அவற்றிலும் ஐரோப்பாவின் கரையோர நாடுகளான இத்தாலி, கிரிஸ், மசிடோனியா எல்லை ஆகிய பகுதிகளில் அதிகளவான குடியேறிகள் ஐரோப்பாவுக்குள் பயணிக்கின்றனர். உலக நாடுகள் குறிப்பாக வல்லரசு நாடுகள் ஏற்படுத்துகின்ற பதற்றம், யுத்த நடவடிக்கைகள் சமகாலத்தில் அதிகளவானோரை செல்வந்த நாடுகளுக்கு பயணிக்க வைத்துள்ளது. அவை மட்டுமல்லாது ஆட்கடத்தல்காரர்கள் மூலமாகவும் குடியேறிகள் கடல் எல்லைகளை ஊடுருவுவதுடன் சில வேளை கடலிலேயே தத்தளிக்கவிடப்படுகின்றனர்.எவ்வாறாயினும் ஐரோப்பிய நாடுகள் இச்சவால்களை எதிர்கொள்ளவேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறிகளாக சென்றவர்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பகிர்வது தொடர்பான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன. அத்தீர்மானத்தினையும் மேற்படிநாடுகள் மீள்பரிசீலினைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் தோன்றியிருக்கிறது. குறிப்பாக மசிடோனியா எல்லைப்பகுதி திறந்துவிடப்பட்டுள்ளமையால் தினந்தோறும் அதிகளவான மக்கள் மசிடோனிய எல்லைப்பகுதியில் குவிகின்றனர். இவர்களில் அதிகமானோர் சிரியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
மசிடோனிய எல்லையூடாக பயணிக்கும் மக்கள் ஹங்கேரிக்குச் சென்று பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் வடக்கு நாடுகளுக்குப் பயணிக்கும் நோக்குடன், செர்பியாவிலிருந்து ரயில் மற்றும் பஸ்கள் மூலம் பயணிக்கின்றனர். இருப்பினும் மசிடோனிய எல்லையில் பொலிஸாரின் அரணை தகர்த்துக்கொண்டு உள்நுழைய முற்பட்டவர்களால் கலவரம் ஏற்பட்டதுடன் பொலிஸார் தடியடி, கண்ணீர்குண்டு பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ஹங்கேரி தற்போது எல்லையினை முள்வேலிகள் கொண்டு நிரப்பி வருகிறது. இதனால் எதிர்வரும் நாட்களில் குடியேறிகளின் வருகையை மட்டுப்படுத்தலாம் என்ற நோக்கில் செயற்படுகிறது. அதனாலேயே தற்போதைய சூழ்நிலையில் மசிடோனிய எல்லை வாயிலில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். தற்போது மசிடோனியாவின் கிரிஸ் எல்லையில் ஏற்பட்டுள்ள நெருக்குதல்கள் காரணமாக குழந்தைகள், பெண்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுவெளியில் நாட்களை கடத்தவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் தஞ்சப்படகுகள் மூலம் கிரிஸ் நாட்டுக்கு சுமார் 160,000பேர் நுழைந்துள்ளனர். கடந்த மாதம் மட்டும் 50,000 பேர் இவ்வாறு கிரிஸை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிரேக்கம் தற்போது கடன் நெருக்கடியினால் கிரேக்க மக்களையே பாதுகாக்க தவறியிருக்கும் பட்சத்தில் குடியேறிகளின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. குடியேறிகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், குடிநீர்வசதிகள், தங்குமிடங்கள் என சகலவற்றிலும் குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலான குடியேறிகள் ஆட்கடத்தல்காரர்களுக்கு பெருந்தொகையான பணத்தை செலவழித்தே இவ்வாறு சென்றாலும் இடைவழியில் அவர்கள் மரணிப்பதும் கொடுமையானதே.
கடந்த ஆண்டுகளை விடவும் 2015 ஆம் ஆண்டு அகதிகளாக வருவோரில் அதிகமானோர் இறப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிகிறது. மத்திய தரைக்கடலே அதிகமான குடியேறிகளை கொல்லும் களமாகவும் இருக்கிறது. இவ்வருடம் மட்டும் சட்டவிரோத குடியேறிகளில் 30,000 பேர் வரையானோர் உயிரிழப்பதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த அதிகமானோரே இவ்வாறு குடியேறிகளாக வருகை தருகின்றனர். கடந்த ஜூலை மாதம் மாத்திரம் 50, 800 பேர் மத்தியத் தரைக்கடல் தீவுப்பகுதிகளை வந்தடைந்துள்ளதாக உலக அகதிகள் சபை தெரிவித்துள்ளது.
இந்நிறுவனமே இவ்வருடத்தில் 30,000 பேர் வரை இறப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பில் எதிர்வு கூறியுள்ளது. இவ்வருடத்தில் சுமார் 1722 வடஆபிரிக்கர்கள் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். கடந்தாண்டு சட்டவிரோத குடியேறிகளில் சுமார் 3271 பேர் உயிரிழந்திருந்தனர். இத்தொகையானது இவ்வருடத்தின் ஆரம்ப மாதங்களிலேயே எட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது மோசமான குடிபெயர்வின் காரணமாக உயிரிழப்போரின் தொகை அதிகரிக்குமென தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சட்டவிரோத குடியேறிகளின் தொகையினை குறைப்பதற்கு ஆட்கடத்தல் காரர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத பயணங்களை தடுக்க ஆட்கடத்தல்காரர்களை ஒழிப்பதில் மட்டும் வெற்றிகாணமுடியாது. சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற போர், வன்முறைகள், வறுமை, சுகாதாரம் என சகலவற்றிலும் அபிவிருத்தியை காணமுயலவேண்டும். வேலைவாய்ப்பு, வருமானம் என்பவற்றை சம்பந்தப்பட்ட நாடுகள் உறுதிப்படுத்தவேண்டும். இவற்றை சீர்செய்யும் வரை எந்தவொரு வல்லரசாலும் சட்டவிரோத குடியேறிகளின் தொகையினை குறைத்துவிடமுடியாது.
க.பிரசன்னா
30.08.2015


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக