சனா
இலங்கை அரசியலில் கட்சித் தாவல்கள் என்பது புதிதான அல்லது புதுமையான விடயமல்ல. ஆனால் அக்கட்சித்தாவல்கள் சுகபோகங்களை, அனுபவிப்பதற்கா அல்லது சுய உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கா அல்லது பொது நலன்களுக்கா என்பதிலேயே அதன் பின்புலன்கள் தங்கியிருக்கின்றன. அதேபோலவே இக் கட்சி தாவல்கள் தேசிய அரசியலிலும் பிராந்திய அரசியலிலும் வழமையாக இடம்பெறுகின்ற நிகழ்வாக இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் மலையகத்தின் பிரதான தொழிற்கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் இ.தொ.கா.விலிருந்து 300 பேர் தற்போதைய மலையக அமைச்சரின் கட்சியான தொ.தே. சங்கத்துடன் இணைந்து கொண்ட நிகழ்வு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தனிமனிதர் ஒருவருக்கு எந்தவொரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிப்பதற்கான உரிமை இருக்கிறது. இதனை எவராலும் நிர்ப்பந்திக்க முடியாது. இதனாலேயே இக்கட்சித் தாவல்கள் வெறும் பேசுபொருளாக மாத்திரம் இருக்கின்றன. இதுபோன்றே திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகாவத்தை, கெலிவத்தை, திம்புள்ள ஆகிய தோட்டப்பகுதிகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட இ.தொ.க. அங்கத்தவர்கள் தொ.தே. சங்கத்தில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டுள்ளனர். தமக்கான காணிப் பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய அடிப்படை பிரச்சினைகளை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சினூடாக தீர்த்துக் கொள்வதற்காகவே மேற்படி கட்சித் தாவல்கள் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
மேற்படி கட்சித் தாவல்களில் ஈடுபட்டுள்ளவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமானால் அதனை புதிய அபிவிருத்தியாக கொள்ளமுடியும். ஆனால் கட்சித் தாவல் என்ற ஒன்றுக்காக மாத்திரம், இதுவரையும் காணி மற்றும் வீட்டுரிமைக்காக காத்திருக்கின்ற மக்களை பின்தள்ளிவிட்டு இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க முடியாது. நிரந்தர மற்றும் பாதுகாப்பான வீட்டுத்திட்டத்துக்காக அபாயகரமான பகுதிகளிலும் அனர்த்தங்கள் ஏற்பட்ட பகுதிகளிலும் வசித்து வரும் மக்கள் இருக்கின்றனர். அவர்களை முதன்மைப்படுத்தியே வீட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படுமென ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி அரசியலுக்காக தேசிய அபிவிருத்தியை பங்குபோட்டுக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தொழிலாளர்களிடையே டிசம்பர் மாதம் வந்தாலே சந்தாப்பணத்தை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்களை விநியோகிப்பதில் மலையக கட்சிகள் முனைப்பு காட்டி வருவதை அவதானிக்க முடியும். தொழிலாளர்களும் தமக்கு வேண்டிய உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்வதற்காக காலங்காலமாக தமது உழைப்பின் ஒருபகுதியான சந்தாப்பணத்தை ஏதாவதொரு கட்சிக்கு வழங்கவேண்டிய கட்டாயம் இவர்களுக்கு இருக்கிறது. இவ்வாறு எந்தவொரு கட்சியிலும் அங்கத்துவம் பெற்றுக்கொள்ளாவிடின் அவர்கள் அபிவிருத்தியிலிருந்து புறக்கணிக்கப்படுவார்களென்பது உண்மை. இதுவரையும் அவ்வாறே நடைபெற்று வந்திருக்கிறது.
மலையக பெருந்தோட்ட மக்களுக்காக தற்போது இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 4000 வீடமைப்புத் திட்டமும் இலங்கை அரசின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் 25,000 வீடுகளுக்கான திட்டமும் அமுலில் இருக்கின்றன. இவை 7 பேர்சஸ் காணியுடன் கூடிய உறுதிப்பத்திரத்துடன் மக்களுக்கு சென்றடைய வேண்டுமென்பது முக்கிய அம்சமாகும். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றபின்பு 100 நாள் வேலைத்திட்டத்தில் 7 பேர்சஸ் காணியுடனான உறுதிப்பத்திரத்துடன் தனிவீட்டுத் திட்டம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் அப்போதே அத்திட்டத்தில் பல குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு சர்ச்சைகள் மெலெழுந்தன. குறிப்பாக காணி அளவையில் 7 பேர்சஸ் காணி உள்ளடக்கப்படவில்லையெனவும் வழங்கப்பட்ட உறுதிப்பத்திரமும் செல்லுபடியற்றதெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆனால் அவை அரசாங்கத்தால் கவனத்தில் கொள்ளப்படவில்லை. தற்போது வழங்கப்படுகின்ற தனிவீட்டுத் திட்டமும் அவ்வாறானதாகவே அமையப்பெற்றிருக்கின்றன. பெரும்பாலான தோட்ட நிர்வாகங்கள் வீட்டுத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு முறையாக காணிகளை ஒதுக்காமையும் இத்திட்டம் மக்களை சென்றடைவதில் இன்னும் தாமத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அவ்வாறு வழங்கப்பட்ட காணிகளில் அமைக்கப்பட்ட வீடுகளும் குறிப்பிடத்தக்களவு மக்கள் பாவனைக்குரிய முற்றத்தையும் வீட்டுத் தோட்டம், ஏனைய தேவைகளுக்குரிய நிலப்பரப்பையும் கொண்டமையவில்லை. இவ்வாறு பல இடர்பாடுகளுடனேயே 7 பேர்சஸ் காணியுடனான வீட்டுத் திட்டத்தை மக்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய சூழல் இருக்கின்றது.
தற்போதைய நிலைவரப்படி இந்திய வீட்டுத் திட்டத்தின் மூலம் 4000 வீடுகளும் வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் 25,000 வீடுகள் உள்ளடங்களாக மொத்தம் 29,000 வீடுகளே மலையக மக்களுக்காக காத்திருக்கின்றன. மலைய பெருந்தோட்டங்களில் 300,000 குடும்பங்கள் உட்பட 15 இலட்சம் பேர் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இவ்வொதுக்கீடுகள் சொற்பமானவையே. வருடத்துக்கு 30,000 என்றளவில் வீடுகள் அமைக்கப்பட்டால் கூட +ஒட்டுமொத்த தொழிலாளர்களும் தனிவீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்ள பல வருடங்கள் தேவைப்படலாம். அதற்குள் புதிய ஆட்சிமாற்றமும் ஏற்படலாம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் திட்டம் கைநழுவியும் செல்லலாம். இதற்கு மீரியபெத்த வீடமைப்புத் திட்டத்தை சிறந்த உதாரணமாக கொள்ளமுடியும்.
இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களில் இன்னுமொரு சிக்கல் பெரும்பாலும் மேலெழுந்து வருகிறது. அதாவது கட்சி அங்கத்தவர்களுக்கான முதலிடம். ஆட்சியில் இருக்கின்ற எந்தவொரு கட்சியும், தமது கட்சியை சேர்ந்தோர் பாதிக்கப்பட்டவராயின் அவருக்கு முன்னுரிமை அளித்து செயற்படுவதில் தவறு இருக்க முடியாது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அபிவிருத்திப் பணிகள் கட்சி அங்கத்துவத்தை காரணம் காட்டி புறக்கணிப்புச் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சமீபகாலங்களில் பெருந்தோட்டங்களில் அமைக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களில் அனர்த்தங்களில் பாதிக்கப்படாத கட்சி உறுப்பினர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதை விடவும் மலையக மக்களுக்காக உலக வங்கியின் நிதி உதவியுடன் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான ஐந்தாண்டு கால திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு அபிவிருத்திகளுக்கான சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்பட்டாலும் அவற்றுக்கு இடையூறு ஏற்படும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாமல் தடுப்பதிலேயே அதன் வெற்றி தங்கியிருக்கிறது. பெருந்தோட்ட மக்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் வழங்கப்படுகின்ற சகல நலத்திட்டங்களுக்கும் முட்டுக்கட்டையே இடப்படுகிறது. பெருந்தோட்டப்பகுதிகளில் பாடசாலை கட்டிடங்களை அமைப்பதற்கு கம்பனிகளால் இட ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படாமை, சமுர்த்தி பயனாளிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் தெரிவுகளில் மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை, ஆசிரிய உதவியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படாமை போன்ற பல விடயங்கள் இம்மக்களுக்கு எதிராகவே அமைந்திருக்கின்றன. எனவே இவ்வாறான குழறுபடிகள் நிவர்த்தி செய்யப்படுவதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய திட்டங்கள் தொடர்பிலும் அதிகம் கரிசனை கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக