கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூன், 2018

பாதையில்லாப் பயணம்

பெருந்தோட்ட மக்களுக்கான தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. ஆனால் அவர்களுடைய தேவைகளுக்கேற்றவாறான தீர்வுகள் கிடைப்பதென்பது இன்றுவரையிலும் இழுபறி நிலையிலேயே இருக்கின்றது. தனிவீடு, போக்குவரத்துபாதை, சுகாதாரம், போஷாக்கு போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கே பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர். அந்தவகையில் லுணுகலை சோலன்ஸ் மேற்பிரிவு மக்கள் பலவருடகாலமாக பாதை சீரின்மையினால் கடும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். லுணுகலையிலிருந்து சோலன்ஸ் மேற்பிரிவுக்குச் செல்லும் 4கிலோமீற்றர் நீளமான இவ்வீதியானது குன்றும் குழியுமாக மக்கள் பாவனைக்கு லாயக்கற்ற வகையில் இருந்து வருகின்றது.
சோலன்ஸ் மேற்பிரிவில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுடைய சகல தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கு இப்பாதையையே பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளது. இங்கு வசிக்கும் மாணவர்கள் இவ்வழியினூடாகவே லுணுகலை ராமகிருஷ்ணா வித்தியாலயத்துக்குச் செல்லவேண்டியுள்ளது. பாதை சீரின்மையினால் மாணவர்கள் தமது போக்குவரத்திற்காக மட்டும் 1500ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையினை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது. தோட்ட தொழிலாளர்களான பெற்றோருக்கு இத் தொகை சற்று அதிகமாகவேயுள்ளது.
2017 ஆம் ஆண்டு இப்பாதையில் 200அடி வரையிலான பகுதி மாத்திரமே சீர்செய்து கொடுக்கப்பட்டது. பின்னர் அப்பணிகளும் இடைநடுவில் கைவிடப்பட்டிருக்கின்றன. தமது தேவைகளுக்காக மாத்திரம் இப்பகுதிகளுக்கு வரும் அரசியல்வாதிகள் தங்களுடைய தேவை நிறைவடைந்ததும் இம்மக்களை மறந்துவிடுவதாக இங்குள்ளவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இங்கு அவசரமாக ஒரு மருத்துவ வசதியை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் குறைந்தது போக்குவரத்துக்காக மாத்திரம் 500 ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை செலவுசெய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. தோட்ட வைத்தியசாலையானது கடந்த 8வருடங்களுக்கு மேல் செயலிழந்து காணப்படுவதால் மக்கள் தங்களது மருத்துவ தேவைகளுக்கு நகர்புறங்களையே நாடவேண்டியுள்ளது.
இங்கு போக்குவரத்துக்கான பாதை கட்டமைப்பு இன்மையால் வாகனங்களும் அடிக்கடி பழுதடைந்து செல்வதோடு அவசர தேவைகளுக்கு வாகனங்களைப் பெற்றுக் கொள்வது சிரமமான காரியமாக இருப்பதோடு அதிக கட்டணங்களும் அறவிடப்படுகின்றன. பொதுப் போக்குவரத்து இன்மையினால் வாடகை வாகனங்களையே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தேர்தல் காலங்களுக்கு மட்டுமே அரசியல் வாதிகள் இவர்களை தேடிவருவதாகவும் வாக்குகளை பெற்றவுடன் மக்களை மறந்து விடுவதாகவும் தெரிவிக்கும் இம்மக்கள், எப்படியாவது இப்பாதையை புனரமைத்து தந்தால் அது மிகப்பெரும் உதவியாக இருக்குமெனவும் சுட்டிக் காட்டுகின்றனர்.
பெருந்தோட்ட வீதிக்கட்டமைப்புகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் அண்மையில் தெரிவித்திருந்தார் பெருந்தோட்டங்களை ஊடறுத்து செல்கின்ற பிரதான வீதிகளை தவிர்த்து தோட்டப்புறங்களுக்கு செல்கின்ற பாதைகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது. இதனை புனரமைத்து கொடுக்க வேண்டிய தேவை தோட்ட நிர்வாகத்துக்கும் அப்பகுதி அரசியல் வாதிகளுக்கும் இருக்கின்றது. எனவே பதுளை மாவட்ட பாராளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இப்பாதை தொடர்பாக கூடிய கவனம் செலுத்தி உடனடி தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
தினமும் நூற்றுக் கணக்கானவர்கள் இப்பாதையை பயன்படுத்துகின்றனர். பாதை சீரின்மையால் முறையான போக்குவரத்து வசதிகள் இங்கு காணப்படவில்லை. அதே வேளை பெருந்தொகையான பணத்தை போக்குவரத்துக்காக செலவு செய்யக் கூடிய பொருளாதார நிலையும் இங்குள்ள மக்களுக்கு இல்லை. இதனால் பாடசாலை மாணவர்கள் தினந்தோறும் 8 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று கல்வி கற்று வருகின்றனர். எனவே சகலரினது தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள இப்பாதை அவசியத் தேவையாகவுள்ளதால் இவற்றை உடனடியாக புனரமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
...................................................................
இந்த பாதையானது மிக நீண்டகாலமாகவே சீரற்ற நிலையிலேயே இருக்கின்றது. கர்ப்பிணி தாய்மார்கள், மாணவர்கள் என சகலரும் இப்பாதையே பயன்படுத்துகின்றனர். நாங்கள் வாடகைக்கு வாகனங்களை செலுத்துகிறோம். பாதை சீரின்மையால் எங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கின்றது. வாக்குறுதிகள் வழங்கியபடி யாரும் இதனை செய்து கொடுக்கவில்லை. சிறு சிறு பகுதியை மட்டுமே புனரமைத்து விட்டு இடையில் கைவிட்டு செல்கின்றனர்.
சசி
ஆட்டோ சாரதி
...........................................................................

நான் கடந்த 6 வருடகாலமாக பாடசாலைக்கு செல்வதற்கு இப்பாதையையே பயன்படுத்துகின்றேன். பாதைகள் சீரின்மையால் முறையான போக்குவரத்து வசதி இல்லை. நடந்தே பாடசாலைக்கு சென்று வருகிறோம். ஒரு நாளைக்கு இவ்வாறு 8 கிலோமீற்றர் தூரம் நடக்கிறோம். வைத்தியாலைக்கு நோயாளர்களை அவசரமாக கொண்டு செல்வதற்கு கூட அதிக சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
கவிதாசன்
மாணவன்.
........................................................................

நான் சீரற்றிருக்கும் இப்பாதையின் ஊடாக கடும் சிரமங்களுக்கு மத்தியிலேயே சென்று பாடசாலைக் கல்வியை கற்றேன். இன்று பல்கலைக் கழகத்துக்கும் தெரிவாகிவிட்டேன். ஆனால் இன்னும் இப்பாதை சீரமைக்கப்படவில்லை. அரசாங்கம் என்ன செய்கின்றதென தெரியவில்லை.
கிருபாகரன்
உயர்தர மாணவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக