கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

27 பிப்ரவரி, 2018

மலையகத்தின் பொக்கிஷமான ஆஞ்சநேயர் பாதச்சுவடு



கடும் மழை மற்றும் பனிமூட்டத்துக்கு மத்தியில் மஸ்கெலியா காட்மோர் எஸ்டேட், புரொக்மோர் டிவிசனில் அமைந்திருக்கின்ற ஆஞ்சநேயர் பாதமலை எனப்படுகின்ற புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பாதச் சுவடுகளின் அடையாளங்களை காணக்கிடைத்தது. மஸ்கெலியாவிலிருந்து 18 கிலோமீற்றர் தூரத்தில் காட்மோர் அமைந்திருக்கின்றது. காட்மோரியிலிருந்து சுமார் 7 கிலோமீற்றர் தூரத்திலுள்ள மலையுச்சியொன்றிலேயே இந்தப் பாதச் சுவடுகள் அமையப்பெற்றிருக்கின்றன. இப்பாதச் சுவடு கண்டுபிடிக்கப்பட்ட நாள்முதல் இங்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்திருக்கின்றது. கடந்த 31 ஆம் திகதி போயா தினத்திலேயே அங்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அன்றைய தினம் மாத்திரம் சுமார் 5000 க்கும் மேற்பட்டோர் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்திருந்தனர். வருபவர்களுக்கெல்லாம் அங்குள்ள இளைஞர்கள் சளைக்காமல் உணவு சமைத்து வழங்கியிருந்தனர். இப்பாதங்கள் தொடர்பில் ஒவ்வொருவரின் நிலைப்பாடும் வேறுபட்டவையாக இருந்தாலும் பொதுவாகவே இங்குள்ள மக்களின் நம்பிக்கை இவை ஆஞ்சநேயரின் பாதச் சுவடுகள் என்பதாகும். இதை அவர்கள் முழுமையாகவே நம்புகிறார்கள். அவர்களுடைய நம்பிக்கையை மதிப்பது எமது கடமையாகவே இருக்கிறது. கடும்மழை, குளிர், பனிமூட்டம் என்றும் பாராது இவர்களுடைய பக்தி பாதங்களைச் சுற்றி இருக்கிறது.

இவர்களின் இறுதி நம்பிக்கையே அப்பாதங்கள் ஆஞ்சநேயரின் பாதங்கள் என்பதாகும். இலங்கைக்கும் கம்பராமாயணத்துக்கும் அதிக தொடர்புகள் இருப்பதால் ஹனுமானின் சுவடுகளாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பதே இவர்களின் அதீத நம்பிக்கை. இதை அவ்வளவு இலகுவாக தட்டிக் கழித்து விடமுடியாது. ரம்பொடை ஹனுமான் ஆலயம், நுவரெலியா சீதையம்மன் கோயில், முன்னேஸ்வரம் ஆலயம், காயத்ரி பீடம், மஸ்கெலியா ராவணகல, திவுரும்பொல, உஸ்ஸாங்கொட போன்ற இடங்கள் புராண கதையான இராமாயணத்துடன் அதிகம் தொடர்புபடுபவையாக இருக்கின்ற நிலையில் (குறிப்பாக ஹனுமானின் சுவடுகள் பிரதானமானவை) இப்பாதச் சுவடுகள் ஹனுமானுடையது என்பதை இல்லையென்று எளிதாக மறுக்கமுடியாது.

இராமாயணத்தில் இராமர் கடலை கடந்து சீதையை இராவணனிடமிருந்து மீட்பதற்காக மண், மிதக்கும் வகை கல், மற்றும் மரங்களை கொண்டு வானரங்கள் கட்டிய பாலமாக இராமர் பாலம், அதாவது இராமேஸ்வரத்துக்கும் இலங்கையிலுள்ள மன்னார் தீவுகளுக்குமிடையே உள்ள 30 கிலோ மீற்றர் நீளம் கொண்ட மேடுகள் இராமர் பாலம் என அழைக்கப்படுகின்றன. ஆனால் அவற்றை யாரும் எளிதாக மறுக்கவில்லை. இதை கண்கண்ட சாட்சிகளும் இல்லை. அதுபோலவே புரொக்மோரில் கண்டுபிடிக்கப்பட்ட பாதச் சுவடுகளும் ஆதாரமில்லாதவையாக இருந்தாலும் மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

அதேவேளை இப்பாதம் ஒன்றரை அடி நீளமும் மூன்று அங்குல அகலமும், சுமார் மூன்று அங்குல ஆழமும் கொண்டவையாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. இவை தொடர்பாக ஆய்வினை மேற்கொள்வதற்காக கண்டியிலிருந்து வருகைதந்திருந்த தொல்பொருள் திணைக்கள ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் காட்மோர் பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு பாதச்சுவடுகள் குறித்த எந்தவொரு தொல்பொருள் ஆய்வுச் சான்றுகளையும் கணடுபிடிக்க முடியவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை, தன்னிடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ. மண்டாவல தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறான பாதச் சுவடுகள், குறித்த கற்பாறையின் அனைத்து இடங்களிலும் காணப்படுவதாகவும் மேற்படி இரு பாதச்சுவடுகள், அருகருகே காணப்படுவதே அவற்றின் விசேட அம்சமெனவும் குறித்த இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட தொல்பொருடத் திணைக்கள அதிகாரிகள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஆனால் இவ்வறிக்கையினை இப்பகுதி மக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளாத நிலையிலேயே  இருக்கின்றனர். தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார், கிராம சேவகர் என சகலரும் பெரும்பான்மையினத்தவராக இருப்பதால் இவர்களுடைய நம்பிக்கைகளை அவர்கள் மதித்து செயற்பட்டிருப்பார்களா? என்ற சந்தேகம் இவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.

எனவே இந்திய ஆய்வாளர்களை கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது இங்குள்ள மக்களின் கோரிக்கையாகவிருக்கின்றது. இதேவேளை இப்பாதச் சுவடுகளை அவதானிப்பதற்காக மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சர் வருகை தந்திருந்ததாகவும் இவை தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் ஆவன செய்ய வேண்டுமெனவும் இப்பகுதி மக்கள் தெரிவித்திருந்ததை அவதானிக்க முடிகின்றது. இப்பாதச் சுவடுகள் அமைந்திருக்கின்ற பகுதிக்கும் அண்மித்த பகுதியிலேயே சிவனொளி பாதமலை அமைந்திருக்கின்றது. ஆனால் அங்கு செல்கின்ற இந்துக்களால் பூஜைகள் செய்யமுடியுமா? ஆனால் இங்கு எமது மக்கள் வழிபடுவதற்கு எந்தவித தடையும் காணப்படவில்லையென இங்குள்ள மக்கள் ஆதங்கப்படுவதையும் அவதானிக்க முடிந்தது.

தற்போது ஆஞ்சநேயர் பாதமலை என்றழைக்கப்படும் இவ்விடத்தில் காணப்படும் பாதச்சுவடுகள் இவர்களுடைய பொக்கிஷமாகவே பார்க்கப்படுகிறது. சிவனொளிபாதமலை, சீதையம்மன் கோவில், இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில் என்பன எந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளதோ அதே போலவே இந்த ஆஞ்சநேயர் பாதமலையும் இவர்களுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த புனித பூமியாக இருக்கிறது. தற்போது பாதங்கள் அமைந்திருக்கும் பகுதியானது முஸ்தபா ஹாஜியார் என்பவருக்கு சொந்தமானதொரு பகுதியாகும்.

இங்கு கோயிலொன்றை அமைத்து வழிபட வேண்டுமென்பதே இவர்களுடைய நோக்கமாகவும் இருக்கின்றது. இதற்கான நடவடிக்கைகளை இங்குள்ள மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். காட்மோர்  எஸ்டேட்டில் இருக்கின்ற 50 ஏக்கர், பெரியமலை, தம்பத்தன்னை, கல்கந்தை, உசாவத்தை போன்ற ஐந்து தோட்ட மக்களும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை அறிய முடிகின்றது. மேலும் கல்கந்தை, உசாவத்தை ஆகிய இரு பிரிவுகளின் அடையாளமாகவே இந்தப் பாதச்சுவடுகள் காணப்படுகின்றன. அத்தோடு இங்கு இவ்வாறானதொரு பாதங்கள் தோன்றியமையானது, இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் பெரும் துணையாக இருக்குமென்று இம்மக்கள் நம்புகின்றனர்.

இங்கு இப்பாதச் சுவடுகளைத் தாண்டி பல்வேறு அடையாளங்களை எம்மால் அவதானிக்க முடிந்தது. அதாவது சங்கு, திரிசூலம் போன்ற வடிவங்களையும் தேவர்களுடைய எழுத்து வடிவம் என்று இம்மக்களால் நம்பப்படும் அடையாளங்களையும் இனங்காண முடிந்தது. பாதங்கள் அமைந்திருக்கும் பகுதிகளைச் சுற்றிலும் களி மண்ணில் பதிகின்ற பல கால்தடங்கள் எவ்வாறு காய்ந்த பின் இருக்குமோ, அதுபோலவே பரந்த பரப்பில் இவ்வாறான அடையாளங்களை கருங்கற்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.

அவற்றை விடவும் இப்பாதச் சுவடுகள் அமைந்திருக்கின்ற பகுதிக்கு அண்மித்த பகுதியில் காணப்படும் நீர் சுனையிலும் பாதச் சுவடுகள் போன்ற பகுதிகளை எம்மால் அவதானிக்க முடிந்தது. மேலும் கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரத்தை குறிக்கும் பகுதியில் பிள்ளையார் ஆலயமொன்றும் அதையடுத்து சிறிது தூரத்தில் காளியம்மன் ஆலயமும் அதைத்தாண்டி இரு பாதச் சுவடுகள் அமையப்பெற்றிருப்பதோடு இறுதியாக முருகன் ஆலயமும் அமைந்திருக்கிறது. இவ்வாறு சிறு தெய்வ வழிபாடுகளும் அதிகமாக காணப்படுவதை அவதானிக்க முடிந்தது. அதேவேளை இப்பகுதியினை அடையாளப்படுத்துவதற்கு காட்மோர் நீர்வீழ்ச்சி, மவுசாக்கலை நீர்த்தேக்கம், தம்பத்தன்னையில் அமைந்திருக்கும் சமவெளிகள் போன்றன சுற்றுலாப் பயணிகளுக்கும் பக்தர்களுக்கும் ஓர் ஆனந்த அனுபவமாக இருப்பதற்கு வாய்ப்பாக அமையலாம்.

பல வருடங்களாக இப்பகுதியில் காணப்படும் தேயிலை மலைகளில் தொழில் புரிந்துவரும் மக்கள் இதுநாள் வரையிலும் இவ்வாறானதொரு அதிசயத்தை கண்டிருக்கவில்லை. பல வருடங்களுக்கு முன்பாக இப்பகுதி இரத்தினக் கற்களுக்கு பிரசித்தி பெற்றதொரு இடமாகவும் காணப்பட்டது. இதனாலேயே இப்பாதங்கள் மக்களுக்கு ஆச்சரியத்தையும் பக்தியனுபவத்øதுயும் தந்திருக்கிறது. இதேவேளை இங்கு கோயில் அமைக்கப்பட்டு புனித பூமியாக மக்களால் கொண்டாடப்படும் நிலையில் இம்மக்களுக்கு பல்வேறு அபிவிருத்திகள் கிடைக்குமென்பது மக்களுடைய நம்பிக்கையாக இருக்கின்றது. பாதை அபிவிருத்திகள் இடம்பெறுவதோடு இங்குள்ள வியாபாரிகள், முச்சக்கர வண்டிச் சாரதிகள் எனப்பலரும் முன்னேற்றமடைவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. இப்பகுதிக்குச் செல்லும் பாதைகள் மிக மோசமான நிலையில் காணப்படுவதால் மஸ்கெலியா - காட்மோர் வரையில் செல்வதற்கும் முச்சக்கரவண்டிச் சாரதிகள் 1000 ரூபா வரையில் அறவிடுகின்றனர். அதேவேளையில் காட்மோரிலிருந்து ஆஞ்சநேயர் பாதமலை அமைந்திருக்கின்ற பகுதிக்கு செல்வதற்கு ஆட்டோ ஓட்டுனர்களால் 600 ரூபா வரையில் பெறப்படுகின்றது. இதனால் பல தொழில் வாய்ப்புகள் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

சிவனொளி பாதமலைக்கான பருவகாலமானது டிசம்பர் தொடக்கம் மேவரையான 6 மாத காலப்பகுதியை கொண்டிருக்கின்றது. அதேபோல இந்த ஆஞ்சநேயர் பாதமலையின் பருவகாலத்தை மே மாதத்தின் மத்திய பகுதியிலிருந்து டிசம்பர் மாதத்தின் மத்திய காலம் வரை முன்னெடுப்பதால் வருடம் முழுவதும் மஸ்கெலியா பிரதேசங்களிலுள்ள வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், ஏனைய தொழிலில் ஈடுபடுபவர்கள் நன்மையடையும் வாய்ப்பிருப்பதாக ஒருசாரார் கருத்து தெரிவிப்பதையும் அவதானிக்க முடிந்தது. இவை எந்தளவுக்கு சாத்தியமான பலனை தரும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

காட்மோர் பிரதேசத்திலுள்ள மக்களுக்கு மாத்திரமல்ல இப்பாதச் சுவடுகள் தொடர்பில் அறிந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் இதுவொரு புனிதத்தடமாகவே தெரிகின்றது. இப்புனிதமே அவர்களுடைய வழிபாடுகளுக்கும் பிரதான காரணமாக அமைந்திருக்கின்றது. அரசியலமைப்பு ரீதியாகவே மதச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இவர்கள் இப்பாதங்களை ஆஞ்சநேயர் பாதமாக கொள்வதற்கு எத்தடையும் இருக்கப்போவதில்லை.

இலங்கையின் இரண்டாவது குடியரசு யாப்பின் ஒன்பதாம் சரத்தானது ‘இலங்கைக் குடியரசானது பௌத்தத்துக்கு முதன்மையிடத்தை வழங்குவதோடு, புத்த சாசனத்தைக் காப்பதும் வளர்ப்பதும் அரசின் கடமையாகும்’ என்று பிரகடனம் செய்தது. மேலும் குறித்த ஒன்பதாவது சதரத்தானது, ஏனைய மதங்களுக்கான உரிமைகள், அரசியலமைப்பின் பத்தாம் சரத்து மற்றும் பதின்நான்காம் சரத்தின் ஒன்று (உ) உபசரத்து ஆகியவற்றின் அடிப்படையில் பாதுகாப்பப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிந்திப்பதற்கான சுதந்திரம், மனச்சாட்சி சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரம் என்று தலைப்பிடப்பட்டுள்ள பத்தாம் சரத்தானது ஒவ்வொரு மனிதனுக்கும் சிந்தனை, மனச்சாட்சி , மதச்சுதந்திரத்தை வழங்குவதுடன் அவரது தெரிவான நம்பிக்கையை, மதத்தைச் சார்ந்திருக்கும், பின்பற்றும் சுதந்திரத்தை வழங்குகிறது. பதின்நான்காம் சரத்தும் அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயத்திலேயே இடம்பெறுகிறது. பேச்சு, ஒன்றுகூடல் , கூட்டம் நடத்தல் போன்ற சுதந்திரங்களை உறுதிப்படுத்தும் அச்சரத்தின் முதலாம் உபசரத்தின் (உ) பிரிவானது, ஒவ்வொரு குடிமகனும், தான் அல்லது தன்னுடன் இணைந்துகொண்ட மற்றவர்களுடன் கூடி, பொதுவாக அல்லது தனியாக தனது மதத்தை அல்லது தனது வழிபடும் நம்பிக்கையைப் பிரகடனம் செய்யவும், அதைப் பின்பற்றவும் அதை நடைமுறைப்படுத்தவும் , அதைப் போதிக்கவும் உரித்துடையவராகின்றான் என்று குறிப்பிடுகிறது.

இவ்வாறு அரசியலமைப்பு ரீதியாகவே மக்களுடைய மதச் சுதந்திரம் வலியுறுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் இந்த ஆஞ்சநேயர் பாதமலைக்கு எதிராக யாரும் செயற்பட்டுவிட முடியாது. எனினும் எதிர்காலத்தில் இந்த ஆஞ்சநேயர் பாதமலையின் நிர்வாகம், பராமரிப்பு போன்ற செயற்பாடுகள் எவ்வகையில் முன்னெடுக்கப்படும் என்பதை எம்மால் எதிர்வு கூறமுடியமல் இருக்கின்றது. ஆனால் புதிய கோயிலொன்றை அமைப்பதே இவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கின்றது.

இலங்கையில் இராவணனின் புஷ்பகவிமானம் தரையிறங்கிய பகுதி, ஹனுமானின் கால் தடங்கள், சீதையின் சிறை போன்ற புராண கதைகளுக்கேற்ற களம் இலங்கையில் இருப்பதாக நம்பப்படுகின்ற சூழலிலேயே இவ்வாறான பாதச்சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கை மட்டுமல்ல, உலகளவிலும் கூட இவ்வாறான மாபெரும் பாதச் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் நம்பிக்கைக்கேற்ப வழிபாட்டுத் தலங்களாகவும் சுற்றுலாத் தலங்களாகவும் மாற்றமடைந்திருக்கின்றன. காட்மோர், கல்கந்தை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள பாதச்சுவடுகள் இப்பகுதி மக்களுக்கு ஆஞ்சநேயர் பாதமாகவே காட்சியளிக்கிறது. எனவே அவர்களுடைய நம்பிக்கையை இப்பாதங்களுக்கான விடையாக நாம் விட்டுவிடுவோம்.


***********************************************************************
காமராஜ்
புதிய பாதங்களை முதலில் கண்டுபிடித்த காமராஜ் என்பவர் தனது அனுபவங்களை பின்வருமாறு பகிர்ந்து கொண்டார். ஜனவரி முதலாம் திகதி நள்ளிரவு 1:30 மணியளவில் தான் கண்ட கனவின் மூலமே இப்பாதங்களை அடையாளம் கண்டதாக தெரிவித்துள்ளார். காலையில் சுவாமி ஒருவரிடம் வினவிய போது ஆஞ்சநேயரின் அடையாளமாக செந்தூரம் அடையாளப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 3 ஆம் திகதி குறித்த பகுதியில் தேடுதல் நடத்திய போது பல தடயங்களும் கிடைக்கப்பெற்றன. இதன்போதே வலது பாதத்தின் குதிகால் அடையாளம் முதலில் தெரிந்தது. பின்னர் முழுமையாக களைகளை அகற்றும் போது பெருவிரல் அடையாளம் முதலில் தென்பட்டது. பின்னர் ஐந்து விரல்களும் புலனாகின. பின்னர் அதனை மூடிவைத்துவிட்டு ஹட்டன், நோர்வூட், கொட்டகலை போன்ற பிரதேசங்களுக்குச் சென்று அருள்வாக்கு கேட்டவேளை இது ஆஞ்சநேயர் பாதமென்றே குறிப்பிட்டார்கள்.

ஆனால் அதனை நான் நம்பவில்லை. பல வருடங்களாக இப்பகுதியில் பல தொழிலாளர்கள் தொழில்புரிந்து வருகிறார்கள் என்று நான் சுவாமியிடம் வாதாடினேன். பின்னர் ஆஞ்சநேயர் பாதமென்றே எனக்கு வாக்குறுதியளித்தார்கள். இவ்விடயத்தை 7 ஆம் திகதிவரை தோட்ட மக்களுக்கு கூறவில்லை. இதனால் நான் மனஉறுத்தலை சந்தித்தேன். அதன்பின்னர் நான் இரு தோட்ட மக்களுக்கும் இது தொடர்பாக தெரியப்படுத்தினேன். அதற்குப்பிறகு இவை தொடர்பாக முகப்புத்தகத்தில் தகவல்கள் பரிமாறப்பட்டன. இதன் பின்னரே இப் பாதத்தை சகலரும் வழிபடும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இதுவே உண்மை என்று காமராஜ் தெரிவித்திருந்தார்.

************************************************************************
பொன்னுசாமி
நான் பொன்னுசாமி . இங்கு 60 வருட காலத்துக்கு மேலாக வசித்து வருகின்றேன். எனக்கு 83 வயதாகிறது. இப் பாதங்களை பார்க்கும் போது எனக்கு ஆஞ்சநேயர் பாதம் என்றே தோன்றியது. இதைத் தவிர வேறு காரணங்களை யாரும் சொல்வதாக தெரியவில்லை. இதை கடவுளென்றே இங்குள்ள மக்களும் தெரிவிக்கின்றனர். இந்த அடையாளங்களின் மூலம் எங்களுக்கு தெய்வ அறிகுறி இருப்பது போலவே எங்களுக்கு தோன்றுகிறது. கனவில் தோன்றியதாக கூறுவது சிலவேளை உண்மையாக இருக்கலாம். இதனால் இங்கு கோயில் கட்டி ஆஞ்சநேயரை வைத்து வழிபடலாமென்று உத்தேசித்துள்ளோம். அவ்வாறு வழிபடுவதால் இம்மக்களுக்கு நன்மைகள் கிடைக்குமென்று நினைக்கின்றேன். எங்களுக்கு வயதாகிவிட்டது. எனவே இளைஞர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதுவரைக்கு 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வழிபட்டு சென்றிருக்கின்றனர்.

***************************************************************
கே. விஜயரட்ணம்
எனது பெயர் கே. விஜயரட்ணம். நான் புரொக்மோரில் வசிக்கிறேன். எல்லா மக்களும் சேர்ந்து இங்கொரு கோயிலை அமைத்து வழிபடவேண்டுமென்பதே எனது நோக்கம். இதற்கு தோட்ட மக்கள் உதவுவதாக உறுதியளித்துள்ளனர். இந்த கோயில் இங்கு உருவானால் இத்தோட்டமும் அபிவிருத்தி பெறும். இது தொடர்பாக தோட்ட உரிமையாளரிடமும் அனுமதி பெற வேண்டும். அவர் எங்களை பராமரிக்கும் படியே கூறியிருக்கிறார். இங்கிருக்கும் தேயிலைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் கோயிலை அமைத்து வழிபடுவதற்கு நாங்கள் அவரிடம் அனுமதி கோருவோம்.
*******************************************************************

சிவன் மூர்த்தி
எனது பெயர் சிவன் மூர்த்தி. நான் காட்மோர் தம்பதன்னையில் வசித்து வருகிறேன். இத்தோட்ட தலைவராக நான் இருக்கின்றேன். இப்பாதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இதனை நாங்கள் ஆஞ்சநேயர் பாதமாக வழிபடுகிறோம். இதனால் இங்கொரு கோயிலை அமைப்பதற்கு உத்தேசித்துள்ளோம். எனவே  இதற்கு அரசாங்கமும் உதவவேண்டுமென்று கோருகின்றோம்.
***********************************************************************

மகாலிங்கம்
எனது பெயர் மகாலிங்கம். நான் புரொக்மோரில் 32 வருடமாக தொழில் செய்து வருகிறேன். 32 வருடமாக நான் இங்கு தொழில் புரிந்தாலும் இவ்விடத்தில் இப்படியொரு விடயத்தை நாங்கள் கண்டதில்லை. நாங்கள் வேலைக்கு செல்லும் போதே இப்பாதங்கள் தொடர்பாக எங்களிடம் தெரிவித்தார்கள். அதன்பின்பே இதனை நாங்கள் ஆஞ்சநேயர் பாதமென்று வணங்கினோம். இதனால் இங்கொரு கோயில் அமைப்பதற்கு உத்தேசித்துள்ளோம். இது மக்களுக்கு நன்மையாக அமையும். மாத்தளை, மாத்தறை போன்ற பகுதிகளிலிருந்துகூட பக்தர்கள் இங்கு வருகை தருவதை அறியக்கூடியதாக இருந்தது.

********************************************************************
சிவபாக்கியம்
எனது பெயர் சிவபாக்கியம். நான் மவுசாக்கலையிலிருந்து இங்கு வருகை தந்துள்ளேன். காட்மோர், கல்கந்தையில் மலையுச்சியொன்றில் இவ்வாறு பாதங்கள் அமைந்திருப்பதாக பலரும் கூறினார்கள். அதனால் அதனை ஆர்வமுடன் பார்ப்பதற்கு வருகை தந்தோம். அப்பாதங்களை பார்ப்பதற்கு எங்களுக்கு அதிசயமாக இருக்கின்றது. அது இறைவனின் பாதமாகவே எங்களுக்கு விளங்குகிறது. சிவனொளி பாதமலை போன்று இங்கும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு அனைவரும் ஒன்றிணைந்து இவ்விடத்தை புனித தலமாக பேண வேண்டும்.
****************************************************************

ராஜேசேகர்
எனது பெயர் ராஜேசேகர். நான் இந்தியாவின் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கின்றேன். அங்கேயும் இவ்வாறான கால்தடங்கள் இருக்கின்றன. பல்வேறு இடங்களிலிருந்தும் வருகைத்தந்து பலரும் வழிபடுகின்றனர். அரசாங்கம், வெளிநாட்டவர்கள், இந்து அறநெறி கழகத்தினர் அங்கு கோயில் அமைத்து வழிபடுவதற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். இங்குள்ள அவ்வாறானதொரு பாத அமைப்பே காணப்படுகின்றது. எனவே இங்குள்ள அரசாங்கம் அதற்கான உதவிகளை வழங்க வேண்டும்.
*******************************************************************

சாத்தையா திசநாதன்
எனது பெயர் சாத்தையா திசநாதன். இந்த பாதங்களை கண்டுபிடித்து 3 வாரங்கள் இருக்கும் . இதனை பலரும் வந்து கண்டுகளிக்கிறார்கள். அவ்வாறு பார்த்து செல்பவர்கள் மற்றவர்களுக்கு தகவல் வழங்குவதால், அவர்களும் இங்கு வந்து செல்கிறார்கள். அதுமட்டுமல்லாது இன்று போயா தினத்தில் பாதத்திற்கு பூஜை செய்து அன்னதானமும் வழங்குகின்றோம். காலி, ஹட்டன், மாத்தளை என பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு பக்தர்கள் வழிபடுவதற்காக வருகை தருகிறார்கள். இங்கொரு கோயிலொன்றை அமைத்து வழிபடுவதே எங்களுடைய இலக்கு. தனிப்பட்ட ரீதியில் நாங்கள் யாரிடமும் உதவிகேட்கவில்லை. மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகள் இதற்கான உதவிகளை வழங்க வேண்டும். இவ்விடயம் தொடர்பாக நாம் பொலிஸ், தொல்பொருள் திணைக்களம் என்பவற்றுக்கு அறிவித்துள்ளோம். அவர்கள் இவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அவ்வறிக்கை இன்னும் எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை.
**********************************************************************

ரமேஷ்
எனது பெயர் ரமேஷ். புரொக்மோர் தோட்டத்தின் இளைஞர் அணி தலைவராக இருக்கின்றேன். மலையகத்தில் இவ்வாறானதொரு புதுமையினை காண்பது எங்களுக்கு மிகவும் சந்தோஷம். அதிகமானோர் இதனை பார்வையிட்டு சென்றுள்ளனர். அரசாங்கத்திலிருந்தும் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்திலிருந்தும் வருகைதந்த அதிகாரிகள் இதனை பார்வையிட்டுள்ளனர். ஆனால் எங்களுக்கு நம்பிக்கையிருக்கின்றது. இப்பாதச் சுவடு எங்களுடைய மதம் சார்ந்ததே. இன்று இந்த கோயிலை இரவு - பகல் , மழை - வெயில் பாராது பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறோம். இதையாருக்கும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. இதனை கோயிலாக அமைப்பதற்கு  சகலரும் உதவவேண்டும். எந்த வருமானத்தை எதிர்பார்த்தும் இதனை பாதுகாப்பதற்கு நாங்கள் முயற்சிக்கவில்லை.
அதிகமானோர் இதனை இறைவனின் பாதச்சுவடு இல்லையென்று கூறுகிறார்கள். இது பொய்யான வதந்தி என்றும், வியாபார நோக்கம் கொண்டதென்றும் பலரும் கூறியிருக்கிறார்கள். ஆனால் அவற்றை நாங்கள் கண்டு கொள்ளவில்லை. அப்படியொரு நோக்கமும் எங்களுக்கில்லை. இத்தனை காலமாக நாங்கள் இங்கு வசிக்கின்றோம். இப்படியொரு கோயில் அமைந்திருப்பது எங்களுக்கு சந்தோஷமான விடயமே. ஆனால் எக்காரணம் கொண்டும் இவ்வதந்தியை கேட்டு இப்பகுதியை விட்டுக் கொடுப்பதாக இல்லை. இதனை பொக்கிஷமாக பாதுகாப்போம்.

*************************************************************************

ந.செ. கிருபாகரன்
உதவிக் கல்விப் பணிப்பாளர்
காட்மோர் ஒரு தனியார் தோட்டமாகும். இங்கு ஐந்து பிரிவுகள் காணப்படுகின்றன. இவை இருவருக்கு சொந்தமானவையாக இருக்கின்றது. இங்கு கல்கந்தையிலேயே பாதச்சுவடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. காட்மோரிலிருந்து அவ்விடத்தை சென்றடைய அண்ணளவாக 10 கிலோமீற்றர்கள் செல்லலாம். இது இரத்தினபுரி காட்டுப் பகுதியின் ஓரத்தில் அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்தில் இப்பகுதி அமையப்பெற்றுள்ளது. இதுவொரு சிறப்பு வாய்ந்த இடம். அதைவிடவும் தம்பத்தனை எனும் பகுதியில் உயரமான மலையொன்றில் குகையொன்றும் அமையப்பெற்றுள்ளது. அக்குகை இதுவரையும் யாராலும் ஆய்வு செய்யப்படவில்லை.
இவற்றை ஆய்வு செய்தால் பல விடயங்கள் வெளிவரலாம். அத்தோடு இக்காட்டுப் பகுதியில் சின்னபங்களா பில்லுமலை, பெரியபங்களா பில்லு மலை என்பன காணப்படுகின்றன. இங்கு அதிகமாக பல்கலைக்கழக மாணவர்கள், இப்பகுதிகளிலுள்ள மக்கள் போன்றோரே சென்று வருகின்றனர். அதேபோல ஆற்றுத் தடாகங்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகைத் தருகிறார்கள். இவ்வாறான பல அம்சங்கள் இங்கு காணப்படுகின்றன. அதேவேளை காட்மோர் என்பது மண்சரிவு இடம்பெற்ற பிறகே வெளியுலகுக்கு தெரிய வந்தது.
இப்பாதங்கள் தொடர்பாக வரலாற்று ரீதியில் அவதானிக்கும் போது, பழங்காலத்தில் செதுக்கியதாக இருக்க வேண்டும் அல்லது செதுக்காமல் தோன்றியிருக்க வேண்டும். இவை செதுக்கப்படவில்லை. கருங்கல் பாறையில் ஆழமாக பதிந்திருக்கிறது. இந்தபாதம் எவ்வாறு பதிந்திருக்கும் என்பதற்கு பல விடயங்கள் கூறலாம். முன்னை காலத்தில் அரசர்கள் தங்களுடைய எந்தவொரு பயணத்தின் போதும் தங்களது பாதை மாறாமலிருக்க அல்லது தங்களது அடையாளத்துக்காக இவ்வாறான அடையாளங்களை இட்டுச் செல்வார்கள். அதேபோல ஒற்றர்கள் தங்களது வழிதடம் மாறாமல் இருக்க இதுபோன்ற அடையாளங்களை இட்டுச் செல்வார்கள். சில சந்தர்ப்பங்களில் இயற்கை அனர்த்தங்களிலோ அல்லது எதிரிகளாலேயோ அனர்த்தங்கள் ஏற்பட்டால் அரசர் தனது குடும்பத்துக்கோ ஊர் மக்களுக்கோ தனக்கோ பிறகு தேவைப்படும் என்பதற்காக செல்வங்களை புதைத்து வைப்பார். அது புதையல் என்று சொல்லப்படும். அந்த புதையல் இருக்கும் இடத்துக்கு அடையாளமாக இந்த மாதிரியான குறியீடுகள் பயன்படுத்தப்படும். அது சிலைவடிவமோ, சித்திரவடிவமோ, செதுக்கல் வடிவமாகவோ இருக்கலாம். அந்த பாதமும் அதுவாக இருக்கலாம் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மைத்தன்மை தெரியவில்லை. இராமாயனத்தோடு இலங்கைக்கு அதிகம் தொடர்பிருக்கிறது. அப்படி பார்க்கும் போது இராவணன் இலங்கையை ஆண்டிருக்கிறார். நுவரெலியா பகுதியில் அசோக வனத்தில் சீதையை சிறை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் ஹனுமான் தேடிவந்த காடுகள் அதிகம் இருக்கின்றது. அதில் காட்மோர் காடுகளும் ஒன்றாக இருந்திருக்கலாம். ஏனென்றால் இராமாயணத்தின் சுவடுகளை பார்க்கும் போது நுவரெலியாவில் சீதை இருந்த அசோகவனம், சீதை இருந்ததற்கு அடையாளமாக சீதா எலிய கோயில், சீதை தங்கியிருந்ததாக சொல்லப்படுகின்ற சீதை மலை, அதேபோல் ஹனுமான் வந்ததற்கான இரம்பொட ஆலய காலடித்தடம்,  மஸ்கெலியா ராவணகல, இதெல்லாம் காணப்படும்போது இப்பாதச் சுவடுகளும் ஹனுமானுடையதாக இருக்கலாமென்று மக்கள் நம்புகிறார்கள். எது எப்படியாக இருந்தாலும் இது ஹனுமானுடைய பாதமென்றே மக்கள் வழிபடுகிறார்கள். இதற்கு இராமாயணத்துடைய சம்பவம், அதேபோல் இலங்கையில் காணப்படுகின்ற அடையாளங்கள் என்பவற்றை பார்க்கும் போது இதனை ஹனுமான் காலடித்தடமாக மக்கள் நம்புகின்றனர்.
இந்தவகையிலேயே வழிபாடுகள் இடம்பெறுகிறது. இங்கு மக்களும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். இதுவரைக்கும் 60,000- 70,000 மக்கள் வந்து சென்றிருப்பர். இது எங்களுடைய ஊரை அடையாளப்படுத்தும் ஒரு இடமாக இருக்கிறது. இது இந்த மதத்துக்குரியதா என்று எம்மால் கூறமுடியாது. ஆனால் ஹனுமான் பாதம் என்பதால் இந்துமதத்துக்குரிய அடையாளமாக மக்கள் வழிபடுகிறார்கள். இதை ஆரம்பத்தில் சிங்கள ஊடகங்கள் அதிகமாக கவனமெடுத்திருந்தன. அதேபோல் தொல்பொருள் திணைக்கள ஆராய்ச்சியாளர்கள் இதனை ஆராய்ந்து, எந்த வரலாறுகளுடனும் ஒத்துப்போகவில்லையென்றும் மீண்டும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டுமென்றும் கூறுகின்றனர். சில ஊடகங்கள் இயற்கை நீரரிப்பால் உருவாகியது என்று கூறுகின்றன.
ஆனால் அந்த கற்பாறைகள் கருங்கல்லினால் ஆனது. அந்த கருங்கல்லிலேயே பாதம் பதிந்திருக்கிறது. அப்படி ஒரு மனிதனின் கால் பதியாது என்பதுதான் மக்களின் நம்பிக்கை. அக்கருங்கல் பாறை எப்போது உருவாகியது. அப்பாறையின் வயது என்ன? அப்பிரதேசத்தை சார்ந்திருக்கின்ற வரலாற்றுத் தடங்கள், உயிரியல் சுவடுகள், அதேபோல் புவி சரிதவியல் தன்மைகள், அதேபோல் நம்பிக்கை மரபுக் கதைகள் இவை எல்லாவற்றையும் ஆராய்ந்துதான் ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஆனால் இப்பாதங்களை பார்த்துவிட்டு மாத்திரம் முடிவு செய்வது தவறானது. எனவே இது சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வரலாற்றாய்வாளர்கள், இந்துசமய ஆய்வாளர்கள், ஏனைய ஆய்வாளர்கள் அவர்களுடைய பார்வையிலே இதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இவ்வளவு காலமாக அப்பகுதியிலேயே வேலை செய்திருக்கிறார்கள், விறகுக்கோ அல்லது வேறுவிடயங்களுக்கோ சென்று வந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் தென்படாதது இப்போது தென்பட்டிருக்கிறது. கனவில் வந்ததென்பதை நம்பமுடியவில்லை. இருந்தாலும் மக்கள் அதனை நம்புகிறார்கள். இதனால் இங்கொரு கோயிலை அமைத்து சுற்றுலா தளமாக மாற்றினால் இப்பகுதியின் பிரபல்யமான அடையாளமாக திகழும். மலையகத்தின் அடையாளமாக திகழும். இந்து சமயத்தின் அடையாளமாக திகழும். அதேபோல் பாதைகள் அபிவிருத்தி செய்யப்படும். இங்குள்ள வியாபார நிறுவனங்கள், போக்குவரத்து சாதனங்கள் என்பன இலாபம் பெறும் வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல் இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும். தொழிலில்லாதவர்களுக்கு தொழில்வாய்ப்பு உருவாகும். இந்தவிடயங்களை கருத்தில் கொண்டு சகலரும் இதற்கு உதவிகளை மேற்கொள்ள வேண்டும்.
ந.செ. கிருபாகரன்
உதவிக் கல்விப் பணிப்பாளர்

*****************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக