கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

30 ஜனவரி, 2018

தெற்கை மிரட்டும் பாதாளக்குழு
இலங்கையில் நல்லாட்சி நிலவுவதாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டாலும் நாட்டில் இடம்பெறுகின்ற குற்றங்களை வைத்துப் பார்க்கும் போது அவ்வாறு எதுவும் தெரியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி அண்மையில் வெளியிட்ட தனது இலக்குகளில் பாரதூரமான குற்றச் செயல்களை மூன்றில் ஒரு வீதமாக குறைக்க வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெறுவதாக தெரியவில்லை. விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டதாக பெருமைபட்டுக் கொண்டாலும் மீட்டெடுக்கப்படாத பகுதிகள் இன்னும் அதிகமாக நாட்டில் காணப்படுகின்றன. அவை காலி ரத்கம, ஹிக்கடுவ, அம்பலாங்கொட, பலபிடிய, கொஸ்கொட, கரன்தெனிய, எல்பிடிய, படபொல, மீடியாகொட முதலான பிரதேசங்களாகும். இப்பிரதேசங்களில் நாட்டில் சட்டத்தில் இல்லாத தண்டனைகளே வழங்கப்படுகின்றது. அதாவது காட்டுச் சட்டங்களாகும். இப்பிரதேசச் சூழலில் யாரேனும் குற்றமிழைத்தால் நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்படுவதில்லை. மாறாக பாதாள குழுவினாலேயே சந்தேகநபர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. இவ்வாறு கொலை செய்வது ஒரு கிராமத்தையே மண்ணுக்குள் புதைக்கும் அளவுக்கு பெருகிக் கொண்டிருக்கிறது.
எது எப்படியிருப்பினும் நீண்ட காலத்துக்கு முன்னர் காலியில் சண்டித்தனம் செய்தது ரத்கம, பலபிடியவைச் சேர்ந்த பூஸ்ச என்பவராவார். இவர்கள் கைகலப்பிலேயே பெரும்பாலும் ஈடுபட்டார்கள். மோதல் உச்சகட்டத்துக்குச் சென்றால் கூரிய ஆயுதத்தினால் தாக்கிக் கொள்வார்கள். ஆனால், இப்பிரதேசங்களில் வாகன விபத்து ஏதும் ஏற்பட்டால் சாரதிகள் நேரடியாகவே பொலிஸ் நிலையத்துக்கே வாகனத்தைச் செலுத்திச் செல்வர். வாகன விபத்து ஏற்படும் பட்சத்தில் ரத்கம, பலபிடியவிலுள்ள மக்களால் தாக்கப்படுவோம் என்ற அச்சத்திலேயே இவ்வாறு செயற்படுகிறார்கள். ஒருவரின் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று கொண்டிருந்த முழுகிராமமுமே தற்போது ஒருவரை ஒருவர் முட்டிமோதி யுத்த பூமியாகவிருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தெற்கில் இடம் பெற்ற தாக்குதலில் குறிப்பிட்டு கூறப்பட்டவர்கள் சுஜி மற்றும் லொக்கு ஆகியோராவர். அவர்கள் இருவரினதும் காலத்தில் தினந்தோறும் அங்கு சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றன. கடந்த 29 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கும் அவர்களே பொறுப்பு. அன்று நடந்த சூட்டுச் சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் கொஸ்கொட ஊரகஸ்மங் ஹந்திய யுதபிடிய பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான 50 வயது நிரம்பிய ஜகமுனி அயேஷ் தனஞ்சய, 13 வயது நிரம்பிய ஜகமுனி துமிந்து ஷஷ்மித மற்றும் கொஸ்கொட மெனிக்கிராமத்தில் வசிக்கும் உக்வத்த ஆராச்சிகே கபிலரத்ன பெரேரா ஆகியோரே கொல்லப்பட்டனர். கடந்த 29 ஆம் திகதி அதிகாலை 3.40 மணியளவில் மகிந்த சொய்சாவின் வீட்டிற்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள், மகிந்த...... மகிந்த....... என அழைத்தனர். அவ்வேளை மகிந்தவின் மனைவி கதவை திறந்தாள். கதவு திறக்கப்பட்டவுடன் துப்பாக்கிகளுடன் இருவர் வீட்டுக்குள் பாய்ந்தனர். உள்ளே சென்ற அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த மகிந்த சொய்சாவைச் சுட்டனர். ஆயுததாரிகளின் அடுத்த குறியாகவிருந்தது மகிந்தவின் பிள்ளைகளே அதுவரையிலும் அவர்கள் இருவரும் அறையொன்றில் உறங்கிக் கொண்டே இருந்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் ஒரு பிள்ளை தப்பிக் கொண்டது. ஆயுததாரிகள் இருவரின் அடுத்த இலக்கு கபிலரத்ன பெரேராவின் வீடாகும். அவரின் வீட்டு முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டனர். பின்னர் கொஸ்கொட குருந்துகம்பியச பிரதேசத்தில் இருக்கும் வீடொன்றுக்குச் சென்றனர். அவ்வீட்டுத் தலைவர் அந்நேரம் வீட்டிலில்லை. இருந்தது மனைவியும் இரு பிள்ளைகளுமே, கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த ஆயுததாரிகள் வீட்டின் நாலாபக்கமும் சுட்டனர். அதில் 14 வயதுடைய பிள்ளையொன்று காயங்களுக்குள்ளானது. பிள்ளையின் தாய் ஏன் பிள்ளையை சுட்டுக் காயப்படுத்தினாய் என்று கேட்டதற்கு பதில் தராமல் தப்பிச் சென்றனர்.
கொல்லப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மகிந்த ராஜா டி சொய்சா ஒரு வியாபாரியாவார். அவர் காணி வாங்கி விற்கும் தொழிலை மேற்கொண்டு வந்தார். அவர் பலரிடம் முரண்பாடுகளை கொண்டிருந்தார். அவ்வாறே இறந்து போன கபிலரத்ன மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிள்ளையின் தந்தையும் தெற்கு பாதாளக் குழுவின் தலைவனான கொஸ்கொட சுஜியின் நெருங்கியவரெனவும் தெரிவிக்கப்பட்டது. இறந்துபோன சொய்சா சுஜியின் சித்தப்பாவாவார். இந்த எல்லா துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கும் பிரதான காரணம் கடந்த மேமாதம் 8 ஆம் திகதி வெலிபென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற தெற்கு பாதாளக் குழுவின் தாக்குதலேயாகும். இத்தாக்குதல் சம்பவம் கொஸ்கொட சுஜி மூலமே திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. லொக்கு இறந்து ஒரு வருடம் செல்வதற்கு முன்னரே சுஜியின் குழுவுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்படுமென கொஸ்கொட லொக்குவின் ஆட்களால் சூளுரைக்கப்பட்டிருந்தது. அதன் பிரதிபலனே கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமாகும். கொஸ்கொட சுஜி தற்போது துபாயில் வசிக்கிறார். சுஜி இல்லாதபோதே அவனுடைய சித்தப்பாவுக்கு மேற்படி சம்பவம் நடந்துள்ளது. சொய்சா சுஜியின் குழு உறுப்பினரென தெரிவிக்கப்படுகிறது.
லொக்குவின் குழுவைப்பற்றி சுஜிக்கு விபரங்களை தெரிவித்தமைக்காகவே கபிலரத்ன மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலை மேற்கொண்டது கொஸ்கொட லொக்குவின் இளைய சகோதரரான ருவன் சாமர அபேசேகர (24 வயது) மற்றும் லொக்குவின் நண்பனான கொஸ்கொட தாரக ஆகியோராவர். இவர்கள் மாகந்துர மதுஷின் அடியாட்கள் என தெரிவிக்கப்படுகிறது. மதுஷி சுஜியுடன் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை. மதுஷ் பாதாளக் குழுவின் தந்தையாவதற்கு தடுமாறிக் கொண்டிருப்பதில் சுஜிக்கு அவ்வளவாக விருப்பமில்லை. 33 வயதுடைய கொஸ்கொட சுஜி 2005 ஆம் ஆண்டே பாதாள குழுவில் அடியெடுத்து வைத்தான். 2005 ஜனவரி 19 ஆம் திகதி ரோயல் பீச் ஹொட்டலில் சமண் பெரேராவின் மைத்துனனை தாக்கிய குழுவிற்கு உதவி செய்தவாறே அவனும் அக்குழுவில் இணைந்து கொண்டான். அதிலிருந்து 2007 ஆம் ஆண்டு அவன் எஸ்.டி.எப்.நதுனுடைய கூட்டத்தோடு சேர்ந்து கொண்டான். கொஸ்கொட சுஜியின் மாமா மகள் எஸ்.டீ.எப்.நதுனையே திருமணம் முடித்துள்ளாள். அதன் மூலம் சுஜிக்கும் நதுனுக்குமிடையில் உறவுமுறை ஏற்பட்டது. இருப்பினும் 2007 ஆம் ஆண்டு நதுனோடு ஏற்பட்ட முறுகல் நிலையையடுத்து சுஜி அக்குழுவிலிருந்து விலகிக் கொண்டான்.
அதன் பிறகு தனியான படையொன்றை சுஜி அமைத்துக் கொண்டான். 2008 ஆம் ஆண்டு கஜமுதுவுடன் சுஜியும் மதவாச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டான். 2010 வரை அவன் சிறையிலடைக்கப்பட்டான். சிறையிலிருந்து வெளியே வந்த அவன் தெற்கு பாதாளக் குழுவுக்கு தலைவனானான். அதன் பிறகும் 2012 அக்டோபர் 29 ஆம் திகதி தீவிரவாத பிரிவின் கீழ் சுஜி கைது செய்யப்பட்டான். பிறகு 2015 டிசம்பர் 4 ஆம் திகதி மீண்டும் சிறையிலிருந்து வெளியே வந்தான். இதற்கிடைப்பட்ட காலத்தில் நல்ல உதவியாளர் ஒருவர் அவனுக்கு கிடைக்கப்பெற்றார். அவர் விடுதலை புலிகளின் உறுப்பினரொருவரான கெனடி ஹெவத் எழிலோனாவார். சுஜி தாக்குல்கள் பலவற்றை எழிலோனை தலைமையாகக் கொண்டே மேற்கொண்டான். கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் எழிலோன் கைது செய்யப்பட்டார். எழிலோன் கைது செய்யப்பட்டதும் சுஜியின் வேலைகளை மேற்கொண்டது மைக்கலாவார். மைக்கல், சுஜியின் நண்பனான ஊராகஹ சமிலவின் பெரியம்மாவின் இளைய மகனாவார். மைக்கலின் மூத்த சகோதரர் தாக்கப்பட்ட சம்பவத்தின் பழிவாங்கல் படலத்தை மைக்கல் சுஜியுடன் இணைந்து ஆரம்பித்தான். அதிலிருந்து இருவரும் சேர்ந்தே எல்லாவற்றையும் செய்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மைக்கல் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சுஜியின் இன்னொரு கையாளாக பொடி லெசி காணப்படுகிறார். பொடி, சுஜியின் பேச்சைக் கேட்டு ஹிக்கடுவ பிரதேச சபையின் உறுப்பினர் மனோஜ் மெண்டிஸை கொலை செய்தார். அது மட்டுமன்றி குருந்துவாவியிலுள்ள தாய், தந்தை மற்றும் பிள்ளையொன்றை தாக்கிய சம்பவமொன்றிலும் லெசி சம்பந்தப்பட்டுள்ளார். அதுவும் சுஜியின் பேச்சைக்கேட்டே நடத்தப்பட்டது. கடந்த வருடம் சுஜியின் இன்னுமொரு தாக்குதலாக கருதப்படுவது, வெளி நாட்டுப் பெண்னொருவரிடம் பணம் கேட்டும், அவர் தராத விடத்து அவரது கணவரான உள்நாட்டு இளைஞனை கொன்றமையாகும். இவ்வாறு 10இற்கும் மேற்பட்ட தாக்குதல்கள் சுஜியின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் வைராக்கியம் பெருகி எரிமலையொன்று வெடித்தாற் போன்று சுஜி வெளியே வந்தான். சுஜியின் சித்தப்பாவான சொய்சா மற்றும் மூன்று பேர் தாக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை இவர்களது 7 ஆம் நாள் சடங்கு முடிவதற்குள் முடித்துக் காட்டுவேனென சுஜி சபதமிட்டான். இதற்கேற்ப கடந்த 31 ஆம் திகதி அம்பலாங்கொட படபொல ஈரியகஹதொல பிரதேசத்தில் வசிக்கும் தந்தையும் பிள்ளைகள் மூன்றும் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு மேற்படி பழிதீர்க்கும் செயலென தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருப்பது கொஸ்கொட லொக்குவின் நண்பரும் அது போல கடந்த 29 ஆம் திகதி 3 பேர் இலக்காக்கப்பட்ட கொஸ்கொட தாரகவின் மாமா ஒருவர் சென்ற வாகனமேயாகும்.
கொஸ்கொட தாரக்க மற்றும் குழுவினர் கடந்த 29 ஆம் திகதி மேற்கொண்ட தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருப்பது தாரக்கவின் மாமாவினுடைய வீடும் சேர்த்தே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறையிலிருக்கும் லெசி, சுஜியின் பேச்சுக்கிணங்கவே மேற்படி தாரகவின் மாமாவை இலக்கு வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. லெசி சிறையிலிருந்து கொண்டு கொஸ்கொட சுஜியுடன் தொலைபேசி மூலம் தொடர்பை வைத்துக் கொண்டிருந்ததாகவே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். சுஜியின் பேச்சிற்கிணங்க எத்தனையோ தாக்குதல்களை பொடி லெசி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொடி லெசி கரன்தெனிய வாசியாவார். அவனின் தம்பியான ராஜு சிறைச் சாலையின் நிரந்தர உறுப்பினராகவே காணப்படுகிறார். அவர்களின் பாதாள சித்து விளையாட்டுக்கள் சிறையிலும் அரங்கேறுவதாக சில தகவல்களும் கசிந்துள்ளன. இவர்கள் தொலைபேசி மூலம் கள்ளத்தனமாக தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் வெளியில் இருந்து குற்றங்களை புரிவதைவிட சிறையிலிருந்து செய்வது மேலானதாக தென்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் கூட இப்பிரதேசத்தில் தாக்குதல்கள் இடம்பெறுமோ என்ற காரணத்தால் விசேட பொலிஸ் குழுவினர் கொஸ்கொட பிரதேசத்துக்கு காவலுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு இதுவரையான காலப்பகுதிக்குள் தாரகவின் தாய் உட்பட ஏனையோர் தங்களது வீட்டை விட்டு எங்கோ தலைமறைவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் என்ன நடக்குமென்பதை தெற்கு பாதாளக் குழுவினரே நிர்ணயிக்க வேண்டும்.

  • 2016 மார்ச் 28 ஆம் திகதி கோடிஸ்வரர் கே.எம்.டபள்யூ.பிரசன்ன அம்பலாங்கொடை பிரதேசத்தில் வைத்து தாக்குதலுக்குள்ளானார்.
  • 2016 ஜூலை 18 ஆம் திகதி அம்பலாங்கொடை பிரதேசத்தில் வியாபாரி அரலிய சரத் தாக்குதலுக்குள்ளானார்.
  • 2016 ஆகஸ்ட் 13 ஆம் திகதி காலி கிரிக்கெட் சங்க செயலாளர் பிரேமசிறி ஹெலம்பகே அம்பலாங்கொடையில் வைத்து தாக்குதலுக்கு இலக்கானார்.
  • 2016 டிசம்பர் வியாபாரப் பெண் ஒருவர் உட்பட அப்பெண்ணின் மகன் ஆகியோர் வியாபார நிலையத்தினுள் தாக்குதலுக்கு இலக்காகினர்.
  • 2016 டிசம்பர் 12 ஆம் திகதி மீடியாகொட பிரதேசத்தில் பழ வியாபாரியொருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  • ரத்கம், பலபிடிய, அம்பலாங்கொடை, கொஸ்கம பிரதேசங்களை ஆட்சி செய்வது பாதாளக் குழுவினரே.........
  • இலங்கையில் மீட்கப்படாத புதிய வலயம்.
  • பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 25 பாதாள உலக செயற்பாட்டாளர்கள் மற்றும் தலைவர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக