இலங்கையில் கடந்த மாதம் பெய்த கடும் மழையினால் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிப்புக்களை எதிர்நோக்கியிருந்தனர். மலையகத்தில் கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களும் பாரியளவில் பாதிப்புக்களை சந்தித்திருந்தன. இவற்றில் பெருந்தோட்ட மக்கள் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயங்களினால் கடும் பிரச்சினைகளை தொடர்ந்தும் எதிர் நோக்கி வருகின்ற நிலையிலும் இன்றுவரையும் நிரந்தரமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் அரசியல் வாதிகளும் அரசாங்கமும் பின்னின்றே வருகின்றன.
இவ்வாறு வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் நகர்புற மற்றும் கிராமபுற மக்களுக்கு அரசாங்கத்தால் இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் வெள்ளம், மண்சரிவு என்பவற்றால் பாதிக்கப்படும் பெருந்தோட்ட மக்களுக்கு இதுவரை காலமும் இவ்வாறான தொரு இழப்பீடுகள் வழங்கப்பட்டது கிடையாது. அனர்த்தங்கள் ஏற்படும் போது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பணிக்கப்படும் மக்கள், பின்னர் மீண்டும் சொந்த இடங்களுக்கே திரும்ப வேண்டிய சூழல் காணப்படுகின்றது.
காட்மோர் கல்கந்தை தோட்ட மக்கள் இவ்வாறு தொடர்ந்தும் அலைக்கழிக்கப்படும் சம்பவம் காணப்படுகின்றது. ஹட்டனின் பூல்பேங் தோட்டம், சாமிமலை, மொக்கா மேல் பிரிவு என்பன கடந்தகால இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை போலவே இரத்தினபுரி மாவட்டமும் கடுமையான பாதிப்புக்களைச் சந்தித்திருந்தது. கடுமையான மழை காலங்களிலும் இடி, மின்னல் போன்ற ஆபத்தான வேலைகளிலும் பாதுகாப்பின்றிய நிலையில் தொழில் புரிபவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்களேயாவர்.
வழமையாக இவ்வாறு அனர்த்தங்களை சந்திக்கும் மக்களுக்கு தற்காலிக தங்குமிடமும் உலர் உணவுப் பொருட்களும் சமைத்த உணவுகளும் வழங்கப்படுவது வழமையானதாக இருக்கின்ற நிலையில் அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் நாட்களில் அவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் மீண்டும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுவதில்லை. விவசாயத்தினை மேற்கொள்ளுபவர்களுக்கு மழை மற்றும் வரட்சி காலங்களில் அவர்களுடைய பயிர்கள் பாதிக்கப்பட்டால் இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன. அதேபோலவே கடும் வெயில் காலங்களில் தேயிலை கருகியும் மழைகாலங்களில் தொழிலுக்கு செல்லமுடியாமல் இருக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாத்திரம் எந்தவொரு இழப்பீடுகளும் வழங்கப்படுவதில்லை.
பெருந்தோட்ட தொழிலாளர்கள் தனியார் கம்பனிகளின் கீழ் தொழில்புரிந்தாலும் வருமானத்தை முழுதாக அரசாங்கமே அனுபவிக்கின்றது. ஆதலால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு இழப்பீடுகள் மற்றும் நிவாரணங்கள் நிச்சயம் வழங்கப்பட வேண்டும் கடந்த காலங்களில் ஏற்பட்ட வரட்சியான காலங்களில் தேயிலை கருகிவிளைச்சல் குறைந்து காணப்பட்டது. அப்போது தொழிலாளர்கள் பெரும் வேலை இழப்பையும் வருமான குறைவினையும் சந்தித்திருந்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு எவ்விதமான நிவாரணங்களையும் இழப்பீடுகளையும் அரசாங்கமோ தோட்ட நிர்வாகமோ வழங்கவில்லை.
தோட்ட தொழிலாளர்களாக கடமைபுரியும் இவர்களுக்கு சம்பளம் மாத்திரமே வழங்கப்படுகின்றது. அதுவும் அரைகுறை சம்பளமே. மற்றபடி வேறெந்த சலுகைகளையும் உதவிகளையும் இம்மக்கள் அனுபவிப்பதில்லை. மலையகத் தலைமைகளும் இவை தொடர்பில் நடவடிக்கையெடுப்பதில்லை. இவர்களுக்கான சலுகைகளை அங்கீகரிக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் இவ்வாறான விடயங்கள் அத்தியாவசியத் தேவைகளாக உள்ளடக்கப்பட வேண்டும்.
கடந்த மாதம் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்பும் போது வருமான இழப்பு, சொத்து இழப்பு என்பவற்றை தவிர வேறெதையும் பெற்று செல்ல மாட்டார்கள்.ஏற்கனவே அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட தனிவீட்டுத்திட்டமும் அனர்த்தங்களால் சேதமடைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மழை நீரினால் வீட்டு முற்றம் கழுவிச் சென்றதால் முற்றமே இல்லாத வீட்டிலும் முடிவு பெறாத வீட்டிலும் கட்டாயப்படுத்தி குடியமர்த்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்க்கு மலையகம் வரமா, சாபமா? என பட்டிமன்றம் நடத்துமளவுக்கு இவர்கள் பாதிப்புகளையும் ஏமாற்றுச் சதிகளையும் சந்தித்து வருகின்றார்கள். வசதியான வீடு, சிறந்த சுகாதாரம், கல்வி, போக்குவரத்து வசதி, வாழ்வாதார முன்னேற்றம் இவ்வாறு எவ்விதமான அடிப்படை வசதிகளையும் திருப்தியானளவில் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை. போட்டி அரசியலுக்காக மலையக தொழிலாளர்கள் பணயம் வைக்கப்பட்டுவிட்டார்கள். மேடைகளில் தலைவர்கள் காட்டுகின்ற வீரம் நடைமுறையில், செயற்பாட்டில் துளியளவேனும் இல்லை.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 44.15 மில்லியன் ரூபாவினையயும் பாதிக்கப்பட்ட வீடுகளை புனர் நிர்மாணம் செய்ய 39.1 மில்லியன் ரூபாவினையும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் ஒதுக்கியுள்ளது. ஆனால் இதில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை. இவ்வாறு அவசர உதவிகளில் கூட தோட்ட தொழிலாளர்கள் ஒதுக்கிவைக்கப்படும் நிலை காணப்படுகின்றது. பாதிக்கப்படும் மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என உறுதிமொழிகள் வழங்கப்படும் போதும் அவ்வீடுகள் மக்களைச் சென்றடைய குறைந்தது ஒரு வருடங்களாவது தேவைப்படும்.
அதுவரையான காலப்பகுதியில் அவர்களுக்கு தற்காலிக வதிவிடங்கள் அல்லது பாதிக்கப்பட்ட குடியிருப்புகளிலேயே வாழவேண்டிய சூழல் ஏற்படுகின்றது. ஆனால் கிராமபுறம் மற்றும் நகர்புறங்களில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு வாடகை, இடைக்கால நிவாரணத் தொகை உட்பட சகல அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்படுகின்றன ஆனால் இவ்வாறான சலுகைகள் எவையும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்படும் நிவாரணங்கள் கூட முறையாக இவர்களுக்குச் சென்றடையவில்லை.
இந்நிலையில் சென்றவருடம் மார்ச் மாதம் 30ஆம் திகதி சீரற்ற காலநிலையினால் அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்த பொகவந்தலாவ ரொப்கீல் தோட்டத்தைச் சேர்ந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு ஒரு வருடமாகியும் இன்னும் அவர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடங்கள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. மீண்டும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கே செல்லுமாறு தோட்ட நிர்வாகம் வலியுறுத்துவதாக கூறி தோட்டமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே இவ்வாறான பாரபட்சமான நடவடிக்கைகள் இல்லாமலாக்கப்பட வேண்டும். சகலருக்கும் சமமான வாய்ப்புகளும் நிவாரணங்களும் கிடைக்கப்பெற வேண்டும். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக இழப்பீடுகளும் நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டுமென்பதுடன் எதிர்வரும் காலங்களிலும் முறையாக இவை அமுல்படுத்தப்பட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக