க.பிரசன்னா
உலகளவில் பாலியல் கல்வி மற்றும் உறவுகளுக்கு இளையோரால் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவமானது மிக ஆபத்தான நிலையினை எட்டியிருப்பதை அன்றாடம் இடம்பெறும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இலங்கையிலும் கூட பாலியல் கல்வி தொடர்பான விடயம் பேசுபொருளாக இருந்தாலும் அவை வெளிவருவதில் அதிக விமர்சனங்கள் இருந்திருக்கின்றன. இன்றைய காலத்தில் கட்டுக்கோப்பான பாலியல் கல்வியை கல்வித் திட்டத்தில் இணைக்கும் முன்பே இணையமும் சமூக வலைத்தளங்களும் வெகுவாகவே பலருக்கு கற்பித்துவிடுகின்றன. அதன் தொடர்ச்சியாக, திருமணம் என்பது பாலியல் உறவுக்கான சட்டரீதியான அங்கீகாரம் என்ற தவறான எண்ணத்தில் பலர் உலாவுவதாலேயே இளவயது திருமணங்களையும் அதன்பால் ஏற்படுகின்ற விவாகரத்துகளும் சனத்தொகை வளர்ச்சியினையும் ஏற்படுத்துகின்றதென குறிப்பிடலாம்.
2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் சனத்தொகை கணிப்பின்படி 2042 இல் இலங்கையின் சனத்தொகை 25 மில்லியனால் அதிகரிக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் இளையோரின் தொகையே அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கம் இளையோருக்கான பயிற்சி மற்றும் வளங்களை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது . இது சமூக பொருளாதார பிரச்சினைகளை தூண்டிவிடும் காரணியாகவும் இருக்கின்றது. ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் கணிப்பின்படி 2016 இல் இலங்கையில் திருமணம் செய்து கொள்ளும் வீதம் அதிகரித்திருக்கிறது.
இவற்றில் அதிகமானவை இளவயது திருணங்கள். இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலாரையும் உள்ளடக்கியது. 1981 - 2012 வரையான காலப்பகுதியில் 15 வயதிற்குட்பட்ட பெண்களின் தொகை 4.7 - 8 மில்லியன் வரை அதிகரிக்கிறது. அதேபோல் ஆண்களின் தொகை 4.9 மில்லியனிலிருந்து 7.3 மில்லியனாக அதிகரித்திருக்கிறது. இதில் திருமணமாகாதவர்களின் தொகை ஆண்களில் 43 வீதத்திலிருந்து 30 வீதமாகவும் பெண்களில் 32 வீதத்திலிருந்து 22 வீதமாகவும் காணப்பட்டது. ஆனால் தற்போது திருமணம் செய்து கொள்பவர்களின் தொகை ஆண்களில் 55 வீதத்திலிருந்து 68 வீதமாகவும் பெண்களில் 59 வீதத்திலிருந்து 68 வீதமாகவும் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இளவயது திருமணம்
பெரும்பாலும் அதிகமாக கவலை கொள்ள வேண்டிய விடயமாக இந்த இளவயது திருமணங்கள் இருக்கின்றன. ஆனால் இலங்கையில் இளவயது திருமணங்களின் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தெற்காசிய நாடுகளில் இவ்வாறானதொரு நிகழ்வு இதற்கு முன்பு நிகழ்ந்ததில்லை. 20 ஆம் நூற்றாண்டில் ஆண், பெண் இருபாலாரும் திருமணம் செய்து கொள்வதை ஒத்திவைத்துள்ளனர். இலங்கையில் திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் சராசரி வயது அதிகரித்திருக்கிறது. 1901 இல் 18.3 வருடமாகவும் 1993 இல் 25.5 வருடமாகவும் ஆண்களில் 1901 இல் 24.6 வருடமாகவும் 1994 இல் 28.3 வருடமாகவும் காணப்படுகின்றன.
ஆனால் 1993 ஆம் ஆண்டிலிருந்து இளைஞர்களின் வாழ்க்கையில் திருமணம் முக்கிய அம்சமாக மாறிப்போனது. இது பெண்களின் சராசரி திருமண வயதை 1994- 2012 காலப்பகுதியில் 25.5 இலிருந்து 23.4 வருடங்களாக குறைத்துள்ளது. அதேபோல ஆண்களின் சராசரி திருமணவயது 28.3 இலிருந்து 27.2 வருடங்களாக தடைப்பட்டுள்ளது. கிராம மற்றும் தோட்டப்புறங்களோடு ஒப்பிடும் போது நகரப்புறங்களில் திருமணம் காலதாமதமாகியே மேற்கொள்ளப்படுகிறது. இலங்கை தமிழ் பெண்கள் மற்றும் ஆண்களின் திருமண வயது சராசரியாக பெண்களுக்கு 24.4 வருடங்களாகவும் ஆண்களுக்கு 27 வருடங்களாகவும் காணப்படுகின்றன. இதைவிடவும் முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்களின் சராசரி திருமண வயது இன்னும் குறைவாகும். முஸ்லிம் பெண்களின் சராசரி திருமணவயது 22.7 வருடங்களாகவும் ஆண்களுக்கு 26.4 வருடங்களாகவும் காணப்படுகின்றன.
இளவயது திருமணங்கள் அல்லது இலங்கை அரசால் வரையறுக்கப்பட்டுள்ள திருமண வயதிற்கும் குறைந்து சட்டவிரோதமாக திருமணம் செய்துகொள்வோரின் தொகை பொலனறுவை மற்றும் நகர்ப்புறமல்லாத மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் பாரிய பிரச்சினையாக இவ்விவகாரம் உருவெடுத்துள்ளது. இதனால் இம்மாகாணங்களிலுள்ள திருமண பதிவாளர்களுக்கு, பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை அல்லது சரியான வயதை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களை கொண்டுவர திருமண ஜோடிகளிடம் அறிவுறுத்தவும் அவ்வாறு எதுவும் இல்லையெனில் அவர்களுடைய பெற்றோர்களை விசாரணைக்கு உட்படுத்தவும் அறிவுறுத்தியிருப்பதாக மொனராகல மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். 2006 ஆம் ஆண்டிலிருந்து சட்டரீதியான திருமணவயது 18 ஆக காணப்படுகின்ற நிலையில் பெற்றோர்களும் 16 வயதுக்கு மேற்பட்ட இளம் வயதினருக்கே திருமணம் செய்து வைக்கும் நிலையில் இருப்பதாகவும் ஆனால் புதிதாக நியமனம் பெறுகின்ற திருமண பதிவாளர்கள் வயது குறைந்தோருக்கு திருமணப் பதிவுகளை மேற்கொள்வதாகவும் அகில இலங்கை திருமணப் பதிவாளர் சங்கத் தலைவர் தெரிவித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை சட்ட விதிமுறைகளின்படி, 16 வயதுக்கும் மேற்பட்ட பெண்ணொருவரே பாலியல் உறவு தொடர்பில் கவனம் செலுத்த முடியும். எவ்வாறெனிலும் 18 வயதை பூர்த்தி செய்யாத இளம் வயதினரை திருமணத்திலிருந்து தடுப்பதற்கு பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். திருமணத்துக்கான வயது எல்லை 17 வருடங்கள் அல்ல. 18 வயதை அடைந்திருக்க வேண்டும் அல்லது 19 வயதை நெருங்கியிருக்க வேண்டும். ஆனால் இச்சட்ட நடைமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதில் அதிகளவுக்கு முரண்பாடுகள் இருக்கின்றன. பெரும்பாலான இளவயது திருமணங்கள் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன. அவ்வாறு பதிவு செய்யப்பட்டாலும் வைத்தியசாலையில் பிள்ளைப் பேறுக்காக அனுமதிக்கப்படும் போது கண்டுபிடிக்கப்படுகின்றன. 2010 ஆம் ஆண்டு மொத்த கர்ப்பிணிகள் 350,000 ஆகும். இதில் இளவயது கர்ப்பிணிகள் 35000 - 40000 வரையில் இருந்ததோடு 16 வயதுக்கும் குறைந்த 3000 கர்ப்பிணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விவாகரத்து
1946 - 2012 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் 1000 திருமணமான பேரில் 4.8 - 17.9 வீதமானோர் விவகாரத்து பெற்றுக் கொள்வது அதிகரித்துள்ளது. விவாகரத்து பெறுவது அதிகரிப்பது போலவே திருமணமான பெண்கள் வன்முறைகளினால் விதவைகளாவதும் அதிகரித்துள்ளது. மீண்டும் திருமணம் செய்து கொள்வதை சமூகம் அங்கீகரித்திருப்பதால் ஒவ்வொரு வருடமும் திருமணப்பதிவு விபரங்களில் அவையும் இணைத்துக் கொள்ளப்படுகின்றன. இலங்கையில் ஒவ்வொரு நாளும் 400 விவாகரத்துகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் இலங்கையில் திருமணமானது மிக நீண்ட பந்தமாகவே நோக்கப்படுகின்றது. ஆனால் விவகாரத்துகள் அதிகரிப்பதனால் இப்பந்தம் தொடர்பில் கேள்வியெழுவதை தவிர்க்க முடியாதுள்ளது.
சமீபத்திய ஆய்வின்படி, இலங்கையில் இடம்பெறுகின்ற திருமணங்களில் 54 வீதமானவை விவாகரத்திலேயே நிறைவுறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில வருடங்களில் விவாகரத்துகளை மேற்கொண்ட 3,890 க்கும் மேற்பட்ட தாய்மார்கள் 18 வயதினை கொண்டவர்களென மேல் மாகாண சபையின் சமூக சேவைகளுக்கான பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு துணைபுரிகின்ற காரணங்கள் எதுவாக இருக்கும். ஆரம்பத்தில் சீதனமில்லாமல் திருமணம் செய்ய ஒப்புக்கொள்பவர்கள் பிற்காலத்தில் சீதனக் கொடுமைக்கு பெண்களை உட்படுத்துவது, வீட்டு வன்முறைகள், தகாத உறவுகள் என்பன கூட இவ்விவாகரத்துகளுக்கு காரணமாவதுடன் தனிமனித சுதந்திரமும் இதற்கு அடிப்படை காரணமாகின்றது.
காரணம் என்ன?
பெரும்பாலான பெண்கள் இளம் வயதில் திருமணம் செய்து கொள்வதற்கும் திருமணம் நோக்கி நிர்ப்பந்திக்கப்படுவதற்கும் சமூக - பொருளாதார நிலைகளே காரணமென ஐ.நா. சபையின் சனத்தொகை நடவடிக்கைகளுக்கான நிதியம் தெரிவித்துள்ளது. அவ்வாறு திருமணம் செய்துகொள்கின்ற ஆண்கள் மற்றும் பெண்களின் வயதில் சமநிலை காணப்படுவதில்லை. வெளிநாட்டு தொழிலாளர்களாக கடமைபுரியும் பெண்களும் சீதனத்தை எதிர்பார்த்து திருமணம் செய்கின்ற ஆண்களும் இவ்வாறு இளவயது திருமணங்களை மேற்கொள்கின்றனர். பெரும்பாலும் திருமணம் முடிக்கின்ற பெண்களில் ஒரு சிலரே தொடர்ந்து தொழிலுக்குச் செல்பவர்களாக இருக்கின்றனர். 2012 ஆம் ஆண்டு புள்ளிவிபரத்தின்படி, 15 - 49 வயது எல்லைகளையுடைய பெண்களில் 30 வீதத்தினரே தொழில் புரிகின்றனர். 66 வீதத்தினர் பொருளாதார ரீதியில் செயலற்றவர்களாகவே இருக்கின்றனர். குறைந்த வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்களே (22 வருடங்கள்) இவ்வாறு பொருளாதார ரீதியில் செயலற்றவர்களாக இருக்கின்றனர். குறைந்த வருமானத்தினை பெறுபவர்களே அதிக கருத்தரித்தலுக்கு ஆளாகின்றனர்.
இவ்வாறான நிலைமைகளால் சனத்தொகை வளர்ச்சி, வயதானோர் தொகை அதிகரிப்பு, இனப்பெருக்க சுகாதாரம் என்பன பாதிப்படைகின்றன. இதனால் சட்டவிரோத கருக்கலைப்புகளையும் பெண்கள் நாடுகின்றனர். திருமணத்திற்கு பின்னரும் 90 - 95 வீதமான இலங்கைப் பெண்கள் கருக்கலைப்புச் செய்கின்றனர். எனவே இளவயது திருமணங்கள் தடுக்கப்படக்கூடியவையல்ல, ஆனாலம் எதிர்காலம் கருதி தவிர்க்கப்பட வேண்டியவை. உறவுகளுக்காக மாத்திரம் செய்து கொள்ளப்படுகின்ற அல்லது பிறரின் தூண்டுதல் , காதல் செயற்பாடுகள் போன்வற்றினால் ஏற்படுகின்ற இவ்வாறான தாக்கங்களினால் பல சமூக - பொருளாதார பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே இவை தொடர்பில் பெற்றோரும் கவனம் செலுத்தவேண்டும். பிற்போக்குத் தனத்தை களைய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக