கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

29 ஏப்ரல், 2019

தரவுகளற்ற செயலகங்கள்

இலங்கையிலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் அல்லது பிரதேச செயலக பிரிவுகளிலும் இடம்பெறுகின்ற அனர்த்தங்கள் தொடர்பான விபரங்கள் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பான பதிவுகளை மாவட்ட செயலகங்களோ அல்லது பிரதேச செயலகங்களோ கட்டாயம் கொண்டிருக்க வேண்டும். அதன்படியே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை துரித கதியில் பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஆனால் நுவரெலியா, பதுளை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 2010 தொடக்கம் 2018 வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட அனர்த்தங்கள், பாதிப்புகள், பாதிக்கப்பட்டோர் மற்றும் நிவாரணங்கள் தொடர்பான தகவல்களை கோரி குறிப்பிட்ட மாவட்ட செயலகங்களுக்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கும் தகவல் அறியும் உரிமையின் கீழ் மேற்கொண்ட விண்ணப்பத்துக்கு முழுமையான விபரங்களை பெற்றுக் கொள்வது இயலாத காரியமாக இருப்பதுடன், தகவல்களை வழங்குவதிலும் அரச நிறுவனங்களின் செயற்பாடுகளும் திருப்திகரமானதாக இல்லை.


இவ்விபரங்களை அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் கோரிய போதும், குறிப்பிட்ட தகவல்கள் தங்களிடம் இல்லையென்று கூறி தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திடம் கோரும்படி கூறப்பட்டது. இதன்படி தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் நுவரெலியா, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி பிராந்திய நிலையங்களில் தகவல் கோரி விண்ணப்பிக்கப்பட்ட போதும், இரத்தினபுரி, கேகாலை ஆகிய நிலையங்களில் குறிப்பிட்ட தகவல்கள் இல்லையென்றும், பதுளை, கண்டி ஆகிய நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட சில தகவல்களும் வழங்கப்பட்டன. நுவரெலியா பிராந்திய நிலையத்திலிருந்து எவ்விதமான தகவல்களும் இதுவரை வழங்கப்படவில்லை.

பெருந்தோட்ட மக்கள் அதிகமாக வசிக்கும் மேற்படி மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பெற்றுக் கொண்ட நிவாரணங்கள் தொடர்பில் அறிவதற்காகவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக விண்ணப்பத்தினை மேற்கொண்டிருந்தேன். ஆனால் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் போன்றவற்றின் தரவு பாதுகாப்பு மற்றும் சேவைகள் இவ்வாறு மந்த நிலையிலேயே காணப்படுவதை இவ் விடயங்கள் எமக்கு சுட்டிக்காட்டுகின்றன. இரத்தினபுரி அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் பிராந்திய நிலையத்தில் தகவல் கோரிய போதும், குறித்த விபரங்கள் இல்லையெனக் கூறி பதில்க் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதுடன் இவ்விடயம் தொடர்பாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சிடம் தகவல்களை கோருமாறு விளக்கமளிக்கப்பட்டது. அக்கடிதத்தின் நகல்களும் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றுக்கு எவ்விதமான பதில்களும் இதுவரை காலமும் வழங்கப்படவில்லை.

பதுளை மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திலிருந்து மிரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் தொடர்பில் மாத்திரம் விபரங்கள் வழங்கப்பட்டன. அவை 21/10/2018 ஆம் திகதிய கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே இவ்வாறு தகவல்கள் இல்லையென காரணம் கூறுவது மக்களுக்கு முறையாக நிவாரணங்கள் சென்றடையவில்லை என்றே கருத வைக்கின்றது.

அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்க்கை நிலை இவ்வாறு அரச நிறுவனங்களின் தட்டிக்கழிப்புக்கு தொடர்ச்சியாக உள்ளாகி வருவதை அவதானிக்க முடிகின்றது. எனவே இவை தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

(குறிப்பு : பிராந்திய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையங்களாக மாவட்ட செயலகங்களே செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.)


தகவல் : கண்டி மாவட்ட செயலகம்

* அனர்த்தங்களால் சேதமடைந்துள்ள தோட்ட வீட்டு உரிமையாளர்கள் தொடர்பாக எம்மிடம் இருக்கும் தரவுகள் மட்டுமே மேலே தரப்பட்டுள்ள அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பான உரிய தரவுகள் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நித்தியத்தினால்  மேற்கொள்ளப்படுகின்ற காரணத்தால் நாங்கள் ஆவணங்களை வைத்துக் கொள்ளத் தேவையில்லை.

* இவற்றுக்குரிய செலவீனம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மூலம் செலுத்தப்படுகின்றன. சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டமொன்று அக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் சேதத்துக்கான இழப்பீட்டுத் தொகை மாத்திரம் பெற்றுக்கொடுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு பெற்றுக் கொடுக்கப்பட்ட 9 வீடுகளும் ஓமான் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

* 2016 ஆம் ஆண்டு தொடக்கம் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்களை தெரிவு செய்து வீட்டுத்திட்டம் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான மதிப்பீட்டு கொடுப்பனவு மற்றும் வீட்டுத்திட்டத்துக்கான செலவீனத் தொகை என்பவற்றை தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் வழங்கியிருந்தது. 2016 ஆம் ஆண்டினை  விட 2017 ஆம் ஆண்டு அதிக நிதியானது ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது 2016 ஆம் ஆண்டுக்கான செயற்திட்டத்துக்கும் சேர்ந்து ஒதுக்கப்பட்ட மொத்த தொகையாகும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக