத்தது.

பாடசாலைக் கல்வியின் பின்னர் மேலதிக கல்வியறிவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பொலநறுவை நகரை அண்மித்ததாகக் காணப்படும் ஆடை தயாரிப்புத் தொழிற்சாலையொன்றில் கணினி செயற்பாட்டதிகாரி பதவியை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதமே பொறுப்பேற்றுக்கொண்டாள். வேலைக்குச் சேர்ந்த சில தினங்களிலேயே வேலை தளத்திலுள்ள நிறைய பேர் இவளுடன் நட்புறவு கொண்டனர். இவர்கள் அனைவர் மனதிலும் நல்லபிப்பிராயத்தை அயேஷா பெற்றுக்கொண்டிருந்தாள். இது தவிர, உயர் அதிகாரிகள் பலராலும் அயேஷாவின் சீரான வேலைகளுக்காக நன்மதிப்பை பெற்றுக்கொண்டாள் . அவளை பலரும் பாராட்டினர். ஆடைத் தொழிற்சாலைக்குச் சென்று ஒரு வருடம் கழியும் முன்னரே அந்த வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலம் அயேஷாவிற்கு வந்தது. அவளின் பெற்றோர் வழங்கிய தகவல்களின்படி வெளிவாரிப் பட்டப்படிப்பை தொடர்வதற்காக வேண்டி அவள் வேலையிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இது தொடர்பில் தொழிற்சாலை அதிகாரியிடம் கூறியவிடத்து, மேலும் ஒரு மாதம் வேலைக்கு வருமாறு கேட்டுக்கொண்டார். அந்த காலப்பகுதிக்குள் அந்த இடத்துக்கு இன்னொருவரை தேடி நியமிக்கும் பொருட்டே அவளுக்கு அந்தக் காலக்கெடு வழங்கப்பட்டதாக அயேஷாவின் பெற்றோர் எமக்குத் தெரிவித்தனர். அதற்கிணங்க மே 13 ஆம் திகதி வேலையிலிருந்து நீங்கிக் கொள்ள அயேஷாவுக்கு உத்தரவு வழங்கப்பட்டது. வேலையிலிருந்து நீங்கிய அயேஷா தனது மேலதிகக் கல்வியைத் தொடர முயற்சி செய்த போதும் காலம் அவளை விட்டுவைக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

அவளது விதியைப் பற்றி தந்தை இவ்வாறு கூறுகிறார். மகள் வெளிவாரிப் பட்டத்தை தொடர களனி பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பம் செய்து அனுமதியும் பெற்றிருந்தாள். அதனால் மேற்கொண்டு கல்வியை தொடரும் பொருட்டு வேலையிலிருந்தும் விலகினாள். இதற்கான விலகல் கடிதத்தை தொழிற்சாலை உயரதிகாரியிடம் கொடுத்ததும் அவரும் அதற்கு இணங்கி மேலும் ஒரு மாதகாலம் இன்னொருவரை அந்த வேலைக்கு நியமிக்கும் வரை சேவை புரியுமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு இணங்கிய மகள், தொடர்ந்து வேலைக்குச் சென்றாள். அவள் தினமும் வேலைக்குச் சென்றது தொழிற்சாலை பஸ்ஸிலேயாகும். நான் எந்நாளும் காலை வேளையில் மகளை வீட்டிலிருந்து பஸ் ஏறும் இடத்துக்கு (அலி வங்குவ சந்தி) கூட்டிச் சென்று மகள் பஸ் ஏறியதும்தான்  வீட்டுக்கு வருவேன்.மீண்டும் வேலை முடிந்ததும் மகள் எனக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்வாள். பின் நான் சென்று கூட்டிவருவேன். மாலை 6 .30 மணியளவிலேயே மகளுக்கு வேலை முடியும். 7.30 மணியளவில் பஸ்ஸில் வந்துகொண்டிருக்கும் போதே எனக்குத் தகவல் தருவாள். அதன் பின்பே நான் வீட்டிலிருந்து புறப்படுவேன். கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம்  திகதி வழமைபோன்று நான் மகளையும் கூட்டிக்கொண்டு பஸ் ஏறும் சந்திக்குச் சென்றேன். மகளை பஸ் ஏற்றிவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டேன். இருப்பினும் மாலை வீடு திரும்புவதற்கு முன் மகள் எனக்கு அறியத்தருவாள். ஆனால் அன்றைய தினம் எனக்கு தொலைபேசி அழைப்பு வரவில்லை. மகள் வீட்டுக்கு வராததால் நாங்கள் அவள் வேலை புரியும் ஆடைத் தொழிற்சாலைக்குச் சென்று தேடிப்பார்த்தோம். அவள் மாலை 6.30 மணிக்கு வேலை முடிந்து கைவிரல் அடையாளத்தை பதிவு செய்துவிட்டு சென்றிருப்பதாக தொழிற்சாலை அதிகாரிகள் எமக்குத் தெரிவித்தனர்.

மறுநாள் காலை புலஸ்திபுர பொலிஸ் நிலையத்துக்குச் சென்று மகள் காணாமல் போனமை தொடர்பில் முறைப்பாடொன்றை பதிவு செய்தோம். எங்களுக்கு தெரிந்த எல்லா இடங்களிலும் மகளைத் தேடிப் பார்த்தோம்.ஏற்கனவே கம்பஹா பகுதியில் உள்ள ஒருவருக்கு எனது மகளை திருமணம் செய்ய பேசி வைத்திருந்தோம். அடிக்கடி அந்த இளைஞன் எங்களுடன் தொலைபேசியில் கதைப்பதால் அவரிடமும் கேட்டுப் பார்த்தோம். 10 ஆம் திகதி பகல் வேளையில் மகள் அவரிடம் கதைத்திருந்தாள். இருப்பினும் மகள் வேலை செய்த இடத்தில் இளைஞரொருவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட விடயம் எங்களுக்குத் தெரியாது. கடந்த 12 ஆம் திகதி புலஸ்திபுர பொலிஸ் நிலையத்திலிருந்து எமக்கு தகவலொன்று கிடைக்கப்பெற்றது. அத்தகவலில், மகளின் காதலன் எனக் கூறப்படுபவன் பொலநறுவை லக்ஷ உயன பிரதேசத்தில் வயலொன்றுக்கருகில் பாழடைந்த இடமொன்றில் மகளைக் கொன்று பெற்றோல் ஊற்றி எரித்துள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது எனக் கூறப்பட்டது.

பின்னர் நான் பொலிஸாருடன் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்றேன். மகள் பயன்படுத்திய செருப்புகளின் பகுதிகள் சிலவற்றையும் காதில் அணிந்திருந்த காதணியொன்றையும் மோதிரமொன்றையும் அவ்விடத்திலிருந்து பொலிஸார் தேடிக் கண்டுபிடித்தனர். நானும் மகளுடையவைதான் என்று உறுதிப்படுத்திக்கொண்டேன். மகளுக்கு ஏன் இவ்வாறான அநியாயம் ஏற்பட்டது என்பதை எங்களால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பிலான முக்கிய விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட சந்தேகநபரை புலஸ்திபுர பொலிஸார் கைது செய்தனர். தனது மகள் வேலைக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில், அவளது தந்தையால் ஏப்ரல் 11 ஆம்  திகதியே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கிணங்க அந்த நேரத்திலிருந்தே நீண்ட விசாரணைகளை மேற்கொண்ட புலஸ்திபுர பொலிஸ் தலைமையதிகாரி , பொலிஸ் பரிசோதகர்பத்திரண தலைமையிலான பிரதான பொலிஸ் குழுவொன்று அயேஷாவுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்படும், அந்த ஆடைத் தொழிற்சாலையில் உதவி களஞ்சியசாலை பொறுப்பாளராக கடமை புரியும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளது. பொலநறுவை சேவாகம பிரதேசத்தில் வசித்து வந்த திருமணமாகி ஒரு பிள்ளையின் தந்தையாகவிருந்த சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதில் குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் சகல தகவலையும் பெற்றுக்கொள்ள இயலுமாகிப் போனது. சந்தேக நபர் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கிய தகவல்களின்படி , கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி பொலநறுவை லக்ஷஉயன பிரதேசத்திலுள்ள வயல் வெளிக்கருகில் பாழடைந்த இடமொன்றில் அவளைக் கொன்று பெற்றோல் ஊற்றி எரித்ததாக தெரிவித்துள்ளார். தனது காதலி தன்னைச் சந்திக்கவரும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தன்னுடன் சண்டையிடுவதும் வாய்த்தகராறில் ஈடுபடுவதன் காரணமாகவே அவளைக் கொன்றுவிட தீர்மானித்ததாக சந்தேகநபர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல்  10 ஆம்  திகதி அவளுடன் கதைக்கும் பொருட்டு லக்ஷஉயன பிரதேசத்தில் வயலொன்றுக்கருகில் பாழடைந்த இடமொன்றுக்குச் சென்ற வேளையில் வழமை போலவே என்னுடன் சண்டையிட்டதால் அவளின் கழுத்தை கத்தியால் வெட்டி பின்பு உடம்பின் பல பாகங்களிலும் கத்தியால் குத்தி அவளைக் கொன்றதாகவும் பின்னர் உடம்பு முழுவதும் பெற்றோல் ஊற்றி அவளை எரித்ததாகவும் சந்தேக நபர் தெரிவித்தார். அதன் பின்னர் மீண்டும் ஏப்ரல் 13 ஆம் திகதி சம்பவம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்று பார்க்கும் போது சடலத்தின் மண்டையோடும் எலும்புகளும் எஞ்சியிருந்ததாகவும் மறுபடியும் அவற்றை எரித்து அழித்துவிட்டதாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார். குறித்த யுவதியின் கொலை தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை.

பொலநறுவை நிறைவேற்று பொலிஸ் அதிகாரி தம்மிக்க வீரசேகரவின் கட்டளைக்கிணங்க பொலிஸ் அதிகாரி திஸ்ஸலால் டி சில்வாவின் மேற்பார்வையில் பொலநறுவை தலைமையக பொலிஸ் பரிசோதகரும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான எம். எஸ். எம். ஜரூல் , குற்ற விசாரணைப் பிரிவின் தலைவரும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான புத்திக குணசேகரவின் தலைமையில் செயற்படும் பிரதான பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்தில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த தீவிர விசாரணைக்கு காரணம் சம்பவம் இடம்பெற்றிருப்பது பொலநறுவை பொலிஸ் பிரிவு பகுதியிலேயாகும் என்பதாகும். தான் மேற்கொண்ட இந்தக் குற்றச்செயல் தொடர்பில் சந்தேக நபரால் பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட காரணங்களுக்கமைய , இந்தக் குற்றமானது உடனடியாக செய்யப்பட்டதொன்றல்ல. மாறாக நன்கு திட்டமிட்டே புரியப்பட்டுள்ளது என்பதை விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். சந்தேகநபர் கூறியவற்றிலிருந்து இதனை ஊகித்துக்கொள்ள முடியுமாகவுள்ளது என்பதையும் பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதனால் மேலும் பலரிடம் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர். அதன்போதே யார் யார் இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடியுமென்றும் தெரிவித்தனர்.

திருமணமாகி ஒரு பிள்ளையின் தந்தையான அயேஷாவின் காதலன் அவளுக்கு எமனாக மாறியது ஏனோ என்ற வினா பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சந்தேகநபர் திருமணமானவர் எனத் தெரிந்த பின்னர் அயேஷா அவனிடமிருந்து விலகிக்கொள்ள முயற்சி செய்த போதே இந்தக் காதல் அவளுக்கு எமனாக மாறிவிட்டிருக்கலாம் என்றும் சிலர் கருத்து வெளியிடுகின்றனர். எது எப்படியிருந்த போதிலும் எந்தவித சலனமும் இல்லாமல் அவளது வாழ்க்கையை பறித்துக்கொள்ள அந்தக் காதலனால் முடியுமாகிப் போயிருக்கின்றது என்பது தெளிவானது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக