கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், YouTube videos

22 நவம்பர், 2017

யார் குற்றவாளி?
க.பிரசன்னா
உலகில் பல்லாயிரக்கணக்கானோரின் இலத்திரனியல் தெரிவாகவும் விருப்பமாகவும் இருப்பது ஸ்மார்ட் போன்கள். மனிதனின் அடிப்படைத் தேவைகளில் தற்போது இவற்றுக்கும் முக்கிய இடமுண்டு. உலகளவில் இன்று 2 பில்லியன் ஸ்மார்ட் போன் பயனாளர்கள் இருக்கின்றனர். உலக கைத்தொழில் துறையில் பாரிய துறையாக கையடக்கத் தொலைபேசிகள் இடம்பிடித்துள்ளன. 2020 ஆம் ஆண்டுகளில் உலகில் 6 பில்லியனுக்கும் அதிகமானோர் மொபைல் போன்களில் இணையத்தை பாவிப்பவர்களாக இருப்பார்களென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு ஸ்மார்ட் போன்களின் உலகம் புதிய மாற்றத்தை இன்றைய இளந்தலைமுறையினரில் ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிகளவான ஈர்ப்பே அவர்களுக்கு பாரிய ஆபத்தாகவும் மாறியிருக்கிறது.
மனிதர்களுக்கிடையிலான தொடர்புகள் அற்றுப்போய் ஸ்மார்ட் போன்களுடனான உறவு சகலருக்கும் வலுத்திருக்கிறது. வாய்வார்த்தைகள் ஸ்தம்பித்துப் போய் மௌனங்கள் மட்டுமே இன்று பலருக்கு முகவரிகளாக இருக்கின்றன. தற்போது ஒரு சில வீடுகளிலும் அலுவலகங்களிலும் குடிகொண்டுள்ள வயர்லெஸ் போன்களுக்கும் ஒவ்வொருவரின் கைகளிலும் தவழ்ந்து கொண்டிருக்கின்ற ஸ்மார்ட் போன்களுக்குமிடையிலான வித்தியாசம், அதற்கிடையிலான சாதக - பாதக அம்சங்கள் தொடர்பான நிகழ்ச்சியொன்றை அண்மையில் இந்திய தொலைக்காட்சியொன்றில் காணக் கிடைத்தது. அதில் ஸ்மார்ட் போன் உருவம் கொண்ட அந்த சிறுமி கேட்ட கேள்விகள் அதிகமாகவே சிந்திக்கத் தூண்டியது.
உண்மையிலேயே ஸ்மார்ட் போன்கள் மனிதனை தவறிழைக்கத் தூண்டுகின்றனவா? அல்லது மனிதன் தான் ஸ்மார்ட் போன்களை அவ்வாறான தேவைகளுக்கு பயன்படுத்த பழகிக் கொண்டானா? எந்தவொரு ஸ்மார்ட் போன் விற்பனையின் போதும், போன்களின் பாதுகாப்பு தொடர்பிலும் அவற்றின் பாவனை முறை தொடர்பிலும் அறிவுறுத்தப்படுமே தவிர ஸ்மார்ட் போன்களைக் கொண்டு இழைக்கப்படுகின்ற குற்றங்கள் தொடர்பிலோ, அவற்றை விதிகளை மீறுவதற்கும் தவறான நடத்தைகளுக்கு பயன்படுத்துவதனாலோ ஸ்மார்ட் போன்களின் பாவனை தவறென்று பொதுவான முடிவுக்கு வரமுடியாது. இவற்றை பாவிப்பவர்களின் மனநிலையிலேயே சகலதும் தங்கியிருக்கின்றன.
இலங்கையில் ஸ்மார்ட் போன்களின் பாவனையானது பல்வேறு வழிகளில் உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. செல்பி மோகம், ரயில் கடவைகளில் போன்களை பாவித்தபடி செல்வது, வாகனங்களை செலுத்தும் போது போன்களை பாவிப்பது எனப் பல சம்பவங்களை குறிப்பிடலாம். இவற்றை விடவும் இணைய விளையாட்டுகள், ஒன்லைன் லைக்குகளுக்காக மேற்கொள்ளப்படுகின்ற விபரீத முயற்சிகள் என்பவற்றையும் கூறலாம். இன்று பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் ஸ்மார்ட் போன்கள் முக்கிய இடம் பிடித்திருக்கின்றன. பசிக்காகவும் தாய்ப்பாலுக்காகவும் குழந்தைகள் அழுவதைவிட ஸ்மார்ட் போன்களைத் தரவில்லையே என்பதற்காக அழுகின்ற அல்லது கோபித்துக் கொள்கின்ற குழந்தைகளே அதிகம்.
இது யாருடைய தவறு? குழந்தைகள் விளையாடுவதற்காக எவ்வளவோ விளையாட்டுச் சாதனங்கள் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் பெற்றோர் தமது குழந்தைகளின் குறும்புகளை சமாளிக்க ஸ்மார்ட் போன்களை கைகளில் திணித்து விடுகிறார்கள். ஒன்றும் அறியாத குழந்தைகள் உலகமே ஸ்மார்ட் போன்களுக்குள் ஒளிந்திருப்பதாக கற்பனை செய்துகொண்டு அவற்றுக்கே அடிமையாகிவிடுகின்றனர். குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன்களை வழங்குவதை தவிர்க்க வேண்டுமென பெற்றோருக்கு பொலிஸார் அறிவுறுத்தியிருக்கும் நிலையில், பிறந்தநாள் பரிசாக சிறுவர்களுக்கு ஸ்மார்ட் போன்களும் டப்லட்டுகளுமே வழங்கப்படுகின்றன. அறிவு வளர்ச்சிக்காக இதுநாள்வரையும் வழங்கப்பட்டு வந்த புத்தகங்கள் மறக்கப்பட்டுவிட்டன.
இளைஞர்கள் ஒருநாளில் 3 மணித்தியாலத்தை ஸ்மார்ட் போன்களில் செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த பெரும்பாலான இளைஞர்கள் ஒரு நாளில் 3 மணிநேரத்துக்கும் அதிகமாக ஸ்மார்ட் போன்களிலும் டப்லட்டுகளிலும் செலவிடுவதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 18 முதல் 32 வயதுடைய ஒவ்வொரு இளைஞரும் ஒருநாளைக்கு சராசரியாக 3 மணித்தியாலமும் 14 நிமிடங்களும் ஸ்மார்ட் போன்களில் செலவிடுவதாகவும் 2012 ஆம் ஆண்டை விட தற்போது இது அதிகரித்திருப்பதாகவும் தொடர்ந்து இளைஞர்கள் ஸ்மார்ட் போன்களில் அதிக நேரத்தை செலவளிப்பது அதிகரிக்குமெனவும் குளோபல் வெப் இன்டெக்ஸ் மேற்கொண்ட சர்வதேச ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
உலகளவில் ஸ்மார்ட் போன் பாவனையில் அதிகம் பதின்மவயது பருவத்தினரைக் கொண்ட நாடுகளின் பட்டியலை வெப் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ளது. இதில் தென்கொரியாவிலுள்ள 72 வீதமான மாணவர்கள் ஒவ்வொரு நாளும் 5.4 மணி நேரத்தை ஸ்மார்ட் போன்களில் தொலைப்பவர்களாக இருக்கின்றனர். இதில் 25 வீதமானோர் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகியுள்ளனர். அவுஸ்திரேலியாவில் 59 வீதமானோர் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களாக இருப்பதுடன், வெளிநாட்டு செய்திகளை அதிகம் படிப்பதற்கும் ஒன்லைன் நடவடிக்கைகளுக்கும் ஸ்மார்ட் போனை பயன்படுத்துகின்றனர். 8 -15 வயதுடைய இஸ்ரேலிய சிறுவர்களில் 83 வீதமானோர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். இவர்கள் வட்ஸ் அப்பில் ஒருநாளைக்கு 4 -5 மணிநேரத்தை செலவிடுகின்றனர்.
அமெரிக்காவில் 72 வீதமானோரும் ஸ்பெய்னில் 80 வீதமானோரும் ஸ்மார்ட் போன் பயனாளர்களாக இருக்கின்றனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையானவர்களாகவே இருக்கின்றனர். அத்துடன் இன்று ஏற்படுகின்ற வீதி விபத்துக்களில் பெரும்பாலானவை போன்களுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றன. வாகனச் சாரதிகள் கைத்தொலைபேசிகளை பாவிப்பதால் விபத்துகள் ஏற்படுவதற்கு 4 தடவைக்கும் அதிகமான வாய்ப்புகள் காணப்படுவதாக இலங்கை வீதிப் போக்குவரத்து பொலிஸ் தெரிவித்துள்ளது. குறுஞ்செய்திகளை அனுப்புதல், அழைப்பு ஏற்படுத்தல் என்பன ஆபத்தானவையாக இருக்கின்றன. வாகனம் செலுத்தும் போது போன்களை நேரடியாக பாவிப்பதனை விட ஹேன்ட்ஸ் ஃபிரிகளை பாவிப்பது ஓரளவு பாதுகாப்பானதாக இருக்கிறது.
இன்று பெரும்பாலான இளைஞர்கள் ஸ்மார்ட் போன்களின் விரும்பியாக இருப்பதற்கு செல்பிகளும் முக்கிய காரணமாக இருக்கின்றன. இதனால் ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனங்களும் செல்பி எனும் சுயபடங்களை சிறந்த தரத்தில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை உள்ளடக்கிய ஸ்மார்ட் போன்களை உருவாக்கி அதனை இளைஞர்களிடம் கொண்டுசேர்க்கும் வியாபார உத்திகளை கையாண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் ஏற்படுகின்ற செல்பி மோகம் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் இரண்டு இலங்கைப் பெண்கள் ஓமனில் செல்பியால் உயிரிழந்தனர். இவ்வருடத்தின் இரண்டாவது சம்பவமாக இரு சகோதரர்கள் கொள்ளுப்பிட்டி - பம்பலப்பிட்டி ரயில் பாதையில் செல்பியினால் உயிரிழந்திருந்தனர்.
கடந்த வருடம் மாத்திரம் ரயில் பாதையில் செல்போன்களை பாவித்தமையினால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இவை இலங்கையில் மட்டுமல்ல உலகளவிலும் ஏற்படுகின்ற சவாலான விடயமாக இருக்கின்றது. ஸ்மார்ட் போன்களின் வருகைக்கு முன்பாக இவ்வாறு செல்பிகளால் ஏற்படும் மரணங்கள் இருந்ததில்லை. ஸ்மார்ட் போன் பாவனை தொடர்பில் இன்றைய இளைஞர்கள் கொண்டிருக்கின்ற மனநிலையே இதற்குக் காரணமாகும். மசலசலகூடம், படுக்கையறை, வாகனம் செலுத்தும்போது, உணவு உண்ணும் போது என சகல வேளைகளின் போதும் இளைஞர்கள் தமது போன்களை திரும்பத் திரும்ப சோதனை செய்து கொண்டே இருப்பதாக சர்வதேச ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவை விடவும் மிக மோசமான சூழற்பிரச்சினைகளை மொபைல் கழிவுகள் (M-ஙிச்ண்tஞு) ஏற்படுத்துகின்றன. உலகளவில் இலத்திரனியல் கழிவுகளின் தொகை வருடமொன்றுக்கு 40 மில்லியன் தொன்களாக காணப்படுகின்றன. 2006 ஆம் ஆண்டு 900 மில்லியன் செல்போன்கள் பாவனையின் இருந்தன. 2007 இல் இவை ஒரு பில்லியனாக அதிகரித்திருந்தன. இவ்வாறு உயர்ந்தளவில் அதிகரித்துச் செல்லும் பாவனையினால் கழிவுகளில் பெருக்கமும் அதிகரித்துச் செல்கின்றது. 2007 ஆம் ஆண்டை விட சீனாவில் வெளியிடப்படும் மொபைல் கழிவுகள் 2020 இல் 7 மடங்காகவும் இந்தியாவில் 18 மடங்காகவும் அதிகரிக்குமெனவும் ஐ.நா. சபையின் சூழலியல் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவானது மொபைல் கழிவுகளின் மூலம் வருடமொன்றுக்கு 1700 தொன் இலத்திரனியல் கழிவுகளை வெளியிடுகிறது.
கம்போடியா 1200 தொன்களையும் கென்யா 150 தொன்களையும் அமெரிக்கா 3 மில்லியன் தொன்களையும் சீனா 2.3 மில்லியன் தொன்களையும் இவ்வாறு கழிவுகளாக வெளியேற்றுகின்றன. இவ்வாறு ஸ்மார்ட் போன்களின் வருகையானது மனிதர்களின் நடத்தையிலும் அவர்களின் செயற்பாடுகளிலும் பாரிய தாக்கத்தை செலுத்துவதோடு கழிவுகளாக மாறும் சந்தர்ப்பங்களில் சூழல் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றது. இன்றைய நவீன உலகில் அன்றாட தேவைகளில் இருந்து ஸ்மார்ட் போன்களை தவிர்க்க முடியாதுள்ளது. தொழில் சுமைகள், இயந்திர உலகம், தொழில்நுட்ப வளர்ச்சி என்பவற்றுக்கு ஈடுகொடுத்தே எமது வாழ்க்கையினை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் செயற்பாடுகளின் தேவைக்காக ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தலாமே தவிர, அதனையே வாழ்க்கையாகக் கொண்டு அதற்கு அடிமையாவதையோ, அதனை பயன்படுத்தி துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே ஸ்மார்ட் போன்களின் வருகை தொழில்நுட்பத்தின் வெற்றியாக கொண்டாலும் அதனை வாழ்க்கைக்கான முன்னேற்றமாக கொள்ள முடியாது.
30/08/2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக