உழைப்புச் சுரண்டலுக்குள்ளாகும் கூலித் தொழிலாளி
அன்றொரு நாள் பகல் வேளையில் கொழும்பு 2 ஆம் குறுக்குத்தெருவுக்கு களப்பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அன்று போயா தினமாகையால் வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. ஆதலால் அங்கிருந்த இளைஞர்களுக்கு வீதிகள் விளையாட்டு மைதமானமாக தென்பட்டது போல் கிரிக்கெட்டில் மூழ்கியிருந்தனர். 2 ஆம் குறுக்குத் தெருவானது மக்களின் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, கிழங்கு, வெங்காயம் போன்ற பொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரத்தில் ஈடுபடுகின்ற பல வியாபாரத் தளங்களைக் கொண்டது. அதேபோலவே கேசர் வீதி ஆடை விற்பனைக்கும் 3 ஆம் குறுக்குத் தெரு மின்சார பொருட்களின் விற்பனைக்கும் 4 ஆம் குறுக்குத் தெரு இலத்திரனியல் பொருட்களின் விற்பனைக்கும் பிரசித்தமான இடங்களாக விளங்குகின்றன.
இந்த பரபரப்பான விற்பனை நிலையங்களே அன்று விடுமுறை தினமாகையால் அமைதியாகவிருந்தன. இருப்பினும் தெருவின் ஒரு கடையில் மாத்திரம் லொறியிலிருந்து மூட்டைகளை வேகமாக இறக்கி சுமந்து செல்லும் தொழிலாளர்களை காணமுடிந்தது. ஆனாலும் அவர்களோடு தொடர்பு கொள்வது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. அவர்கள் எங்களுக்குப் பதிலளிப்பதை விட தங்களது தொழிலிலேயே கவனமாக இருந்தார்கள். இருப்பினும் இடைப்பட்ட நேரத்தில் அங்கிருந்த ஒரு தொழிலாளியுடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது.
எங்களோட படிக்காச அதிகரிக்க வேணும். என்னோட வருமானத்துலேயே என் மகனோட படிப்பு செலவையும், குடும்ப செலவையும் கவனித்து வாறேன் என்கிறார் கொழும்பு 2 ஆம் குறுக்குத் தெருவில் மூடை தூக்கும் தொழிலாளியாகவிருக்கும் குமார் என்பவர்.
நான் கண்டியைச் சேர்ந்தவன். எனது மனைவி இறந்த பின்பு நானும் எனது மகனும் தனித்துப் போயிருந்தோம். என்னுடைய மகன் தரம் 5 இல் கல்வி கற்பதுடன் மச்சானின் பொறுப்பில் வளர்ந்து வருகிறான். கடந்த இரண்டு வருடமாக நான் மூடை சுமக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றேன். ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விதமாக எமது தொழிலுக்கு கூலி வழங்கப்படும். கீழ் தளத்திற்கு மூடை சுமந்தால் ஒரு மூடைக்கு 5 ரூபா கிடைக்கும். மேல் மாடிக்குச் சென்றால் 10 ரூபா கிடைக்கும். சில கடைகளில் ஒரு மூடைக்கு 7-8 ரூபா வரை வழங்கப்படும்.
ஒரு நாளைக்கு 2000 ரூபா வருமானம் பெற்றால் 1000 ரூபா சாப்பாடு மற்றும் இதர செலவுகளுக்கு போய்விடும். எங்களுக்கென்று எந்தவொரு காப்பீடுகளோ, இழப்பீடுகளோ வழங்கப்படுவதில்லை. மருத்துவ செலவுகளுக்குக் கூட எந்தவொரு வாய்ப்புகளும் வழங்கப்படுவதில்லை. ஏதாவது விஷேடமென்றால் முதலாளிகளிடம் கெஞ்சி ஒரு தொகைப் பணத்தைப் பெற்றுக் கொள்வோம். அதுவும் எமது சம்பளத்தில் கழித்துக் கொள்ளப்படும்.
எங்களுடைய தொழில் நிரந்தரமானதல்ல. எங்கள் உடல், உழைப்போடு ஒத்துப் போகும் வரையே இத்தொழிலும் எங்களுக்கு கைகொடுக்கும். இதில் பொலிஸ் கெடுபிடிகள் வேறு, இரவு வேளைகளில் சாப்பாடு வாங்கி வந்தால் கூட சோதனை செய்து, கைது செய்கிறார்கள். எங்களால் சுதந்திரமாகக் கூட நடமாடமுடியவில்லை. எங்களுடைய வாழ்வு செழிக்க வேண்டுமாயின் கூலிகள் அதிகரித்து தரப்பட வேண்டும். எங்களது கோரிக்கையை சகலரும் செவிமடுக்க வேண்டும் என்கிறார் குமார். பல எதிர்பார்ப்புகளோடு...
நாம் அங்கு பயணம் செய்திருந்த சந்தர்ப்பத்தில் 12 அடி நீளமுடைய கண்டெய்னரிலிருந்து 1030 மூடை அரிசியை 7 பேர் சேர்ந்து இறக்கிக் கொண்டிருந்தார்கள். இதன் மூலம் மூடைக்கு 5 ரூபா என்றபடி 5150 ரூபா கிடைக்கப்பெறும். இதனை 7 பேருக்கும் பகிர்ந்தளித்தால் ஒருவருக்கு 735 ரூபா என்றளவிலேயே கிடைக்கப்பெறும். இதில் இவர்களுடைய சாப்பாட்டுச் செலவுகளை கவனித்து மீதமாக எதுவுமே மிஞ்சப் போவதில்லை. இவ்வாறு கடுமையான உடல் உழைப்பை கொடுத்தும் அவர்களுக்கான நியாயமான கூலிகளும் சலுகைகளும் மறுக்கப்பட்டவர்களாகவே நெடுங்காலமாக இங்கு தொழில் செய்து வருகின்றனர். இதற்கு இவர்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்களாக இல்லாமையே பிரதான காரணமாகும்.
குமாருடனான உரையாடலை முடித்துக் கொண்டு தெருவோடு நகர்ந்து சென்று கொண்டிருக்கையில் ராஜு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கஷ்டப்பட்டு உழைத்தாலும் பலருக்கு அது பிரயோசனமாக இல்லை. ஒரு சிலர் குடும்பத்திற்காகவே உழைக்கின்றனர். ஒரு சிலர் குடிப்பதற்காகவே உழைக்கின்றனர் என்கின்றார் 15 வருடமாக மூடை சுமக்கும் தொழிலாளியாக கடமை புரியும் ராஜு. கண்டி, கலஹாவை வசிப்பிடமாகக் கொண்ட ராஜு மனைவியுடன் நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். மூன்று பெண் பிள்ளைகள் திருமணம் முடித்துச் சென்றுவிட்டார்கள். தற்போது மனைவி, மகன், மருமகளுக்காக இத் தொழில் மூலம் வருமானம் பெற்று வருகிறார்.
வியாபாரிகளே எங்களுக்கான கூலிகளைத் தருகின்றனர். 100 மூடைகளை 3 பேர் சேர்ந்து இறக்கினால் ஒருவருக்கு 135 ரூபா அளவில் கூலி கிடைக்கும். 100 துண்டு எடுத்தால் ஒரு துண்டுக்குப் 10 ரூபாப் படி 1000 ரூபா கிடைக்கும். இதனை மூன்று பேர் பகிர்ந்து கொள்வோம் என்கிறார். அத்தோடு ஒரு சிலர் ரோஸ்ட் பாணும் சீனியுமே சாப்பிடுகின்றார்கள். ஆனால் குடிப்பதற்காகவே உழைக்கின்றார்கள். பெரும்பாலும் இவர்கள் குடு பாவனையாளர்களாகவே இருக்கின்றனர். வியாபாரிகள் வந்தாலே எங்களுக்கு வருமானம் கிடைக்கும். இல்லையென்றால் அன்றைய பொழுது வீணாகவே கழியும். ஏதாவது விஷேடங்கள் என்றால் எந்த சலுகைகளும் வழங்கப்படாது. கெஞ்சிக் கேட்டாலும் கொடுத்தால் வைத்துக் கொள் என்பார்கள். ஆனால் எல்லோரும் அவ்வாறில்லை.
எத்தனை வருடங்கள் தொழில் செய்தாலும் எங்கள் மீது ஒரு சில முதலாளிகள் நம்பிக்கை கொள்வதில்லை. ஒரு சில இளைஞர்கள் வேலை செய்துவிட்டு பணத்தோடு வீட்டுக்குச் சென்று விடுவதால், சகலருக்கும் இழுக்கு ஏற்படுகின்றது. ஆனால் என்மீது பலர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கடையின் திறப்பைக் கூட என்னிடம் கொடுத்துச் செல்லும் முதலாளிகள் இருக்கின்றனர். எங்களுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபா முதல் 500 ரூபா வரை கிடைக்கும். அதிலேயே உணவு முதல் சகல தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும். சிலர் காலையிலிருந்தே குடித்துவிட்டு தொழில் செய்வார்கள்.
நான் இரவு மட்டுமே குடிப்பேன். இல்லையென்றால் எனக்குத் தொழில் செய்ய முடியாது. கைகள் நடுங்கத் தொடங்கும். நான் அதற்குப் பழகி விட்டேன். நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுக்கு இந்த தொழிலே கை கொடுக்கும். என்கின்றார் 55 வயதிலும் அயராது உழைக்கும் ராஜு.
இவ்வாறு மூடை தூக்கும் தொழிலாளிகளாக கடமை புரியும் ஒவ்வொருவரும் ஏதாவதொரு மனச் சுமைகளுடனும் புறக்கணிப்புகளுடனுமே வாழ்ந்து வருவதை அவதானிக்க முடிகிறது. இவர்களை வைத்து தங்களது சுமைகளை இறக்கி கொள்ளுகின்ற வியாபாரிகள், தொழிலாளர்களின் வாழ்க்கைச் சுமையை இறக்கிவைப்பதற்கு சிறிதளவேனும் பங்களிப்பு வழங்குவதில்லை. இதனால் இவர்கள் கூலிகளாகவே வாழ்க்கையைத் தொடங்கி கூலிகளாகவே வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். இவர்களுடைய உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் எவையும் கிடையாது. அவற்றை உருவாக்க எந்த முயற்சிகளையும் இவர்கள் மேற்கொள்ளவில்லை. அவ்வாறான அறிவுறுத்தல்களையும் இதுவரை யாரும் இவர்களுக்கு வழங்கவில்லை. இவர்கள் தனியார் துறை தொழிலாளர்கள் என்ற வரையறைக்குள்ளே உள்வாங்கப்படவில்லை என்பது முக்கியமானது.
இதே சந்தர்ப்பத்தில் உழைப்பால் உயர்ந்த பல தொழிலாளர்களுக்கு உழைப்பை வழங்குகின்ற தள்ளு வண்டிகளுக்குச் சொந்தக்காரரான செல்வம் ஐயாவை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பல வண்டில்களுக்குச் சொந்தக்காரரான இவர் புறக்கோட்டையில் வண்டி இழுத்து உழைக்கின்ற பலருக்கு முதலாளியாக இருக்கின்றார். கொழும்பு, சென்றல் வீதியில் அமைந்திருக்கின்ற அவருடைய வண்டி செய்யும் வேலைத் தளத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொண்ட அவர், தமது வேலைத்தளத்தையும் பெருமையோடு சுற்றிக் காட்டியிருந்தார்.
செல்வம் ஐயாவின் கடையானது ஆரம்பத்தில் 10 சதம் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது சுமார் 300 வண்டிகளுக்குச் சொந்தக்காரராக இருக்கின்றார். வண்டிச் சொந்தக்காரர்கள் பலர் சிதறிக் காணப்படுகின்றனர். அவர்களை ஒன்றிணைப்பது தொடர்பில் நான் புரிந்து கொண்டுள்ளேன். ஆனால் இத்துறையிலிருந்த பலர், ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த பலர் தற்போது உயிருடன் இல்லை. என்பது இவருடைய கவலையாக இருந்தது. நாளொன்றுக்கு ஒரு வண்டிக்கு 100 ரூபா என்ற அடிப்படையில் வாடகைக்கு விடுகின்றார். தொழிலாளர்கள் ஷிப்ட் அடிப்படையிலேயே தொழில் புரிகின்றனர். காலை 8-9 மணிவரை மனிங் சந்தையிலும் பிறகு 11 மணிவரை துணிக்கடைகளிலும் அதன் பின்பு அரிசி மற்றும் பலசரக்கு மொத்த விற்பனை நிலையங்களிலும் வேலை செய்கின்றனர்., வண்டி இழுப்பவர்கள் ஒரு நாளைக்கு 1000-5000 ரூபா வரையிலும் உழைக்கின்றனர். ஆனால் அவற்றை அவர்கள் மீதப்படுத்துவதில்லை. காலையில் மதுக்கடை திறந்தவுடனேயே குடிக்க ஆரம்பித்து விடுவார்கள். கஞ்சா, குடு போன்ற பழக்கமும் இருக்கிறது. ஒரு நாளைக்கு வண்டிக்கு 100 ரூபா வாடகை. சிலவேளைகளில் 60 ரூபா, 80 ரூபா என்றே தருவார்கள். அதையும் நான் வாங்கிக் கொள்வேன் என்றார் செல்வம் ஐயா.
வண்டி ஓட்டுவதென்பது இலகுவான விடயமல்ல. வியாபாரிகளை தெரிந்திருக்க வேண்டும். கடைகளை தெரிந்திருக்க வேண்டும். வண்டியை விட வண்டியில் ஏற்றிச் செல்லும் பொருட்களின் பெறுமதி அதிகம். நம்பிக்கைக்கே இங்கு முதலிடம். என்பது இவரது அறிவுரையாக இருக்கிறது. சைவம் குமார் என்பது இவருடைய இயற் பெயராகவிருந்தாலும் செல்வம் ஐயா என்றாலே எல்லோருக்கும் தெரியும். பரம்பரை பரம்பரையாகவே இவர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள். எங்களிடமே அதிகம் வண்டி இருக்கிறது. அதிகமான வேலைக் காரர்கள் எங்களின் வண்டிகளிலேயே வேலை செய்கின்றார்கள். ஒரு வண்டி செய்வதற்கு 35,000-40,000 ரூபா வரை செலவாகும். அந்த செலவைப் பெற்றுக் கொள்ள பல காலங்கள் செல்லலாம். இந்த வண்டி ஒருவரின் பலத்தால் இயங்குவது, இதற்கு அதிக காற்றுக் கொண்ட டயர்களையே நாங்கள் பாவிக்கின்றோம். இல்லையென்றால் இழுக்க முடியாது. ஒன்றரை தொன் வரையில் பொருட்களை வண்டியில் ஏற்றி ஒரு தனிமனிதன் இழுத்துச் செல்லும் வகையில் வண்டிகள் தரமானதாக இருக்க வேண்டும். என்கின்றார் 55 வயதுடைய செல்வம் ஐயா.
இவ்வாறு புறக்கோட்டையில் மூடை தூக்குபவர்களாகவும் வண்டி இழுப்பவர்களாகவும் ஏராளமானோர் தொழில் புரிகின்றனர். அவர்களில் குடும்பத்தைக் காப்பாற்ற பலர் உழைப்பதோடு ஒரு சிலர் குடிப்பதற்காகவே உழைப்பதாக அங்கு சந்தித்தவர்களூடாக அறியக் கூடியதாகவிருந்தது. இவர்கள் எந்தவித நிறுவன கட்டுப்பாட்டையோ, வேலை நேரத்தையோ கொண்டிராத சுதந்திர தொழிலாளிகள். ஆனால் எந்தவொரு காப்புறுதியோ, ஓய்வூதியமோ இவர்களுக்கு இல்லை. நினைத்த வரையும், உடல் ஏற்றுக் கொள்ளும் வரையும் இவர்கள் உழைக்கலாம் என்ற அடிப்படை மட்டுமே இவர்களுக்கு நிரந்தரமானதாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக