கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

22 நவம்பர், 2017

வேலை தேடுவதே வேலை
க. பிரசன்னா
உலகளவில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடிகளால் இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளது. அதிகரித்து செல்லும் சனத்தொகையினால் போட்டியாளர்கள் தொகை அதிகரித்துள்ளதும் நிரந்தரத் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதும் சிரமமான காரியமாகவுள்ளது. இந்நிலை இலங்கையிலும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இளைஞர், யுவதிகள் பட்டதாரிகள் தொழில் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், தொழிலுக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்களும் போதிய வேதன உயர்வின்மையால் திண்டாடுகின்றனர். அத்தோடு அரச, தனியார் நிறுவனங்களில் பல தொழில் வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதும் அவற்றை நிரப்ப சம்பந்தப்பட்ட தரப்புகள் முயற்சிக்காமையும் தொழில் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாகும்.
கடந்த பொதுத் தேர்தலின் போது தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தால் 10 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட போதும், இன்னும் செயல்பாட்டுக்கு வராத நிலையிலேயே உள்ளது. இலங்கை புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவல்களின்படி, 2016 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் தொழிலற்றோரின் வீதம் 4.20 ஆகவும் இது 2015 ஆம் ஆண்டு இறுதிக் காலாண்டுப் பகுதியில் 4.30 வீதமாக காணப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.
1996- 2016 வரை இலங்கையில் வேலைவாய்ப்பற்றோரின் சராசரி வீதம் 5.54 ஆகவே காணப்பட்டது. இருப்பினும் கடந்த 20 ஆண்டுகளில் 1.34 வீதமான வேலைவாய்ப்புகளே அரசினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கின்றதென்பதை உணரமுடிவதுடன், 10 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க தேர்தல் வாக்குறுதி வழங்கியுள்ளதோடு, இலங்கையில் எவ்வளவு பேர் தொழிலை பெற காத்திருக்கின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இலங்கையில் 2015 இன் முதல் காலாண்டுப் பகுதியில் கல்வித் தகைமையின் அடிப்படையில் வேலைவாய்ப்பற்றிருப்போரின் தொகையானது பின்வருமாறு அமைகின்றது.
இதன்படி க.பொ.த. சாதாரண தரத்திற்கும் குறைவானோரில் 2.7 வீதமும் சாதாரணதரம் முடித்தோரில் 6.6 வீதத்தினரும் உயர்தரம் மற்றும் அதற்கும் மேலான கல்வித் தகைமையைக் கொண்டோரில் 10.1 வீதத்தினரும் தொழில்வாய்ப்பை பெற காத்திருக்கும் நிலை தோன்றியிருக்கிறது. இலங்கையில் கல்விச் செயற்பாடுகள் வேகமாக விருத்தியடைந்து வந்தாலும் கூட தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்வதில் அதிகம் சிரமம் காணப்படுகிறது. இன்று தலைநகரில் தொழில் புரிகின்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளில் பெரும்பாலானோர், உயர்தரத்தினையும் அதற்கு மேற்பட்ட கல்வித்தரத்தினையும் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
வறுமை, குடும்ப சூழல் என்பன காரணமாக பொருத்தமில்லாத தொழில் தேர்வுகளை மேற்கொண்டு உழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சமீப காலங்களில் கல்வியமைச்சினால் வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனங்களில் கூட பெரும்பாலான பட்டதாரிகள் இணைந்து கொண்ட நிலையிலும் வாழ்க்கைச் செலவுக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாத 6,000 ரூபாவை மாதாந்த வருமானமாக பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பலர் அத்தொழிலிருந்து வெளியேறி புதிய தொழில் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனால் தொழில் வாய்ப்பற்றோரின் தொகை வீழ்ச்சியில் முன்னேற்றம் ஏற்படுவதில் இழுபறி நிலை காணப்படுகின்றது.
எனவே, அரசானது தேர்தல் வாக்குறுதிக்காகவும் அரசியல் நீடிப்புக்காகவும் பொருத்தமற்ற தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதால் முன்னேற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, வாழ்க்கைச் செலவை கருத்தில் கொண்டு தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதில் அக்கறை கொள்ளுதல் வேண்டும். இலங்கையில் 8.8 மில்லியன் தொழிலாளர்கள் காணப்படுகின்ற நிலையில், இவர்களில் 17 வீதமானோரே தனது கல்வித் தகைமைக்கேற்ற தொழில் வாய்ப்பினை பெற்றிருக்கின்றனர். 1.5 மில்லியன் பேர் தொழிற்பயிற்சியில் தேர்ச்சியடைந்தவர்களாக இருக்கின்றனர்.
எனவே அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் பெருமளவில் தொழிலாளர்களை உள்வாங்கியிருக்கின்ற போதும் போதிய தொழிற் பயிற்சிகளை பெற்றவர்களை உள்வாங்கவில்லை. மாறாக கல்வித்தரங்களில் குறைவுடையோரும் சிபாரிசின் பேரிலும் நியமனங்கள் வழங்கப்படுவதால் தகுதியுள்ள பலர் தொழில்வாய்ப்பற்ற நிலையிலும் பொருத்தமில்லாத தொழிலிலும் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசாலும் தனியார் துறையாலும் முழுமையாக சகலருக்கும் தொழில் வாய்ப்பை வழங்க முடியாது எனக் கூறப்பட்டாலும் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு, அவர்களை ஊக்குவிப்பதற்கு இலங்கையில் போதிய சலுகைகள் வழங்கப்படுகின்றனவா? என்பது தொடர்பிலும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
மேலும் பெரும்பாலான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இலங்கையில் சட்டவிரோதமான முறையில் பணியாற்றுவதுடன் பருவகாலத்திற்கேற்ப தொழில்புரியும் வெளிநாட்டவர்கள் தொழிலனுமதியின்றியும் இருப்பதை அவதானிக்க முடிகிறது. கடந்த சில வருடங்களில் உலக வங்கியின் அறிக்கையின்படி 12,000 தாதிகளுக்கான பற்றாக்குறை சுகாதாரத்துறையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 600 ரேடியோகிரப்பர் மற்றும் மருந்தாளர், ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் என்பனவும் இத்துறையில் உள்ளடங்குகிறது. 2011 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சின் கணிப்பின்படி 7,000 வைத்தியர்களுக்கான தேவை இருந்தது.
இப்போது இவ்வெற்றிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டுவிட்டனவா? இல்லை பற்றாக்குறையாகவே இருக்கின்றதா என்பதை வைத்தியசாலைகளில் எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள எடுக்கின்ற காலதாமதத்தை கணக்கில் கொண்டு தீர்மானிக்க முடியும். அதேபோலவே சுற்றுலாத்துறையும் பொருளாதாரத்துக்கு மிகப்பெரும் வரமாக அமைகின்றது. இனிவருகின்ற காலங்களில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியும் வேகமாக முன்னேற்றமடைவதற்கான வாய்ப்பிருக்கின்றது. இதன்படி இத்துறைக்கு வருடமொன்றுக்கு 30,000 பயிற்றுவிக்கப்பட்ட தொழிற்றகைமையாளர்கள் தேவைப்படும் நிலையிருப்பதாக 2014 ஆம் ஆண்டு உலக வங்கி கணக்கிட்டிருந்தது.
ஆனால் வருடமொன்றுக்கு 4500 பேரே (15 வீதம்) இவ்வாறு பயிற்றுவிக்கப்பட்டு வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரச தொழிற்றுறைகளில் பாரிய வெற்றிடம் நிலவுகின்ற நிலையில் இளைஞர், யுவதிகளை தொழில்வாய்ப்பற்றவர்களாக வீட்டுக்குள் முடங்கியிருப்பவர்களாக மாற்றியிருப்பது வேதனைக்குரியது. மேலும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் பற்றாக்குறை, அவற்றில் காணப்படுகின்ற வளப்பற்றாக்குறை என்பனவும் சகலரும் ஏதோவொரு தொழிற்பயிற்சியை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகளை எதிர்நோக்கத் தூண்டுகிறது. பெருநகரங்களிலேயே பெரும்பாலான அரச தொழிற்பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதனால் சாதாரண கிராம, தோட்டங்களிலுள்ள இளைஞர், யுவதிகள் பயிற்சியினை பெற்றுக்கொள்வதில் பொருளாதார ரீதியில் சிக்கலை எதிர்கொள்கின்றனர். அதேபோலவே தேசிய திட்டமிடல் திணைக்களத்தில் 15 ஆயிரம் கைவினைத் தொழிலாளர்களுக்கான வெற்றிடம் காணப்படுகின்ற நிலையில், 11 ஆயிரம் பேரே பணியாற்றி வருகின்ற சூழல் காணப்படுகின்றது. இலங்கையில் 8.8 மில்லியன் தொழிலாளர்கள் காணப்படுகின்ற நிலையில் அவர்களில் 8.4 மில்லியன் மக்கள் குறைவருமானம் பெறுபவர்களாக இருக்கின்றனர். எனவே வெற்றிடங்களை நிரப்புவதிலுள்ள தாமத நிலை, தொழிலுக்கேற்ற ஊதியமின்மை என்பன தொழில்வாய்ப்பற்றோரின் தொகையை அதிகரிப்பதுடன் வறுமைச் சூழலையும் தோற்றுவிக்கின்றது.
இலங்கையில் கட்டுமானம், ஹோட்டல்துறை, ஆசிரியர், சுகாதார உத்தியோகத்தர்கள் போன்ற துறைகளில் அதிகமான பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவ்வெற்றிடங்களுக்கு தகைமையானவர்களை உள்ளெடுப்பதன் மூலம் குறை மத்திய தரவருமானம் பெறுகின்ற இலங்கையை முன்னேற்றகரமான சூழலுக்கு கொண்டு செல்லலாம். சிங்கப்பூர், டுபாய் போன்ற நாடுகள் குறைந்த வருடங்களிலேயே குறைமத்திய வருமானம் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4000 அ.டொலர்), உயர் வருமானம் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12,000 அ.டொலர்) என்பவற்றில் துரித வளர்ச்சியைக் கொண்டிருந்தது.
ஆனால் இலங்கை இவ்வளர்ச்சியை உறுதிசெய்ய மேற்கூறிய துறைகளின் செயற்பாட்டுத் தன்மையை துரிதப்படுத்த வேண்டும். அதற்கு பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை நிரப்பப்பட வேண்டும். தேசிய அரசாங்கத்தின் 10 இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டம் வெற்றிகரமாக அமைகின்ற பட்சத்தில் அவை இளைஞர், யுவதிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். இவற்றில் அரச திணைக்களங்கள், நிறுவனங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களையும் உடனடி கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே அரச வெற்றிடங்களுக்கான போட்டிப் பரீட்சைகளுக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற போதும் அவற்றுக்கான பரீட்சைகள் நடைபெறவில்லை. பரீட்சைகள் நடைபெற்றாலும் கூட அவற்றுக்கான பெறுபேறுகள் வெளியிட்டு, பதவிக்கு அமர்த்தப்படுவதற்கு பல மாதங்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு நீண்ட சுற்றுவட்டத்தில் வெற்றிடங்கள் நிரப்பப்படுவதும் அதிக காலதாமதம் ஆவதும் வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தங்கிவாழ்வோரின் தொகையும் அதிகரிக்கிறது. இதனால் உழைப்போரின் தொகை குறைவதால் அரசாங்கம் பெற்றுக்கொள்கின்ற வருவாயில் தடையேற்படுகிறது. எனவே, அரச, தனியார் நிறுவனங்களின் வெற்றிடங்களை நிரப்புவதோடு, சுயதொழில் ஊக்குவிப்புகளை மேற்கொள்ளவும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அதிகம் முன்வரவேண்டும். இலங்கையின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு இளைஞர், யுவதிகளின் தொழில் பங்குபற்றுகை அத்தியாவசியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக