கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

13 ஆகஸ்ட், 2018

1000 ரூபா கிடைக்குமா?

கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்கள் தற்போது எல்லோரிடமும் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கிறது. கடந்தமுறை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஏற்பட்ட குழறுபடிகள் மற்றும் ஏமாற்று வேலைகள் காரணமாக, இம்முறை தொழிலாளர்கள் 1000 ரூபாவை எதிர்பார்த்திருக்கின்றார்கள். ஆனால் அவை கிடைக்குமா என்பதில் அதிகளவில் அவர்கள் சந்தேகத்துடனேயே இருக்கின்றார்கள். கடந்த ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட சம்பளத்தொகையினையே இன்னும் இவர்கள் முழுமையாக பெற்றுக் கொள்ள முடியாத நிலையே இதற்கு காரணமாகும்.

ஒரு நாளைக்கு 16கிலோ கொழுந்து பறித்தாலே முழு சம்பளமும் கிடைக்கப்பெறும். ஆனால் 16கிலோ கொழுந்து பறிப்பதற்குரிய வாய்ப்புக்கள் மிகவும் அரிது. தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படாமையினால் தேயிலைகளை புற்கள் சூழ்ந்துள்ளதுடன் காடுமண்டி கிடக்கும் நிலை இருக்கின்றது. இதனால் 16 கிலோ கொழுந்து பறிப்பதென்பது மிகவும்
சிரமமான காரியமென தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தினை கொண்டு நடாத்துவதற்கு எவ்வளவு வருமானத்தை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பது தொடர்பாக மஸ்கெலியா (புளும்பீல்ட்) பழைய தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது.


எங்களுக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபா சம்பளம் கிடைத்தால் ஓரளவுக்கு போதுமானதாக இருக்கும். இப்போதுள்ள சூழ்நிலையில் எங்களுக்கு கொடுக்கின்ற சம்பளம் போதாது. தற்போது 730 ரூபா வழங்கப்படுவதாக கூறினாலும் அத்தொகை எங்களுக்கு கிடைப்பதில்லை. 16கிலோ கொழுந்து பறித்தாலே அதனை பெற்றுக்கொள்ள முடியும். கடந்த மாதம் எங்களுக்கு போன்ஸ் லீவு வழங்கப்பட்டது. வேலை இல்லை. பின்னர் கைகாசுக்கு வேலை வழங்கினார்கள். அதிலும் 16கிலோவினை பறிக்க வேண்டும். கொழுந்தில்லாததால் 12- 13 கிலோவினையே பெற முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களுடைய கல்வி செலவு, உணவு செலவு என் சகலவற்றுக்கும் நான் பெறும் சம்பளம் போதாது. நானும் எனது கணவரும் உழைத்தால் கூட செலவுகளை ஈடுசெய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே 1000 ரூபா சம்பளம் கிடைத்தால் ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என்கிறார் 15 வருடங்களாக தொழிலாளியாக கடமையாற்றும் திருமதி விக்னேஸ்வரி.
                               *******************************
எங்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கினால் உதவியாக இருக்கும். விலைவாசி உயர்ந்துள்ளது. தற்போது வாங்கும் சம்பளத்தைவிட செலவுகளே அதிகமாக இருக்கின்றன. எனது நான்கு பிள்ளைகளின் கல்விச் செலவுக்கே அதிக தொகையினை செலவு செய்ய வேண்டியுள்ளது. எனக்கு மாதம் 8000- 9000 வரையே சம்பளம் கிடைக்கிறது. அதுவும் தொடர்ந்து வேலை செய்தால் மாத்திரமே கிடைக்கப்பெறும் என்கிறார் திருமதி கற்பகம்.
                                                *******************************

ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் 1000ரூபா வழங்குவதாக கூறி ஏமாற்றிவிட்டார்கள். தற்போது 730 ரூபா வழங்குவதாக கூறியிருந்தாலும் அவை எங்களுக்கு கிடைப்பதாக தெரியவில்லை. 18நாட்கள் வேலை செய்து நாளொன்றுக்கு 16கிலோ கொழுந்தெடுத்தால் மாத்திரமே 730 ரூபா கிடைக்கிறது. இல்லாவிடின் சம்பளமாக 530 ரூபாவே கிடைக்கப் பெறுகின்றது. எங்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட்டால் ஓரளவு சமாளிக்கலாம். ஆனால் அவர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டுமே. கொடுக்கக்கூடிய மனநிலை அவர்களிடம் இல்லை. ஏமாற்றிக்கொண்டே வருகிறார்கள்.இம்முறையும் அதே ஏமாற்று வேலையை முன்னெடுப்பார்களோ தெரியாது. தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றியே இவர்களுடைய காலம் கழிகிறது. தொழிலாளர்களின் முடிவுபடியே சம்பளத்தை தீர்மானிக்க வேண்டும். தற்போது 8000- 12000 சம்பளத்தையே பெறுகிறோம். நான்கு, ஐந்து பிள்ளைகள் கல்விகற்கும் ஒருகுடும்பத்தில் கல்விக்காக மட்டும் 15000 ரூபா தேவைப்படுகிறது. வீட்டு செலவுகளுக்காக 13000 க்கு மேல் ஒதுக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இதனை ஒப்பந்ததாரர்கள் யோசிக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு ஆசனம் கிடைத்தவுடன் அதில் போய் இருந்து கொள்கிறார்கள். அதில் இருக்கும்மட்டும் அதை செய்கிறேன். இதை செய்கிறேன் என்கிறார்கள். ஆனால் எங்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கப்பெறுவதில்லை.
                                                   **********************************
எங்களுக்கு 1000 ரூபாவுக்கும் மேலான சம்பளத்தை வழங்கினாலே போதுமானதாக இருக்கும். தற்போது விலைவாசி உயர்வு கடுமையாக இருக்கிறது. எங்களுக்கு அடிப்படை சம்பளமாக ஒரு நாளைக்கு 1000 ரூபா கொடுத்தால் நல்லது. நாங்கள் தற்போது 16 கிலோ கொழுத்தினை எடுத்தால் மட்டுமே 730 ரூபா கிடைக்கும். நாங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு 16 கிலோவினை எடுத்தாலும் நிம்மதியற்ற வாழ்க்கையினையே வாழ்கிறோம். எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்களின் கல்விக்கே மாதம் 5000 வரையில் செலவாகின்றது. இப்போது சிறியவர்களாக இருப்பதால் குறைவானாலும் எதிர்காலத்தில் அதிகதொகை தேவைப்படும்.மாதம் சாப்பாட்டு செலவுகளுக்கு மாத்திரம் 20000 ரூபாவுக்கு மேல் தேவைப்படுகிறது. ஒருகிலோ அரிசியின் விலையே 90 ரூபாவுக்கும் மேல் இருக்கிறது. பால்மாவின் விலையும் அதிகம். இருந்தாலும் மூன்று நாட்களுக்கொரு முறை பால்மாவினை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. 

இவ்வாறு தொழிலாளர்கள் தங்களது சம்பள விடயம் தொடர்பாகவும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாகவும் கருத்து வெளியிட்டிருந்தனர். எனவே கூட்டு ஒப்பந்தமானது தொழிலாளர்களுக்கானது. அதில் அவர்களுடைய நலன்களுக்கு மாத்திரமே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். மாறாக ஒப்பந்ததாரர்கள் தங்களது சுகபோகங்களுக்கு முதலாளிமார் சம்மேளனத்துடன் விட்டு கொடுப்பில் ஈடுபட முடியாது. ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்பாகவும் பின்பாகவும் ஒப்பந்தத்தில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பாக தொழிலாளர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

ஒப்பந்தத்தினை காட்சிப்படுத்த வேண்டிய கடமை ஒப்பந்ததாரர்களுக்கு இருக்கின்றது. தொழிலாளர்கள் இனங்கண்டுள்ள குறைபாடுகளை நிவர்த்திக்கும் வகையிலேயே ஒப்பந்தம் அமைய வேண்டும். தனிப்பட்டோர் சுயநலன்களுக்காகவும் அரசியல் நலன்களுக்காகவும் கூட்டு ஒப்பந்தத்தை பயன்படுத்துதை ஏற்றுக் கொள்ள முடியாது. தொழிலாளர்களுக்கு ஒருநாள் வேலைக்கு சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட வேண்டும். இதற்கு கடுமையான நிபந்தனைகள் விதிப்பதை தவிர்க்க வேண்டும்.

நாளொன்றுக்கு எத்தனை கிலோ பறிப்பதற்கு ஏற்றவகையில் தேயிலை மலைகள் காணப்படுகின்றன. அவை முறையாக பராமரிக்கப்படுகின்றதா? தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்து உரிய முறையில் நிறுவை செய்யப்படுகின்றா? என்பதனை கள ஆய்வுகள் மூலம் உறுதிசெய்ய வேண்டும். ஒவ்வொரு முறை நிறுவையின் போதும் ஒரு தொழிலாளியிடமிருந்து 4-6 கிலோ வரை கழித்துக்கொள்ளப்படும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. எனவே இவ்வாறான சட்டவிரோத செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

எதிர்வரும் ஒப்பந்தத்தில் தொழிலாளருக்கு நியாயமான சம்பளவுயர்வும் தொழில் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். ஒப்பந்தம் தொழிலாளர்களின் கருத்துக்களை செவிமடுத்து அதன்படி அவர்களுடைய நலன்களை காக்கும் வகையில் செயற்படுத்தப்பட வேண்டும். இம் முறையும் கூட்டு ஒப்பந்தத்தில்  தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவார்களானால், அது அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். அத்துரோகத்துக்கான பதிலீட்டினை ஒப்பந்ததாரர்கள் அடுத்த தேர்தலில் அறுவடை செய்ய நேரிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக