க.பிரசன்னா
மனித வாழ்வின் முன்னேற்றத்துக்கும் வருமானத்துக்கும் தொழில் அத்தியாவசியமாகின்றது. இதனால் வேலைவாய்ப்பற்றோரின் தொகை அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையை பொறுத்தளவில் கட்டுமானத் துறையில் அதிகமான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அண்மைக் காலமாக இலங்கையில் அதிகரித்துள்ள முதலீடுகள் காரணமாக கட்டுமானத் துறையானது வளர்ச்சியடைந்து வருகிறது. இவ்வாறான நிலையில் மனிதர்களால் மேற்கொள்ளப்படுகின்ற தொழில்களில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என்பன முறையாக பேணப்படுகின்றதா? என்பதில் நாம் என்றாவது கவனம் செலுத்தியிருக்கின்றோமா? இதற்கான தேவை தற்போது நமக்கு எழுந்துள்ளது.
உலகளவில் 2.3 மில்லியன் மக்கள் வேலையுடன் தொடர்புடைய விபத்துகளால் மரணமடைவதாக சர்வதேச தொழிலாளர் சபை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு 15 செக்கன்களுக்கு ஒரு தடவை தொழிலோடு சம்பந்தப்பட்ட விபத்துகள் மற்றும் நோய்களால் ஒரு தொழிலாளர் மரணிக்கின்றார். ஒவ்வொரு 15 செக்கன்களுக்கு ஒரு தடவை 153 தொழிலாளர்கள் தொழிலுடன் தொடர்புடைய விபத்துகளால் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் நாம் நம்முடைய தொழிலிலும் தொழில் செய்யும் இடங்களிலும் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பில் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
தற்போது இலங்கையின் நகரமயமாதல் செயற்பாடுகளின் விளைவாக கட்டுமானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. வானை முட்டும் கட்டிடங்களின் பெருக்கமானது நகரங்களை பாரிய முதலீட்டு வலயமாக மாற்றியிருக்கிறது. இவ்வாறான நிலையில் எத்தனை தொழிலிடங்கள் தொழிலாளர்களுக்கு முறையான தொழில் பாதுகாப்பினையும் சுகாதாரத்தினையும் வழங்கி வருகின்றது. கடந்த மே மாதம் வெள்ளவத்தையில் ஏற்பட்ட கட்டிட சரிவானது தொழில் பாதுகாப்பு தொடர்பான இவ்வாறான கேள்விகளை கேட்கத் தூண்டுகின்றது. அலுவலகத் தொழிலை விடவும் பன்மடங்கு ஆபத்தானவையாக இந்த கட்டுமானத் தொழில் இருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.
தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் கீழ் வருகின்ற தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய கல்வி நிறுவகமானது தொழில் புரியும் இலங்கையர்கள் தமது தொழில் செய்யும் சூழலில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தகவல்கள், பயிற்சிகள், கல்வி, பரிசோதனை, கணிப்பீடு, தீர்வு மற்றும் முகாமைத்துவ திட்டம் என்பவற்றை வழங்குகின்றது. உலகம் முழுவதும் 2.3 மில்லியன் தொழிலுடன் தொடர்புடைய மரணங்கள் ஏற்பட்டாலும் இதில் இலங்கையின் பங்கு மிகக் குறைவென இந்நிறுவகத் தலைவி கலாநிதி சம்பிக்க அமரசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் கட்டுமானத் துறையில் ஏற்படும் பாதிப்புகளை மாத்திரம் நாம் கவனத்தில் கொள்கிறோம் என்பதில் உண்மையில்லை. இதில் வீதி விபத்துகளையும் அடையாளப்படுத்த வேண்டும். தொழில் செய்கின்ற போது ஏற்படுகின்ற மரணம் மற்றும் காயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். வீதி விபத்துகளில் பாதிக்கப்படுகின்ற சாரதிகளும் தொழிலுடன் தொடர்புடைய இழப்புகளில் கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும். அவ்வாறெனில் இலங்கையில் வீதிப் பாதுகாப்பு போதியளவு முன்னேற்றம் ஏற்படவில்லையென்றே கொள்ள வேண்டும்.
இலங்கையில் வருடமொன்றுக்கு வாகன விபத்தினால் 3000 பேர் உயிரிழப்பதுடன் 8000 பேர் காயமடைகின்றனர். இவ்வாறான வாகன விபத்துகளில் உயிரிழக்கும் 3000 பேரில் 1115 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துகளிலேயே உயிரிழந்துள்ளதாகவும் 660 பேர் தலைக்கவசம் அணியாத காரணத்தால் விபத்துகளில் உயிரிழந்தவர்களாகவும் இருக்கின்றனர். தற்போது நாட்டில் 62 இலட்சம் வாகனங்கள் பாவனையில் உள்ளன. இவற்றில் 36 இலட்சம் மோட்டார் சைக்கிள்களும் உள்ளடங்கும். நாட்டில் பாவனையிலுள்ள 62 இலட்சம் வாகனங்களில் 56 இலட்சம் வாகனங்களே பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 6 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்படவில்லை.
தற்போது அதிகமான தொழில்களுக்கு மோட்டார் வாகனம் செலுத்துவதற்கான அனுமதிப் பத்திரம் தகைமையாக கோரப்படுகின்றது. அதேபோலவே சாரதி தொழிலும் அமைந்திருக்கின்றது. எனவே வீதி விபத்துகளும் தொழிலுடன் தொடர்புடைய விபத்துகளில் உள்ளடக்கப்படுகின்றன. அத்தோடு நஞ்சருந்துதல், சண்டை, நீரில் மூழ்குதல், வன்முறை, தற்கொலை மற்றும் வீட்டு வன்முறை என்பவற்றாலும் பலர் உயிரிழப்பதையும் அவதானிக்க முடிகிறது. இவற்றுக்கு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இன்மையே பிரதான காரணமாகும். சுகாதார அமைச்சின் தகவல்களின் படி மன அதிர்ச்சி மற்றும் உடல் மீதுள்ள காயங்களால் வருடாந்தம் 600000 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே இவ்வாறான பாதிப்புகள் எதிர்காலத்தில் இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. நகரமயமாக்கல், கைத்தொழில் மயமாக்கம் இயந்திரமயமாக்கம், உள்கட்டமைப்பு அபிவிருத்தி என்பவற்றின் காரணமாக மனிதர்களுடைய வாழ்க்கை முறை மாற்றமடைந்து வருவதால் இவை தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். கைத்தொழில் துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பில் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு அதிகம் கவனம் செலுத்த வேண்டும். தொழில் சுமை காரணமாகவும் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படுவதும் சமீப காலத்தில் அதிகரித்துள்ளது.
இலங்கையில் தொழில் படையானது 8.7 மில்லியனாக காணப்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகார சபைகள் தொழிற்படைக்கு உதவிகளை வழங்க முன்வர வேண்டும். அவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதிபடுத்த வேண்டும். இலங்கையானது தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பிலான முறையான தேசிய தரம் வாய்ந்த வழிகாட்டிகளை கொண்டிருக்கவில்லை.சமீப காலத்தில் 1500 பாதுகாப்பு அதிகாரிகள் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனத்தினால் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள். தொழிலாளர்கள் வேண்டிக் கொண்டால் அவர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். ஆனால் இதற்கு கைத்தொழிற்துறையின் முதலாளிமார்களே பொறுப்பு கூற வேண்டும்.
கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் கட்டுமானத் துறை மற்றும் கட்டிட அபிவிருத்தி என்பன அதிகரித்து வருகின்ற நிலையில் பாதுகாப்பு அதிகாரிகள் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர். தற்போது கட்டுமானத் துறையில் தொழில் புரிகின்ற தொழிலாளர்களில் எத்தனை பேர் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பில் முறையான பயிற்சிகளை பெற்றிருக்கின்றார்கள். தொழிலாளர்களுக்கு இவற்றில் ஆர்வம் ஏற்பட்டாலும் இலாப நோக்கை கருத்தில் கொண்டு முதலாளிமார் இதற்கு அனுமதிப்பதில்லை.
தொழிலாளர்களுக்கு சுற்றாடலில் தூசு மற்றும் சத்தம் என்பன பாரிய பிரச்சினைகளாக இருக்கின்றன. இவை தொழிலாளர்களுக்கு நீண்டகால சுகாதார கேடுகளை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. எனவே அரச அதிகார சபை தமது அதிகாரத்தினை கொண்டு தொழிலாளர்களுக்கான பாதுகாப்பினை பெற்றுக் கொடுக்க வேண்டும். பெரும்பாலான தொழிலாளர்கள் கட்டுமான பணியிடங்களில் சப்பாத்து மற்றும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக வலியுறுத்தப்பட்டாலும் அவற்றை அலட்சியப்படுத்தி செயற்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இவ்வாறானவர்களுக்கு எவ்வாறான தீர்வுகளை முன்வைக்கலாம்?
ஒவ்வொரு வருடமும் 250 மில்லியன் விபத்துகள் தொழிலாளர்கள் தொழிலுக்கு வருகைத் தராமையால் தவிர்க்கப்படுகின்றது. அண்ணளவாக வருடமொன்றுக்கு வீதி விபத்துகள் -999000, யுத்தம் - 502000, வன்முறைகள் -563000 மற்றும் எச்.ஐ.வி. எயிட்ஸ் - 312000 என்பவற்றின் மூலம் மரணங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான நிலை தொடருமாயின் 2020 ஆம் ஆண்டளவில் தொழிலுடன் தொடர்புடைய நோய்த் தாக்கம் இரட்டிப்புமடங்காக அதிகரிக்குமென தெரிவிக்கப்படுகின்றது. மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பா, சீனா, இந்தியா ஆகிய கைத்தொழில் நாடுகளில் இவ் இழப்பு விகிதம் அதிகமென சர்வதேச தொழிலாளர் சபை தெரிவித்துள்ளது.
மேலும் சோர்வு, உளவியல் பிரச்சினைகள் ,சுவாசம் மற்றும் ஒவ்வாமை பிரச்சினைகள் என்பன ஏற்படவும் வாய்ப்பிருக்கின்றது. தொழிலுடன் தொடர்புடைய உயிரிழப்புகள் மற்றும் நோய்களால் ஆபிரிக்கா, அரபு நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகள் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியினை விடவும் அதிகமான இழப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நோய்களால் தொழிலுக்கு சமூகம் தராமை, சுகவீன சிகிச்சைகள், அங்கவீனமாதல் மற்றும் இழப்பீடுகள் என்பவற்றுக்கு உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 வீதத்தினை செலவு செய்ய வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.
இலங்கையில் 1995 ஆம் ஆண்டு கட்டுமானத் துறையின்பெறுமதி 15 பில்லியனாக இருந்தது. 2015 இல் இது 200 பில்லியனாக அதிகரித்திருப்பதாகவும் இது 1233 சதவிகித அதிகரிப்பாகுமென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.ஆனால் இத்துறையில் பயிற்சி பெற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 8 வீதத்தால் மட்டுமே அதிகரித்திருக்கிறது. தற்போது தேசிய தொழில் தகைமை பயிற்சிகள் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரத்துக்கான தகுதியாக பார்க்கப்படுவதால் இளைஞர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் இலவசமான பயிற்சிகளை பெறுவதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே கட்டுமானத்துறை அபிவிருத்தி அதிகார சபை, தொழிற்பயிற்சி அதிகார சபை, தொழிற் திணைக்களம், வீதி பாதுகாப்பு அதிகார சபை என்பன தொழிலாளர்கள் தொழில் தொடர்பில் எதிர்நோக்குகின்ற சவால்களை களைய ஆவன செய்தல் வேண்டும். கட்டிடங்களுக்கு முன்னால் பாதுகாப்புக்கு முதலிடம் என பதாகையை வைத்து விட்டு பச்சைநிற வளைகளால் கட்டிடத்தை சுற்றி மறைத்துவிட்டால் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கிடைத்துவிடுமென்பது அறியாமையாகும். இதனால் முதலில் தொழிலாளர்கள் பயிற்சி பெற்றவர்களாகவும் பாதுகாப்பாக வேலை செய்யக்கூடிய சூழலை கொண்டிருப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
அதிக ஊதியம் வழங்கப்படுகின்றது என்பதாலும் இலகுவாக தொழிலை பெற்றுக் கொள்ளலாம் என்பதாலும் அதிகமானோர் கட்டுமானத்துறையை தேர்ந்தெடுத்தாலும் அவற்றுக்கான முறையான தொழில் பயிற்சிகளையோ தொழில் பாதுகாப்பையோ அவர்கள் கொண்டிருப்பதில்லை. இதனாலேயே பல இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. எனவே எதிர்கால அபிவிருத்திகளை கருதி தொழிலாளர்களுக்கு தேவையான தகுந்த துறைகளில் பயிற்சிகளை வழங்கி தொழிலுடன் தொடர்புடைய ஆபத்துகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக