கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

18 செப்டம்பர், 2018

'கஷ்டப்படாமல் முன்னேற முடியாது'

’மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் ஒரு தொழில் செய்து உழைத்து உண்ண வேண்டும் என்ற மனநிலையிலும் எனக்கென்று ஒரு தொழில் இருக்க வேண்டும் என்பதாலேயே சைக்கிள் திருத்தும் கடையை ஆரம்பித்ததாக கூறுகிறார் துசித்த.’

கொழும்பு - 13, ஹெட்டியாவத்தை சந்திக்கு அருகிலுள்ள ஜம்பட்டா ஒழுங்கையில் காளி கோயிலுக்கு அருகாமையில் துசித்தவின் சைக்கிள் திருத்தும் கடை அமைந்திருக்கின்றது.

’இப்போது எனக்கு 40 வயதாகிறது. எனது 28 வயதிலிருந்து இந்த சைக்கிள் திருத்தும் கடையை நடத்திக் கொண்டிருக்கின்றேன். சரியான வேளையில் போலியோ தடுப்பு ஊசியை போட்டுக் கொள்ளாமையாலேயே தனக்கு இந்த நிலை ஏற்பட்டது. பிறந்து 7 மாதங்களில் அந்தத் தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும். அந்தக் காலத்தில் எனது பெற்றோருக்கு போதிய விளக்கம் இல்லாததால் போடத் தேவையில்லை என்று நினைத்திருப்பார்கள்’ என்று பிறருக்கு ஆறுதல் பட தன்னுடைய நிலைமையை வெளிப்படுத்தியிருந்தார்.

போலியோ பிரச்சினையால் பாதிக்கப்பட்டு தனது இருகால்களும் வளர்ச்சி குன்றிய நிலையிலும் தனது 14 வயது முதல் தொழில் செய்து உழைத்து தனது தேவைகளை நிறைவேற்றி வருவதுடன், தான் வாழும் சமூகத்துக்கு முன்னுதாரணமாகவும் இருந்து வருகின்றார். உழைப்பதற்கு பூரண தகுதியிருந்தும் பலர், பிறரின் உதவிகளை எதிர்பார்த்து யாசகம் செய்பவர்களாகவும் கொலை, கொள்ளை, போதைப்பொருள் என்பவற்றின் மூலம் பணம் பார்ப்பவர்களாக இருக்கும் நிலையில், துசித்தவின் முயற்சி சமூகத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக இருக்கின்றது.

’மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் ஒருதொழில் செய்து உழைத்து உண்ண வேண்டும் என்ற மனநிலையிலும் எனக்கென்று ஒரு தொழில் இருக்க வேண்டும் என்பதாலுமே இந்த சைக்கிள் திருத்தும் கடையை ஆரம்பித்தேன். நான் இன்னொரு இடத்தில் வேலை செய்தே இந்தத் தொழிலைக் கற்றுக் கொண்டேன். அந்தத் தொழிலை செய்து கொண்டிருக்கும் போது நான் தனியாக ஒரு தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இத்தொழிலை ஆரம்பித்தேன்.’

’சிறு வயதிலிருந்தே நானே உழைத்து உண்ண வேண்டுமென்ற எண்ணம் எனக்கிருந்தது. என்னுடன் சேர்த்து குடும்பத்தில் ஐந்து பிள்ளைகள். மற்றைய நால்வருக்கும் உடலில் எவ்வித குறைபாடுகளும் இல்லை. நான் குடும்பத்தில் மூன்றாவது பிள்ளை. எனக்கு மட்டுமே இந்த போலியோ நோய் இருக்கிறது. நான் இப்படியிருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்து கொண்டே இருக்கின்றேன். அவர்களிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காவிட்டாலும் என்னால் முடிந்தவரை அவர்களுக்கு உதவி செய்வேன்’

இந்த நம்பிக்கையும், முயற்சியும், கடினமான உழைப்பும் இன்று துசித்தவை ஒரு தொழில் உரிமையாளராக மாற்றி இருக்கின்றது. கொச்சிக்கடையை அண்மித்த வீதியோரங்களில் யாசகம் பெறுபவர்களும் ஹெட்டியாவத்தை சந்தியிலுள்ள கள்ளு தவரணையில் குடித்து வீழ்ந்து கிடப்பவர்களும் உழைத்து வாழத்தெரிந்த துசித்தவை உதாரணமாகக் கொள்ள வேண்டியது அவசியம்.

’எனக்கு யாரையும் தங்கி வாழ்வதில் விருப்பம் இல்லை. அதனாலேயே இத்தொழிலுக்கு வந்தேன். 14 வயதில் தேயிலைத் தொழிற்சாலையில் வேலை செய்தேன். பின்னர் அதிஷ்டலாபச்சீட்டு விற்பனை செய்தேன். புறக்கோட்டையில் பைகள் விற்றேன். அதன் பிறகே இத்தொழிலை ஆரம்பித்தேன் என்று கூறும் துசித்த இவ்வாறு தொடர்ந்து பல்வேறு தொழில்களைச் செய்து உழைத்து இன்று தனக்கென சொந்தத் தொழிலை தேடிக் கொண்டதில் பெருமிதம் கொள்கின்றார்.

’தற்போது நான் என்னுடைய போக்குவரத்துக்காகப் பயன்படுத்தும் சைக்கிளை தயாரித்தவரிடம் சென்ற போது, இந்தத் தொழிலை நானும் செய்ய வேண்டுமென்று ஆர்வம் வந்தது. அந்த சைக்கிள் திருத்தம் செய்பவரிடமே இத்தொழிலைக் கற்றுக் கொள்வதற்கு கேட்டேன். அவர் வேலை இல்லாத
நேரங்களில் வரக்கூறினார். அதன் பின்னர் 8 வருடங்களாக அவரிடம் வேலை செய்தேன். கொஞ்ச காலத்துக்கு சம்பளம் தரவில்லை. சாப்பாடு, தேநீர்
தந்தார்கள். பின்னர் சம்பளம் கொடுக்க ஆரம்பித்தார்கள்.’

’நன்றாக தொழிலைப் பழகிய பின்னர், நாம் தனியாக தொழிலை மேற்கொள்ள வேண்டுமென்று நினைத்தேன். இந்த தொழிலை ஆரம்பிக்கயாரிடமும் பண உதவி பெறவில்லை. நான் வேலை செய்த இடத்தில் பெற்ற சம்பளப்பணத்தில் ஆரம்பித்தேன். அப்போது 25,000 ரூபா வரையில் சேமித்த பணத்தில் இக் கடைக்கான பொருட்களை வாங்கி தொழிலை ஆரம்பித்தேன். நான் தொழில் பழகும் போது எனக்கு முதல் முறையாக 450 ரூபா சம்பளம் வழங்கப்பட்டது. இது 10 வருடத்துக்கு முன்னர் எனக்கு கிடைத்த சம்பளமாகும். நான்கைந்து தொழில் செய்த பின்பே இறுதியாக இத்தொழிலுக்கு வந்தேன்.’

இவ்வாறு தனது குறைபாட்டினை மற்றவர்களின் கருணையாக மாற்றி பணம் பெறும் நடவடிக்கையை இவர் மேற்கொள்ளவில்லை. ஒன்றுக்குப்பல தொழில்களைக் கற்று இறுதியாக சைக்கிள் திருத்தும் கடையினை நிரந்தரமாக்கியிருக்கின்றார். வெளியிடங்களிலில் இருந்து கொழும்பு நோக்கி வரும் சிலர் வெற்றுப் போத்தல்கள், பிளாஸ்ரிக்குகள் என்பவற்றைச் சேமித்து விற்று அதில் குடித்துவிட்டு தன்னலம் அறியாமல் வீதிகளில் கிடப்பதை விடவும் துசித்தவின் இந்த முயற்சி பாராட்டுக்குரியதென்று அவருடைய நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

’அரசாங்கத்தால் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான எந்த நிவாரணங்களும் எனக்கு கிடைக்கப் பெறவில்லை. யாரும் அதைப்பற்றி என்னிடம் கேட்கவும் இல்லை. இரண்டு, மூன்று தடவைகள் முயற்சித்தேன். ஆனால் அது சரிவரவில்லை. அதன் பின்பே சுயமாக முன்னேற வேண்டுமென்று நினைத்தேன். சுற்றியுள்ளவர்கள் என்னை உதாரணமாக காட்டி மற்றவர்களை ஊக்கப்படுத்துவார்கள், பெருமைபடுவார்கள், சந்தோஷப்படுவார்கள். என்னை பார்த்து வாழ்க்கையை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டுமென்று சிலர் கூறுவர்.’ இருப்பினும் துசித்த போன்ற மாற்று த்திறானாளிகளை அரசாங்கம் கண்டு கொள்ளாதது வேதனையாகும்.

இந்த சைக்கிள் திருத்தும் தொழில் மூலம் போதிய வருமானம் பெற்றுக் கொள்ள முடிக்கின்றதா என வினவிய போது... ’சிலர் சைக்கிளை திருத்த கொண்டு வருவார்கள். ஆனால் அதை திரும்பப் பெறமாட்டார்கள். அதனை திருத்தி விற்பனை செய்வேன். சிலர் சொந்தமாக வைத்து கொள்ளச் சொல்லியே கொடுத்துச் செல்வார்கள். இந்த தொழில் செய்து எந்த குறைபாடுகளும் இன்றி வாழ்கின்றேன். இந்த இடம் எனக்கு சொந்தமில்லை. நாளைக்கு என்னைப் போகச் சொன்னால் போக வேண்டும். யாராவது தொழிலை செய்ய சொந்த இடம் தருவார்களென்றால் ஏற்றுக் கொள்வேன். கூடாரம் ஒன்று அமைத்துக் கொடுத்தாலும் சந்தோஷப்படுவேன்?

துசித்த சொந்தத் தொழிலை செய்தாலும் கூட அவர் தொழில் செய்யும் இடம் அவருக்குச் சொந்தமில்லை. வெட்டவெளியில் அவருடைய தொழிலிடம் அமைந்திருப்பதால் மழை, அதிக வெப்பம் என்பன இவருடைய தொழிலைப் பாதிக்கும் காரணிகளாக இருக்கின்றன. எனவே பாதுகாப்புக் கருதி கூடாரத்தையேனும் அமைத்துக்கொடுக்க பரோபகாரிகள் முன்வர வேண்டும்.

துசித்தவின் தொழில் தரமானது மிக நேர்த்தியானது என துசித்தவின் சைக்கிள் கடைக்கு அருகிலுள்ள வாடகை ஆட்டோ நிலையத்திலுள்ள நண்பர்களான சத்திய நாதன், ஸ்ரீதர், ரவிந்தர் என்போர் தெரிவிக்கின்றனர். செய்யும் தொழிலுக்கு ஏற்ற வகையிலேயே கூலியைப் பெற்றுக் கொள்கின்றார். இவருடைய முயற்சியை நாம் பாராட்டுவதுடன் எங்களுக்கு நல்ல
நண்பராகவும் இருக்கின்றார். இவ்வாறு மாற்றுத் திறனாளிகள் அனைவரும் முயற்சி செய்தால் அது இந்த சமூகத்துக்கும் நன்மையாக அமையும் இவர் சகோதர மொழியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பழகுவதற்கு மிகவும் இனிமையானவரென நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

’சிலருக்கு முடிந்த தொழிலை விட்டு பலர் பார்க்க வேண்டுமென்று தொழில்
செய்கிறார்கள். அதைவிடுத்து நமக்கு முடிந்த தொழிலைச் செய்ய வேண்டும். சிலர் உதவி கிடைக்கும் இடத்தில் அதை வாங்கிக் கொண்டு தொழில் செய்கிறார்கள். கஷ்டப்படாமல் முன்னேற முடியாது. சுகபோகமாக வாழ்வேண்டுமென்று நினைக்கக்கூடாது. பத்தி விற்கலாம், அதிஷ்டலாபச்சீட்டு விற்கலாம். ஆனால் சிலர் பணத்தை வாங்கிக் கொண்டு வீண் செலவு செய்கிறார்கள். நான் இப்படியிருக்கும் நிலையிலும் இன்னொருவருக்கு தொழில் கொடுக்கிறேன். பாடசாலை முடித்துவிட்டு வந்து சிலர் என்னிடம் தொழில் பழகுவார்கள். அவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் போன்றன வாங்குவதற்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வேன்.’

இவ்வாறு தன்னிடம் ஒருவரை வேலைக்கமர்த்தி அவருக்கு வேதனம் வழங்குவதோடுமல்லாது, மாணவர்களுக்கு தொழில் கற்றுக் கொடுத்து பாடசாலை செல்வதற்கான உதவிகளையும் மேற்கொள்கின்றார். ஆனால் அவர் இன்று ஒரு தொழில் தருமராக உருவாக எவரும் உதவி செய்திருக்கவில்லையென்பது முக்கியமானதாகும். பணம் கொடுத்து யாரும் உதவி செய்யவில்லை. வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கேற்ற எந்த உதவியையும் யாரும் செய்யவில்லை. பொதுவாக நன்றாக பேசி பழகுவார்கள். இப்படியான ஒருவரை எப்படி வாழ வைக்க வேண்டுமென்ற எண்ணம் யாருக்கும் இல்லை. யாருடைய உதவி இல்லாமல் யாருடைய வழிகாட்டாலும் இல்லாமல் செய்ததே இத்தொழில். இன்னொருவருக்கு அடிபணிந்து இருக்கக் கூடாது என்பதாலேயே இத்தொழில் தொடங்கினேன்.’ என்கிறார் துசித்த மன தைரியத்துடன்.

’நண்பர்கள் இருக்கிறார்கள் நன்றாக பேசிப் பழகுவார்கள். ஆனால் இப்படியான ஒருவர் எவ்வாறு தொழில் செய்வார் அதற்கான பணவருவாய் எங்கிருந்து கிடைத்தது. என்பது தொடர்பாக யாருமே கேட்கவில்லை. அதிகமான நல்ல நண்பர்களும் இருக்கின்றனர். சிலர் என்னை ஊக்கப்படுத்துவர். நன்றாக பழகுவர்களும் இருக்கின்றனர் பொருட்களை திருடிச் செல்பவர்களும் இருக்கின்றனர். சங்கிலி போட்டு சைக்கிள்களை பாதுகாக்கிறேன். அப்படி இருந்தும் சிலர் இரும்புகளை திருடிச் சென்றுவிடுவார்கள்’

துசித்தவின் சைக்கிள் திருத்தும் கடையானது எந்தவித பாதுகாப்பும் இன்றிய நிலையில் திறந்த வெளியிலேயே இயங்கி வருவதால் சிலர் இவருடைய சைக்கிள் உதிரிப்பாகங்களை திருடிவிடுவதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். உலகளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்புகள் பரந்தளவில் காணப்படுகின்றது. இலங்கையிலும் மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கொள்கைகள் வகுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும் பலர் அவற்றிலிருந்து கைவிடப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். ஆனாலும், துசித்த போன்ற மாற்றுத் திறனாளிகள் மிக திறமையானர்வர்களும் பிறரை தங்கிவாழாமல் சுயமாக உழைத்து வாழும் எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவே, இவ்வாறானவர்களை இனங்கண்டு அரசாங்கமும் அரசசார்பற்ற நிறுவனங்களும் பரோபகாரிகளும் உதவுவதற்கு முன்வர வேண்டும்.

போலியோ தடுப்பூசியானது, போலியோ நோய் பரவுவதை தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. 1957 இல் அறிமுகமான இத்தடுப்பூசிக்கு 1962 இல் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. போலியோ தடுப்பூசியின் மூலம் ஒவ்வொரு வருடமும் போலியோ நோய்த்தாக்கம் குறைவடைந்து வருகின்றது. (1988 இல் 350,000 - 2017 இல் 22 சம்பவம்)பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் போலியோ நோய் இயற்கையாக பரவும் சூழ்நிலை காணப்படுகின்றது. இலங்கையில் இறுதியாக 1993 ஆம் ஆண்டிலேயே போலியோ சம்பவம் பதிவாகியது. உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசேப் என்பன இலங்கையை போலியோ அற்ற நாடாக பிரகடனப்படுத்தியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக