கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

27 ஆகஸ்ட், 2018

ஆணா? பெண்ணா? மூன்றாம் பாலினத்தவர் எதிர்நோக்கும் பிரச்சினை

’நான் ஆண் உடலில் பிறந்த பெண்ணாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதை ஒன்றும் செய்ய முடியாது. பெண்ணாக மா வேண்டுமென்ற எண்ணம் இல்லை. பிறக்கும் போதே எனக்கு பெண்ணுக்கான குணவியல்புகள் இருந்தது. சிறுவயதிலிருந்தே நான் பெண்களுடனேயே அதிகம் பழகி வந்திருந்தேன்’


கொழும்பு கொம்பனி வீதியைச் சேர்ந்த விக்கி சாஜகான், இருபாலின பண்பைக் கொண்டு வாழ்ந்து வருபவர். ஆரம்பத்தில் தனது சமூகத்தில் பல நெருக்குதல்களை சந்தித்திருந்தாலும் இன்று தனது ஓவியத்திறமையால் ஒரு சிறந்த ஓவியராக தன்னை சமூகத்தில் அடையாளப்படுத்தியிருக்கின்றார். இன்று ஓவியம் அவரின் சிறந்த அடையாளமாக மாறி  இருக்கின்றது.

’இன்று என்னை ஓவியராக பார்க்கின்றனர். என்னை வித்தியாசமாக யாரும் பார்ப்பதில்லை. என்னுடைய திறமையை அடையாளமாக காட்டவே விரும்புகின்றேன். நான் இருபாலின பண்பை கொண்டவராக இருப்பது என்னுடைய தனிப்பட்ட குணவியல்பு. அது யாருக்கும் தெரிவதும் இல்லை. புரிவதும் இல்லை. எங்கள் உடலுக்குள் வந்து அனுபவித்தால் எங்களுடைய உணர்வுகள் இந்த சமூகத்துக்கு புரியும். என்னைப்போல் பலரும் இருக்கின்றனர். அவர்களுக்கு சரியான ஆதரவு கிடையாது. ஆரம்பத்தில் எனக்கும் இல்லை. ஆனால் இன்று எனது சமூகத்தில் மக்கள் ஆதரவு எனக்கிருக்கிறது. அந்த விடயம் எனக்கு தற்போதே தெரியவந்தது. என்னை ஒரு சிலர் ரோல்மொடலாக பார்க்கின்றனர். என்னை ஆணாகவும் பார்க்கவில்லை, பெண்ணாகவும் பார்க்கவில்லை. நல்ல உள்ளத்தையே பார்க்கின்றேன் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.

என்னுள் ஒரு திறமை இருப்பதாலே என்னைப் பலரும் மதிக்கின்றனர். ஆனால் ஒரு சிலர் வழி தவறிப் போவதாலே எல்லோருக்கும் பிரச்சினை . ஆனால் நான் பிடிவாதமாக என்னுடைய திறமையை வெளிக்காட்ட முன்வந்தேன். எனக்கும் சமுதாயத்துக்கும் எப்போதும் ஒரு இடைவெளி இருக்கிறது. எம்மைப்பற்றி குறைகூறுபவர்கள் இருக்கவே செய்கின்றனர். அவர்களை நான் கணக்கில் வைத்துக் கொள்வதில்லை. பெண்களுக்காக தற்போது நான் குரல்கொடுத்து வருகின்றேன். வெகுவிரைவில் மாற்று பாலினத்தவருக்காகவும் குரல் கொடுக்க இருக்கின்றேன்.
‘என்னை ஆணா, பெண்ணா என்று அடையாளப்படுத்துவது கொஞ்சம் கடினமே. என்னை Androgynous என்றே அழைக்கின்றார்கள். பெரும்பாலும் என்னைப் பெண்ணாகவே பார்க்கின்றார்கள். ஆனால் என்னை ஆண் என்று அடையாளப்படுத்தினால் ஆச்சரியமாக பார்க்கின்றனர். சமுதாயத்துக்கு தன்னை ஆணாகவும் பெண்ணாகவும் காட்டிக் கொள்ள விரும்பாதவர்கள் தம்மை Androgynous ஆக அடையாளப்படுத்துகின்றனர். எங்கு சென்றாலும் ஆண், பெண் இரு மலசலகூடங்களையும் உபயோகப்படுத்தலாம். நான் அப்படியே உபயோகப்படுத்துவேன்’.

இலங்கையில் LGBTIQ மக்கள் (Lesbian, Gay, Bisexual, Transgender, Inter sex, Questioning) அண்ணளவாக 7 வீதமானோர் (1.5 Million) இருப்பதாகவும் இவர்களில் 18 வயதானோர் மற்றும் அதற்கும் மேற்பட்டோர் கொழும்பு, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டியில் வாழ்வதாக LGBTIQ உரிமைகளுக்காக பணியாற்றும் Equal Ground நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் சனத்தொகையில் 2-5 வீதமானோரே LGBT மக்கள் இருக்கும் நிலையில் இலங்கையில் அதிகமானோர் இருப்பதற்கான வாய்ப்பை கணிப்பீடுகள் வெளிப்படுத்துகின்றன. எனவே இவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. பொது வெளியில் மாற்று பாலினத்தினர் சுதந்திரமாக நடமாடக் கூடிய சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை. ஒரு சிலரின் தவறான நடத்தைகள் காரணமாக ஒட்டுமொத்த மாற்று பாலினத்தாரும் அவதிக்குள்ளாகும் நிலை உருவாகியிருக்கிறது. இத்திரையை சமூகத்திலிருந்து எவ்வாறு அகற்றுவது? இதுதொடர்பாக விக்கி சாஜகான் என்ன சொல்கின்றார்.
நான் இப்போது சுதந்திர கலைஞராக (Freelance Artist) தொழில் செய்து கொண்டிருக்கின்றேன். அதிகமான  நிறுவனங்களில் தன்னார்வ தொண்டாற்றி வருகின்றேன். அரசியலில் இளைஞர்களின் பங்குபற்றல் தொடர்பில் செயலமர்வைக் கூட அண்மையில் முன்னெடுத்திருந்தேன். பாடசாலை நாட்களில் நான் ஆண்கள் பகுதியில் அமர முனையும் போது எனக்குள் இருந்த உணர்வு வெளிப்படத் தொடங்கியது. ஏன் நான் பெண்கள் பகுதியில் அமரக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. ஆண்கள் பகுதியில் அமர்வது எனக்கு அசௌகரியமாக இருந்தது. சிறுவயதில் எனக்கு இது பெரியவிடயமாக தென்படாவிட்டாலும், வளர, வளர எனக்கு அது வெளிப்படத் தொடங்கியது. நான் பிறந்தது துபாய் . பின்னர் இந்தியாவுக்கு இடமாறினோம். அங்கிருந்தே நான் இங்கு வந்தேன். க.பொ.த. சாதாரண தரம் முடிந்த பின்னர் நான் நானாகவே வாழ ஆசைப்பட்டேன். அதன்பின்னரே நான் இவ்வாறு செயற்படத் தொடங்கினேன்.

இந்நிலையில், பெண்களுக்கு இடம்பெறுகின்ற வன்முறைகள் வெளித்தெரியும் அளவுக்கு ஆண்களுக்கு இடம்பெறுகின்ற பாலியல் வன்கொடுமைகள் வெளித்தெரிவதில்லையே என்று வினவிய போது... பெண்களுக்கு இருக்கின்ற ஆதரவு அமைப்புகள் ஆண்களுக்கு இல்லை. எனக்கும் கூட சிறுவயதில் நடந்திருக்கின்றது. எங்கு போனாலும் பாலியல் தாக்குதல் நடக்கும். வெளிநாட்டில் இருந்துவரும் எனது நண்பர்கள் கூட இத்தாக்குதலுக்கு ஆளாகின்றார்கள். ஒரு சிலருக்கு இவற்றை தகர்த்தெறிய தைரியம் இருக்கின்றது. மாற்று பாலினத்தாருக்கான உரிமைகள் தொடர்பாக இங்குள்ள தொண்டு நிறுவனங்கள் சில பேசிவருகின்றன. இந்தியாவில் எங்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் இலங்கையிலும் அவ் உரிமைகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

பால்நிலை சமத்துவம் தொடர்பான கல்வியை இலங்கையின் கல்வி முறையில் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பொறுப்பாளராக ஹரித்த விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார். சகல சர்வதேச பாடசாலைகளிலும் Thing Equal தொடர்பான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றிலும் சில பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. அரசியல் ரீதியாக அதற்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இலங்கையில் குடும்ப உறுப்பினர்கள், அயல்வீட்டுக்காரர், சக ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் போன்றோரினால் LGBT இனர் பாலியல் நோக்குநிலை மற்றும் பால்நிலை அடையாளம் தொடர்பில் பெரும் களங்கத்தையும் பாகுபாட்டையும் எதிர்கொள்கின்றனர். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 46.7 வீத LGBT மக்கள் பொலிஸ் தொல்லை அனுபவத்தையும் 72.2 வீதமானோர் கல்வி மறுக்கப்பட்டவர்களாகவும், 57.14 வீதமானோர் பணியிலிருந்து நிறுத்தப்பட்டவர்களாகவும், 70 வீதமானோர் மருத்துவ உதவி மறுக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
என்னைப் போன்று பலர் இலங்கையிலிருக்கின்றனர். எனக்கு அதிகமான நண்பர்கள் உதவிபுரிந்திருக்கிறார்கள். அவர்கள் இல்லையென்றால் என்னால் இந்தளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. அதேபோன்று பலர் எனக்கு உதவியிருக்கின்றார்கள். என்னுடைய குடும்பத்திற்கு நான் சுமையாக இருக்கக்கூடாது. எனது குடும்பத்திற்கு ஒரு கனவு இருக்கின்றது. ஆனால் அவர்களுக்கு தெரியாது நான் இவ்வாறானதொரு வாழ்க்கையை வாழ்வது. எனக்கு பிரபலமான ஓவியராக வரவேண்டுமென்பது இலக்கு. இப்பொழுதே நான் ஊடகங்களின் எல்லைக்குள் வந்துவிட்டேன். இதன்மூலம் என் இலக்கை அடைந்துவிட்டதாக எண்ணியிருக்கின்றேன்.

ஆனால் என்னுடைய குடும்பத்தில் இதனை எவ்வாறு எண்ணுகின்றார்கள் என்பது எனக்குத் தெரியாது. சாதாரணமாக ஒரு மனிதன் தொழிலுக்குச் செல்வது, சம்பாதிப்பது அதுவே அவர்களுடைய வாழ்க்கை முறை. இப்பொழுது கொஞ்சம் அவர்களுடைய எண்ணம் மாற்றமடைகின்றது. எங்களுடைய சமூகத்தில் என்னைப்பற்றி நல்லவிடயங்களைப் பேசுகின்றார்கள். அதுவே எனக்கான சிறந்த அடையாளமாக கருதுகின்றேன். எங்களுடைய சமூகத்தில் அதிகமானோர் வெளியே வருவதற்கும் அவர்களுடைய குடும்பத்துடன் பேசுவதற்கும் பயப்படுகின்றார்கள். இவ்விடயம் வெளியே தெரிந்தால் வீட்டைவிட்டு வெளியேற்றிவிடுவார்கள். அவர்களுடைய கலாசாரம் மிகவும் இறுக்கமானதாக இருக்கும். இவ்வாறான விடயங்களுக்கு அவர்கள் பயப்படுகின்றார்கள். என்னுடைய அம்மா மிகவும் கண்டிப்பானவர். நானும் அதிகமாக போராடினேன். நான் மாறவேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் நான் மாறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். நான் நானாக வாழவேண்டுமென்றே ஆசைப்பட்டேன். நல்ல வாய்ப்புகள் அமையும் போது நானும் அதிகம் சாதித்திருப்பேன்.

என்னையும் ஆரம்பத்தில் சமூகம் தவறாகவே பார்த்தது. அந்த எண்ணத்தை மாற்றுவதற்கு எனக்கு 10 வருடங்கள் தேவைப்பட்டது. மிகவும் கஷ்டமாக இருந்தது. பலர் என்னிடம் தவறான வகையில் பேசுவார்கள். தவறான நோக்கத்துடன் வருவார்கள். இப்போதும் பாதையில் சென்றாலும் தவறாகவே பார்ப்பார்கள். இது சாதாரணமாக எல்லா இடங்களிலும் நடக்கும் விடயம். எங்களுடைய சமூகத்திலும் மாற்று பாலினத்தினர் இருக்கின்றனர். அவர்கள் தவறான பாதையில் செல்வதால் எங்களையும் அவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள். அவர்கள் அருவருப்பை தோற்றுவிக்கக்கூடிய வகையில் நடந்து கொள்வார்கள். சிலர் ஆண்களைக் கண்டாலே வித்தியாசமாக நடந்துகொள்வார்கள். இவ்வாறானவர்களுக்கு எவ்வாறு நடத்தையில் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டுமென்று தெளிவேற்படுத்த நான் உத்தேசித்துள்ளேன். எங்களை ஒருவர் ஏளனம் செய்யுமளவிற்கு நடந்துகொள்ளக்கூடாது. சினிமாவும் இவ்வாறான நிலைக்கு ஒரு காரணம். திருநங்கைகளை இந்திய சினிமா சித்தரிக்கும் விதம் மோசமானது. இதனைப் பார்க்கின்ற சிறுவர்கள் இவ்வாறானவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கான வாய்ப்புக் காணப்படுகின்றது.

எனவே, இலங்கையில் மறைந்த ஒரு சமூகமாகவே LGBTIQ மக்கள் வாழ்ந்து வரும் சூழல் காணப்படுகின்றது. இதற்கு எம்மைச் சுற்றியுள்ள சமூகத்தின் பார்வையே பிரதான காரணமாகும். இதனை மாற்றியமைக்க வேண்டிய தேவையிருக்கின்றது. தமது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மாற்றுப் பாலினத்தவராக இருக்கும் நிலையில் அவர்களை நாம் எவ்வாறு அணுகுவோம் என்பதைப் போலவே சமூகத்தில் இருப்பவர்களையும் அணுகவேண்டும். அவர்களை அன்னியர்களாக பார்க்க வேண்டிய தேவையில்லை. மாற்றுப் பாலினத்தவரும் மனிதர்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக