கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூன், 2018

பெருந்தோட்ட மக்களுக்கான இந்திய வீடமைப்பு திட்டம்

மலையக மக்களின் மிக நீண்டகால கோரிக்கையாகவே தனிவீடமைப்புத்திட்டம் இருந்து வருகின்றது. லயன் அறைகளில் வசித்துவரும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வரும் நிலையில் அவர்களாகவே லயன் அறைகளை தங்களது வசதிக் கேற்ப பெருப்பித்துக் கொள்ளும் நிலை காணப்பட்டது. தொழிலாளர்கள் தமது வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் பெற்றுக்கொள்கின்ற பென்சன் பணத்தில் முதலில் வீடுகளை திருத்தியமைத்துக் கொள்கின்றார்கள். காரணம் வீட்டை விஸ்தரிப்பது அவர்களுடைய அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. ஓரளவு வசதியானவர்கள் தனிவீடுகளை அமைத்துக் கொள்கின்றனர்.
ஆனால் எல்லோராலும் தங்களுடைய வீடுகளை நிர்மாணித்துக் கொள்ளக்கூடிய நிலை மலையகத்தில் இன்னும் தோன்றவில்லை. இதனால் ஆட்சிக்கு வருகின்ற ஒவ்வொரு அரசாங்கங்களும் கொடுக்கும் வாக்குறுதிகளில் குறைந்தபட்சமாக நிறைவேற்றி மலையக மக்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுத்திருக்கின்றன. இ.தொ.கா வினால் மாடிலயன்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல 15பேர்சஸ் காணியில் மாதிரி வீடமைப்புத்திட்டத்தை ஸ்டொனி கிளிப்பில் அமைத்திருந்தனர். மேலும் ரம்பொடை கிராம செயலாளர் பிரிவில் மகிந்த சிந்தனை திட்டத்தின் கீழ், வீடமைப்பு நிர்மாண துறை அமைச்சின் ’ஜனசெவன’ பத்துலட்சம் வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் 116 ஆவது கிராமமான தொண்டமான் வீடமைப்புத்திட்டம் நிறுவப்பட்டிருந்தது அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் அமரர் சந்திரசேகரனினால் தனிவீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டு வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டிருந்தாலும் அவற்றுக்கான காணியுரித்துக்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.
இவ்வாறான நிலையில் கடந்த 20 வருடங்களில் பெருந்தோட்ட பகுதிகளில் 31671 வீடுகளே நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் தொழிலாளர்கள் தாமாகவே கட்டிக் கொண்ட 6774 வீடுகளும் உள்ளடங்கும். இவ்வாறு மலையக மக்களுக்கான வீட்டுத்தேவை பரந்தளவாக இருக்கும் நிலையில் அரசாங்கத்தினால் குறைந்தளவிலான ஒதுக்கீடுகளே மேற்கொள்ளப்படுகின்றன. இந் நிலையில் இந்திய அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 4000 வீடுகள் அமைப்பதற்கான உதவிகள் வழங்கப்பட்டு வீடமைப்புத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் முதல் கட்டமாக 1134 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த வருடம் மே மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்தியப்பிரதமர் மோடி மலையக மக்களுக்காக மேலும் 10,000 வீடுகளைக் கட்டித் தருவதற்கான உறுதி மொழியினை வழங்கியிருந்தார். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. 10 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் 10,000 வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு இந்திய அரசினால் 14,000 வீடுகளுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் புதிதாக மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளில் ஒரு சமத்துவமின்மையே காணப்படுகின்றது. மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் ஆரம்பத்தில் 650,000ரூபா அடிப்படையில் தனிவீடுகள் அமைக்கப்பட்டு பின்னர் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் வீட்டுத் திட்டங்களுக்கான நிதி அதிகரிக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் வீடுகளுக்கு தலா 10 இலட்சம் ரூபா வரையில் வழங்கப்படுகின்றது. எனினும் தனிவீடுகள் கிடைப்பதில் மலையக மக்கள் பெருமைப்பட்டுக்கொள்வதுடன் சந்தோஷப்பட்டுத் கொள்ளலாம். அதேவேளை தனிவீடுகளுக்கான காணியுரித்தானது 2864 குடும்பங்களுக்கு வழங்கப் பட்டுள்ளதுடன் மேலும் 6624 பயனாளிகளுக்கு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிக்கின்றன. ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு அமைச்சால் உருவாக்கப்பட்ட வீடுகளில் பல குறைபாடுகள் இருப்பதனை நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம். அவ்வாறான தவறுகள் ஏதும் இந்திய வீடமைப்புத் திட்டத்தில் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வது சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும்.
வீடமைப்புத் திட்டத்தில் காணப்படும் இடைத்தரகர்களின் செயற்பாடுகளும் பயனாளிகள் வீடுகளை முழுமையாக பெற்றுக்கொள்வதில் சிரமங்களை தோற்றுவித்துள்ளன. மேலும் வீட்டுத்திட்டங்களுக்கு காணிகளை ஒதுக்கீடு செய்வதில் தோட்ட நிர்வாகங்கள் அசமந்தப் போக்கை கடைபிடித்து வருகின்றன. இதனால் வீட்டுத்திட்டத்தை விரைவாக முடிப்பதிலும் இழுபறி நிலைகள் காணப்படுகின்றன. அத்தோடு கட்சி அங்கத்தவர்களுக்கு வீட்டுத்திட்டத்தில் முன்னுரிமை அளிப்பதோடு ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வழங்கப்படுவதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டு 1134 வீடுகள் கட்டுவதற்கான முதற்கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதுடன் இரண்டாம் கட்டமாக மண்சரிவு, தீ விபத்து மற்றும் மண்சரிவு அபாயமுள்ள இடங்களில் வசிக்கும் மக்களுக்காக 2866 வீடுகளும் ஆரம்பிக்கப்பட்டன. இந்திய அரசாங்கத்தின் 4000 வீடமைப்புத் திட்டமானது செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சிலுவை சங்கங்களின் கூட்டமைப்பு, ஐக்கிய நாடுகளின் மனித குடியேற்றங்கள் திட்டம், மனித நேயத்திற்கான வாழ்விடம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் போன்ற முகவரமைப்பினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
2012 ஆம் ஆண்டின் கணிப்பீட்டின் படி 840,000 இந்திய வம்சாவளி மக்கள் (மொத்த சனத்தொகையில் 4 வீதம்) நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, காலி ஆகிய மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். தற்போது இவர்கள் 200சதுர அடி பரப்பில் வாழ்வதுடன் வறுமை மட்டமானது 10.9 வீதமாகவும் (தேசிய மட்டம் 6.7 வீதம்), கல்வியறிவு 86.1 வீதமாகவும் (தேசிய மட்டம் 95.7 வீதம்), குழந்தை இறப்பு 1000க்கு 29 ஆகவும் (தேசிய மட்டம் 1000க்கு 9.7 வீதம்) காணப்படுகின்றது. இதனால் ஒப்பீட்டளவில் பின்தங்கியவர்களாகவே இவர்கள் இருக்கின்றனர்.
இதனை மாற்றும் நோக்குடனேயே ஒவ்வொரு வீட்டுக்கும் 9.5 இலட்சம் அடிப்படையில் 4.2 பில்லியன் ரூபா இந்திய அரசால் ஒதுக்கப்பட்டு 1925 சதுர அடி பரப்பில் தனிவீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே பெருந்தோட்ட மக்களின் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்திய வீட்டுத் திட்டம் அமையவேண்டுமென்பதுடன் சகல பெருந்தோட்ட மக்களும் தனிவீடுகளைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட வேண்டும்
இலங்கையின் பெருந்தோட்டத் துறையானது உற்பத்தி செலவீனம், வருமானம் வீழ்ச்சி, விலை வீழ்ச்சி, தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் இந்தியா, கென்யா போன்ற நாடுகளுடன் ஏற்பட்டுள்ள போட்டி என பல்வேறு சவால்களை எதிர் நோக்கியுள்ளது. இவ்வாறான நிலையில் இம்மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு இவ்வாறான உதவித்திட்டங்களை விரைவு படுத்த வேண்டுமென்பதே பலரின் எதிர்பார்ப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக