கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூன், 2018

சுற்றுலாப் பயணிகளை 'மிரட்டும்' இலங்கை

இலங்கையில் சுற்றுலாத்துறையானது அண்மைக்காலமாக பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. ஒருபுறம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமென பெருமைப்பட்டுக் கொண்டாலும் மறுபுறம் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்கள் இலங்கையில் வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பினை கேள்விக்குட்படுத்தியுள்ளது. அண்மையில் கண்டியில் ஏற்பட்ட வன்முறைகளின் போது பல நாடுகள் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை தமது நாட்டுப் பிரஜைகளுக்கு வழங்கியிருந்தன. அதேவேளை மிரிஸ்ஸ கடற்பகுதியில் அண்மையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கெதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் பலகாலமாக இடம்பெற்றுவரும் நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை பாதுகாப்புத்துறையும் சுற்றுலாத்துறை அமைச்சும் மேற்கொண்டிருக்கவில்லை. ஏற்கனவே தங்கல்ல பகுதியில் சுற்றுலாப் பயணியொருவர் இலங்கையின் பிரதேச சபை உறுப்பினரொருவரால் கொல்லப்பட்டு அவருடைய காதலி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தது. அத்தோடு இலங்கையின் அமெரிக்கத் தூதரக ஆட்டோவில் செல்லும் அமெரிக்கப் பிரஜைகளை பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தியிருக்கின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் இலங்கை மீதான தெரிவை கைவிட வைக்கின்றன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றுவதால் பெற்றுக்கொள்ளக்கூடிய பெறுமதியான பணம் மற்றும் வெளிநாட்டுப் பெண்களை பாலியல் பொம்மைகளாகப் பார்க்கும் எண்ணம் இவையே இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்தாக அமைந்திருக்கின்றன. தற்போது மிரிஸ்ஸ கடலில் இடம்பெற்ற வெளிநாட்டவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் பூதாகரமாகியிருப்பதால் பாதிக்கப்பட்ட நெதர்லாந்து மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த மூவரையும் இலங்கை அரசின் செலவில் நாட்டுக்கு திருப்பியழைப்பதற்கான வேலைத்திட்டங்களை சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளை 26 ஆம் திகதி சந்தேக நபர்கள் தொடர்பில் அடையாள அணிவகுப்பு மேற்கொள்ளவிருப்பதால் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் செல்லும் சகல இடங்களையும் அரசாங்கத்தால் பாதுகாக்க முடியாது. ஆனால் அதிகமான சுற்றுலாப் பயணிகள் செல்லும் 11 இடங்களில் சுற்றுலாப் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் 22 இடங்களில் பொலிஸ் காவலரண்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையானது அண்மைய காலங்களில் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவினை சந்தித்திருப்பதால், பல்வேறு வழிகளில் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான செயற்றிட்டங்களை வகுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாகவே சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் தொகை 24.1 வீதத்தால் அதிகரித்து வருகின்றது. 2018 மார்ச் மாதம் 233,400 பேர் சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது கடந்த மாதத்தினை விட 19.3 வீத அதிகரிப்பாகும். இதில் 53 வீதமானவர்கள் ஐரோப்பிய நாட்டவர்களாகவும் ஆசியா மற்றும் பசுபிக் பகுதிகளிலிருந்து 38 வீதமானோரும் வருகை தந்துள்ளனர்.
இதேவேளை 2017 ஆம் ஆண்டு 21,16,407 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்தோடு 2020 ஆம் ஆண்டு 4.5 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகள் இலங்கை வருவார்களென எதிர்வு கூறியுள்ளது. 2017 ஆம் ஆண்டு 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகைதந்திருந்த வேளையில் 2018 இல் சில மாதங்களிலேயே 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டே 2020 இல் 4.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்களென எதிர்வு கூறப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எச்சரித்துள்ளது. அதேவேளை வாய்மூலமான இம்சைகள், போலி அழைப்புகள் போன்ற சம்பவங்களும் பாலியல் அச்சுறுத்தல்கள், பாலியல் வல்லுறவுகள் போன்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன. சுற்றுலாப் பயணிகள் செல்லும் கடற்கரைகள், சிறிய ஹோட்டல்கள் என்பனவற்றில் இவ்வாறான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேவேளை சுற்றுலாப் பயணிகள் அறிமுகமில்லாதவர்களுடன் பழகுதல், அறிமுகமில்லாத முச்சக்கரவண்டிகள் அல்லது பதிவு செய்யப்படாத வான்கள் மற்றும் பதிவு செய்யப்படாத தங்குமிடங்ககளை பெற்றுக்கொள்ளல் என்பவற்றுக்கு சுற்றுலாப் பயணிகளே பொறுப்புடையவர்களென சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டியது அனைத்து இலங்கையர்களினதும் கடமையெனவும் ஆனால் இலங்கையின் கலாசாரத்தை மீறி சுற்றுலாப் பயணிகள் நடப்பதாகவும் நள்ளிரவு வேளைகளில் எங்களது பிள்ளைகளை நாங்கள் வெளியில் செல்ல அனுமதிப்பதில்லையெனவும் இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சனத் உக்வத்த தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் நடமாடும் பிரதேசங்களில் போதைவஸ்துப் பாவனை அதிகரித்துள்ளமையும் சுற்றுலாப் பயணிகளின் களியாட்டங்கள் 24 மணி நேரம் விடிய விடிய இடம்பெறுவதும் அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் உல்லாசப் பயணத்துறைக்கு மொழிபெயர்ப்பு உதவிகளும் வழங்கப்படல் வேண்டுமெனவும் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். எனவே மேற்கூறிய விடயங்கள் யாவும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்துபவையாகவே அமைந்திருக்கின்றன. அதேவேளை பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளும் இலங்கையில் சுற்றுலாத்துறையை அதிகம் பாதிப்பவையாக அமைந்திருக்கின்றன.
ஹெரோயின் விற்பனை, சட்டவிரோத குற்றங்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்படுதல் என்பனவே பாதாளக் குழுக்களின் பிரதான தொழில்களாக காணப்படுகின்றன. இவற்றுள் போதைப்பொருள் விற்பனைக்கு தலைமை தாங்குகின்ற பாதாளக் குழுவொன்று இலங்கையின் பிரதான வருமானத்துறையாக காணப்படும் சுற்றுலாத் துறையின் மீது கைவைத்துள்ளது. தென் மாகாணத்தை தலைமையாகக் கொண்ட மிரிஸ்ஸ, வீரகெட்டிய, தங்கல்ல, உணவடுன ஆகிய பிரதேசங்களே அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகைதரும் இடங்களாக இருக்கின்றன.
இந்தச் சுற்றுலாப் பிரதேசங்களில் காணப்படும் கபானாக்களுக்கு தெற்கு பாதாளக் குழுவினரே தலைமை தாங்குகின்றனர். சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான சகல ஏற்பாடுகளையும் இவர்கள் மேற்கொள்வதால் பொலிஸாரால் இவை தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது. இரவு 12 மணி முதல் 2 மணி வரை இந்த கபானாக்கள் எல்லாமே திறந்திருக்கின்றன. ஹெரோயின், கஞ்சா மட்டுமன்றி எம்.எஸ்.டி.மாத்திரைகள் என்பனவும் இந்த கபானாக்களில் அல்லது சுற்றுலாப் பயணிகள் தங்குமிடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு அதிகமாக எம்.எஸ்.டி. மாத்திரைகளே விற்பனை செய்யப்படுகின்றன.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் அதிகமானோர் இவ்வாறான நிம்மதியான, எந்தவொரு இடையூறும் இல்லாத இடங்களுக்கே செல்ல விரும்புகின்றனர். சாதாரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தென் மாகாணத்துக்குச் செல்வார்களாயின், தென் மாகாண சுற்றுலா அமைச்சினால் இலவசமாக சில தகவல்கள் அங்கு பெற்றுக் கொடுக்கப்படும். கடந்த காலங்களில் வெளிநாட்டுப் பெண்கள் சிலர் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியிருந்தனர். எமது நாட்டு நீதித்துறையின் மீது நம்பிக்கையில்லாமையினால் அவர்கள் முறைப்பாடுகள் எதனையும் பதிவு செய்யவில்லை.
இலங்கையில் தங்கியிருக்கும் சில ரஷ்ய பெண்களே இவ்வாறான சந்தர்ப்பங்களில் இலங்கை சட்டத்தின் மீது நம்பிக்கை கொள்ள முடியாதென ஏனைய வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணிகளுக்கு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இச் செயற்பாடுகளினால் அதிகமான நட்சத்திர ஹோட்டல்கள் பாரிய விளைவையும் நட்டத்தையும் சந்திக்க நேரிடுகின்றன. இலங்கையில் சுற்றுலாத்துறையை வியாபாரமாக கொண்டுசெல்ல வேண்டுமென்றால் தென்மாகாண பாதாளக் குழுவினரால் மேற்கொள்ளப்படும் மிரட்டல்கள், தலையீடுகள் என்பன விரைவில் நீக்கப்பட வேண்டும். இல்லாவிடின் இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஏற்படப்போகும் பாதிப்பை தடுத்து நிறுத்த முடியாமல் போய்விடும்.
இந்த பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளினால் எஸ்.டி.எப்.துறை, தேசிய சுற்றாடல் அதிகார சபை, சமுர்த்தி அதிகார சபை, கடற்றொழில் அதிகார சபை , தேசிய ஔடத அதிகார சபை என்பன பாதிப்புக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இலாபம் மட்டுமே பாதாளக் குழுவினரின் நோக்கமாக இருக்கின்றது. அதிக கட்டிடங்கள் பாதாளக் குழுத் தலைவர்கள் மற்றும் பிரபல அரசியல்வாதிகளின் கூட்டு முயற்சியினாலேயே நிர்மாணிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. மேலும் ஏனைய கட்டிடங்களும் இவர்களின் அனுமதி பெற்றே நிர்மாணிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மிரிஸ்ஸ, தங்கல்ல போன்ற பிரதேசங்களிலேயே இவ்வாறான செயற்பாடுகள் அதிகம் இடம்பெறுகின்றன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இவ்வாறான இடங்களை தெரிவு செய்வதாலேயே அவர்கள் மேலும் ஊக்குவிக்கப்படுகின்றார்கள். தென் மாகாணத்தில் இவ்வாறு செயற்பட்டு வரும் சட்டவிரோத கபானாக்கள் அடையாளங் காணப்படுதல் வேண்டும். இவற்றுக்கெல்லாம் பாதாளக் குழுவினரின் தலையீடே பிரதானமாக காணப்படுகின்றது. எனவே அவர்களின் செயற்பாடுகளை ஒடுக்க வேண்டும். அப்போதே இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை ஒழிக்க முடியுமென சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே சமகாலத்தில் சுற்றுலாத்துறை எதிர்நோக்கிவரும் சவால்களை களைந்து சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமாயின் மேற்கூறிய விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுலாத்துறை வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் நிலையில், சர்வதேச ரீதியில், இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விடயங்கள் அரங்கேறி வருவது கவலை தரும் விடயமாக அமைந்திருக்கிறது. எனவே இலங்கையின் சுற்றுலாத்துறையை புனரமைப்பு செய்ய வேண்டியது கட்டாயமானதாக இருக்கிறது.
க.பிரசன்னா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக