கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

29 ஏப்ரல், 2019

மகனால் என் இலட்சியம் நிறைவேறும்

தன்நிலையை தன் மனநிலையால் வென்றவள் அவள். தனக்கு எச். ஐ.வி தொற்று இருப்பதை அறிந்து முதலில் மனமுடைந்தாலும் தான் வயிற்றில் சுமந்த பிள்ளைக்காக உயிர்த்தெழுந்தவள். இன்று எந்த சமூகம் அவளை களங்கப்படுத்தியதோ அந்த சமூகத்தின் முன்மாதிரியாகவிருக்கிறாள் கண்டியில் வசிக்கும் நிஹாரா. எச்.ஐ.வி. தொற்றை அபாயகரமாக கருதி சமூகத்தின்  கடைபக்கங்களில் வாழும் பலருக்கும் மத்தியில் என்னுடன் சமமாக கருத்தாடல்களை மேற்கொண்ட நிஹாரா உண்மையில் சமூகத்தின் அடையாளம் தான்.

தந்தை, தாய், தம்பி, தங்கை என குடும்பத்தின் ஐந்து குழந்தைகளில் மூத்தவளாக பிறந்தவள் நிஹாரா. தனது சாதாரண தர கல்வியின் போது தனது தாயை இழந்த போது அவளது வாழ்க்கையே மாறிப்போனது. தந்தை தனது இஷ்டம் போல வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். இறுதியில் தனது தம்பி, தங்கைகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட நிஹாரா, அவர்களாலும் வெறுத்தொதுக்கப்பட்டது வேதனையானது. இறுதியில் குறைந்த வயதில் திருமணம் செய்து கொண்ட தனது தங்கையுடன் வாழத்தொடங்கியவள், அந்த வாழ்க்கையும் நிலைக்காமல் துடித்துப் போனாள். இறுதியில் பல நிர்பந்தங்களுக்கு மத்தியில் திருமணம் நடைபெற்றது. இதன்பின் நிஹாராவின் வாழ்க்கை திசை மாறிப்போனது.


எனது ஆறுமாத திருமண வாழ்க்கையில், நான் மூன்று மாத கர்ப்பிணியாக வாழ்ந்தேன். என் கணவர் அதன் பின் என்னைப் பிரித்து வெளிநாடு சென்று விட்டார். திடீரென பேசுவதையும் நிறுத்திவிட்டார். என்னுடைய குழந்தையே என் தனிமையை போக்கியது என மனம் நொந்து கொண்டார் நிஹாரா. திடீரென ஏழு மாதங்கள் தீவிர காய்ச்சல் ஏற்பட்டது. மருந்துகளை உண்டு சமாளித்தேன். இந்த இன்னல்களுக்கு மத்தியிலும் தனது கணவனை தொடர்பு கொள்ளும் முயற்சியை கைவிடவில்லை. இதனால் தனது கணவன் வசிக்கும் வெளிநாட்டுக்கே செல்வதற்கு தீர்மானித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை நாடினாள் நிஹாரா. அங்கு சகல செயற்பாடுகளும் நிறைவு பெற்று மருத்துவச் சான்றிதழுக்கும் விண்ணப்பித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டாள். வீட்டுக்குத் திரும்பிய அவளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனையிலிருந்து, அழைப்பொன்று கிடைத்தது. அங்கு சென்ற அவளுக்கு தனக்கு எச். ஐ. வி. தொற்று இருப்பதென்பது தெரிவிக்கப்பட்டது. அப்போது அவளது குழந்தைக்கு ஒன்றரை மாதங்கள் நெருங்கியிருந்தது. இச்சம்பவம் இடம்பெற்று 15 வருடங்கள் (2004) கடந்துவிட்டது. என்னுடைய நிலைமாறினாலும் என் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது. என் பிள்ளைக்கு தகப்பன் வேண்டும். நான் தேடி போகிறேன். இல்லையேல் கூட்டி வாருங்கள் என அதிகாரிகளிடம் தெரிவித்தேன்

வாழ்வதா? சாவதா? என்பதும் தெரியவில்லை. யாரிடம் சொல்வதென்றும் தெரியவில்லை. பின்னரே ஒரு பெண் வைத்தியரை தொடர்பு கொண்டேன். இது பாரதூரமான பிரச்சினையென தெரிவித்தார். அவரிடம் என் நிலைமையினை எடுத்து கூறினேன். என் மகனுக்கும் ஆறு மாதங்களில் பரிசோதனை செய்தார்கள். இருப்பினும் ஒன்றரை வயதானாலே தீர்க்கமான முடிவை கூறமுடியுமென கூறினார்கள். இதனால் தாம் வெளிநாடு செல்ல முடியாது என்பதை உணர்ந்து கணவரை அவர்களின் நண்பர்கள் மூலம் தேடத் தொடங்கினாள். இறுதியில் கணவர் இறந்த விடயமே இவளுக்குத் தெரிய வந்தது.

எனது கணவர் பலவகையான மாத்திரைகளை போட்டுக்கொண்டு இருப்பார். மருந்து ஊசி போட்டுக் கொள்வார். இவற்றையெல்லாம் தலைவலிக்கு போடுவதாகவே என்னிடம் தெரிவித்தார். இம்மாத்திரைகளை நான் வைத்தியரிடம் காட்டினேன். அப்போதே எனது கணவரிடமிருந்தே எனக்கும் எச். ஐ. வி. தொற்று பரவியது தெரியவந்தது. நிஹாராவின் கணவர் மறைத்த உண்மையினால் இரு உயிர்கள் எச். ஐ. வி தொற்றுக்கு ஆளாகும் நிலை தோன்றியது. பால்வினை நோயியல் ஆலோசகர்களின் கருத்துப்படி, இலங்கையில் அண்ணளவாக 4200 பேர் எச். ஐ. வி. தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக தெரிவிக்கின்றது. மூன்றில் ஒருவர் எச். ஐ. வி. தொற்றுக்கு இலக்காகியிருப்பதை அறியாமல் உள்ளதுடன் 15 - 49 வயதுக்கிடைப்பட்டவர்கள் புதிதாக இலங்கையில் எச். ஐ. வி. தொற்றுக்கு ஆளாகுபவர்களாக இருக்கின்றனர். இலங்கையில் அதிகமான எச். ஐ. வி. நோயாளர்கள் 2017 ஆம் ஆண்டு (285 பேர்) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நிஹாரா எந்தவித உதவிகளும் வசதியும் இன்றிய நிலையில் கொழும்பிலிருந்து கண்டிக்கு ஒன்றரை வருடங்களாக சிகிச்சைக்காக வந்து சென்றுள்ளார். அதன் பின்னர் இன்றுவரையும் ஃச்ணடுச் ணீடூதண் என்ற அரச சார்பற்ற நிறுவனம் நிஹாராவுக்கான உதவிகளை வழங்கி வருகின்றது. இன்று சுயதொழில் மூலம் தனது வருமானத்தை இவர் கவனித்து கொள்கிறார். நான் எனது மகனுக்கு ஆறு மாதகாலம் தாய்பாலூட்டியதால் அவருக்கு எச். ஐ. வி. தொற்று ஏற்பட்டது. ஆனால் இன்று 90 சதவீதம் குணமாகி ஆரோக்கியமாக இருக்கிறார். இப்போது எனது மகனுக்கு 11 வயதாகின்றது தரம் 6 இல் கல்வி கற்றுவருகிறார். இன்று எனது பிள்ளைக்கும் இத்தொற்று தொடர்பாக விளங்கப்படுத்துகின்றேன்.

 உலகளவில் 1.4 மில்லியன் பெண்கள் எச். ஐ. வி. தொற்றுடன் கர்பினிகளாக உள்ளனர். இதனால் தன் பிள்ளைக்கும் பிரசவம் அல்லது பாலூட்டுதல் மூலம் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இலங்கையில் 2002 ஆம் ஆண்டு இவ்வாறு தொற்று ஏற்படுவதை தடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தனது உணவுத் தேவையை கூட நிவர்த்திக்க முடியாமல் வாழ்க்கையை எப்படி கொண்டு செல்வதென தெரியாமல் கொழும்புக்கு வந்து சிகிச்சை பெற்று வந்தார் நிஹாரா. இவரும் மகனும் தனியாக இருப்பதாலும் சிகிச்சைக்கு சென்றால் ஒரு வாரமளவில் கழித்தே வீடு செல்வதால், நான் வேறு மாதிரி சம்பாதிப்பதாக அயல் வீட்டுக்காரர்கள் கருதினர் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனால் பொலிஸ்õர் இவரை கைது செய்து, 3 நாட்கள் தடுப்பு காவலில் வைத்திருந்ததுடன், அந்நாட்கள் மிகவும் அபாயகரமான நாட்களாக தனக்கு இருந்ததாக தெரிவித்தார். என்னை பல ஊடகங்கள் நேர்காணல் கண்டுவிட்டன. ஊடகத்தில் வந்தபிறகு, என்னிடம் பலர் வேறு மாதிரி பேச ஆரம்பித்தார்கள் இவ்வாறு பாதுகாப்பற்ற சூழலிலேயே நிஹாரா வாழ்ந்து வந்திருக்கிறார். என்னைப் போல் யாரும் வரப் போவதில்லை. சமூகத்தில் பணத்துக்குள்ள மதிப்பு மனிதருக்கு இல்லை என ஒற்றை வார்த்தையில் சமூகத்தின் அவலத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இன்று இவ்வாறான தொற்றுக்குள்ளானவர்களுக்கு உதவ பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்கள் இருக்கின்றன. குடும்பத்தில் யாருக்கும் இவ்வாறான தொற்று இருந்தால் சகலரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இலங்கையில் இலவசமாக இதற்கு சிகிச்சை வழங்கப்படுகின்றது. ஆனால் இது தெரியாமல் பலர் அதிகம் பணம் செலவழிக்கிறார்கள். நான் என்னுடைய அனுபவங்களை எல்லோருக்கும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த எந்நேரமும் தயாராகவே இருக்கின்றேன். என்கிறார் இந்த தைரியம் மிக்கப் பெண்.

இன்று பெரும்பாலான சிறுவர்கள் சமூக வளைதளங்களை பாவிக்கின்றனர். எங்களுக்குத் தெரியாத பல விடயங்கள் அவர்களுக்குத் தெரிகின்றன. எங்களுடைய பிள்ளைகள் போகும் வழியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். என பெற்றோர் பிள்ளைகள் மீது கொண்டுள்ள அக்கறையை வலியுறுத்துவதுடன், எந்தவொரு நபரின் துணையில்லாமல், சமூகத்தாலும் குடும்பத்தாலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து இன்று சுயதொழில் ஒன்றின் மூலம் தனது வாழ்வாதாரத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதுடன் தனது மகனின் கல்விக்கும் உந்து சக்தியாக இருக்கும் நிஹாரா போன்ற பெண்கள் இந்த சமூகத்தில் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்களே.

2017 ஆம் ஆண்டு சுகாதார அறிக்கையின் படி, மேல் மாகாணத்தில் எச். ஐ. வி தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மேல்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வறிக்கையின் படி, கொழும்பு மாவட்டத்தில் 70 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 40 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 20 பேரும் எச். ஐ. வி தொற்று நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேல்மாகாணத்தில் பொதுமக்கள் சுகாதார அச்சுறுத்தல்களில் வீதி விபத்து, போதைப்பொருள் பாவனை, எச். ஐ. வி தொற்று, தொற்றாநோய்கள், டெங்கு என்பன முக்கிய பிரச்சினைகளாக இருப்பதும் வைத்தியரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எச். ஐ. வி தொற்று தொடர்பாக எமது சமூகத்தில் இன்றும் பல்வேறு தப்பபிப்ராயங்கள் இருக்கின்றன. அவற்றை களைவதே மிகவும் சவாலான விடயமாக இருக்கிறது. எச். ஐ. வி தொடர்பான போதிய அறிவின்மையும் விழிப்புணர்வின்மையுமே இதற்கு பிரதான காரணமாகும். இன்று இத்தொற்றை தடுப்பதற்கான வழிவகைகள் தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றன. இலவச மருத்துவ சேவைகளும் வழங்கப்படுகின்றன. அதேவேளை அரசசார்பற்ற நிறுவனங்கள் பல எச். ஐ. வி தொடர்பான தப்பபிப்ராயங்கள் தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதுடன் தொற்றாளர்களுக்கான உதவிகளையும் வழங்கி வருகின்றன. எச். ஐ. வி தொற்றாளர்கள் முறையான மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்ள இலங்கையில் வாய்ப்பு உள்ளது. சிலர் சமூகம் தன்னை ஒதுக்கிவிடும் என்பதற்காக தமது இரகசியங்களை மறைத்து தமக்கே ஆபத்தை தேடிக் கொள்கின்றனர். மருத்துவ சேவைகளை இவர்கள் பெறும் போது அவர்களுடைய தகவல்கள் இரகசியமாகவே பேணப்படுகின்றதென்பதை சகலரும் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதுடன், எச். ஐ. வி. தொற்றும் முறைகள் தொடர்பிலும் சமூகம் கொண்டுள்ள தவறான அனுகுமுறைகளையும் களையவேண்டும். எச். ஐ. வி தொற்றுள்ளவர்கள், சமூகத்தில் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர். அவர்கள் சரியான பாதையில் செல்ல வழி ஏற்படுத்தப்பட வேண்டியவர்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக