க.பிரசன்னா
வருமானத்தை விடவும் அதிக செலவு நாட்டு மக்களின் முக்கிய பிரச்சினையாக தற்போது மாறியிருக்கிறது. இலங்கையில், வாழ்க்கைச் செலவானது சடுதியாக அதிகரித்து வருகின்ற வேளையில் மக்கள் வருமானத்தை விடவும் அதிக தொகையினை பொருட்கள் கொள்வனவிற்கு செலவுசெய்ய வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய உணவாக சோறும் தேங்காய் சம்பலும் இருக்கின்ற நிலையில், அரிசி மற்றும் தேங்காயின் விலையும் பற்றாக்குறையும் மிகவும் அதிகரித்து காணப்படுகின்றது. தற்போதைய சூழலில் இலங்கையில் தேசிய உணவை பெற்றுக்கொள்ளவே அதிக தொகையினை செலவு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது.
இதற்காக அரசாங்கம் முன்வைக்கின்ற தீர்வுகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மை பயப்பதாக இல்லை. பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையினை நடைமுறைப்படுத்தினாலும் அதற்கும் மீறிய விலையிலேயே பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அரசாங்கம் மற்றும் வியாபாரிகளின் கபட நாடகத்தால் நுகர்வோருக்கே அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. இன்றைய நிலைவரப்படி தேங்காய் ஒன்றுக்கான விலை 100 ரூபாவாக காணப்படுகின்றது. இதனால் மக்கள் அரை தேங்காய் அல்லது அதற்கும் குறைவாக கரண்டிகளில் அளந்து கொடுக்கப்படும் தேங்காய் துருவல்களை வாங்கிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
2018 ஆம் ஆண்டு மார்ச் வரை தேங்காய்க்கு நெருப்பு விலை காணப்படுமென தெரிவிக்கப்படுகிறது. அதிகமாக பேசப்படாத தேங்காய் கடந்த சில வாரங்களாக முக்கிய பேசுபொருளாக இருக்கின்றது. இலங்கை வரலாற்றிலேயே தேங்காய் 100 ரூபாவுக்கு முதல் தடவையாக விலையேற்றம் கண்டுள்ளது. அதேபோல தேங்காய்க்கு நிர்ணய விலை கொண்டுவரப்பட்டதும் இந்த அரசாங்கத்தில்தான். ஆனால் அவ்வாறானதொரு கட்டுப்பாட்டு விலையினை தேங்காய்க்கு கொண்டுவர முடியாது. உலகில் தேங்காய் உற்பத்தியில் இலங்கை 5 ஆவது இடத்தில் இருக்கின்றது. பிரேசில், இந்தியா, இந்தோனேஷியா, மெக்சிக்கோ என்பன முதல் நான்கு இடங்களில் இருக்கின்றன.
இலங்கையில் இதுவரைக்கும் பதினொரு இலட்சம் ஏக்கரில் தெங்கு பயிரிடப்பட்டுள்ளது. அதேபோல் 100 க்கு 80 வீதம் உணவுக்காக இலங்கையில் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் விலையேற்றத்துக்கு முக்கிய காரணம் வரட்சியாகவே இருக்கிறது. தெங்கு அதிகமாக பயிரிடப்படுகின்ற குருநாகல், சிலாபம், புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஒரு வருடத்துக்கும் மேலாக மழையில்லை. இதனால் உற்பத்தி குறைவடைந்துள்ளது. அதேபோல் தேங்காயின் அளவும் சிறிதாகவிருக்கிறது. 10 -15 வீதம் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் தேங்காய் பாவனை குறையவில்லை. அதிகரித்தே வருகிறது.
பதினொரு இலட்சம் ஏக்கரில் தெங்கு பயிரிடப்பட்டிருந்தாலும் குறிப்பிட்டளவு மரங்கள் முறிந்து விழுதல், வெட்டுதல் என்பவற்றால் வீணாகின்றன. கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் 500 ஏக்கர் தெங்கு உற்பத்திக் காணிகள் விற்பனை செய்யப்பட்டிருந்தாலும் பின்னர் அங்கு உற்பத்திகள் இடம்பெறவில்லை. இவையே இன்று தேங்காய் பற்றாக்குறைக்கும் விலையேற்றத்துக்கும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. எவ்வாறெனினும் தேங்காயை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணமில்லையென தெங்கு உற்பத்தி சபையின் தலைவர் கபில யகந்தாவல தெரிவித்துள்ளார்.
ஆனால் கடந்த திங்கட்கிழமை முதல் ஒரு தேங்காய் 65 ரூபா படி 15 இலட்சம் தேங்காய்களை நகர்ப்பகுதிகளுக்கு வழங்குவதற்கு தெங்கு அபிவிருத்தி சபைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்திருந்தார். வீணாக நுகர்வோரை பாதிப்புக்குள்ளாக்கும் அமைப்புகள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக செயற்பட நுகர்வோர் அதிகார சபையை பணித்துள்ளதாகவும் தெரிவித்திருக்கும் நிலையிலும் இவை மக்களுக்கு உகந்த தீர்வாக அமையவில்லை. நாட்டிலுள்ள சகல மக்களும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களாகவோ அல்லது நகர்ப்புறங்களுக்கு வந்தே பொருட்களை கொள்வனவு செய்பவர்களாக இல்லை.
நகரிலிருந்து பின்தங்கிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் 100 ரூபாவினை விட அதிக தொகையினை தேங்காய்க்கு செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் சிலர் தேங்காய் இல்லாமலே சமைத்து உண்ண வேண்டிய தேவை இருக்கிறது. இதேவேளை தற்போது நாட்டில் தேங்காய் மற்றும் அரிசி மாபியாக்களின் தொகை அதிகரித்திருப்பதாகவும் இவற்றைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கடந்த மாதம் முதல் 12.5 கிலோகிராம் கேஸ் சிலிண்டரின் விலை 110 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1431 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
இதன் எதிரொலியாக ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படுகின்ற உணவுப் பொருட்களின் விலையிலும் சடுதியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி அனைத்திலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கமானது உணவுப் பொருட்களுக்கான விலையினை பின்வருமாறு அதிகரித்துள்ளது. 110- 120 ரூபாவாக காணப்பட்ட பகல் உணவானது 130 ரூபாவாகவும் 10 -12 ரூபாவாக காணப்பட்ட அப்பம் 15 ரூபாவாகவும் 15 ரூபாவாக காணப்பட்ட தேநீர் 20 ரூபாவாகவும் 35 ரூபாவாக காணப்பட்ட பால் தேநீர் 40 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராம மற்றும் தோட்டப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு வந்து தொழிலில் ஈடுபடும் பெரும்பாலானோர் தமது உணவுத் தேவைகளை ஹோட்டல்களிலேயே பூர்த்தி செய்து கொள்கின்றனர். தற்போது இவ்விலை அதிகரிப்பானது அவர்களின் செலவுகளை இன்னும் அதிகரிக்கிறது.
ஏற்கனவே கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியுடன் லஞ்சீட் மற்றும் பொலித்தீன், பிளாஸ்டிக் போன்றவற்றுக்கான பாவனைத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் இவற்றை அதிகம் பயன்படுத்துகின்ற ஹோட்டல் உரிமையாளர்கள் மாற்றுப் பொருட்களின் பாவனையினை காரணம் காட்டி மதிய உணவிற்கான தொகையை 10 ரூபாவால் அதிகரித்திருந்தனர். ஆனால் அவர்கள் இதுவரையில் மாற்றுப் பொருட்களை பயன்படுத்தவே இல்லை. இன்னும் அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக், ரெஜிபோர்ம் பொருட்களையே பயன்படுத்தி வருகின்றனர். இது நுகர்வோருக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இந்நிலையில் தற்போது சமையல் எரிவாயுவுக்கான விலை அதிகரிப்பு இன்னும் உணவக உரிமையாளர்களுக்கு இலாபத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சாதாரணமாக ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் மூலம் 250 அப்பங்கள், 400 கப் பால் தேநீர், 200 கப் தேநீர் என்பவற்றை தயாரிக்க முடிவதாக ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்திருக்கும் நிலையில், இதன்மூலம் பெறப்படுகின்ற வருமானமானது 16 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொள்வனவு செய்வதற்கு சமனாகும்.
இலங்கையிலுள்ள ஒவ்வொரு வீடுகளிலும் பிரதானமாக லிட்ரோ மற்றும் லாப்ஸ் சமையல் எரிவாயு பயன்படுத்தப்படுகின்றது. 98 வீதமான இலங்கையர்களுக்கு இந்நிறுவனங்களின் இலாப அளவு முக்கியமாகும். விலை ஒழுங்கு, உலக சந்தையில் விலையேற்றம், இலாப அளவு குறைவு என்பனவற்றை விலை அதிகரிப்புக்கான காரணங்களாக இந்நிறுவனங்கள் கூறுகின்றன. லாப்ஸ் 20 வீத பெருநிறுவன வரியை மாத்திரமே செலுத்துவதாகவும் இவ்வருடத்தின் மார்ச் இறுதிவரை 10.38 பில்லியன்களை வருமானமாக பெற்றதாகவும் குழு வருமானம் இன்னும் அதிகமெனவும் முதலீட்டு ஊக்குவிப்பு சபை தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
லாப்ஸ் 50,000 க்கும் மேற்பட்ட நுகர்வோரைøயும் 30 விநியோகத்தர்களையும் 5000 வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. லிட்ரோ கேஸ் 2015 ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் 72 வீதத்தினை கொண்டிருந்தமையும் முக்கியமாகும். இவ்வாறு அரசாங்கமும் பெரு நிறுவனங்களும் மாறி மாறி குறைபட்டுக் கொள்வதால் மக்களின் கஷ்டங்கள் குறைந்து விடுவதில்லை. எந்தவொரு நிறுவனங்களின் இழப்பும் அதிகமாக பொதுமக்களையே மறைமுகமாகத் தாக்குகின்றன. அதுவே சமையல் எரிவாயு விடயத்திலும் ஏற்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 1652 ரூபாவாகவும் 2011 இல் 2046 ரூபாவாகவும் 2012 இல் 2346 ரூபா, 2013 இல் 2396 ரூபா, 2014 இல் 1896 ரூபா, 2015 இல் 1346 ரூபா, 2016 இல் 1321 ரூபா, 2017 இல் 1431 ரூபா என்றளவில் காணப்பட்டு வந்துள்ளது.
இவை மாத்திரமல்லாது உணவுப் பொருட்களின் விலைகளும் கணிசமானளவு உயர்வை கண்டுள்ளன. வியாபாரிகள் தங்களுக்கேற்ற வகையில் சந்தைகளில் உணவுப் பொருட்களின் விலைகளை நிர்ணயம் செய்து கொள்கின்றார்கள். இது சட்டப்படி குற்றமென நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டாலும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இதனால் நுகர்வோர் மேலதிக செலவுகளை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கையில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களை விட கிராம மற்றும் தோட்டப்புறங்களில் வாழ்பவர்களின் தொகை அதிகமாகும். நகர்ப்புறங்களில் வசிக்கின்ற பெரும்பாலானோர் தொழில், வருமானம் என்பவற்றுக்காக குடியேறிய கிராம, தோட்டப்புறங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். எனவே தனிநபரொருவருக்கு ஒருநாள் செலவாக (உணவு உட்பட) 1000 ரூபா தேவைப்படுகிறது. (பெரும்பாலானோரின் நாள் சம்பளமே 1000 க்கும் குறைவாகவே இருக்கிறது) 4-5 பேரை கொண்ட குடும்பத்துக்கு உணவுக்காக 2000 - 2500 ரூபா வரை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மாத்திரமே தொழில் புரிவாராயின் அவர்களது நிலைமை மிக மோசமாக பாதிக்கப்படுகின்றது.
இவ்வாறான குடும்பங்களே அதிகமாக வறுமை நிலையினை எதிர்கொள்கின்றன. 2014 இல் இலங்கையில் வறுமைச் சுட்டெண் 7.6 வீதமாகவும் 2015 இல் 5.6 வீதமாகவும் காணப்பட்ட நிலையில், தற்போது இத்தொகை 12.3 வீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த வருடத்தை விடவும் 2017 செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் உணவுக்கான விலை 10.40 வீதமாக அதிகரித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு சராசரியாக இந்நிலை 6.07 வீதமாக காணப்பட்டதுடன், 2011 ஆம் ஆண்டே மிக அதிகமாக 14.30 வீதமாகவும் 2012 பெப்ரவரியில் மிகக் குறைவாக - 4.10 வீதமாகவும் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே இவ்வாறான விலையேற்றங்களை சமாளிக்கக் கூடிய வகையில் வருமானம் காணப்படாமையே வறுமை நிலை அதிகரிப்புக்கு காரணமாகும். அதேபோல வேலை வாய்ப்பற்றோரின் தொகை 2017 இல் இரண்டாவது காலாண்டில் 4.50 வீதமாக அதிகரித்துள்ளது. முதல் காலாண்டில் இத்தொகை 4.10 வீதமாக காணப்பட்டது. 1991 - 2017 வரை இலங்கையில் வேலைவாய்ப்பற்றோரின் சராசரி 8.04 வீதமாகும். எனவே இவ்வாறான விடயங்கள் விலையேற்றத்தின் காரணமாக குறைந்த மற்றும் மத்தியதர வருமானம் பெறுகின்ற மக்களை கடுமையாக பாதிக்கின்றன.
இவற்றின் எதிரொலியாக 7 அரிசி வகைகள் உட்பட 25 உணவுப் பொருட்களுக்கான விலைகளை குறைத்துள்ளதாகவும் இவற்றை லங்கா சதொச விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாமென அதன் இயக்குனர் டி.எம்.கே.பி. தென்னகோன் தெரிவித்துள்ளார். இதன்படி, வெள்ளை நாடு 74 ரூபா (ஒரு கிலோ), வெள்ளை கெக்குலு அரிசி 65 ரூபா, சம்பா 84 ரூபா, சிவப்பு கெக்குலு 75 ரூபா, சிவப்பு நாடு 80 ரூபா, வெள்ளை கெக்குலு சம்பா 90 ரூபா, சிவப்பு கெக்குலு சம்பா 88 ரூபா என்ற வகையில் அரிசி விற்பனை செய்யப்படுகின்றது. இதைவிடவும் பெரிய வெங்காயம் 125 ரூபா (ஒரு கிலோ), உள்நாட்டு உருளைக்கிழங்கு 130 ரூபா, டின் மீன் 130 ரூபா, லங்கா சதொச பால்மா 400 கிராம் 305 ரூபா, வெள்ளை சீனி, பருப்பு 107 ரூபா, மா 87 ரூபா என்றடிப்படையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஏனைய விற்பனை நிலையங்களிலும் பார்க்க இங்கு பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டிருந்தாலும் நாட்டு மக்கள் அனைவரும் லங்கா சதொச நிலையங்களுக்குச் சென்று பொருட்களை கொள்வனவு செய்யமுடியாது என்பதை அரசாங்கம் அறிந்திருக்கவில்லையா? தற்போது நாடு முழுவதும் 500 லங்கா சதொச விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இவற்றில் எத்தனை சதொச விற்பனையகங்கள் கிராம மற்றும் தோட்டப்புற மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. சில சதொச நிலையங்களில் விற்பனை செய்யப்படுகின்ற பொருட்களின் தரம் தொடர்பில் சந்தேகம் காணப்படுவதுடன், அதிக தூரங்களில் நிலையங்கள் அமையப்பெற்றிருப்பதும் பெரும்பாலான மக்கள் விலைக் குறைப்பால் பயன்பெற முடியாமைக்கு காரணமாகும். எனவே சகலரும் பயன்பெறும் வகையில் பொருட்களுக்கான விலைக் குறைப்பானது நாடு முழுவதிலுமுள்ள விற்பனையகங்கள் அனைத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டும். மாறாக மக்கள் லங்கா சதொச நிலையங்களை மாத்திரம் தேடி அலைய முடியாது. இதேபோலவே சிறுதெங்கு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தேங்காய்களை குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நடமாடும் வண்டிகளை கொண்டு விற்பனை செய்யப்படும் இத்தேங்காய்கள் இனங்கண்டுக்கொள்ளக்கூடிய வகையில் வர்ணம் தீட்டப்பட்டுள்ளதாக தெங்கு உற்பத்தி சபையின் தலைவர் கபில யகந்தாவல தெரிவித்துள்ளார். இனி வர்ணம் தீட்டப்பட்ட தேங்காய்களை மக்கள் தேடியலைய வேண்டியதுதான்.
இவற்றோடு மட்டும் விலையேற்றம் நின்றுவிடாமல் பெற்றோலிய பொருட்களுக்கான விலைகளை அதிகரிப்பது தொடர்பிலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. ஆனால் அவ்வாறானதொரு கோரிக்கை எவையும் முன்வைக்கப்படவில்லையென பெற்றோலியத் துறை அமைச்சு குறிப்பிட்டிருந்தாலும் தற்போது விற்பனை செய்யப்படுகின்ற ஒரு லீற்றர் பெற்றோலில் 16 ரூபாவும் ஒரு லீற்றர் டீசலில் 6 ரூபாவும் நட்டம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. கடந்த சில வருடங்களாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாயின் விலை பல்வேறு தருணங்களில் ஏற்ற இறக்கமாகவே இருந்துள்ளதாகவும் 2015 ஜனவரியில் 50.23 அ.டொலர், 2016 ஜனவரி 29.49 அ.டொலர், 2016 டிசம்பர் 54.63 அ.டொலர், 2017 இல் 51.49 அ.டொலர் என்ற அளவிலேயே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தற்போது பெரு நிறுவனங்களின் பார்வை எரிபொருட்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. இதற்கான விலை அதிகரிக்கப்படுமாயின், அது இன்னும் பொருட்களின் விலையேற்றத்துக்கும் வாழ்க்கைச் செலவுக்கும் வழியேற்படுத்திவிடும்.
இவ்வாறு தொடர்ச்சியாக விலையேற்றம் கண்டுவரும் பொருட்களினால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். எதிர்வரும் மாதம் வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ள நிலையில், பொருட்களின் விலை குறைக்கப்படுமா? என்பதில் அதிக சந்தேகம் நிலவுகின்றது. எனவே எதிர்வரும் தீபாவளி கூட மக்களுக்கு சோகமாகவே அமையப்போகின்றது. எனவே பொருட்களின் விலை குறையுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக