மது பாவனையே விபத்துக்கு காரணம்?
பஸ்ஸில் பயணிப்பது ஆடு,மாடுகளல்ல மனிதர்களே. எனவே மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்ஸை சோதனை செய்வது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பாகும். இவ்வாறான விபத்துகளுக்கு அவர்கள் கட்டாயம் பதில் சொல்லியாக வேண்டும். நாட்டின் ஜனாதிபதி இவ்வாறான சம்பவங்கள் பற்றி தேடிப்பார்க்க வேண்டும். அப்படியாயின் தினந்தோறும் பூமிக்கடியில் இவ்வாறான மனிதர்கள் புதையுறுவதை தவிர்க்க முடியாது. சிலாபம் தாண்டியதும் நடத்துனர் பஸ்ஸைச் செலுத்திச் சென்றார். அவன் பஸ்ஸை எடுத்ததிலிருந்து தனது வீரதீர செயல்களை காட்டிக் கொண்டு பஸ்ஸை ஓட்டினான். முன்னால் சென்ற ஆட்டோவை முந்திச் செல்ல முற்பட்ட வேளையே இவ்வனர்த்தம் ஏற்பட்டது.
இவை கடந்த 6 ஆம் திகதி புத்தளம் மதுரங்குளியில் ஏற்பட்ட பஸ் விபத்து தொடர்பான பதிவுகளாகும். அன்று நவம்பர் 6 ஆம் திகதி, வழித்தட இலக்கம் 87, கொழும்பு-யாழ்ப்பாணம் பயணிகள் பஸ்ஸான ND 8501 என்ற இலக்கத்தையுடைய தனியார் பஸ் கொழும்பிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பயணத்தின் ஆரம்பத்திலேயே எதிர்பார்த்த ஆசன பூர்த்திகளுடன் மக்கள் பஸ்ஸில் அமர்ந்திருந்த அதே நேரம் அவர்களில் அதிகமானோரின் எதிர்பார்ப்பானது கொழும்பு-புத்தளம் பிரதான வீதியூடாக யாழ்ப்பாணம் செல்வதாகும். காலை கொழும்பிலிருந்து பயணத்தை ஆரம்பித்த ND 8501 பஸ், புத்தளம் மதுரங்குளி பிரதேசத்தை அண்மிப்பது காலை 7.50 மணியளவிலாகும். அதுவரையிலும் பஸ் ஆசன அளவுக்கு அதாவது 60 பேர் வரையில் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் அதிகமானோர் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களாவர். நிறையபேர் இந்த பஸ்ஸில் பயணிப்பது (ND 8501) ,தமது உயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்காகும். அதாவது அவ்வழியூடாகச் செல்லும் பஸ்களில் இந்த தனியார் பஸ்ஸே அதிக வேகத்துடன் செல்லாது பயணிக்கும் பஸ்ஸாகும். இதன் காரணமாகவே சிலர் தமது அன்றாட தேவைக்காக இந்த பஸ்ஸை பயன்படுத்தியுள்ளனர். பிரதேச மக்களின் கருத்துப்படி கொழும்பு-புத்தளம் வீதியில் பயணிக்கும் (பறக்கும்) பஸ்களிலேயே இந்த ND 8501 பஸ் மட்டுமே அதிக வேகமாக பயணிக்காமைக்கான முதலாவது இடத்தைத் தட்டிச் சென்றுள்ளது.
அன்று சுமார் 60 பேரை சுமந்து கொண்டு அன்றைய தினத்தை மிகவும் உற்சாகத்துடன் பறக்கத் தொடங்கிய குறித்த பஸ்ஸானது, தூரப்பயணங்களை மேற்கொள்வோரையே அதிகமாகக் கொண்டிருந்தது. அதுவரையிலும் அதிகமானோர் ஆழ்ந்த உறக்கத்திலேயே இருந்தனர். அதாவது கொழும்பிலிருந்து தூர இடங்களுக்குச் செல்வோரே குறித்த பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் புத்தளம் வரை தமது பயணத்தை முடித்துக் கொள்பவர்களாக இருந்தனர். மணித்தியாலத்துக்கு 100 கி.மீ வேகத்தில் பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி தனது வீர விளையாட்டுக்களை காட்டிக் கொண்டே பஸ்ஸை செலுத்திச் சென்றனர். சாரதி ஒருவருக்கு இருக்க வேண்டிய எந்தவொரு குணாதிசயங்களும் இல்லாமலேயே குறித்த பஸ் சாரதி பஸ்ஸைச் செலுத்தியுள்ளார். குறித்த பஸ் 7.50 மணியை அண்மித்துள்ளது. பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த குறித்த பஸ்ஸுக்கு முன்பாக முச்சக்கர வண்டியொன்று சென்று கொண்டிருந்தது. எப்படியாயினும் அந்த ஆட்டோவை முந்திச் செல்ல வேண்டுமென்ற நோக்கில் குறித்த பஸ் சாரதி விதிமுறைகளை மீறி தனிக்கோட்டின் வழியாக ஆட்டோவை முந்திச் செல்வதற்காக பஸ்ஸை திருப்பியது மாத்திரமே, ஆட்டோவுடன் மோதியது. ஆட்டோவுடன் மோதிய பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது. அச்சந்தர்ப்பத்தில் பஸ்ஸுக்குள் இருந்த பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தனர். மரணவோலம் இடுவதே அவர்களால் முடியுமாகவிருந்தது. கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகிலுள்ள பாலத்துடன் மோதிய சத்தமும் அதன் பிறகு பாலத்திலுள்ள தூண்கள் வரை உடைந்து விழும் சத்தமும் அவ்விடத்திலேயே பஸ் தடம்புரண்டுள்ளமையையும் பயணிகள் தெரிந்து கொண்டது பல நிமிடங்களுக்குப் பிறகே.
மேற்படி பஸ் விபத்துக்குள்ளான பின்பு மதுரங்குளி பிரதேசத்துக்கு எமன் வந்ததாகவே தெரிந்தது. 10 ஆம் இலக்கத் தூண் பாலத்துக்கருகே பாரிய சத்தத்துடன் ஏற்பட்ட மேற்படி விபத்துச் சம்பவத்தை அங்கு கூடிய பொதுமக்களால் எங்குமே காணமுடியாத காட்சியாக காணமுடிந்தது. பஸ்ஸின் சில்லுகள் மேற்புறமாகக் காணப்பட்டன. அதற்குள் மரணவோலம் எழுப்பியவாறு சிலரும் பஸ்ஸிலிருந்து வெளியே வர முயற்சிக்கும் ஒரு சிலருமாக காணக்கூடியதாகவிருந்தது. இன்னும் சிலர் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிக் கொண்டிருந்ததையும் காணமுடிந்தது. பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ள பஸ்ஸில் இருந்த பயணிகளை மீட்பது பிரதேச மக்களுக்கு பாரிய போராட்டமாகவே இருந்தது. அதன் பிறகே பஸ்ஸுக்குள் இருந்த பிரயாணிகளை மீட்கும் வேலை ஆரம்பமானது. பொது மக்களினதும் பிரதேச மக்களினதும் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட மேற்படி மீட்பு பணியின் இறுதியில் பொலிஸாரும் இணைந்து கொண்டமையினால் மீட்புப் பணிகள் இலகுவாக அமைந்தன. அலவாங்கு மற்றும் இரதப் பொருட்களுடன் பஸ்விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த பிரதேச மக்கள் பலரை பாரிய காயங்களுடனேயே மீட்டனர். மேலும் சிலர் சிறுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இக்கோர சம்பவத்தில் ஸ்தலத்திலேயே 5 பேர் மரணமடைந்துள்ளனர். அவர்களில் 3 ஆண்களும், 2 பெண்களும் அடங்குவர். 44 பேர் காயமடைந்தனர், காயமடைந்தவர்கள் புத்தளம், சிலாபம் மற்றும் கொழும்பு பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அனுமதிக்கப்பட்டவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் மூலம் அறியக்கிடைத்தது. இறுதியாக 7 பேர் மேற்படி சம்பவத்தால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கத்தது. மேலும் பெருமளவானோர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். எனவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இப்படியிருக்க குறித்த பஸ் சாரதியும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சாரதி அன்று ஏதேனுமொரு மதுவை அருந்தியிருக்கலாமென தாம்
சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் அம்பாந்தோட்டையில் வசித்த அஸ்லாம் பாத்திமா சாஜிதா (18 வயது), படல்தன இறக்குவானையில் வசித்த சாலிஹனிபா மொஹமட் இம்ரான்கான் (22 வயது), சிராஜ்நகர் கந்தலேயில் வசிக்கும் செட்டிக்குளம் பிரதேசசபை காரியாலயத்தின் தொழிநுட்ப அதிகாரியொருவர் (22 வயது), கட்டுகெந்த தங்கொட்டுவவில் வசிக்கும் தசநாயககே திலிப் தர்ஷன் எண்டன் (33 வயது), வெலகம்பிட்டி ஜாஎலவில் வசிக்கும் பெதும் பிரதீபா நாராயணம் (33 வயது), வெலகம்பிட்டி ஜாஎலவில் வசிக்கும் ரஞ்சனி மெராயா (63 வயது), இந்தியா சுபாஷ் நகரில் வசித்த ஆறுமுகப்பாண்டி (42 வயது) என்போரே இவ்விபத்தில் உயிரிழந்தவர்களாக இருக்கின்றனர்.
எமது நாட்டில் விபத்துச் சம்பவங்கள் சாதாரணமாகிவிட்டன. மனிதனின் உயிர் மதிக்கப்படுவதில்லை. ஒரு சாரதியின் அசமந்தப் போக்கினால் ஏற்படும் விபத்தில் ஒரு நாளைக்கு 10 பேர் தங்கள் உயிரை இழக்கின்றனர். இலங்கையில் 2006 இலிருந்து வருடமொன்றுக்கு 35,000 விபத்துச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. 31/2 மணித்தியாலத்துக்கு ஒருமுறை ஒருவர் விபத்தால் மரணிக்கும் நிலை காணப்படுகின்றது. மனித வாழ்க்கை மதிக்கப்படுவதில்லை. மதுரங்குளியில் மட்டுமல்லாது ஏனைய பிரதேசங்களிலும் வெவ்வேறு விதமான விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதன் மூலம் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. இவை ஏற்படுவதற்கு பிரதான காரணம், ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மதிக்காமையேயாகும். எவ்வாறான விபத்துக்களில் நாம் சிக்கிக்கொண்டு எமது எலும்புகளை முறித்துக் கொள்ளப் போகிறோமோ என்ற எண்ணத்திலேயே எமது பயணங்களை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. கடந்த 6 ஆம் திகதி மதுரங்குளியில் ஏற்பட்ட விபரீதச் சம்பவம் முழு நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தது. இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட அதிகாரிகளினதும் நிறுவனங்களினதும் பொறுப்பாகும். அவற்றின் மூலமே ஓரளவிலாவது இவ்வாறான சம்பவங்களைத் தடுக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக