கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

30 ஜனவரி, 2018

நீரில் கரைந்த உயிர்கள்
லக்கல, எட்டன்வல பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வெத்தாபெனி ஆற்றிற்கு அருகில் அடித்துச் செல்லப்பட்ட 8 பேரை பற்றிய தகவல்களை அங்கு வசிக்கும் 79 வயது வத்தேகெதர விஜேரத்ன என்பவர் வழங்கியிருந்தார். நாத்தாண்டிய பிரதேசத்திலிருந்து லக்கல பிரதேசத்துக்கு சுற்றுலாப்பயணம் சென்ற அப்பாவியான 8 பேரின் மரணம் தொடர்பாக ஏனையவர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்த வேளையிலேயே அவரும் தனது கவலையை பகிர்ந்து கொண்டார். நிதானத்தையும், அவதானத்தையும் முறையே ஒழுகியிருந்தால் மேற்படி அப்பாவி உயிர்கள் பறிபோயிருக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பலியானவர்களின் விபரம்
உலக மரபுரிமை வனமான நக்கில்ஸுக்கு அருகில் தெல்கமுவ ஓயா அமைந்திருக்கிறது. வெத்தாபெனி ஆறு எட்டன்வலவிலுள்ள பிரதேசமொன்றிலேயே அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் இரு நண்பர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியாகியிருந்தனர். இரு குடும்பங்களுமே நாத்தாண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரக் குடும்பங்களாகும். இவ்வாறு பலியானவர்களின் விபரம் வருமாறு; சுற்றுலா ஹோட்டலொன்றின் உரிமையாளரான கிங்ஸ்லி ரத்நாயக்க (40வயது), அவரின் இருமகள்களான ரத்நாயக்க முதியன்சலாகே சித்ரானி ரத்நாயக்க (12 வயது) மற்றும் ரத்நாயக்க முதியன்சலாகே ஹருணி தில்ஹாரா ரத்நாயக்க (4வயது), மாமியாரான மானாவிட்டகே சந்ரகாந்தி (59 வயது) மற்றும் மற்றைய குடும்ப உறுப்பினர்களான உதுவரகே ரவீந்திர வசந்த (38 வயது), அவரது மனைவியான ஜயருகா ஆராச்சிகே ரமணி தில்ருக்ஷி (37 வயது), அவர்களின் மகள்மாரான உதுவரகே கிருஷாணி வனிஷா (12 வயது), உதுவரகே இமாஷா விதுஷா (7 வயது) ஆகியோராவர். இறந்துபோன கிங்ஸ்லி ரத்நாயக்க என்ற வியாபாரி தெல்கமுவ ஓயாவில் வெத்தாபெனி ஆற்றுக்கு மேலே விசாலமான சுற்றுலா ஹோட்டலொன்றைக் கட்டிக் கொண்டிருந்தார். அவர் தன்னுடைய நண்பரோடு தான் கட்டிக் கொண்டிருந்த ஹொட்டலுக்குச் சென்றது நண்பரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகும். இந்த 8 பேரும் அடித்துச் செல்லப்படுவதை கண்முன்னே பார்த்துக் கொண்டிருந்த இறந்து போன கிங்ஸ்லி ரத்நாயக்கவின் மனைவியான துலீகா மாரசிங்க சம்பவத்தைப் பற்றி மேலும் தெரிவிக்கையில்;
இந்த பிரதேசத்தில் எனது கணவர் ஹோட்டலொன்றைக் கட்டிக் கொண்டிருக்கிறார். சம்பவத்துக்கு சில தினங்களுக்கு முன்னர் இங்கு வந்து வேலை நடைபெறுவதை பார்த்துவிட்டே சென்றார். எனது கணவரின் நண்பரின் பிறந்த நாள் வந்தது. ஹோட்டலின் ஒரு பகுதிக்குச் சென்று கொண்டாடுவோம் என அவர்கள் கூறினார்கள். அவர்களும் எங்கள் வீட்டுக்கு அருகாமையிலேயே வசிக்கின்றனர். நாங்கள் குளிக்க வரும்போது முழங்கால் அளவுக்குக் கூட தண்ணீர் இருக்கவில்லை. எனது சின்ன மகள் சற்று ஆழமான பகுதிக்கு முன்பே நீராடிக் கொண்டிருந்தாள். ஏனையவர்கள் சற்று தொலைவில் நீராடிக் கொண்டிருந்தார்கள். அவளின் செருப்பு நீரில் அடித்துச்செல்லப்பட்டது. அதை எடுக்கவே அவள் முயற்சி செய்தாள். நான் அங்கிருந்து அப்பாவிடம் அவரது செருப்புகளை கொடுப்பதற்காகச் சென்றேன். தண்ணீர் வேகமாக பாய்ந்து வருவதாக அப்பா என்னிடம் சொன்னார். நான் மகளை நோக்கி வேகமாகச் சென்றேன். என்னுடன் வந்த எல்லோரும் ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டு திணறிக் கொண்டிருந்தனர். நான் மெதுவாக கரைக்கு வாருங்கள் என சத்தமாகக் கத்தினேன். இருப்பினும் தண்ணீர் அதிகமாகிக் கொண்டே சென்றது. அவர்கள் பிடித்துக் கொண்டிருந்த டயர் உடைந்து போனது. ஒருவரையொருவர் இழுத்துக் கொண்டு அடித்துச் செல்லப்பட்டனர். எனது கணவர் அடித்து செல்லப்பட்ட பின்னர் ஒரு மரக்கட்டையை பிடித்துக் கொண்டு கரையை வந்துசேர மிகநேரமாக போராடிக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் இரும்புக் கம்பியொன்றை அவரிடம் நீட்டி கரைசேர்க்க முயற்சிகளை மேற்கொண்டனர். இரும்புக் கம்பியைத் தொட எத்தனிக்கும் போது கைநழுவி அடித்துச் செல்லப்பட்டார். எனது கணவரும் பிள்ளைகள் இருவரும் அம்மாவும் அடித்துச் செல்லப்பட்டனர். எங்களுடன் வந்த மற்றைய குடும்பத்தைச் சேர்ந்தவரும் அவரது மனைவியும் அவர்களது இரு பிள்ளைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவ்வாறே அவ்விடத்தில் பாலமொன்றை அமைக்கும் கொந்தராத்து கம்பனியின் ஊழியரான எச்.ஜீ.சந்ரபால தெரிவிக்கையில்; நான் பாலத்துக்கு மேலேயே வேலை செய்து கொண்டிருந்தேன். சின்னப் பிள்ளைகளும் ஏனையவர்களும் நாங்கள் அமைத்துக் கொண்டிருக்கும் பாலத்துக்கடியில் இருப்பதைக் கண்டேன். அவ்விடத்திற்கு நிறைய பேர் வருவார்கள் குளிப்பார்கள், பொழுதைக் கழிப்பார்கள், மது அருந்துவார்கள். அதனால் நாங்கள் பெரிதாக அவ்விடத்தைப் பார்ப்பதில்லை. இருப்பினும் அன்று மழையும் தூறிக்கொண்டே இருந்தது. தண்ணீர் அதிகமாவதைக் கண்டு அனைவரையும் கரைக்கு வருமாறு சத்தமாகச் சொன்னேன். சொல்லிக் கொண்டிருக்கும் போதே நீர் நிறைந்தது. பின்னர் ஒருவர் பின் ஒருவராக அடித்துச் செல்லப்பட்டனர். ஒரு பிள்ளையையாவது காப்பாற்றும் நோக்கில் பாலத்துக்கு அடியில் சென்றேன். இரு பிள்ளைகள் எனதருகில் அடித்துச் செல்லப்படும் போது பிடிக்க முயற்சி செய்தேன். ஆனால், என்னால் முடியவில்லை. நான் ஒரு நாளும் இவ்வாறான சம்பவங்களுக்கு முகம் கொடுத்ததில்லை. நினைக்கும் போது இன்னும் உடம்பு நடுங்குகிறது. ’இப்பகுதி ஆபத்தானது, திடீரென நீர் அதிகரிக்கும்’ என அறிவித்தல் பலகைகூட போடப்பட்டிருக்கவில்லை. அன்று அனைவராலும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அன்றைய தினம் 5 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் ஏனைய மூன்று பேரின் சடலங்களைத் தேடிய போது 4 வயது பிள்ளையொன்றின் சடலமே மீட்கப்பட்டது.
மறுநாள் காலை ஏழு மணிக்கு இரு சடலங்களைத் தேடும் பணியை ஆரம்பித்தனர். அவ்வேளையில் காலநிலையும் சீராகக் காணப்பட்டது. மேலும் அவர்கள் நீராடிக் கொண்டிருந்த இடத்திலிருந்து 750 மீற்றர் தூரம் வரையான கல்லொன்றுக்கு அடியில் சடலமொன்று காணப்படுவது எமக்குத் தென்பட்டது. மற்ற சடலம் இன்னும் சற்றுத் தொலைவில் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டது. அத்துடன் மீட்பு பணிகள் நிறைவடைந்தன. இவ்விடத்தில் உயிரிழந்த கிங்ஸ்லி ரத்நாயக்கவின் ஹோட்டலில் பணிபுரியும் மஹதுன் என அழைக்கப்படும் கே.எம்.பி.சமரவிக்ரம தெரிவிக்கையில்;
இவருடன் நான் 3 வருடங்களுக்கும் மேலாக வேலை செய்கின்றேன். இவரைப் போல் கருணையுள்ளம் படைத்தவரை நான் கண்டதில்லை. அவரின் பிள்ளைகளும் அவரைப் போலவே. கடந்த 3 ஆம் திகதி அவரும் அவரது மனைவியும் பிள்ளைகளும் மற்றும் சிலரும் ஹோட்டலுக்கு வந்தனர். நான் தான் சமைத்துக் கொடுத்தேன். அன்று பகல் அவரும் மனைவியும் பிள்ளைகளும் ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர். பகல் உணவு சமைக்கும் படி என்னிடம் தெரிவித்தார். அவர்கள் வரும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன் அவர்கள் வரவில்லை. பிறகுதான் தெரிந்து கொண்டேன் நீராடச் சென்றவர்கள் அடித்துச் செல்லப்பட்டார்கள் என்று. இனிமேல் அவரைப் போல் ஒருவரைக் காணமுடியாது.
இச்சம்பவத்தைப் பற்றி எட்டன்வல கிராமத்தில் வசிக்கும் 79 வயதுடைய வத்தே கெதர விஜேரத்ன என்பவர் இவ்வாறு தெரிவிக்கின்றார். ’ஊரிலுள்ளவன் சுடுகாட்டுக்கு பயப்படுவான்; வெளியிலிருந்து வருபவன் தண்ணீருக்குப் பயப்படுவான்’ என்றொரு பழமொழி உண்டு. அதேபோலத்தான் ஊரிலுள்ளவனுக்கு ஆற்றின் ஆழம், எங்கு சுழி உள்ளது, குழி உள்ளது என்று தெரியும். ஆனால், வெளியாளுக்கு இது பற்றித் தெரியாது. வெளியிலிருந்து வருபவர்கள் இவற்றை ஆராய்ந்த பிறகே ஆற்றில் குளிக்கச் செல்ல வேண்டும். எங்கள் ஊர் மிகவும் கஷ்டப் பிரதேசம். ஆனால் அழகான சூழலைக் கொண்ட பிரதேசம். கொழும்பிலிருந்து இங்கு வந்து எங்களது கிராமத்தில் காணிகளை கொள்வனவு செய்கின்றனர். இங்குள்ளவர்களுக்கு இப்பூமியின் பெறுமதி தெரியாவிட்டாலும் வெளியிலிருந்து வருபவர்களுக்கு இதுதான் சுதந்திரப் பிரதேசம். இங்கு ஹோட்டலமைப்பார்கள், குடிப்பார்கள், ஆட்டம் போடுவார்கள், கும்மாளம் அடிப்பார்கள் இவைதான் இக்கிராமத்தில் அரங்கேறுகின்றன. ஆங்காங்கு ஹோட்டல் அமைப்பதில் பிரயோசனம் இல்லை. இவ்வாறு சென்று உயிரை மாய்த்துக் கொள்வதானால் எதற்கு ஆடம்பரங்கள்? ஊரிலுள்ள எவரும் இதுவரை இந்த ஆற்றில் நீராடச் சென்று அடித்துச் செல்லப்படவில்லை. வெளியிலிருந்து பொழுதைக் கழிக்க வருபவர்களே இவ்வாறு இங்கு வந்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
இதேவேளை தும்பர நண்பர் சங்கத்தின் உறுப்பினரும் சூழலியலாளருமான நிமல் கனஹெர ஆராச்சி என்பவர் இச்சம்பவம் பற்றியும் தும்பர பிரதேசம் பற்றியும் பின்வருமாறு கூறுகிறார்; இந்த இடம் மட்டுமன்றி தும்பர பிரதேசம் முழுவதுமே இவ்வாறான சம்பவங்கள் நிகழ்கின்றன. யுத்தம் நடைபெற்ற நேரத்தில் யாரும் எங்கும் செல்வதில்லை. ஆனால், இப்போது எல்லோரும் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். இங்கு வருபவர்கள் அழகை ரசிப்பது மட்டுமல்லாமல் தங்கிச் செல்வதுமுண்டு. அதனால் இப்பிரதேசம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பிக் காணப்படும். ஆனால், இங்கு வருபவர்களை உறுதிப்படுத்தவோ, பாதுகாக்கவோ அவர்கள் எவ்விதத் தகவல்களையும் வழங்குவதில்லை. அதனால், எங்களால் சிலவேளைகளில் அவர்களை காப்பாற்ற முடியாமல் போகிறது. இவ்வாறான முறையான தகவல்கள் இல்லாதவிடத்து மென்மேலும் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேறுவதை தடுக்க முடியாமல் போகும். தும்பர வனாந்தரத்தில் அமைந்துள்ள தெல்கமுவ ஓயாவிற்கு லக்கல பொலிஸ் நிலைய வாழ்வாதார சங்கத்தின் பாதுகாப்பு கிடைக்கப் பெற்றுள்ளதால் இங்கு கடமையிலீடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறான பாரிய அனர்த்தங்களிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். எனவே, தெரியாத இடங்களுக்குச் செல்லும் நாம் இவ்வாறான இடங்களில் நீராடுவதை தவிர்த்துக் கொண்டால் எமது வாழ்வை மேலும் நீடிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக