கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

27 பிப்ரவரி, 2018

மூத்த மகனால் மூச்சிழந்த தாய்

இந்த துயரச் சம்பவம் உமாஓயா பற்றியதல்ல. உமாஓயாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணி பகிர்ந்தளித்து கொடுக்கப்பட்டதன் பின்னர் அவர்களில் ஒரு சிலர் வெலிமடை மெரகொல்ல எனுமிடத்தில் வசித்த வந்துள்ளனர். அங்கு 61 வயதுடைய 3 பிள்ளைகளைக் கொண்ட தாயொருவரின் கண்ணீர்க்கதையே இதுவாகும். அவரது முழுப்பெயர் ரத்நாயக்க முதியன்செலாகே கருணாவதியாகும். இவர் இரண்டு திருமணம் முடித்தவர். முதலாவது திருமணத்தில் ஒரு மகனை பெற்றெடுத்தார். இரண்டாவது திருமணத்தில் ஒரு மகளையும், மகனையும் பெற்றெடுத்தார். முதல் கணவன் இவரை விட்டுச் சென்றதன் பின்னர் கிடைத்த இரண்டாவது கணவரோ நோயால் அவதிப்பட்டு இறந்து போனார்.
எப்படியிருப்பினும் அந்நேரத்திலிருந்து பிள்ளைகளை படிப்பித்து, தொழில்களை பெற்றுக்கொடுப்பதென்பது கருணாவதிக்கு பெரும் கஷ்டமாகவே இருந்தது. உமாஓயாவால் பாதிக்கப்பட்ட இடத்துக்குப் பதிலாக கிடைத்த நஷ்ட ஈடு பணத்தின் மூலம் கருணாவதி உமா ஓயா பிரதேசத்தில் வீடொன்றை கட்டிக் கொண்டு வசித்துவந்த நிலையில், மூத்த மகன் இவ்வீட்டிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் வீடொன்றை அமைத்துக் கொண்டு வசித்து வந்தான். இளைய மகன் கருணாவதியுடனேயே இருந்தான். இருப்பினும் வேலைக்காக கொழும்புக்கு சென்றவிடத்து, வீட்டில் கருணாவதி மட்டும் தனியானாள்.

மூத்த மகன் இராணுவத்தின் விசேட படைப்பிரிவு வீரராவார். 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் சேவையில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தொன்றில் அவரது ஒரு காலை இழக்க வேண்டி ஏற்பட்டது. வைத்திய சிகிச்சையின் போது அக்கால் அகற்றப்பட்டது. 2009 ஆம் ஆண்டு வைத்திய தேவைக்காக விடுமுறையில் இருந்த அவர், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் தனது வீட்டிலேயே வசித்து வரலானார். கருணாவதி ஏனைய வீடுகளில் வேலை செய்து காலத்தை கடத்தி வந்தாலும் அவள் இருக்கும் இடத்தை விட்டு எங்கும் சென்று இரவுப் பொழுதை கழிக்கமாட்டார்.
தனது கணவருக்கு அடிக்கடி சுயநினைவு இழந்து போவதாகவும் மயக்கம் ஏற்படுவதாகவும் கூறி மருமகள் மாமியாரை, தங்களது வீட்டில் தங்குமாறு அழைப்பு விடுத்தாள். சந்தேகம் கொண்ட கருணாவதி ஒரு தடவைக்கு 3 தடவை யோசித்தாள். அதற்குக் காரணம், மூத்த மகன் தன்னுடைய சொத்தில் பங்கு கேட்பானோ என்ற சந்தேகமே, இருப்பினும் மருமகளின் வேண்டுகோளை தவிர்க்க முடியாமல் அங்கு சென்று இரவுப் பொழுதை கழிக்க திட்டமிட்டாள். 2 தினங்களே கழிந்திருந்தன. ஊவா பரணகம பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற மூத்த மகன் தாய் திடீர் மரணமடைந்ததாக தெரிவித்துள்ளான். இம் மரணம் தொடர்பாக அப்பகுதி கிராம சேவையாளருக்கும் அவன் தெரியப்படுத்தியிருந்தான்.

உறக்கத்தில் இருந்தவாறே அப்பெண் இறந்து கிடந்துள்ளாள். பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். ஊவா பரணகம பொலிஸ் அத்தியட்சகர் விடுமுறையில் சென்றிருந்ததால் இவ்விசாரணையை மேற்கொள்ள வெலிமடை பொலிஸ் அத்தியட்சகர் பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.டபிள்யூ. ஹேரத்துக்கு பண்டாரவளை பொலிஸ் அதிகாரி சுதத் மாசிங்கவால் உத்தரவிடப்பட்டது.

‘நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் எந்த சந்தேகம் வந்தாலும் விசாரணை செய்யுங்கள், இதில் நாம் அறியாத இன்னொரு பக்கமும் இருக்கலாம் . முதலாவதாக நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்துங்கள்’ பொலிஸ்மா அதிகாரியால் கிடைக்கப் பெற்ற வேண்டுகோளின்படி செயற்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் அதன்படி செயற்படத் தொடங்கினர்.

39 வயதுடைய மருமகளான ஜயந்தியின் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளும் போது பிரதான பொலிஸ் பரிசோதகர் உன்னிப்பாக கவனித்துக் கொண்டார். அவள் வழங்கிய வாக்குமூலம் பின்வருமாறு;
எனது கணவர் இரவு நேரங்களில் ஒருவித பதற்றத்துடனேயே இருப்பார்.
அதுமட்டுமன்றி புலம்பிக்கொண்டும் இருப்பார். அதனால்தான் நாம் அம்மாவிடம் (மாமி) சென்று இரவில் மட்டும் இங்கு வந்து தங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறினேன். அம்மாவும் வந்தார். நானும் அம்மாவும் எனது மகளும் ஒரு கட்டிலில் உறங்கினோம். அதே அறையில் இன்னுமொரு கட்டிலில் எனது மகன் உறங்கினான். கணவர் இன்னுமொரு அறையில் உறங்கினார். இரவு 12.30 மணியளவில் அம்மா கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்ற சத்தம் கேட்டது. மறுபடியும் வீட்டுக்குள் வந்து கதவை சாத்தும் சத்தமும் கேட்டது. நான் எழுந்து பார்த்தவுடன் அம்மாவும் எனது கணவரும் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தனர். பிள்ளைகளும் எழும்பிவிட்டார்கள் , பிள்ளைகள் இருவரையும் என்னையும் அறையிலிருந்து வெளியே தள்ளினார். அதன் பிறகு நானும் பிள்ளைகளும் அவரும் (கணவர்) ஆட்டோவில் ஏறி அருகிலுள்ள விகாரைக்கு சென்றோம். அங்கு சென்று விகாராதிபதியை எழுப்பினோம். அவர் எழும்பவில்லை. ஆதலால் விகாரை முன்றிலில் படுத்துறங்கினோம். அடுத்தநாள் காலையில் மீண்டும் வீட்டுக்குப் போனோம். வீட்டுச் சாவியை அவர் எங்கோ வீசிச் சென்றதால் அவர் பின்புறமாக யன்னல் வழியாக ஏறி வீட்டுக்குள் சென்றார்.

பார்க்கும் போது அம்மா கட்டிலில் இருந்தவாறே இறந்து கிடந்தார். வாயில் இரத்தமும் வடிந்தவாறே இருந்தது. அவர் தனது காலுறைகளால் வாயில் வடிந்திருந்த இரத்தத்தை துடைத்துவிட்டு வாயில் திணிக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசியை இழுத்தெடுத்தார். இதற்கிணங்க மகனை பொலிஸார் கைது செய்தனர். பின் இரத்தம் படிந்த கைத்தொலைபேசியையும் தேடி எடுத்தனர். வெலிமடை நீதிமன்ற நீதிபதி நதீரா போகஹதெனிய சம்பம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்று ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டார். சடலத்தை பதுளை ஆதார வைத்தியசாலையின் விசேட வைத்தியரிடம் மரண விசாரணைக்காக ஒப்படைக்குமாறும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அதற்கேற்ப பிரேத பரிசோதனையை பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர் சந்தகென் வடுவ மேற்கொண்டார். அவரின் விசாரணைப்படி, கைத்தொலைபேசியை வாயில் திணித்ததால் சுவாசப்பை மற்றும் நுரையீரல் என்பவற்றுக்கு ஏற்பட்ட காயத்தாலேயே இரத்தம் வடிந்திருக்கிறது. மற்றும் மூச்சுத் திணறலால் அவஸ்தா=ப்பட்டு உயிர் பிரிந்திருப்பதாக வைத்தியர் தெரிவித்தார். பொலிஸாரின் தேடுதலின் போது இறந்தவரினால் எழுதப்பட்ட கடிதமொன்று வீட்டிலுள்ள பெட்டகம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் அவர் தனது வீட்டிலிருந்து சென்றது முதல் மகன் வீட்டில் இருந்த நாள் வரை நடைபெற்ற அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
எனது வீட்டுக்கோ, காணிக்கோ இதுவரையிலும் உறுதிப்பத்திரம் கிடைக்கப்பெறவில்லை. இருந்தாலும் இவை அனைத்தும் எனது இரண்டாவது மகனான சமீரவுக்கே உரித்துடையவையாகும். உமாஓயாவால் கிடைக்கப்பெற்ற நஷ்ட ஈட்டுத் தொகையான இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை இரண்டு வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளதாகவும் அப்பணமும் தனது இளைய மகனுக்கே சொந்தமெனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதமானது, அத்தாயின் இறுதி முடிவு அவருக்கு தெரிந்தபிறகு எழுதப்பட்ட கடிதமாகும். மூத்த மகனோ தற்போது பதுளை சிறையில். கருணாவதியோ உமாஓயா பூமியிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். சந்தேக நபர்களான மூத்த மகனின் மனைவியும் மற்றும் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக