பியர் விலை குறைப்பு; இருகோட்டுத் தத்துவமா?
க.பிரசன்னா
2018 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டம் நாட்டு மக்களிடம் சலசலப்பை ஏற்படுத்திய வண்ணமே இன்னும் இருக்கின்றது. இலங்கையில் பியர் பாவனையை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளும் விலைக் குறைப்புகளுமே அதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. இலங்கையில் 40 வீதமானோரே மது அருந்துபவர்களாக இருப்பதாக தேசிய மதுசாரம் மற்றும் புகையிலை அதிகார சபைகள் தெரிவித்திருக்கின்றன. அதேபோல நாட்டிலுள்ள 35 வீதமான ஆண்கள் மிக அதிகமாக மதுவுக்கு அடிமையானவர்களாக இருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்தோடு நாட்டில் 6 வீதமானோர் மட்டுமே சட்டவிரோத மதுபானத்தை நுகர்பவர்களாக இருக்கின்றனர். சட்டவிரோத மதுபானங்கள் தொடர்பில் தேசியளவிலான புள்ளிவிபரங்கள் இல்லையென்றாலும் கூட தொழில்நுட்ப ரீதியான துணை தேசிய ஆய்வுகளில் சட்டவிரோத மதுபானம் அல்லது கசிப்பு நுகர்வானது 10 வீதத்துக்கும் குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில் மதுபாவனையை குறைக்கவும் சட்டவிரோத மது உற்பத்தியினை தடுக்கவும் பியர் விலைக் குறைப்புச் செய்யப்பட்டுள்ளதாக நியாயம் கற்பிக்கப்பட்டாலும் நாட்டிலுள்ள மதுப்பிரியர்களை கட்டுப்படுத்துவதற்கு இவை வழிவகுக்காது என்பதை இவர்கள் அறிவார்களா?
தற்போதைய சூழலில் சட்டவிரோத மதுபானங்களுக்கான விலையினை விடவும் பியரின் விலை குறைவாகவே இருக்கின்றது. அதேபோல சட்டவிரோத மதுபானங்களை பெற்றுக்கொள்வதை விடவும் பியரினை பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகள் சட்டவிரோத மதுபான உற்பத்தியை குறைப்பதற்கு உதவுவதாக அமைந்தாலும் மறுபுறம் பியரினை நுகர்வோரின் தொகை சடுதியாக அதிகரிக்கவே போகின்றது. எனவே அரசாங்கத்தின் கடமை மதுபாவனையை கட்டுப்படுத்துவதா? அல்லது செறிவு குறைந்த மதுபானங்களை விற்பனை செய்வதா? என்ற கேள்வி மேலெழுகின்றது. இலங்கையில் மது அருந்தாதோர் அமைப்பின் உப தலைவர் டாக்டர் அனுல விஜேசெந்தேரே, மது அருந்தும் ஆண்களில் 55 வீதத்துக்கும் அதிகமானோர் சட்டவிரோத மதுபானம் அல்லது கசிப்பு நுகர்வோராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதேவேளை நாட்டில் மொத்த சனத்தொகையில் 20 வீதமானோர் மட்டுமே மது அருந்துவதுடன், 80 வீதமானோர் எந்தவித மது வகைகளையும் பாவிக்காதவர்களாக இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து தெரியவருகின்றது.அவ்வாறெனில் பியருக்கான விலைக் குறைப்பானது மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு சார்பாகவா மேற்கொள்ளப்பட்டது? என்ற நிலையை தோற்றுவித்திருக்கின்றது. 2015 ஆம் ஆண்டில் மாத்திரம் அரசாங்கம் மதுசாரத்தின் மூலம் 145 பில்லியன்களை வருமானமாக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலைமையில் பியருக்கான விலை குறைக்கப்பட்டு ஏனைய மது வகைகளுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. இவ்விலை அதிகரிப்பானது மதுபாவனையாளர்களை குறைத்துவிடும் என்ற அரசின் கணக்கானது தப்புக் கணக்காகியுள்ளது. இவை மது உற்பத்தி நிறுவனங்களை மேலும் விரைவுபடுத்தும் ஒரு நடவடிக்கையாகவே இருக்கின்றன. இது மதுபானங்களுக்கான கிராக்கியை அதிகரித்திருக்கின்றது. இதனால் நுகர்வோர் சட்டவிரோத மதுபானங்களை நோக்கி நகரும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் சட்டவிரோத மதுவை மிகக் குறைந்த விலையிலும் துரிதமாகவும் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை காணப்படுவதால், சட்டவிரோத மதுபான உற்பத்தி முதலாளிகள் அதிகம் இலாபம் பெறும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதைவிடவும் கஞ்சா போன்ற போதைப்பொருட்களின் பாவனையை அதிகரிக்கவும் வழிவகை செய்துள்ளது.
அதேவேளை சுற்றுலாத் துறையினை விருத்தி செய்வதற்கும் இவ் உபாயங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமது நாட்டில் காணப்படும் மது பாவனையாளர்களின் உடலுக்குள் செல்லும் மதுசாரத்தின் அளவை குறைப்பதற்கே சட்டங்கள் மற்றும் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். அதனை செயற்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ள முறையில் வரி, விநியோகம் மற்றும் விலை என்பவற்றை செயற்படுத்த வேண்டும்.
1995 ஆம் ஆண்டு பியரிற்காக விதிக்கப்பட்டிருந்த வரி 50 வீதத்தினால் குறைந்தமையால் 1995 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மதுபாவனையானது அதிகரித்திருந்தது. 2006 ஆம் ஆண்டு புகையிலை மற்றும் மதுசாரம் மீதான கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டமையினால் 2007 ஆம் ஆண்டில் பியர் உட்பட ஏனைய மதுசார வகைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது. இதன் பின்னர் கடந்த 30 வருடங்களாக நடந்தேறிய யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர் மதுசார உற்பத்தி நிறுவனங்கள் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களிற்கு தமது வியாபாரத்தை விஸ்தரித்தமையினால் 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மதுபாவனையானது அதிகமாக பதிவாகியிருந்தது. உலகளவில் இலங்கையில் அதிக செறிவு கூடிய மதுபான வகைகள் காணப்படுவதாக அரசாங்கமே குறிப்பிட்டுள்ளது. தற்போது செறிவு கூடிய மதுபானம் மற்றும் பியர் உற்பத்தி அதிகூடியளவு இருக்கின்ற வேளையில் தனியாள் மதுசார பாவனை மிகவும் அதிகரித்துக் காணப்படுவதாக இலங்கை வைத்திய சங்கத்தின் மதுசாரம் மற்றும் புகையிலை கட்டுப்பாடு தொடர்பான விசேட குழுவின் அங்கத்தவர் வைத்தியர் சஜீவ ரணவீர குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சிறுவர்கள் அதிகளவில் மதுபானத்தை பெற்றுக் கொள்வதை தடுக்கும் முகமாக 2006 ஆம் ஆண்டு 21 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கே விற்பனை செய்யவேண்டுமென்ற சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
ஆனாலும் இன்று பாடசாலை மாணவர்கள் தமது விடுகைக் காலத்தின் போது மதுபான களியாட்டங்களில் சுதந்திரமாக ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது. இவை தொடர்பான செய்திகள் கடந்த காலங்களில் மிக அதிகமாக வெளியாகியிருந்தன. மதுக்கடைகளின் பிரதான இலக்காகவிருப்பது விற்பனை மாத்திரமே. அங்கு வயதெல்லைகள் அவதானிக்கப்படுவதில்லை. இவை நகர்ப்புறங்களில் இறுக்கமாக இருந்தாலும் கிராமம் மற்றும் தோட்டப்புறங்களில் இருக்கின்ற சட்டவிரோத மதுபான விற்பனை நிலையங்களில் தளர்வான போக்கினையே பெரிதும் அவதானிக்க முடிகின்றது. எனவே விலை அதிகரிப்பை காரணம் காட்டி மதுபாவனையை குறைத்துவிடலாம் என்று கூறுவது கொஞ்சம் முட்டாள்தனமானது தான். தற்போது 200 ரூபாவுக்கு ஒரு போத்தல் கசிப்பினை பெற்றுக்கொள்ளக் கூடியளவில் இருக்கின்றது. 2016 ஆம் ஆண்டு இலங்கையில் 5,405, 248.516 லீற்றர் தென்னஞ் சாராயமும் 6,299,334. 745 லீற்றர் கரும்புச்சாறு சாராயமும் 39,865, 251.675 லீற்றர் விசேட சாராயமும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், 68,521, 388.65 லீற்றர் சுத்தமான கள்ளும் 5,114,606.4 லீற்றர் ஸ்பிரிட்டும் 9,946,507.500 லீற்றர் போத்தல் கள்ளும் 8,704,378.475 லீற்றர் 5 வீதத்துக்கும் குறைந்த செறிவுடைய பியரும் 43,456,691.625 லீற்றர் 5 வீதத்துக்கும் அதிகமான செறிவுடைய பியரும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ( தகவல் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை, சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு) இலங்கையில் பாவனையிலிருக்கும் மதுசார வகையாக பியரில் உள்ளடங்கியிருக்கும் மதுசார சதவீதத்தின் அளவு ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாக இருப்பதுடன், இதன் காரணமாக பியர் அருந்துபவர்கள் துரித கதியில் செறிவு கூடிய மதுசார வகைகளுக்கு பழகுகின்றனர். 15 வயதிற்கும் மேற்பட்ட இலங்கையர்களில் 17 வீதமானோரே மதுபாவனையில் ஈடுபடுகின்றனர். இதன்படி 83 வீதமானோர் மதுபாவனையில் ஈடுபடுவதில்லை. ஏனைய நாடுகளை விடவும் மிக குறைவாக இலங்கையில் தனியாள் மதுபாவனை 3.7 லீற்றராகவிருக்கிறது. அமெரிக்காவில் இது 10.94 லீற்றராகவும் அவுஸ்திரேலியாவில் 11.94 லீற்றராகவும் காணப்படுகிறது. எனவே நாட்டின் சனத்தொகையில் 8 வீதமானோரே சட்டவிரோத மதுபாவனையில் ஈடுபடுவதுடன், 92 வீதமானோர் சட்ட ரீதியான மதுபாவனையிலேயே ஈடுபடுகின்றனர். (தகவல்: மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்) எனவே சட்டவிரோத மதுபாவனையை குறைக்க பியரின் விலையை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை.
இலங்கையின் தனியார் மதுசார பாவனை 3.7 லீற்றராகும். பியர் விலையை குறைப்பதை விடுத்து மதுசார வகைகளின் விலையை அதிகரிப்பதன் மூலம் பாவனையாளர்களின் கொள்வனவுத் திறனை குறைப்பதன் வாயிலாக பாவனையாளர்கள் மத்தியில் பாவனையை குறைக்க முடியும். இதனால் சட்டவிரோத மதுபாவனை அதிகரிக்காது. மதுசார பாவனையில் வீழ்ச்சியை ஏற்படுத்தவேண்டுமாயின், அதனை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளை அதிகரிப்பதை விடுத்து சட்டங்களை உபயோகப்படுத்தி சட்டவிரோதமான விற்பனை நிலையங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இதை விடுத்து பியருக்கான விலைக் குறைப்போ, மதுக் கடைகளை அதிகரிப்பதாலோ கசிப்பு உற்பத்தியை குறைத்துவிட முடியாது. எனவே இதற்கு சட்ட நடவடிக்கைகளே அவசியமாகும்.
சுற்றுலாப் பயணிகளை இலக்குவைத்து மது பாவனையை அதிகரிக்க வேண்டுமாயின், அதற்கு மாற்று வழிகளை கையாள வேண்டும். அதற்கென சுற்றுலாப் பிரதேசங்களை உருவாக்க வேண்டும். அதைவிடுத்து நாடு முழுவதும் மதுபாவனையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கக்கூடாது. மாறாக சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஒருபோதும் மதுவினால் தீர்மானிக்க முடியாது. 2018 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் மேற்படியான விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மதுவற்ற நாடு என்பது உலகளவில் சாத்தியமற்றதொன்றாகவே இருக்கின்றது. ஆனால் மதுபாவனையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டே வருகின்றன. இலங்கையில் வாழும் மக்களின் வாழ்க்கைச் செலவு கடுமையாக அதிகரித்திருக்கும் நிலையில், இவ்வாறான அறிவிப்புகள் தேவைதானா?
இவ்வாறான அறிவிப்புகள் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை எந்தளவுக்கு உயர்த்திச் செல்லும் என்பதை நிதியமைச்சரே விளங்கப்படுத்த வேண்டும். மக்களுடைய வாழ்க்கைச் சுமையை குறைக்கவும் அவர்களுடைய அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றவும் வரவு- செலவுத் திட்டத்தில் இடமளித்திருக்க வேண்டும். இம் முறை வரவு -செலவுத் திட்டத்தில் விலைக் குறைப்புச் செய்யப்பட்ட பொருட்கள், இன்னும் பல இடங்களில் பழைய விலைகளுக்கே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் மதுபான வகைகளுக்கான விலைகள் உடனடியாகவே அமுல்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் மக்களுக்கு எது அத்தியாவசியத் தேவை? என்பதை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக