க. பிரசன்னா
வயோதிபம் என்பது ஒரு குறையல்ல. அது இயற்கையின் நியதி. ஆனால் பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்ற சமூகம், முதியோரின் சனத்தொகை அதிகரிப்பால் அதிகம் பதற்றம் கொண்டுள்ளது. இலங்கை போன்ற இலவச சுகாதார வசதிகளை வழங்கும் மற்றும் குறைகளை கொண்டிருக்கும் நாடுகளுக்கு இன்னும் தலையிடியை ஏற்படுத்தியிருப்பதாகவே கருதிக்கொள்ள வேண்டியிருக்கிறது. முதியோர்களின் சனத்தொகை அதிகரிப்பு தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் அது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதற்காக முதியோரை நாட்டை விட்டு வெளியேற்றவேண்டுமென்பது அர்த்தமல்ல. அவர்களின் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பேணுவதே சகலவற்றுக்குமான ஒரே வழியாக பார்க்கப்படுகின்றது.
இந்நாட்டை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றியவர்களில் அன்றைய இளைஞர்களாகவிருந்த இன்றைய முதியோர்களின் பங்கு அளப்பரியதாகும். அவர்கள் உருவாக்கிய சூழலிலேயே நாம் தற்போது சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். எனவே முதியோரின் தேவைகளை நிறைவு செய்வது காலத்தின் தேவையாகவே இருக்கிறது. முதியோர் சனத்தொகை அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் துரித அதிகரிப்பை கொண்ட நாடாக இலங்கை இருக்கின்றது. இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டோரின் சனத்தொகையானது 2021 இல் 12.5 வீதத்திலிருந்து 16.7 வீதமாக அதிகரிக்குமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
முதியோரின் அதிகரிப்பு தொடர்பில் கடந்தகால தரவுகளை நோக்கினால் அதே காலப்பகுதியில் வேலையற்ற இளைஞர் தொகையும் அதிகரித்திருக்கிறது. இதனால் வாழ்க்கைச் செலவினம் கடுமையான அதிகரிப்பைக் கண்டுள்ளது. இவை நாட்டினுடைய பொருளாதாரத்திலும் பாரிய தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது. வயோதிபரின் அதிகரிப்பானது ஓய்வூதிய கொடுப்பனவை துரிதமாக அதிகரித்திருக்கிறது. சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு உதவிகளும் அதிகரித்திருக்கின்றன. எனவே இவ்வாறான சவால்மிக்க இலக்கை நெருக்கடியில்லாமல் சாதகமாக்கிக் கொள்வதற்கு இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டியுள்ளது. ஆனால் அந்த இலக்கில் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் மெச்சும்படியாக இல்லை.
கிழக்கில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வேலையற்ற பட்டதாரிகளின் தொடர் போராட்டம் சிறந்த முன்னுதாரணமாக அமையும். நல்லாட்சி அரசாங்கத்தின் வாக்குறுதிகளில் ஒன்றான 10 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் 2 வருடகால ஆட்சி நிறைவின் பின்னும் சாதகமான பதிலை தரவில்லை. எனவே இந்நிலை நீண்டு செல்லுமாயின் முதியோரின் சனத்தொகை பெருக்கம் இலங்கைக்கு பொருளாதார ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இலங்கை புள்ளிவிபர திணைக்களத்தின் தரவுகளின் படி இலங்கையில் 2002 ஆம் ஆண்டு 60 வயதுக்கு மேற்பட்டோரின் அதிகரிப்பானது 9.2 வீதமாக காணப்பட்ட நிலையில் 2012 ஆம் ஆண்டு அத்தொகையானது 12.4 வீதமாக (2,520,573) வளர்ச்சி பெற்றிருக்கின்றது. இந்நிலைமையானது 2041 இல் இலங்கைக் குடிமக்களில் 4 இல் ஒருவர் 60 வயதிற்கும் மேற்பட்டவராக இருப்பதற்கான சாத்தியமிருப்பதாக உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆசியாவில் இலங்கையானது முதியோரின் சனத்தொகை அதிகரித்து வரும் முக்கிய நாடாக இருக்கின்றது.
இலங்கையில் முதியோர் சனத்தொகை 2001 ஆம் ஆண்டு 1.7 மில்லியனாக காணப்பட்டது. 2021 ஆம் ஆண்டு இத்தொகை 3.6 மில்லியனாக இரட்டிப்பு அதிகரிப்பினை 20 வருட காலப்பகுதிக்குள் கொண்டிருக்குமென எதிர்வு கூறப்பட்டிருக்கிறது. இச்சனத்தொகை அதிகரிப்பு புள்ளிவிபரங்களின் படி 2031 ஆம் ஆண்டு இலங்கையின் சனத்தொகை 21.9 மில்லியனாக அதிகரிக்குமெனவும் பாலின சமத்துவம் 100 பெண்களுக்கு 94.4 ஆண்கள் என்ற விகிதத்தில் காணப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையானது முதியோரின் தொகையையும் அதிகரிக்குமென கூறப்படுகிறது. இதன்படி 100 உழைக்கும் நபர்களில் 36 பேர் முதியவர்களாக இருப்பர். இவ்விவகாரமானது இன்று மிகப்பெரும் சமூக பிரச்சினையாகவும் வியாபாரமாகவும் மாறியிருக்கிறது. பெரும்பாலான பிள்ளைகள் தமது வயது முதிர்ந்த பெற்றோரை வீதிகளில் விட்டுவிடுவதும் முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதும் வாடிக்கையாகிவிட்டது.
இன்று இலங்கையின் தலைநகரம் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் வீதிகளிலும் முதியோரின் தனிமையை காணமுடிகிறது. இவர்களில் பலர் யாசகர்களாக இருக்கின்றனர். இவர்கள் தமது பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். இதற்கு இவர்களை பராமரிப்பதை சுமையாகவும் செலவாகவும் கருதுவதே முக்கிய காரணமாகும். இதைவிடவும் கோழிக் கூண்டுகளிலும் நாய்க் கூண்டுகளிலும் தமது பெற்றோரை தங்க வைத்திருந்த பிள்ளைகளும் இந்த இலங்கையில் இருக்கின்றனர். இவ்விடயங்களானது இலங்கையில் அதிகரிக்கும் முதியோர் சனத்தொகைக் கேற்றளவிலான தரமான நலத்திட்டங்கள் தொடர்பிலான தேசிய கொள்கையினை அரசாங்கம் கொண்டிருக்கின்றதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
முதியோருக்கான இல்லங்களில் இடப்பற்றாக்குறை நிலவுவதால் 15,000 இக்கும் மேற்பட்ட முதியோர் காத்திருப்பு பட்டியலில் இருப்பதாக சமூக சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காத்திருக்கும் பெண்களில் விதவைகளே அதிகமாக இருக்கின்றனர். 2002 ஆம் அண்டு தரவுகளின் படி பெண்களின் ஆயுட்காலம் 75.8 வருடங்களாகவும் ஆண்களின் ஆயுட்காலம் 71.2 வருடங்களாகவும் காணப்படுகின்றன. வீடுகளில் பராமரிப்பின்மை அல்லது குடும்ப கட்டமைப்பு என்பவற்றின் காரணமாகவே முதியோர், பராமரிப்பு இல்லங்களுக்கு செல்லும் தொகை அதிகரித்திருப்பதாக முதியோர் செயலகத்தின் இயக்குநர் சுவிந்தா சிங்கபுலி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் மிகவும் மோசமான நிலையில் ஆறு முதியோர் இல்லங்கள், குறைந்த அங்கத்தவர்களுடன் இயங்கிவருவதாகவும் அதன் உட்கட்டமைப்புகளை இன்னும் அதிகரிக்கவேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவை கம்பஹா, கதிர்காமம், மீரிகம, சாலியபுர, கைதடி மற்றும் குருநாகல் பகுதிகளில் அமைந்திருக்கின்றன. இவற்றில் 1000 பேர் வசித்து வருகின்றனர். இவை தவிரவும் நாடு முழுவதும் தனியார் முதியோர் பராமரிப்பு இல்லங்கள் தோற்றம் பெற்றுள்ளன. இவ்வாறான இல்லங்களை உருவாக்குவதற்கு சமூக சேவைகள் திணைக்களத்தின் அனுமதியோ அல்லது தேவைகளோ மற்றும் மேற்பார்வையோ? தேவையில்லை. யார் வேண்டுமானாலும் இந்த வியாபாரத்தில் குதிக்கலாம். இவ்வாறு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் தோற்றம் பெற்ற இல்லங்களாலேயே பெரும்பாலான முதியோர் வீட்டுச் சூழலை விடுத்து தனிமைக்கு தள்ளப்பட்டார்கள்.
தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 300 க்கும் மேற்பட்ட தனியார் முதியோர் இல்லங்கள் செயற்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான இல்லங்கள் தரமான வளங்களையும் தரமான கவனிப்பு, ஏனைய தேவையான மேற்பார்வை என்பவற்றால் முதியோரின் பிள்ளைகளின் கவனத்தைப் பெற்றுள்ளன. இருப்பினும் முதியோர் இவ்வாறான இல்லங்களுக்கு வலிந்து தள்ளப்படுவதும் தனிமையும் அவர்களுடைய சுகாதாரத்தைப் பாதிக்கின்றன. தற்போது அதிகரித்துவரும் முதியோரின் சனத்தொகையால் பொருளாதார ரீதியில் ஏற்படப்போகும் சரிவுகளை நிவர்த்தி செய்ய ஜப்பான் போன்ற நாடுகளைப் போன்று நீண்ட தேகாரோக்கியமானவர்களாக வாழ முதியோர்கள் பழக்கப்படுத்தப்பட வேண்டும்.
ஜப்பானிலேயே உலகின் சிறந்த முதியோர் பராமரிப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதோடு முதியோர் சனத்தொகையானது மிக நீண்ட வாழ் நாட்களையும் கொண்டமைந்திருக்கிறது. இதனால் அந்நாட்டில் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள இலங்கை வைத்தியர்கள் மற்றும் சுகாதார நலப்பராமரிப்பாளர்களுக்கு 2015 -2016 களில் மூன்று கட்டமாக பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆனால் இலங்கையில் அரச முதியோர் இல்லங்கள் தரமற்றவையாகவே இருக்கின்றன. குறிப்பாக பெருந்தோட்டப்புறங்களில் முதியோரை பாதுகாப்பதற்கான எந்தவொரு திட்டங்களும் இல்லை. அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற முதியோருக்கான அடையாள அட்டையும் மாதாந்த உதவிக்கொடுப்பனவுகளும் கிடைக்காத பலர் இருக்கின்றனர்.
இவை தொடர்பில் சமூக சேவைகள் அமைச்சோ அல்லது திணைக்களமோ உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மேலும் இலங்கையில் இன்றும் 70 -80 வயதிற்கு மேற்பட்ட முதியோர் உழைக்க வேண்டிய சூழலில் இருக்கின்றனர். பெரும்பாலான இலங்கைப் பெண்கள் வெளிநாட்டுப் பணிப் பெண்களாக செல்கின்ற வேளையில் அவர்களுடைய பிள்ளைகளை பராமரிக்க வேண்டியவர்களாகவும் முதியோர் இருக்கின்றனர். அவர்கள் இறக்கும் வரைக்கும் உழைத்துக் கொண்டே இருப்பதற்கும் தூண்டப்படுகிறார்கள். வீடுகளில் தனியாக வசிப்பவர்களுக்கும் இதே நிலைமை தான்.
நகர்ப் புறங்களில் கூலித் தொழிலாளர்களாகவும் தோட்டப் புறங்களில் கைக்காசு தொழிலாளர்களாகவும் இவர்கள் இன்றும் இருக்கின்றார்கள் என்பதே உண்மை நிலை. எனவே முதியோரை பராமரிக்கவேண்டிய தேவை குடும்பத்துக்கும் அரசாங்கத்துக்கும் இருக்கின்றது. ஆனால் முதியோருக்கான சேமிப்புக்கான வட்டி வீதம் அதிகரிக்கப்படுமென கூறிய நிதியமைச்சு, இன்னும் முழுமையாக அவற்றை நிறைவேற்றவில்லை. மிக நவீன மருத்துவ வசதிகளுடனும் அங்கவீனமானோருக்கு நட்புறவான மலசல கூடம் என்பவற்றுடனான வைத்தியசாலையை அமைக்கவும் முதியோர் நலன் தொடர்பான தேசிய கல்விநிலையம் அமைக்கவும் சுகாதார அமைச்சு உறுதி வழங்கியும் இன்னும் உருவாக்கம் பெறவில்லை.
எனவே எதிர்காலத்தில் அதிகரிக்கப்போகும் முதியோர் சனத்தொகையை கருத்தில் கொண்டும் அவர்களின் நீண்ட ஆயுளை கருத்தில் கொண்டும் எடுக்கப்படும் முயற்சிகளே இலங்கை எதிர்நோக்கப்போகும் நெருக்கடிகளுக்கு சிறந்த தீர்வாக அமையும்.
12/04/2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக