கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

27 ஆகஸ்ட், 2018

எல்லை மீறிய ஆசிரியர் : பாதிக்கப்பட்ட சிறுமி

மூன்று, நான்கு தசாப்தங்களுக்கு முற்பட்ட காலத்தில் கிராமங்களில் முக்கிய பிரமுகர்களாக கருதப்பட்டவர்களில் ஆயுர்வேத வைத்தியர், கிராம சேவகர் மற்றும் ஆசிரியர்கள் என்போருக்கு முக்கிய இடமிருந்தது. அதிலும் குறிப்பாக ஆசிரியர்களுக்கென தனியான இடமொன்று சமூகத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. காரணம் ஆசிரியர்கள் தங்களது தொழிலை சம்பளம் மட்டும் பெறும் தொழிலாகக் கருதாமல் சமூக சேவையொன்றாகவே கருதி செய்து வந்தார்கள். பாடசாலை நேரத்தில் மட்டுமல்லாது மாலை நேரங்களிலும் மேலதிக வகுப்புகளை நடத்தி கல்வியில் பின்தங்கிய மாணவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வர அரும்பாடுபட்டனர் என்றால் மிகையாகாது. இச் செயலானது ஆசிரியர்களை சமூகத்தில் உயர்ந்த இடத்தில் அமரச் செய்தது.


ஆனால் இன்று அரசியலிலும் பொருளாதாரத்திலும் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து பணம் இல்லாவிடில் எதையும் செய்ய முடியாது என்ற நிலைமை தோற்றம் பெற்றுள்ளது. அதுமாத்திரமன்றி எந்தவொரு பொதுச் சேவையையும் பணத்தைப் பெற்றுச் செய்யுமாறு அச்சுறுத்தப்படுகின்றனர். ஆசிரியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்போதைய சூழ்நிலையில் பாடசாலைக் கல்வியை விட மேலதிக வகுப்பு கல்விகளே அதிகமாக காணப்படுகின்றன. ஒரு சில ஆசிரியர்கள் பணம் பெறும் நோக்கில் பாடசாலை நேரத்துக்கு அதிகமான நேரத்தை மேலதிக கல்வி நேரங்களில் செலவழித்து பணத்தை ஈட்டிக் கொள்கின்றனர் என்பதும் குறிப்பிட்டு கூறக்கூடிய விடயமாகும். பாட நூல்களை விட மேலதிக தகவல்களை பிள்ளைகள் அறிய விரும்புவதாக ஒரு சில ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். தங்களுக்குப் பொருந்தாத கதைகள் சிலவற்றையும் ஒரு சில ஆசிரியர்கள் கூறிவருகின்றனர். சில செயல்கள் சூழ்நிலை காரணமாகக் கூட ஏற்படலாம். இருப்பினும் அவை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்படுகின்றன என்பதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் ஒரு பிள்ளை எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை பெற்றோரைவிட அதிக அக்கறை கொண்டு செயற்படுத்துபவர் ஆசிரியரே. ஆனால் அந்தப் பொறுப்பு எல்லை மீறிச் செல்வது தற்போது அதிகரித்து வருகிறது. பிள்ளைகளை நேர் வழியில் கூட்டிச் செல்லும் ஆசிரியர்களால் பல மாணவர்கள் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வது மட்டுமன்றி எத்தனையோ ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. அண்மையில் பண்டாரகம பிரதேசத்தில் அவ்வாறான மேலதிக வகுப்பு ஆசிரியர் பற்றி அறியக்கிடைக்கப்பெற்றது. குறித்த ஆசிரியர் மேலதிக வகுப்பு ஆசிரியர் மட்டுமன்றி பிரிவெனா பாடசாலை ஆசிரியருமாவார் என பொலிஸார் தெரிவித்தனர்.

52வயதைக் கடந்த இந்த ஆசிரியர் சட்டப்படி திருமணத்தின் மூலம் 3 பிள்ளைகளுக்கும் சட்டவிரோத திருமணத்தின் மூலம் 2பிள்ளைகளுக்கும் தந்தையாவார். இவரது சட்டப்படி மனைவி மேல்மாகாண பிரதேச பாடசாலையொன்றின் அதிபராவார். இவர்களின் 3 பிள்ளைகளும் உயர் கல்வியை முடித்தவர்களென்றும் அவர்களில் ஒருவர் விரிவுரையாளராக பணியாற்றுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். முதல் மனைவியுடன் வாழ்க்கையை நடத்திச் சென்ற அதேவேளை தன்னிடம் படிக்க வந்த மாணவியொருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட இந்த ஆசிரியர், பின்னர் மாணவியையும் அழைத்துக் கொண்டு கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் பண்டாரகம பிரதேசத்திற்கு கூட்டி வந்துவிட்டார். முதல் மனைவியை விவாகரத்துப் பெறாமல் இருந்த ஆசிரியருடன் கள்ளத் தொடர்பு மேற்கொள்ள அந்த மாணவிக்கு ஏற்பட்டது. அப்படி இருந்த வேளையில் 2பிள்ளைக்குத் தாயானாள். அவர்கள் 7 மற்றும் 5வயதுடையவர்களாகக் காணப்பட்டனர். இவ்வாறு ஏற்கனவே மனைவியொருவர் இருக்கிறார் என்பதை அறிந்தும் டியூசன் ஆசிரியருடன் சென்ற மாணவிக்கு அதன் பின்பே முதல் மனைவியால் பிரச்சினை ஏற்பட்டது.குறித்த மாணவியின் மூத்த சகோதரன் இந்த ஆசிரியரைப் பற்றி தேடிப்பார்த்ததில் கடந்த 2 1/2 வருடங்களாக பாடசாலை மாணவியொருவரை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வந்தமை தெரியவந்துள்ளது. இந்த ஆசிரியர் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது. அந்த மாணவி தற்போது 18 வயதை பூர்த்தி செய்த உயர்தர மாணவியாவார். அவள் சாதாரண தரம் படிக்கும் நேரத்தில், கணித பாடத்தில் அ தர சித்தியைப் பெறுவதற்கு உனக்கு விருப்பமில்லையா? என சந்தேக நபரான டியூசன் ஆசிரியர் மாணவியிடம் வினவியுள்ளார். கணித பாடத்தில்  அ சித்தியைப் பெற யாரும் மறுப்பார்களா? அவளும் ஆசையுடன் ஆம் சார். எனக்கு  அ பெற்றுக் கொள்ள வேண்டும் என்றாள். அப்படியானால் பாடசாலைக் கல்வி மட்டும் போதாது.. உனக்கு தனியாக மேலதிக வகுப்பொன்றை நான் செய்கிறேன். அதற்கு நீ சமுகம் தர வேண்டும் எனக் கூறினார். அதற்கிணங்க வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு மேலதிக வகுப்புக்கு அம்மாணவி சென்றாள். ஆசிரியரை கடவுளாக நினைக்கும் அவள் அந்த பக்தியுடனேயே மேலதிக வகுப்பறைக்குள் நுழைந்தாள். சந்தேக நபரான ஆசிரியரும் மாணவி வருவதற்கு முன்பே வகுப்பறைக்கு வருகை தந்திருந்தார். வேறு யாரும் வந்தால் தொந்தரவாகிவிடும், அதனால் கதவை மூடிக்கொள்வோம் என தெரிவித்துவிட்டு ஆசிரியர் கதவை மூடினார். இனியேன் தாமதம்? என நினைத்துவிட்டு மாணவியை நெருங்கினார் அந்த ஆசிரியர்.

”நான் ஏன் உனக்கு மட்டும் மேலதிக வகுப்பை நடத்துகிறேன் எனத் தெரியுமா?” என்ன சொல்வதென்று தெரியாமல் எண்ணிக்கொண்டிருந்த மாணவி ஆசிரியரையே பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்” எனக் கூறி மாணவியின் முதுகுப்புறத்தை தடவினார். அதன் பின்னர் மெதுவாக கிட்ட நெருங்கி அவளை அணைத்துக் கொண்டார். ”இந்த நேரத்துக்காக நான் எவ்வளவு நாள் காத்திருந்தேன் என்று உனக்குத் தெரியுமா?” எனத் தெரிவித்தார். அவளால் சத்தமிடவும் முடியாமலிருந்தது. அ தர சித்தியை பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விடுமோ.. என்ற பயம் அவளை தொற்றிக் கொண்டது. அவ்வாறே மேலும் என்ன யோசனையை அவர் திட்டமிட்டு வைத்திருக்கிறாரோ தெரியவில்லை எனவும் ஒருபுறம் சிந்திக்கத் தொடங்கினாள். 16 வயதுடைய அவளுக்கு இவற்றில் போதிய தெளிவின்மை காணப்படாததால் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள். ”பயப்படாதே... நான் உன்னை கைவிட மாட்டேன். நீ நன்றாக படிப்பதற்கு நான் உதவி செய்வேன். அதுமட்டுமல்லாது உன்னை என்னுடையவளாக்கிக் கொள்வேன்” என வெவ்வேறு விதமான கதைகளைக் கூறி அவளை தன்வசப்படுத்த எண்ணினார்.

இவ்வாறு அவளுக்குப் புரியாத பல கதைகளைக் கூறி, பயமுறுத்தி அவளை துஷ்பிரயோகம் செய்திருப்பதாக இதுவரை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அவளை முதல் முறையாக துஷ்பிரயோகப்படுத்திய பின், இது தொடர்பில் யாருக்கும் சொல்ல வேண்டாமென்றும் அதையும் மீறிச் சொன்னால் நடந்த சம்பவம் தனது கைத்தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதை இணையத்தளத்தில் வெளியிடுவதாகவும் தெரிவித்து மிரட்டியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது. யாருக்கும் எதுவும் தெரியாமல் சிறுமி பாதுகாத்துக் கொண்டது இந்த மிரட்டலாலேயே என தெரியவந்துள்ளது. இருப்பினும் நடந்த சம்பவத்தால் தாங்கொணா வலியின் காரணமாக மறுநாள் பாடசாலைக்குச் செல்லவில்லை. மேலதிக வகுப்புக்குச் செல்லவும் சங்கடப்பட்டாள். இதற்காக பல கதைகளை திரிபுபடுத்தி பெற்றோருக்கு கூறியிருந்தாள். மகள் ஏன் மேலதிக வகுப்புக்கு வரவில்லை என சந்தேக நபரான ஆசிரியர் மாணவியின் தந்தையிடம் எதுவும் தெரியாதது போல் கேட்டுள்ளார். இதன் போது தங்களது பிள்ளை கல்வியில் நாட்டம் இல்லாததாலேயே மேலதிக கல்விக்குச் செல்ல விருப்பம் இன்றி காணப்படுவதாக நினைத்து டியூசனுக்குச் செல்லுமாறு வற்புறுத்தினர். வற்புறுத்தலின் பின்னர் அவள் மேலதிக வகுப்புக்கு மீண்டும் செல்லலானாள்.

அதிலிருந்து தொடர்ந்து சந்தேக நபரான ஆசிரியரின் மாயவலைக்குள் அவள் அகப்பட்டுக் கொண்டாள். அதுமட்டுமன்றி ஆசிரியர் மாணவியுடன் பாலியலில் ஈடுபட்ட ஒவ்வொரு வேளையிலும் பாமசி மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட மருந்தை அவளுக்குக் கொடுத்து உட்கொள்ளச் சொன்னார் மேலும் ஒரு மருந்தைக் கொடுத்து உட்கொள்ளச் சொன்னார். மேலும் ஒரு மருந்தைக் கொடுத்து 12 மணித்தியாலத்துக்குப் பின்னர் அருந்த வேண்டுமென தனக்கு தெரிவித்ததாகவும் மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளாள். இந்த சந்தர்ப்பத்தில் உயர்தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த அந்த சிறுமி அண்மைக் காலமாகவே பாரிய யோசனையில் இருப்பதை அவளது சகோதரன் அவதானித்துவிட்டு அது பற்றி கேட்டிருக்கிறான். ஆனால் உரிய பதிலை வழங்காத தனது தங்கை ஒருநாள் இன்னொருவருடன் இது தொடர்பில் கதைத்துக் கொண்டிருப்பதை அவன் ஒட்டுக் கேட்டான். தனது தங்கை பாரிய ஆபத்தில் இருப்பதை உணர்ந்து கொண்டான். பின்னர் இதுபற்றி தந்தையிடம் தெரித்துவிட்டு  தங்கையிடம் கேள்வி கேட்கத் தொடங்கினான். தனது நிலைமைக்குக் காரணம் தான் டியூசன் வகுப்புக்குச் செல்லும் ஆசிரியரே என அவள் தெரிவித்த போதுதான் தந்தைக்கும் தனையனுக்கும் உண்மைச் சம்பவம் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாரிடமும் சொல்ல வேண்டாமெனவும் மீறிச் சொன்னால் தன்னிடமுள்ள வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாகவும் சந்தேக நபரான ஆசிரியர் தன்னை மிரட்டியதாக சிறுமி அழுதவாறு தெரிவித்திருந்தாள். எனவே தான் யாரிடமும் இதுபற்றிக் கூறவில்லை  என சிறுமி தெரிவித்திருந்தாள். ”நீ பயப்படாதே.. தைரியமாக இரு” என தந்தை அறிவுரை கூறியதோடு தமது பிரதேச பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அப்பிரதேச பொலிஸ் நிலையத்திலிருந்து பண்டாரகம பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டது. அதற்கிணங்க அன்றைய தினமே குறித்த டியூசன் ஆசிரியரை பண்டாரகம பொலிஸார் கைது செய்திருந்தனர். மாணவியை வைத்தியசாலை அறிக்கை பெறும் பொருட்டு வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார், டியூசன் வகுப்பறையை சோதனை செய்தனர். அங்கு மெத்தை விரிப்பொன்று காணப்பட்டதையடுத்து பொலிஸார் அதை விசாரணைக்காக எடுத்துக் கொண்டனர். அதுமட்டுமன்றி ஆசிரியரின் கைத்தொலைபேசியையும் மீட்டனர். அதில் குறித்த சம்பவம் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? இந்தச் சம்பவத்துக்காக வேறு என்ன தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்? என கைத்தெலைபேசியை பரிசோதனை செய்தனர். சந்தேக நபர் ஹொரணை நீதிமன்ற நீதிபதி நளீன் இம்புல்கொட முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். விசாரணைகளின் பின்னர் சிறையிலிட நீதிபதி உத்தரவிட்டார். பண்டாரகம பொலிஸ் நிலைய தலைமையதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கே.டபிள்யூ. எல். விக்கரமரத்னவின் மேற்பார்வையில் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சந்தன ஜயவர்தன, சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அனுஷா ஹேமமாலி, பொலிஸ் காண்ஸ்டபிள் அனுர, பெண் பொலிஸ் கொஸ்தாபல் ஜானகி ஆகிய அதிகாரிகள் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் பாடசாலைக் கல்வியை கற்பதை விட மேலதிக கல்வியை நம்பியே பாடசாலை மாணவர்கள் டியூசன் வகுப்புகளுக்குச் செல்கின்றனர். இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறும் சூழ்நிலையில் பெற்றோர் எவ்வாறு பிள்ளைகளை, ஆசிரியர்களை நம்பி மேலதிக வகுப்புகளுக்கு அனுப்புவது என்ற சிந்தனை எழத்தூண்டும். ஒரு சில ஆசிரியர்களின் இவ்வாறான தவறான நடவடிக்கைகளால் ஒன்றுமறியாத இளம் பிஞ்சுகள் பாதிக்கப்படுவதே அதிகம். எனவே ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களிடம் கல்வி கற்க வரும் மாணவர்களை தங்களது பிள்ளைகள் போல்
நோக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக