கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

1 அக்டோபர், 2018

திட்டமிட்ட குடும்ப கட்டுப்பாடு?

இலங்கையில் சட்டவிரோத கருக்கலைப்பு மற்றும் திட்டமிட்ட குடும்பக் கட்டுப்பாடு என்பன குற்றங்களாகும். இருப்பினும் மலையக தோட்ட தொழிலாளர்களிடையே திட்டமிட்ட முறையில் குடும்பக் கட்டுப்பாடு மேற்கொள்ளப்படுவதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நுவரெலியா மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், ’ ஜடேல்’ என்ற முறையின் மூலம் குடும்பக்கட்டுப்பாட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இது பெருந்தோட்ட மக்களின் சனத்தொகையை கட்டுப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்த நிலையில் புதிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் முரளி ரகுநாதன் இவ்விடயம் தொடர்பாக மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


குற்றச்சாட்டு வருமாறு;

ஜடேல் என்ற குடும்பக்கட்டுபாட்டு முறை மாவட்ட சுகாதார அதிகாரி காரியாலயத்தின் தாதியர்கள் மூலம் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குழந்தை பிரசவித்துள்ள தாய்மார்களை மூளைச்சலவை செய்து நீண்ட காலத்திற்கு குழந்தை பிரசவிக்காமல் இருப்பதற்கும் பின்னர் தேவைப்படும் நேரங்களில் ஜடேலை அகற்றிவிட்டு மீண்டும் குழந்தையை பிரசவிக்க முடியும் என்று  கூறி ஜடேல் பொருத்தப்படுகிறது. ஆனால் ஜடேலை பொருத்திக் கொண்டவர்கள் தமது அடுத்த குழந்தைக்கு தயாரானவுடன் ஜடேலை அகற்றுமாறு குடும்ப நல தாதியர்கள் மூலம் பொதுசுகாதார அதிகாரி காரியலயத்தை அணுகும் போது தமக்கு பொருத்துவதற்கு மட்டுமே அதிகாரமிருப்பதாகவும் அதை அகற்றும் அதிகாரம் தமக்கு இல்லை என்றும் கைவிரித்துவிடுவதாக பல தாய்மார்கள் தெரிவித்து விடுகின்றனர்.

இதை அகற்றுவதற்கு வைத்தியசாலைகளுக்கு செல்லும் போது அங்கும் பல்வேறு காரணங்களை கூறி அலைக்கழிப்பதாக அவர்கள் தெரிவிப்பதாக திட்டமிட்டு பிறப்பு வீதத்தை குறைக்கும் நிகழ்ச்சி நிரலாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட சுகாதார அதிகாரிக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டிருக்கிறது.

குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டமானது இலங்கை சுகாதார சேவையின் நிகழ்ச்சி நிரலில் இருக்கின்ற ஒரு வழமையான விடயமாகும். ஆனால் குடுபக்கட்டுப்பாடுச் சேவையை பெற்றுக்கொள்ளும் ஒருவரின் குடும்ப நிலைமை, பொருளாதார நிலைமை என்பவற்றை ஆராய்ந்து குடும்ப நல உத்தியோகத்தர்களால் ஆலோசனை மட்டுமே வழங்க முடியும். குடும்ப கட்டுப்பாட்டினை மேற்கொள்ளும் போது குடும்பத் தலைவி மற்றும் தலைவன் இருவரின் சம்மதமும் பெற்றுக் கொள்ள வேண்டும். அதேவேளை இருவரின் சம்மதத்துடன் மேற்கொள்ளப்படும் குடும்பக்கட்டுப்பாட்டு முறைதொடர்பாகவும், அவை செயற்படும் காலம் மற்றும் மீண்டும் அவற்றை நீக்குவது போன்ற சகல விடயங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறில்லாமல் மூளைச்சலவை செய்து குடும்பக்கட்டுப்பாட்டை மேற்கொள்வது சட்டவிரோதமானது என்பதுடன், அதை நீக்குவதற்கு அலைக்கழிப்புச் செய்வதும் குற்றமாகும்.
இவ்வாறான சூழலில் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் இதுவரையும் எந்தவொரு குற்றச்சாட்டையும் முன்வைத்திருக்கவில்லை. இதற்கு தற்பாதுகாப்பு ஒரு காரணமாக இருக்கலாம். மலையகத்தில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றனவென தலைவர்களும் பொதுவாக அறிக்கை வெளியிடுகின்றார்கள். ஆனால் ஆதாரங்களுடனான முறைப்பாட்டைச் செய்ய இவர்களும் தவறியிருக்கின்றார்கள். மலையகத்தில் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், சட்டரீதியான விசாரணைகளோ அல்லது சட்டநிவாரணங்களோ கிடைக்கப்பபெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை. இவை சமூகத்தில் வெறும் பேசுபொருளாக மட்டுமே இருக்கின்றன.
கடந்த 1988 - 2015 ஆம் ஆண்டு காலப்பகுதிவரை 5-6 இலட்சம் வரையான குழந்தைகள் எமது மலையக சமூகத்திற்கு பிறந்திருக்க வேண்டுமெனவும், எனினும் தோட்டங்களில் நடைபெற்று வரும் குடும்பக்கட்டுப்பாட்டு கருத்தடை மூலம் எமது சமுதாயத்திற்கு பிறந்திருக்க வேண்டிய 6 இலட்சம் குழந்தைகள் இல்லாமலாக்கப்பட்டு விட்டதாகவும் இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா. அருண்காந்த் தெரிவித்துள்ளார். இவ்வாறு பல்வேறுபட்ட தரப்பினரும்
மலையகத்தில் குடும்பகட்டுப்பாட்டு சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதை ஒத்துக்கொண்டாலும், மலையகத் தமிழர்களின் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் தான் என்ன?மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் சில வருடங்களுக்கு முன்னர் ட்ரஸ்ட் நிறுவனத்தினால் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களை மையப்படுத்தி குடும்பக்கட்டுப்பாட்டு விடயம் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் கோட்லோஜ் தோட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கோட்லோஜ் வைத்தியசாலையில் குடும்பக் கட்டுப்பாடு மேற்கொள்ளப்படும் போது அதிகமான இரத்தக்கசிவு ஏற்பட்டமையினால் அப்பெண்ணை வீதியில் போட்டுவிட்டுச் சென்ற சம்பவம் பதிவாகியிருந்ததாக மலையகத்தில் திட்டமிட்ட குடும்பக்கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டுவரும். ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இவ்விடயத்தினை ஊடகங்களுக்கு வெளியிடவேண்டாமென தற்போதைய இராஜாங்க அமைச்சரொருவர் வலியுறுத்தியதாக கூறப்படுகின்றது. அதேபோலவே கோணகலையில் ஒரு குழந்தை பெற்ற தாயொருவருக்கு இவ்வாறு குடும்பக்கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது அக்குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதால், தம்மால் மீண்டும் இன்னுமொரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.இவ்வாறு பல்வேறு சம்பவங்கள் மலையகப் பெருந் தோட்டங்களின் பல்வேறு பகுதிகளில் அவை இலைமறை காய்களாகவே இருந்திருக்கின்றன. இந்நிலையிலேயே ஜடேல் முறையிலான தற்காலிக குடும்பக்கட்டுப்பாட்டு முறையினை பயன்படுத்தி நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் சனத்தொகையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமக்கு சந்தேகம் இருப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் ஞாயிறு தினக்குரலின் மலையகப் பார்வைக்குத் தெரிவித்திருந்தார். மாவட்ட சுகாதார காரியாலயங்களிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் குழந்தைப் பேற்றை பின்தள்ளி போடுவதால் வருமானம் அதிகரிப்பதுடன் பிள்ளைகளை பராமரிப்பது இலகுவானதாக இருக்குமென்று தாய்மார்கள் மூளைச்சலவை செய்யப்படுவதாக தெரிவித்ததோடு குழந்தை பெற்று வீடுகளில் இருக்கும் தாய்மாரை சந்திக்கும் குடும்பநல உத்தியோகத்தர்களே இந்நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.

குறிப்பாக இலங்கையின் மொத்த சனத்தொகையில் 51 வீதமானவர்கள் பெண்களாவர். இவர்களில் 83 வீதமானோர் எழுத்தறிவு பெற்றவர்கள். பெண்களின் மொத்த சனத்தொகையில் 49 வீதமானவர்கள் பல்கலைக்கழக கல்வி அல்லது உயர்கல்வி அந்தஸ்தினை உடையவர்கள். பெருந் தோட்டங்களில் தற்போது தொழில் செய்கின்ற தொழிலாளர்களின் 54 வீதமானோர் பெண்கள். மலையகப் பெண்களில் 8 வீதமானோர் வீட்டுப் பணிப்பெண்களாகவும் ஆடைத் தொழிற்சாலைகளிலும் பல்தொகுதி அங்காடிகளிலும் சேவையாளர்களாகவும் இருக்கின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்படும் குடும்பக்கட்டுப்பாடு சட்டவிரோதமாக இருந்தாலும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சட்டநிவாரணங்களை பெற்றுக் கொள்ளுமளவுக்கு தெளிவுள்ளவர்களாக இல்லை என்பதும் முக்கிய குறைபாடாக இருக்கின்றது.

எனவே நுவரெலியா மாவட்டத்தில் இவ்வாறு ஜடெல் முறையினைப் பயன்படுத்தி குடும்பக் கட்டுப்பாடானது சட்டவிரோத முறையில் முன்னெடுக்கப்படுமாயின் அதனைத் தடுக்க வேண்டியது அரசியல் தலைமைகளினதும், சமூக ஆர்வலர்களினதும் சுகாதார அமைச்சினதும் முக்கிய கடமையாகும். அதேவேளை குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக மலையகப் பெண்கள் முழுமையான அறிவினைப் பெற்றுக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு நுவரெலியா மாவட்ட வைத்திய சாலைகளில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக மத்திய, மாகாண சுகாதார  அமைச்சுகளும் கவனம் செலுத்த வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக