கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

22 நவம்பர், 2017

வெப்பமும் நீரும்
சனா
உலகளவில் ஏற்பட்டு வரும் இயற்கை மாற்றங்கள் பூமி மீதான நெருக்கடிகளை அதிகரித்துள்ளன. அந்நெருக்கடிகள் உயிர்களை காவுகொள்ளுமளவுக்கு வளர்ச்சி பெற்றிருப்பதே பாரிய சவாலாக இருக்கின்றது. இதன் ஒருபகுதியாகவே வெப்பமுயர்வும் அதன்பால் ஏற்பட்டிருக்கின்ற நீர்ப்பற்றாக்குறையும் இருக்கின்றன. இலங்கையை பொறுத்தவரையில் கடந்த சில மாதங்களாக நிலவி வருகின்ற வறட்சி காலநிலையால் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான நீரின் தேவையில் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் மின்சார உற்பத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இலங்கையில் வருகின்ற நாட்களில் கடுமையான வெப்பசூழ்நிலை காணப்படுமென காலநிலை திணைக்களத்தின் இயக்குநர் ஏ.கே. கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனால் இலங்கையர்கள் அதிகமான பாதிப்பினை எதிர்நோக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்துக்கு சார்பாக மானிட நடவடிக்கைகள் அமைந்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. இதன்படி வரும் தினங்களில் வெப்பமானது 38.8 பாகை செல்ஸியஸுக்கும் அதிகமாக காணப்படுமெனவும் இந்நிலையானது இம்மாதம் மத்தியில் எதிர்பார்க்கப்படும் தென்மேற்கு பருவமழை வரை நீடிக்கலாமெனவும் கூறப்பட்டுள்ளது. இவ்வெப்பமானது தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வெப்பக்காற்றாக மாறுவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பலமான, ஈரலிப்பற்ற, வெப்பமான காற்றின் விளைவே வெப்ப அதிகரிப்புக்கு காரணமாக இருக்கின்றது. இந்நிலையானது 7 -25 நாட்கள் வரை நீடிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே இவற்றிலிருந்து மக்கள் விடுபடுவதற்கு அவசர, அவசியமாக தற்காப்பு நிலைமைகளை கைக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மேலும் நீரை சிக்கனமாக பயன்படுத்துவதோடு வீண்விரயம் ஏற்படாமலும் தவிர்ப்பதால் வெப்ப நிலைமைகளை ஓரளவு சீரமைத்துக் கொள்ள முடியும். இதன்படி சராசரியாக வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் வெப்பமானது 3 -4 பாகை செல்ஸியஸாக அதிகரிக்குமெனவும் கூறப்பட்டுள்ளது. கடந்தவாரம் திருகோணமலை மற்றும் பொலனறுவையில் அதிகபட்ச வெப்பமாக 38.8 பாகை செல்ஸியஸ் பதிவாகியிருந்தது. மிகக்குறைந்த வெப்பநிலைச் சாதனையாக நுவரெலியாவில் 10.2 பாகை செல்ஸியஸ் பதிவாகியிருந்தது. இலங்கையில் தற்போது வெப்பச்சுட்டெண்ணானது 38 பாகை செல்ஸியஸாகவும் ஈரப்பதன் மட்டமானது 67 வீதமாகவும் காணப்படுகின்றது. இந்த வெப்பச் சுட்öண்ணானது, தற்போது வளியில் காணப்படுகின்ற ஈரப்பதனுடன் தொடர்புடைய அளவீடாக காணப்படுகிறது. இதன்படி தற்போது மிகவும் ஆபத்தான மட்டத்தினை இலங்கை எதிர்நோக்கியிருக்கிறது.
இந்த வெப்பச் சுட்டெண்ணானது 27 பாகை செல்ஸியஸ் தொடக்கம் 32 பாகை செல்சியஸ் வரை காணப்படுமாயின் எச்சரிக்கையாகவும் 32 பாகை செல்ஸியஸ் முதல் 41 பாகை செல்ஸியஸ் வரை காணப்படுமாயின் மோசமான எச்சரிக்கையாகவும் 41 பாகை செல்ஸியஸ் முதல் 54 பாகை செல்ஸியஸ் வரை காணப்படுமாயின் அது ஆபத்தானதாகும். இதுவே 54 பாகை செல்ஸியஸுக்கு மேற்பட்டு காணப்படுமாயின் அது உடனடியாக தோற்றுவிக்கக்கூடிய வெப்ப பக்கவாதத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். இதனால் பாடசாலைகளில் வெளிக்களச் செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் காற்றோற்ற வசதியுள்ள வகுப்பறைகளில் இருக்கும்படியும் கல்வியமைச்சு மாணவர்களுக்கு அறிவித்துள்ளது.
வெப்பநிலை மற்றும் ஈரப்பதன் என்பன உடலில் இயற்கையான குளிர்வு தன்மைக்கும் வியர்வை ஆவியாகாமலும் குறைக்கின்றது. மிகச் சிறியோர் மற்றும் வயதானோர் வெப்ப அழுத்தத்தால் மிக இலகுவாக பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பொதுச் சிகிச்சை மற்றும் உளவள ஆலோசகர் டாக்டர் ஏ.எச்.வி. பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கடுமையான வெப்பம் தொடர்ந்தும் நீடித்தால் வெப்ப பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் வெப்பத்துடன் தொடர்புடைய தீவிரமற்ற நோய்களான வெப்ப சுளுக்கு, வெப்ப மயக்கம் மற்றும் வெப்ப களைப்பு என்பன வெப்பபக்கவாதத்தை தோற்றுவிக்கக்கூடிய காரணிகளாக இருக்கின்றன.
இந்த வெப்பபக்கவாதமானது வெப்பத்துடன் தொடர்புடைய நோய்களிலிருந்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமென்பதுடன் உடல் வெப்பநிலையானது 41.1 பாகை செல்ஸியஸுக்கும் அதிகமானாலும் ஏற்படும். எனவே இவற்றை தடுப்பதற்கு சாதாரணமாக உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்ப்பதுடன் நேரடியான சூரிய ஒளியில் கடுமையான உடலியல் தொழிற்பாடுகளையும் தவிர்த்து கொள்ளுதல் வேண்டும். அத்தோடு கடும் நிறமற்ற பானங்களை அருந்துதல், வெப்பத்துக்கெதிரான சன்கிளாஸ்களை பயன்படுத்தல், வெளிவேலைகளின் போது சூரிய ஒளி திரைகளை பயன்படுத்தல், மதுசாரம், கொபைன் கலந்த பானங்களை தவிர்த்தல், வெளிவேலைகளின் போது போதிய ஓய்வெடுத்தல், குளிர்ந்த நீரில் நீராடுதல், இறுக்கமற்ற, கடும் நிறமற்ற, பாரமற்ற உடைகளை அணிதல், குடைகளை பாவித்தல் என்பவற்றின் மூலம் வெப்பநோய்களை ஓரளவுக்கு தவிர்த்துக் கொள்ள முடியும்.
கடந்த வாரம் திருகோணமலையில் நீடித்த உயர்ந்த பட்ச வெப்பம் காரணமாக நோயாளர்களின் அனுமதி 10 வீதத்தால் அதிகரித்திருப்பதாக திருகோணமலை வைத்தியசாலையின் பொது முகாமையாளர் டாக்டர் அனுஷியா ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மத்தியதர வயதினைச் சேர்ந்தவர்களே உடலில் நீர்ச்சத்தின்மை, வெப்ப சொறி, மற்றும் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோலவே யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கும் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன் ஒவ்வொரு நாளும் 40 -50 வரையான நோயாளர்கள் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக வைத்தியசாலையின் இயக்குனர் டப்ளியு.கே.விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு அனுமதிக்கப்படும் சிறுவர்களில் பெரும்பாலனோர் உடலில் நீர்சத்து குறைபாட்டுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
நீர் பற்றாக்குறை
கடுமையாக அதிகரிக்கும் வெப்பத்தினால் வெப்பத்துடன் தொடர்புடைய நோய்கள் மாத்திரம் மனிதர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதில்லை. மாறாக குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளுக்கான நீர் பற்றாக்குறை , தட்டுப்பாடு என்பனவும் இக்காலப் பகுதியில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. குடிநீர், விவசாயம், மின்சாரம் என்பவற்றுக்கு நீர்வளத்தினை பெரிதும் எதிர்பார்த்தே இலங்கை இருக்கின்றது. ஆனால் அவற்றை முகாமைத்துவம் செய்வதிலுள்ள மோசமான திட்டங்களே பெரும்பாலான நீருடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றன. உலகளவில் 2030 ஆம் ஆண்டு நீர்விநியோகம் மற்றும் தட்டுப்பாடு 40 வீதமாக அதிகரிக்குமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நிலத்துக்கு கீழுள்ள நீரை பயன்படுத்தியே விவசாயம், மின்உற்பத்தி மற்றும் வளர்ந்துவரும் சனத்தொகையினர் (ஆசியாவிலுள்ள நகர்ப்புறங்களில் தினந்தோறும் 120,000 பேர் புதிதாக இணைகின்றனர்) பயன்படுத்துகின்றனர். நிலத்தடி நீர்நிலைகளில் இருந்தே உலகில் 30 வீதமான சுத்தமான நீர் பெறப்படுகின்றது. 2050 இல் ஆசியாவின் சனத்தொகை 25 வீதத்தால் அதிகரித்து 5 பில்லியன்களாக அதிகரிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. கடந்த மாதங்களில் இலங்கையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை உதவியாக வழங்கியிருந்தன. நீர் வளம் நிரம்பப்பெற்ற இலங்கையிலேயே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது வெப்பத்தின் கொடூர தன்மையை எடுத்து காட்டுகின்றது.
மேலும் இலங்கையிலுள்ள பெரும்பாலான நீர்நிலைகள் மாசடைந்த சூழ்நிலையிலே காணப்படுகின்றன. வடமாகாணத்திலுள்ள நிலத்தடி நீரினை பயன்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்றது. அம்பாறை, திருகோணமலை, பொலனறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை அறியமுடிகிறது. தற்போது அதிகரித்து வருகின்ற வெப்பத்தை தணிப்பதற்கு ஒருநாளைக்கு சராசரியாக ஒருநபர் மூன்று லீற்றர் தண்ணீரை அருந்தவேண்டிய சூழலில் நீருக்கான தட்டுப்பாடு பாதிப்பை ஏற்படுத்துமென்பதால் நீரை வீண்விரயம் செய்யாமல் , சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது சகலரினதும் கடமையாக இருக்கின்றது.
அத்தோடு இலங்கையில் நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகிலுள்ள நீரேந்து நிலைகளின் நீர்மட்டம் கடந்த 10 வருடங்களின் பின்னர் 31 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடத்தில் இந்த நீரேந்து பகுதிகளின் நீர்மட்டம் 75 சதவீதமாக காணப்பட்டதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்திருக்கிறது. எனவே எதிர்வரும் பருவமழை பெய்யும் வரையும் நீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் கடுமையான வெப்பமானது பொதுமக்களுக்கு வெப்பம் சார்ந்த நோய்களை ஏற்படுத்துமென குறிப்பிட்டிருப்பதால் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பெரியோர் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிறந்த உணவு நடைமுறைகள், நீர்சிக்கனம் மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கோடை கால வெப்பத்தினை ஓரளவு தணித்துக் கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக