கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூன், 2018

உள்ளூராட்சி மன்றங்கள் செயற்றிறனுடன் இயங்குமா?

இலங்கை முழுவதும் தற்போது உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் உருவாக்கம் தொடர்பான சர்ச்சைகளும் தலைவர், உபதலைவர் தெரிவின் போது ஏற்பட்ட நெருக்கடி நிலைகளும் உள்ளூராட்சி தேர்தல் முறையில் இடம்பெற்றுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன. அடுத்த உள்ளூராட்சி தேர்தலின் போது உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். இவ்வாறான நிலைமைகளை வைத்துபார்க்கின்ற போது தற்போதைய உள்ளூராட்சி மன்றங்கள் செயற்றிறனுடன் இயங்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
குறிப்பாக மலையகத்தில் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உபதலைவர்கள் தெரிவுகளின் போது அமளிதுமளிகள் இடம்பெற்றிருந்ததை அவதானிக்க முடிந் திருந்தது. மஸ்கெலியா பிரதேச சபை, ஹட்டன் - டிக்கோயா நகரசபை போன்றன மக்கள் தீர்ப்பை மீறும் வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தன. இதனால் சபைகளில் ஆளும் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையில் போட்டித்தன்மைகள் நீடித்து வருவதனால் இச் சபைகளின் செயற்பாடுகள் ஆக்கபூர்வமானவையாக இருக்குமா என்ற நிலை காணப்படுகின்றது.
உள்ளூராட்சி மன்றங்களின் மூலம் பெருந்தோட்டங்களுக்கு சேவையை முன்னெடுக்க முடியாத நிலை முன்னர் காணப்பட்டிருந்த நிலையில் தற்போது அவை மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இம்முறை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலானது கலப்பு முறையிலமைந்த புதிய தேர்தல் முறையின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதேவேளை பெண்களுக்கும் 25 வீத இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த இரண்டு புதிய அம்சங்களும் நடைமுறையில் தோற்றுப்போனதொன்றாகவே காணப்படுகின்றன. பெண் பிரதிநிதித்துவம் இல்லாமலேயே ஆட்சியமைத்த உள்ளூராட்சி சபைகளும் இலங்கையில் இருக்கின்றன.
அத்தோடு உள்ளூராட்சி சபைகளின் தலைவர், உபதலைவர் தெரிவின் போது பெண்களின் பெயர்களை பரிந்துரை செய்வதை கட்சிகள் பெரும்பாலும் தவிர்த்தே வந்துள்ளன. மலையகத்தில் விதிவிலக்காக மஸ்கெலியா பிரதே சபையின் தலைவராக பெண்ணொருவர் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார். இவ்வாறான நிலையில் கலப்பு தேர்தல் முறையின் காரணமாக (60 வீதம் வட்டார முறையிலும் 40 வீதம் விகிதாசார முறையிலும் கலந்த தேர்தல் முறை) உள்ளூராட்சி சபையொன்றில் பெரும்பான்மை பெற்ற கட்சியொன்று ஆட்சியமைக்க முடியாத சூழல் உருவாகியிருக்கின்றது.
இதனால் பெரும்பான்மை பெற்றிராத கட்சிகள் மாற்றுக்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் நிலை தோன்றியதால் மலையகத்தில் பல்வேறு சபைகளிலும் களேபரங்கள் வெடித்திருந்தன. நுவரெலியா மாவட்டத்தில், நுவரெலியா நகர சபை மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளில் ஐ.தே.க பெரும்பான்மையினை பெற்றிருந்தது. நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா இறுதிப்பெரும்பான்மையை பெற்றிருந்தது. இதனால் இங்கு இக்கட்சிகளால் ஆட்சியமைக்கக் கூடிய சூழ்நிலை காணப்பட்டது. ஆனால் கொத்மலை பிரதேசசபை மற்றும் தலவாக்கலை - லிந்துலை நகரசபைகளில் பெரும்பான்மை பெற்றிராத கட்சியும், சுயேச்சைக் குழுவும் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தன.
ஹட்டன் நகர சபையில் திருவுளச் சீட்டின் மூலம் ஆட்சி பெரும் களேபரங்களுக்கு மத்தியில் பொலிஸார் வரவழைக்கப்பட்டு தெரிவு செய் யப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகளினால் இவ் உள்ளூராட்சி சபைகள் வினைத்திறன் மிக்கவையாக செயற்படுமா? என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது. உள்ளூராட்சி சபைகளால் கொண்டு வரப்படும் திட்டங்களை பெரும்பான்மை பெற்ற கட்சிகள் தடுத்து நிறுத்தும் ஒரு குழப்ப நிலை காணப்படுகின்றது. இருப்பினும் சிறுபான்மை மக்களான பெருந்தோட்ட மக்கள் அரசியலில் பங்குகொள்ளும் வாய்ப்பு கணிசமானளவு அதிகரித்துள்ளது.
பெருந்தோட்ட மக்களுக்கான அடிப்படை அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு அவர்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாலும் தொகுதி அடிப்படையில் பிரதிநிதி தெரிவு செய்யப் பட்டுள்ளமையாலும் தொகுதியிலுள்ள மக்களின் தேவைகளை இணங்கண்டு நேர டியாகவே உதவிகளை வழங்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை மக்களும் பிரதிநிதிகளும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
தொகுதி ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் மக்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகவே இருக்கின்றனர். மலையகத்தில் பெரும்பாலான தொகுதிகள் தோட்டப்புறங்களாகவே இருப்பதால், தோட்டத் தொழிலாளர்கள் கூட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
எனவே இவ்வாறனவர்களுக்கு மக்களுடைய அடிப்படை தேவைகளை இனங்கண்டு தீர்வு காண்பது மிகுவும் கடினமான ஒரு பணியாக இருக்கப்போவதில்லை. அவ்வாறு வழங்கப்படும் சேவைகள் கட்சி ரீதியாக அல்லாமல், சகலருக்கும் சமமான வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் அப்போதே புதிய உள்ளூராட்சி சபைகளின் உருவாக்கமும் மக்களின் எதிர்பார்ப்பும் வெற்றிபெறும்.
1948 ஆம் ஆண்டு உள்ளூராட்சி அமைப்புக்களாக மாநகரசபை, நகரசபை, கிராமசபை காணப்பட்ட நிலையில் 1981 இல் நகரசபை, கிராமசபை என்பன ஒழிக்கப்பட்டு மாவட்ட அபிவிருத்திச்சபை 1981, 35 ஆம் சரத்தின் படி உருவாக்கப்பட்டது. எனினும் அவற்றின் செயற்பாடுகள் சிறப்பாக அமையாமையினால் 1987, 15 ஆம் சரத்தின் படி பிரதேச சபைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இலங்கையில் தற்போது 24 மாநகர சபைகளும் 41 நகர சபைகளும் 276 பிரதேச சபைகளும் காணப்படுகின்றன. இவற்றில் பாரிய நக ரங்களை மாநகர சபைகளும், சிறியநகரங்களை நகர சபைகளும், கிராமபுற பகுதிகளை பிரதேச சபைகளும் கொண்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் ஒரு மாநகர சபையும் இரண்டு நகரசபைகள் 9 பிரதேச சபைகள் காணப்படுகின்றன. இவற்றில் இறுதியாக நடைபெற்ற தேர்தலின் மூலம் 151 தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 66 பெண்களும் (33 தமிழ் பெண்கள்) உள்ளடங்குவர். இதேபோலவே ஊவா மாகாணத்திலும் கணிசமானளவு தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட் டுள்ளனர். உள்ளூராட்சி சபைகளானது, அடிமட்ட அரசியல் பிரதிநிதித்துவத்தை உருவாக்கும் ஒரு அமைப்பாகக் காணப்பட்டாலும் புதிய தேர்தல் முறையினால் ஜனநாயக விரோத பண்பை கொண்டிருப்பதாக பலராலும் விமர்சிக்கப்படுகின்றது.
இங்கு பெரும்பான்மையை பெற்றிருக்காத தோல்வியடைந்தவர்களே ஆட்சியமைப்பாளர்களாக காணப்படுகின்றனர். பிரதிநிதிகள் அதிகளவு பணத்தை பெற்றுக்கொண்டு தமக்குச் சார்பானவர்களுக்கு வாக்களித்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. புதிய தேர்தல் முறையின் படி 4919 தொகுதிகளிலிருந்து 8486 உறுப்பினர்கள் உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவுசெய் யப்பட்டுள்ளார்கள். இதில் அண்ணளவாக 2000 பெண்களும் உள்ளடங்குவர். இவ்வாறு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பினால் திறைசேரியின் செலவீனமும் கடுமையாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனாலேயே அடுத்த உள்ளூராட்சி தேர்தலில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4000 ஆக குறைக்க வேண்டுமென அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். 2016 ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செலவீனமாக 170, 168 மில்லியன் காணப்பட்டது. மூலதனச் செலவாக 59,921 மில்லியன் ரூபா காணப்பட்டது. உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் மாநகரசபை மேயர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவாக 30000 ரூபாவும் பிரதி மேயருக்கு 25000 ரூபாவும் மாநகரசபை உறுப்பினருக்கு 20000 ரூபாவும் வழங்கப்படுவதோடு தொலைபேசி மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் இதற்கு முற்பட்ட காலங்களில் மாதாந்தம் 90 மில்லியன் ரூபாவும் வருடாந்தம் 1.08 பில்லியன் ரூபாவுமே செலவீனமாக காணப்பட்டது. தற்போது இச்செலவீனம் இரட்டிப்பு மடங்குகளாக அதிகரித்து வருடத்துக்கு 2.16 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது. இவை மக்களுடைய வரிப்பணத்திலிருந்தே பெற்றுக்கொள்ளப்படப் போகின்றன இதனால் மக்களுக்கே அதிகம் சுமைகள் ஏற்படப் போகின்றன. ஆனால் மக்களுடைய வரிப்பணங்களின் மூலம் சலுகைகளை பெற்றுக்கொள்ளும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மக்களுடைய ஆணையை மதித்து நடக்கின்றார்களா?
பிரதிநிதிகளின் அதிகரிப்பும் பிரதேச சபைகளின் அதிகரிப்பும் நுவரெலியா மாவட்டத்திற்கு ஒரு வரமாக பார்க்கப்பட்ட போதும், தற்போது அவற்றில் ஏற்பட்டிருக்கும் முறுகல் நிலைகள் எதிர்கால கனவுகளை சீர்குலைப்பவையா கவே இருக்கின்றன. அதேவேளை இவ்வாறான அதிகரிப்புக்களினால் பிரதிநிதித்துவம் அதிகரித்திருக்கின்றதே தவிர, மக்களுடைய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அவை போதுமனதாக இருக்குமா? உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்படும் செலவீனங்களை குறைத்து அதனை நேரடியாக மக்கள் தேவைக்கே பயன்படுத்த நடவடிக்கை எடுப்பது சிறந்ததொரு விடயமே.
இதில் அரசியல் இலாபங்கள் இருந்தாலும் மக்களின் சுமைகளை ஓரளவுக்கேனும் குறைக்க முடியும். எவ்வாறெனினும் இனிவரும் நான்கு வருடங்களுக்கு தற்போது செயற்பாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்குரிய கடப்பாட்டில் இருக்கின்றது. சொத்துக்களை பாரதீனப்படுத்தல், விற்றல், வரிகளை அறவிடுதல், செலவுகளை கணிப்பிடுதல், உரிமைப்பத்திரங்களை வழங்குதல், உபவிதிகளை உருவாக்குதல் என்பவற்றுடன் பொதுச்சுகாதாரம், கழிவகற்றல், சுற்றாடல் பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரங்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்கு இருக்கின்றன.
உள்ளூராட்சி மன்றங்களினால் ஒப்பந்தங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு இடைத்தரகராக செயற்படுகின்றவர்கள் மோசடிகளில் ஈடுபட்டிருக்கின்றமையும் கடந்த காலங்களில் இடம் பெற்றிருக்கின்றன. இவ்வாறான தடைகளை தகர்த்தெறிந்து புதிய பிரதேச சபைகள் செயற்றிறனுடன் செயற்படுமா? என்பதுவே எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அரசியலுக்கு புதிதான பலரை இந்த உள்ளூராட்சித் தேர்தல் இனங்கண்டிருக்கின்றது.
1987 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் 15 ஆம் இலக்க 33 ஆவது சரத்தானது பிரதேச சபையின் நிதியினை பெருந்தோட்டங்களுக்கு பயன் படுத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கான தீர்வு எட்டப்பட்டுள்ளது. இதனால் உள்ளூராட்சி மன்றங்களினூடாக சகலரும் சேவையைப் பெற்றுக்கொள்ளும் நிலை தோன்றியுள்ளது. ஆனால் அச்சேவை யினை செவ்வனே நிறைவேற்ற மலையக உள்ளூராட்சி சபைகள் முன்வருமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக