கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூன், 2018

பலிக்கடாவாகும் பணிப் பெண்கள்

இலங்கையில் நிலவும் தொழில் பற்றாக்குறை மற்றும் போதிய வருமானமின்மை காரணமாக இலங்கையிலுள்ள ஆண், பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக அதிகம் செல்கின்றனர். இதில் பெண்கள் வீட்டுப் பணிப் பெண்களாகவே அதிகம் உள்வாங்கப்படுகின்றனர். அங்கேயே இவர்கள் அதிகமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். வேலைத்தளங்களை விடவும் போலி முகவர்களினால் அதிக ஆபத்தினையும் மன உளைச்சல்களையும் துஷ்பிரயோகங்களையும் சந்திக்கின்றனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மூலம் முறையான பயிற்சிகள், பாதுகாப்பு என்பன வழங்கப்பட்டு பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும் போலி முகவர்களின் செயற்பாடுகளும் இவ்விடயத்தில் மேலோங்கியிருக்கிறது.
வெளிநாட்டுப் பணிப் பெண்களாக செல்லும் இலங்கையர் கட்டாயமாக கருத்தடை சாதனங்களை எடுத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்படுவதாக கடந்த வாரத்தில் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. புலம்பெயர் விவகாரங்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமைப்பான சொன்ட் (SONT) அமைப்பினை மேற்கோள்காட்டி இச்செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறான கருத்தடை சாதனங்கள் எதனையும் எடுத்துக்கொள்ள தேவையில்லையென இலங்கையின் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான விவகாரங்களினால் மத்திய கிழக்கிற்குச் செல்லும் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் அறிய முடிகின்றது. பெண்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற போலி முகவர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களினால் பெண்கள் எதிர்கொள்கின்ற துஷ்பிரயோக சம்பவங்களுக்கு சாதகமாகவே இத்தீர்வுகள் இலங்கைப் பெண்கள் மீது வலிந்து திணிக்கப்படுகின்றன. அதேவேளை வெளிநாடுகளுக்கு பணிப் பெண்களாகச் சென்ற இலங்கைப் பெண்கள் மீண்டும் திரும்பிவரும் போது சிலவேளைகளில் குழந்தைகளுடன் வரும் சம்பவங்களும் இலங்கையில் ஏற்கனவே பதிவாகியுள்ளன.
அதைவிடவும் வீட்டு எஜமானர்களால் வன்முறைக்கு ஆளாகி அங்கவீனர்களாகவும் சுயநினைவிழந்தவர்களாகவும் இலங்கைப் பெண்கள் திரும்பி வருவதுண்டு. மேலும் பாலியல் தாக்குதல்கள், துஷ்பிரயோகங்கள் என்பவற்றையும் பெண்கள் எதிர்நோக்குவதுண்டு. உச்சபட்சமாக கொலை செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்ட பெட்டிகளில் பிணங்களாக வருவதுமுண்டு. ஆனால் இவை தற்கொலைகள் என மூடிமறைக்கப்பட்டு வருகின்றன. இவற்றிலெல்லாம் தவிர்ந்து பல வருடங்களைக் கடந்து நாடு திரும்பும் பெண்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நிவாரணங்களையும் பெற்றுக் கொடுத்திருக்கின்றது.
இவ்வாறான சவால்களைத் தாண்டி பணிப் பெண்களாகச் சென்றுள்ள பலர் பல வருடங்களைக் கடந்தும் இலங்கையிலுள்ள அவர்களுடைய குடும்பத்துடன் எவ்விதத் தொடர்புமின்றி இருக்கின்றனர். அவ்வாறு காணாமல் போயுள்ளவர்கள் உயிருடன் இருக்கின்றனரா, இல்லையா என்பது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கே குழப்பமாக இருக்கின்றது. அதேவேளை வெளிநாடுகளில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கைத் தொழிலாளர்கள் குறித்து அரசாங்கம் எவ்விதத் பொறுப்பும் ஏற்காதென வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளது.
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் விசா காலம் முடிந்த பின்னர் அங்கு தொடர்ந்து பணியாற்றுவது சட்டத்துக்குப் புறம்பானது . இத்தகைய செயல்கள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் செலுத்தக்கூடிய குற்றங்களாகும். இதை வலியுறுத்துமாறு உறவினர்களிடம் கோரப்பட்டுள்ளதுடன், அவ்வாறான தேவை ஏதும் இருக்குமெனின் சட்டரீதியாக அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையரில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவதோடு, இதைத் தவிர இஸ்ரேல், தென்கொரியா, சைபிரஸ், மலேஷியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் பணிபுரிகின்றனர்.
இலங்கையிலிருந்து தென்கொரியாவிற்கு 25,000 க்கும் மேற்பட்டவர்கள் தொழிலுக்காக ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 5,000 க்கும் மேற்பட்டோர் விசா காலம் முடிவடைந்தும் சட்டவிரோதமாக தங்கியிருந்து தொழில் புரிவதாகவும் இதேபோன்ற நிலைமை இஸ்ரேலிலும் காணப்படுவதாகவும் இதனால் எதிர்காலத்தில் இந்நாடுகளிலிருந்து இலங்கைக்கு கிடைக்க வேண்டிய ஒதுக்கீடுகள் குறைக்கப்படுமெனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான விடயங்களினால் வெளிநாடுகளுக்கு தொழில் பெற்றுச் செல்வோரின் உரிமைகளை பேணுவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
வெளிநாடுகளுக்கு பணிப் பெண்களாகச் செல்லும் பலரும் சுதந்திரமானதும் மனிதாபிமானதுமான தொழிலிடங்களை பெற்றுக் கொள்வதில்லை. அவர்களின் வாழ்க்கையே நிச்சயமற்றதாகவே காணப்படுகின்றது. அவ்வாறானதொரு சம்பவம் அண்மையில் பதிவானது. காலி, வந்துரம்ப, கட்டுபுரவ என்ற இடத்தில் வசிப்பவரும் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக இருக்கும் போது கொல்லப்பட்டவருமான பிரியந்தா ஜயசேகர என்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயின் துயரக் கதையானது வெளிநாட்டுப் பணத்துக்குப் பதிலாக வாழ்க்கையின் பெறுமதியைப் பற்றி மீண்டும் விமர்சனத்தை அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி பிரியந்தாவை புரேந்ஹ் என்ற சவூதி அரேபியாவின் நகரமொன்றில் பணிப்பெண்ணாகவிருந்தபோது வீட்டின் உறுப்பினரொருவரே சுட்டுக் கொலை செய்திருந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரென அந்நாட்டுப் பொலிஸாருக்கு குடும்பத்தினரால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்வாறான ஒருவர் தான் வேலை செய்யும் வீட்டில் இருப்பதாக ஒருபோதும் பிரியந்தா தனது குடும்பத்தாருடன் கதைக்கும் போது தெரிவித்திருக்கவில்லை. மேலும் பிரியந்தாவைக் கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபரும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு வேலை வாய்ப்பினைப் பெற்று சென்றிருந்த பிரியந்தா, பலமுறை இவ்வாறு சென்றுவந்த அனுபவமுடையவராவார். இருப்பினும் தனது குடும்பத்தாருடன் வாழ்நாளை கழிப்பதற்காக 2009 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டுக்குச் செல்வதில்லை என்ற முடிவை எடுத்திருந்தார். எனினும் தனது கடைசி மகளான 8 வயது நிரம்பிய நெத்மி நவோத்யா என்பவருக்கு இதயத்தில் சிறு துளையொன்று இருப்பதால் சிகிச்சைக்காகவே தன்னிடமிருந்த அனைத்துப் பணத்தையும் செலவழித்துவிட்டார்.
இதனால் 2017 ஏப்ரல் மாதம் மீண்டும் வெளிநாட்டுக்கு பயணமானாள். அன்று முதல் வேலை செய்யும் வீட்டில் பிரச்சினை ஏற்படுவதால் வேறொரு இடத்துக்கு தன்னை மாற்றுமாறு முகவரமைப்பிடமும் தெரிவித்திருந்தாள். ஆறுமாத சம்பளத்தில் மூன்று மாத சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதியே தனது குடும்பத்தாருடன் இறுதியாக உரையாடியிருந்தார். இருப்பினும் அவளது அழைப்புக்குப் பதிலாக கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி வெளிநாட்டிலிருந்து பிரியந்தாவை தேடித்தருமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் விடுத்த முறைப்பாட்டினை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தனது மனைவி இறந்த செய்தி கணவனுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
பிரியந்தாவின் கொலையால் அவளது எதிர்காலம், பிள்ளைகளின் எதிர்காலம், கனவு எல்லாமே தொலைந்து போனது . இவையனைத்தும் எமது மக்களிடம் பல விடயங்களை எடுத்துக் காட்டுபவையாக அமைந்திருக்கின்றன. இறுதி முடிவெடுக்க வேண்டியது அரசாங்கமே. மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் தீர்மானம் எடுக்காவிட்டால் இவ்வாறான கொலைகளை தடுக்க முடியாத சூழல் உருவாகும் நிலை ஏற்படும்.
வெளிநாடுகளுக்கு தொழிலுக்குச் செல்பவர்கள் எல்லோருமே மன நிம்மதியுடனோ, திருப்தியுடனோ இலங்கைக்குத் திரும்புவதில்லை. இந்த அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. 100 பேரில் ஒருவருக்கே வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமைகின்றது. இருப்பினும் நம்நாட்டுப் பெண்களில் பலர் பெரும்பாலும் வெளிநாட்டுத் தொழிலையே தெரிவு செய்கின்றனர். சிலர் ஒரு தடவை சென்றுவிட்டு அந்த வாழ்க்கைக்கு பழகிய பின்னர் நம் நாட்டில் என்ன செய்வதென்று நினைத்து மீண்டும் அத்தொழிலையே தெரிவு செய்கின்றனர். ஒரு சிலர் அதிக சம்பளத்துடனான வேலை என்றபடியால் தெரிவு செய்கின்றனர். இவ்வாறு வெளிநாட்டுத் தொழிலை தெரிவு செய்வதற்கு பல காரணங்களைக் கூறலாம்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் 2016 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 242,930 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றிருக்கின்றனர். இதில் சிறு தொகையானோர் தொழிலாளர்களாகவும் (6,574 பேர்) வீட்டுப் பணிப் பெண்களாக 65,127 பேரும் சென்றுள்ளனர். தொழிலுக்காக வெளிநாடு செல்வோரில் 35 வீதத்தினர் வீட்டுப் பணிப் பெண்களாகவே செல்கின்றனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் போது ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்பதற்காக மருத்துவ சோதனையொன்றும் மேற்கொள்ளப்படுகின்றது. இருப்பினும் வெளிநாடுகளில் வித்தியாசமான வன்முறைகளை இவர்கள் அனுபவிக்கின்றனர்.
இவ்வாறான சம்பவங்களினால் உயிரிழப்போரின் தொகையும் அதிகரித்துள்ளது. அவ்வாறே 2013 ஆம் ஆண்டு 298 பேரும் 2014 இல் 315 பேரும் 2015 இல் 312 பேரும் 2016 இல் 296 பெரும் மரணித்துள்ளனர். அவர்களுள் பெரும்பாலானவர்கள் வீட்டுப் பணிப் பெண்களாகவே இருக்கின்றனர். அதிகமான வெளிநாட்டுப் பணத்தினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு பெற்றுக் கொண்டாலும் அதற்குப் பிரதியீடாக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் இலங்கை சமூகத்தினரே என்பது கவலைக்குரிய விடயமாகும்.
மேலும் பணிப் பெண்களாக தொழில் புரியும் தாய்மார்கள், மகள்மார்கள், சகோதரிமார்கள் படும் துன்பங்களும் அதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளும் சொல்லிமாளாதவை. ஆயினும் இத்துன்பகரமான சம்பவங்கள் இன்னும் எத்தனை நாளைக்கோ என்ற கேள்வியை நாம் மீண்டும் எம்மிடமே கேட்டுக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
க.பிரசன்னா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக