கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

29 ஏப்ரல், 2019

50 ரூபா எங்கே?

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா வேதனக் கோரிக்கை, நாட்கள் செல்ல செல்ல மழுங்கடிக்கப்பட்டு வருவதை தொடர்ந்தும் அவதானித்து வருகின்றோம். கூட்டு ஒப்பந்தம் என்ற ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்தி தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் மலையக மக்களை பந்தாடி வருகின்றன. 2018 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் காலாவதியாவதற்கு முன்பிருந்து இன்றுவரை 1000 ரூபா அடிப்படை சம்பளத்துக்காக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் களைத்துப் போய் தொழிலாளர்களும் அவர்களின் வருமானத்தை தேட புறப்பட்டுவிட்டனர்.

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி காலாவதியான கூட்டு ஒப்பந்தமானது, ஜனவரி 28 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இரகசியமாக கைச்சாத்திடப்பட்டது. அக்கூட்டு ஒப்பந்தத்தின் படி தற்போதைய அடிப்படைச் சம்பளத்தில் 40 வீத அதிகரிப்பை மேற்கொண்டு 700 ரூபாவும் தேயிலை, இறப்பர் விலைக்கொடுப்பனவாக 50 ரூபாவும் வழங்கப்பட்டு ஒருநாள் சம்பளமாக 750 ரூபா நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த உற்பத்தி கொடுப்பனவு 140 ரூபாவும் வரவு கொடுப்பனவு 60 ரூபா மொத்தம் 200 ரூபா புதிய ஒப்பந்தத்தின் மூலம் இல்லாமல் செய்யப்பட்டிருந்தது. இதன் பின்னர் இவ்விடயத்தில் தலையீடுகளை மேற்கொண்ட அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, குறைந்தபட்சமாக உற்பத்தி கொடுப்பனவாக 140 ரூபாவையாவது மீண்டும் வழங்க வேண்டும் அல்லது அரசாங்கத்துக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் பிரதமர் ரணிலுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.


முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது கூட்டு ஒப்பந்தத்தினை பெப்ரவரி 5 ஆம் திகதிவரை ஒத்தி வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையின் போது 2019 ஆம் ஆண்டுக்கான வரவு---செலவு திட்டத்தில் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்துடன் 50 ரூபாவை இணைத்து வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதுடன், அதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்படுமென்றும், நிலுவைத்தொகை வழங்கப்பட மாட்டாதென்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

இந்த 50 ரூபாவானது ஒருவருட காலத்துக்கு வழங்கப்படும் என்றும் இதற்கான நிதியினை இலங்கை தேயிலைச் சபை முதலாளிமார் சம்மேளனத்துக்கு வழங்கும் என்றும் உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் 50 ரூபா அதிகரித்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக துரித கதியில் தேயிலை சபையுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு தீர்வு வழங்கப்படும் என்பது மாத்திரமே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே இத்தீர்வு எப்போது வழங்கப்படும் என்பது தெரியாது. அதேவேளை கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தமும் வர்த்தமாணியில் வெளியிடப்படவில்லை. நிலுவைத் தொகையும் இல்லாமலாக்கப்பட்டு விட்டது. இவ்வாறு பல்வேறு ஏமாற்று நாடகங்களுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விபரம் நகர்ந்து செல்கின்றது. ஏற்கனவே 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் போதும் 18 மாதங்களுக்கான நிலுவைத்தொகை இல்லாமல் செய்யப்பட்ட நிலையில், அவ்வருடம் வரவு - செலவுத் திட்டத்தில் தனியாருக்கு வழங்கப்பட்ட 2500 ரூபா சம்பளவுயர்வினை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டுமென கோரிய நிலையில் அவற்றையும் இரண்டு மாதங்களுக்கு மாத்திரமே வாங்கிகொடுத்து நழுவியது தமிழ் முற்போக்கு கூட்டணி.

தற்போது 50 ரூபாவும் அதே நிலைமையில் சென்று முடியும் நிலையே காணப்படுகின்றது. அரசாங்கமும் அதில் பெரிதாக அக்கறையுடன் செயற்படவில்லை. வரவு - செலவுத் திட்டத்துக்குப் பின்னர் அலரிமாளிகையில் இடம் பெற்ற கூட்டத்தில் இது தனியார் கம்பனிகளுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். எனவே பொறுமையாகத்தான் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றே நிதியமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அதேவேளை அரசாங்க ஊழியர்களின் சம்பளம் 107 வீதத்தால் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக 40 பில்லியன் ஒதுக்கப்படவுள்ளதுடன் இதன்படி 2500ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பில் பெரும்பங்கினை உறிஞ்செடுக்கும் அரசாங்கம் அவர்களின் நலனில் எவ்வித கரிசனையையும் கொள்ளவில்லை என்பதே உண்மை. அத்துடன் சந்தர்ப்பவாத அரசியலுக்காகவும் ஏனைய சுகபோகங்களுக்காகவும் மாத்திரமே அரசியல் தலைமைகளும் மலையக மக்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பது கண்கூடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக