கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

28 ஏப்ரல், 2019

கூட்டு ஒப்பந்தத்தை ஏற்று கொள்ள முடியாது

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வைத் தீர்மானிக்கின்ற கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 2 மாதங்கள் நெருங்குகின்ற வேளையில், இன்னும் தொழிலாளர்களின் கோரிக்கையான 1000 ரூபா கோஷம் ஒரு பக்கம் வலியுறுத்தப்படுவதோடு, மறுபுறம் 50 ரூபா அரசாங்க நிவாரணம் பற்றி பேசப்படுகிறது.  இவற்றுக்கு மத்தியில் 2018ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு சாதகமானதா? என மக்கள் தொழிலாளர்சங்க பொதுச்செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையாவிடம்  வினவியபோது அவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு இம்முறை சம்பளவுயர்வே கொண்டுவரப்படவில்லை.  அடிப்படைச் சம்பளத்தில் 20 ரூபாவே அதிகரிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே வழங்கப்பட்ட கொடுப்பனவுகளும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.  எனவே, இதனை நீதியான சம்பளவுயர்வு என்றோ, தொழிலாளர்களுக்கு சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமென்றோ இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.  அதேநேரத்தில் ஒப்பந்தத்தை கைச்சாத்திடும்போது, 150 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கி மூன்று மாதங்களுக்குரிய நிலுவைத் தொகையை தருவதாகக் கூறியிருந்தார்கள். அவ்வாறு சொன்னவர் இப்போது இல்லையென்கிறார்.  இதன் பின்னர் பிரதமருடன் தொடர்பு கொண்டபோது, ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுவிட்டது.  என்னால் ஒன்றும் செய்யமுடியாது.  மேலதிகமாக தொழிலாளர்களுக்கு ஏதாவது வழங்கமுடியுமா என ஆராயுமாறு தெரிவித்துவிட்டார்.  இதன் பின்னரே நிவாரணமாக ஒரு தொகையை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை வரலாற்றில் இதுவரையும் நிவாரணமானது இயற்கை அனர்த்தங்களுக்கும் வறிய குடும்பங்களுக்கான நிவாரணமாக சமுர்த்தி, திவிநெகும போன்றன வழங்கப்படுகின்றன.  ஆனால், உழைக்கும் மக்களுக்கு அவ்வாறு நிவாரணம் வழங்கமுடியும்.  இதில் தர்க்க ரீதியான பிழையிருக்கிறது.  50 ரூபா வழங்கியது சந்தோஷம் என்றாலும் இவை தொடர்பாக விளங்கிக்கொள்ள வேண்டும்.  நாளை மற்றொரு நிறுவனத்தில் உள்ளவர்களுக்கும் எங்களுக்கு 50 ரூபா அதிகரிப்பு வேண்டும் என்று கோரலாம்.  இது தொழிலாளர்களுக்கான தீர்வு இல்லை.  உண்மையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கக் கூடாது.  இப்போதும் கைச்சாத்திட்ட இரு தொழிற்சங்கங்களுக்கும் இது பிழையான விடயமென்பது தற்போது விளங்கும்.


ஒன்று கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் இருந்திருக்கலாம் அல்லது தற்போதாவது எதிர்ப்புகளின் பின் நாங்கள் செய்தது தவறு என்பதை ஒத்துக்கொள்ளாமல் இருக்கின்றார்கள் என்றால் அதற்கு அரசியல் இருப்பும் தொழிற்சங்க இருப்புமே காரணமாகும்.  எனவே, எப்படி மக்கள் சார்பான கூட்டு ஒப்பந்தம் என்று இதனை கூறமுடியும்.  நீதிமன்றமும் இதில் தலையிட முடியாது என்று கூறிவிட்டது.  அரசாங்கமும் அவ்வாறே கூறிவிலகிவிட்டது.  ஆகவே, மூன்றில் இரண்டு தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுத்துவிட்டன.  அரசாங்கத்தில உள்ளவர்களும் ஏமாற்றிவிட்டார்கள்.  50 ரூபா விடயம் பட்ஜெட்டிலும் இல்லை.  ஆனால், இன்னும் 50 ரூபா தருவோம் என்று கூறுகிறார்கள்.

50 ரூபா போதுமா என்பது ஒரு பிரச்சினை.  இரண்டாவது; 50 ரூபா எப்படி கொடுக்கப்படும் என்பது பிரச்சினை இல்லை.இது சகல பெருந்தோட்டத் தொழிலாளர்களினதும் பிரச்சினை. தொழிலாளர் காங்கிரஸ் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்துக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இடையில் உள்ள பிரச்சினையா?.  தற்போதும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, தோட்டங்கள் இலாபத்தில் இயங்குவதாகவும் தோட்டங்களைவிட்டு தனியார் செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்.  அவர் ஒரு சிறுதோட்ட முதலாளியாக இருந்தாலும்கூட, அரசாங்கத்தில் உள்ள ஒருவர்தானே கதைக்கின்றார்.


இம்முறை சகல தரப்பிலிருந்தும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவுயர்வு தொடர்பாக ஆதரவான கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன.  இவற்றை எல்லாவற்றையும் புறந்தள்ளி அரசாங்கம் செயற்படுகின்றதென்றால், அரசாங்கம் கம்பனிகளுக்கு சார்பாகவே இருக்கிறதென்று அர்த்தம்.  அவற்றுக்கு எதிராக போராடி பெறவேண்டியதே தொழிற்சங்கங்களின் கடமை.  50 ரூபா வழங்கியிருந்தாலும் கூட தொழிலாளர்களுக்கு அது போதுமான தீர்வா? “உழைப்புக்கேற்ற ஊதியமும் வாழ்வதற்கேற்ற ஊதியமும்’ என்பதுதான் ஊதியத்தின் கோட்பாடு.  இதனால் அவற்றை கதைத்துக்கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

இவற்றுக்கு என்ன தீர்வு? அரசாங்கத்துக்கு நாம் அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.  அரசாங்கம் தலையிட்டு கூட்டு ஒப்பந்தத்தை மாற்றக் கோரலாமே.  வர்த்தமானியில் வெளியிட வேண்டாம் என்று கோருகின்ற அரசாங்கம், ஒப்பந்தம் மக்களுக்கு எதிரானது அவை தொடர்பில் மீளாய்வு செய்யுமாறு கோரலாம்.  அல்லது அரசாங்கம் குறைந்த சம்பளத்தொகையை 1000 ரூபாவாக மாற்றினால், அதற்கு குறைந்த தொகையை கொடுக்க முடியாது.

தற்போது தேர்தல் நெருங்கிவிட்டது.  தேர்தல் காலமே உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள் உரிமைகளையும் சலுகைகளையும் பெறுவதற்கான சந்தர்ப்பம்.  ஆனால், இங்கே அவ்வாறனவர்களை செயலிழக்க வைப்பதற்கே தேர்தல் பயன்படுகின்றது.

எனவே, தொழிற்சங்க ரீதியாக தீர்வினை பெற்றுக்கொள்ள விரும்பினால் இப்போது கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி, சகலருக்கும் நமையளிக்கும் ஒப்பந்தத்தை தயாரித்து போராடலாம்.  முதலாளிமார் தமக்கு இன்னும் இலாபம் தரக்கூடிய முறையினையே முன்வைக்கின்றார்கள்.  இவர்கள் கூறும் புளொக்முறை தொடர்பாக ரொஷான் ராஜதுரை தெளிவாக விளங்கப்படுத்தியிருக்கின்றார்.  தொழில்பாதுகாப்பை இல்லாமல் செய்யவும் தொழில் சட்டத்தை சீர்குலைக்கவுமே கம்பனிகள் இதனை திட்டமிட்டு செயற்படுத்தி வருகின்றனர்.  ஆனால், இதனை நாம் தவறாக கருதிக்கொண்டு, நிலவுடைமையாளர்கள் என்ற மனப்பாங்கில் செயற்படுகின்றோம்.

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவானது மலையகத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்த அழுத்தத்தினால் உருவானதாக தெரியவில்லை.  இது ஜனாதிபதிக்குச் சார்பான தொழிற்சங்க தலைவர்களால் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே, இவை தொடர்பாக ஆராய வேண்டும். கென்யா, சீனா போன்ற நாடுகளைப் போன்று ஒரு கூட்டுறவு முறையை உருவாக்க வேண்டும். இது சாதகமான நன்மைகளைத் தரக்கூடும்.  இன்று உலக நாடுகளில் எமது நாட்டுத் தேயிலைக்கு மவுசு இருக்கின்றது.

எனவே, ஜனாதிபதி ஆணைக்குழுவில் நிபுணர்களை உள்வாங்கி, அதற்கூடாக பெருந்தோடட பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று தீர்மானமெடுத்தால் தொழிலாளர்களையும் பாதுகாக்கவேண்டிய சூழ்நிலை வரும்.  இது ஆரோக்கியமான விடயமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக