கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

6 ஜூலை, 2015

ஏ.ஐ.ஐ.பி. என்று அழைக்கப்படவுள்ள ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி சீனாவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. “ஆசிய நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளியல் நிலை ஒன்றினைப்பை ஊக்குவிப்பதும் சீன மக்கள் குடியரசிற்கும் ஆசிய நாடுகளுக்குமிடையே கூட்டுறவை வளர்ப்பதும்’ என்ற நோக்கத்திற்கமைவாக இவ்வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், மறைமுகமாக சீனாவின் இராஜதந்திர உறவுகளை அங்கத்துவ நாடுகளுக்கிடையேயும், சீனாவின் பட்டுப்பாதை, முத்துமாலை திட்டத்தை தடைகளின்றி விஸ்தரிக்கவும், தனது ஆதிக்கத்தை ஆசியாவில் நிலைநாட்டவும் இவ்வங்கி பயன்பட்டு வரும் என சில நாடுகள் கருதுகின்றன.

குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இவ்வங்கியின் தோற்றத்திற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன் அங்கத்துவம் பெறவும் மறுத்துள்ளன. ஆனால், சீனாவின் தொலைநோக்கு திட்டங்களை வலுப்படுத்துவதற்கான முதற் சமிக்ஞையாக ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி அமைந்துள்ளது. தற்போது வரையும் இதில் 50 நாடுகள் உத்தியோக பூர்வமான அங்கத்துவத்தைப் பெற்றுள்ளன. இந்த வங்கியின் மிகப் பெரிய முதலீட்டாளராகவும் தலைமையகத்தையும் சீனாவே கொண்டிருக்கிறது.

இதற்கான நிகழ்வுகள் அண்மையில் சீனாவின் பெய்ஜிங் நகரில் இடம்பெற்றது. சீனாவினையடுத்து இந்தியா, ரஷ்யா, ஜெர்மனி, தென்கொரியா ஆகிய நாடுகள் பெரிய முதலீட்டாளர்களாக இருக்கின்றன. இவ்வங்கியின் நிர்வாக தரம் குறித்த கவலையினாலேயே அமெரிக்காவும், ஜப்பானும் விலகியுள்ளதாக அறிவித்துள்ளன. ஆனால், தென்சீனக்கடலில் அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் சீனாவால் விடப்படும் அச்சுறுத்தல் இதன் மூலம் மேலும் வலுப்படலாம் என்பதை முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது. சீனாவின் எண்ணப்படி இதனை வங்கியென்பதைவிட பொருளாதார வல்லரசு நாடுகளுக்கெதிரான கூட்டமைப்பாகவே பார்க்கலாம்.

மேலும், இவ்வங்கியானது உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுக்கு சவால் விடக்கூடிய வகையில் அமையப் பெற்றுள்ளமையும் முக்கியமாகும். ஆசிய அபிவிருத்தி வங்கியானது ஆசியாவிலுள்ள 67 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டதாகும். 1966ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாடடின் மணிலா நகரில் நிறுவப்பட்டது. இதன் தற்போதைய தலைமை பொறுப்பு ஜப்பானிடம் உள்ளது. அதேபோல் சர்வதேச நாணய நிதியமானது, அமெரிக்க டொலர் ஒழுங்குடமையை பிரதானமாக பாதுகாப்பதற்காக 1945ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. எந்த ஒரு முடிவும் 85 வீதம் அதன் செயலாக்க குழுவின் ஆதரவுடனேயே அமுல் செய்யப்பட வேண்டுமென்பதுடன் இதில் 18 வீத கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அமெரிக்காவே கொண்டுள்ளது. 188 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இந்நிதியத்துக்கு எப்போதும் ஐரோப்பியரே தலைமை தாங்க முடியும். அண்மையக் காலங்களில் இந்நிதியத்தில் கடன் பெறுவதையும் பல நாடுகள் கடனை திருப்பி செலுத்தி வருவதாலும், இதன் வருமானம் குறைவடைந்துள்ளதுடன், செல்வாக்கும் குறைந்துள்ளது.

மேலும், உலக வங்கியானது வளர்ந்து வரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன் வழங்கும் ஓர் அமைப்பாகும். 188 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இவ்வங்கியின் தலைமையகம் அமெரிக்காவில் அமைந்துள்ளது என்பதுடன் ஒரு அமெரிக்கரே இதற்கான தலைமை பொறுப்பை பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு ஆசிய நாடுகளை அதிகமாக கொண்ட உலகில் பாரம்பரிய நிறுவனங்கள் காணப்படுவதோடு, அதன் தலைமைத்துவமானது குறிப்பிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளிடையே காணப்படுவதும், அதிக முதலீடுகளை கொண்டிராமையும் இவ்வாறான வங்கிகள் தோற்றம் பெற காரணமாகின்றன. ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தோற்றமும் மேற்குறிப்பிட்ட வங்கிகளுக்கு சவால் விடுவதாகவே இருக்கின்றன. இதன் செயற்பாடுகளின் ஆரம்பத்தின் பின் வளர்ச்சியினை எம்மால் உணரக்கூடியதாக இருக்கலாம்.

அக்டோபர் 2, 2013ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் ஜனாதிபதி சுசிலே பாம்பாங் யுதயோனோவுடன் ஜகார்த்தாவில் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆசியாவின் உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கிக்கான அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து சீனாவின் பன்னாட்டு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிகுன் முன்னேற்பாடு தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். அமெரிக்கா மற்றும் ஜப்பானின் ஆதிக்கம் கொண்ட உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களுக்கு மாறாக இப்புதிய வங்கியை ஆரம்பிக்க சீனா ஆர்வம் கொண்டிருந்தது.

இதனையடுத்து 2013 ஒக்டோபர் 24ஆம் திகதி சீன தலைநகர் பெய்ஜிங்கில் வங்கி அமைப்பதற்கான முன்னோட்ட உடன்பாட்டில் பங்களாதேஷ், புரூணே, கம்போடியா, சீன மக்கள் குடியரசு, இந்தியா, கஸகஸ்தான், குவைத், லாவோஸ், மலேசியா, மங்கோலியா, மியன்மார், நேபாளம், யேமன், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கட்டார், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, உஸ்பெஸ்கித்தான், வியட்நாம் போன்ற நாடுகள் கைச்சாத்திட்டிருந்தன. 2015ஆம் ஆண்டு பட்டய பேச்சு வார்த்தைகளின் பின்பு தற்போது வங்கி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் இறுதிப்பகுதியில் வங்கி தனது செயற்பாட்டை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கியின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வில் அவுஸ்திரேலியா முதலாவது கையெழுத்தினை பதிவு செய்திருந்தது. இந்த வங்கிக்கான முதலீடு 800 பில்லியன் டொலர்களாகும். இவ்வாண்டின் இறுதியில் மேலும், 7 நாடுகள் இவ்வங்கியுடன் இணைந்து கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது. வங்கி ஆரம்பிப்பதற்கான முதலீட்டில் 75 வீதத்தினை ஆசிய நாடுகளே வழங்குகின்றன என்பதுடன் ஒவ்வொரு நாடும் தங்களது பொருளாதார நிலைமைக்கேற்ப முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளன.

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் அதிகபட்சமாக சீனா 30.34 வீத முதலீட்டையும் இந்தியா 8.52 வீத முதலீட்டையும் ரஷ்யா 6.66 வீத முதலீட்டையும் கொண்டிருக்கின்றன. இவ்வங்கியின் தோற்றமானது ஆசியாவின் வளர்ச்சியையும் சீனாவின் பொருளாதார வல்லமையையும் மேலும் அதிகரிக்கலாம் என எண்ணப்படுகிறது. அத்தோடு சர்வதேச நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் காணப்படும் நிதிநெருக்கடி நிலைமையில் அதிக தொகையினை முதலீடாக கொண்ட ஒரு வங்கி தோற்றம் பெறுவதானது சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுள்ளது.

தற்போது வங்கியின் உறுப்பு நாடுகளில் அமெரிக்க சார்பு கூட்டணியும் இடம்பெற்றுள்ளமை முக்கியமாகும். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் சார்பு நிலையை குறைப்பதே வங்கியின் பிரதான நோக்கமாக இருக்கிறது. இவ்வங்கியின் பொது செயலாளராக ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னாள் துணை தலைவரும், சீனாவின் துணை நிதியமைச்சருமான இன்லிகுன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், பதவிக்காலம், தலைமையேற்கப் போகும் நாடுகள் தொடர்பிலான உத்தியோக பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இவ்வங்கியின் தோற்றம் எதிர்கால பூகோள அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளை இனங்காண முடிகிறது.

க.பிரசன்னா
05.07. 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக