கடந்த வருடம் முதல் இவ்வருடம் மத்தி வரையில் ஆசிய நாடுகள் மிக மோசமான விபத்துக்களைச் சந்தித்துள்ளன. அவற்றில் தாய்வான் விமான விபத்து, சீன கப்பல் விபத்து என்பவற்றோடு தற்போது இந்தோனேஷிய இராணுவ விமான விபத்தும் இணைந்துள்ளது. கடந்த ஜூன் 30 ஆம் திகதி 12 சிப்பந்திகள் 109 பயணிகளுடன் சென்ற ஏ.இ-130 ஹெர்குலஸ் விமானமானது சுமத்திரா தீவின் மேதன் நகரிலிருந்து புறப்பட்டு 2 நிமிடங்களில் 5 கிலோமீற்றர் தூரத்திலுள்ள குடியிருப்பு பகுதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த 121 பேருடன் குடியிருப்பு பகுதிகளில் இருந்த 22 பேருமாக 143 பேர் இதுவரையும் உயிரிழந்திருப்பதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.
விமானம் விபத்துக்குள்ளாகும் முன் விமானி மீண்டும் விமானத்தை விமான தளத்தில் தரை இறக்குவதற்கான அனுமதியை பெற்றுள்ளார். ஆனால் அதிக எடையை கொண்ட விமானமானது சடுதியாக வலப்பக்கம் திரும்ப முற்படுகையிலேயே விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. கடந்த 6 மாதங்களில் இந்தோனேஷியாவில் இடம்பெற்ற 2 ஆவது விமான விபத்தாக இது காணப்படுகின்றது. அத்தோடு வட சுமத்ரா பகுதியில் இடம்பெற்ற மூன்றாவது விமான விபத்தாகவும் இருக்கிறது.
இதற்கு முன் மண்டெலா ஏயார்லைன்ஸ் விமானம் 091, இந்தோனேஷிய எயார் ஏசியா விமானம் 8501, கரூடா இந்தோனேஷிய விமானம் 152 என்பன இப்பகுதியில் ஏற்கனவே விபத்துக்களைச் சந்தித்துள்ளன இவ்விபத்துக்கான காரணம் விமானியின் நடவடிக்கை என்பது தற்போது வரையுமான செய்தி. இந்தோனேஷிய தேசிய மீட்பு குழுவின் அறிக்கைகளின் படி 135 பேரின் உடல்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளதுடன், 6பேரின் உடல்கள் பகுதியளவில் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இவ்விமானமானது இராணுவவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்றுள்ளது. பொதுவாக இராணுவ விமானங்களே அவர்களது குடும்பத்தினரின் பயணங்களுக்காக இந்தோனேஷியாவில் பயன்படுத்தப்படுகிறன.
இ-130 ஹெர்குலஸ் விமானமானது 50 வருடகால பழைமை வாய்ந்தது என்றாலும் சிறந்த தரத்திலேயே- இருந்ததாகவும், விமானத்தின் இயந்திர கோளாறே விமானத்தை விபத்துக்குள்ளாக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. விபத்து இடம்பெற்ற பகுதியானது பொது மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியாகும். இதனால் அங்கிருந்த தொடர்மாடி கட்டிடமானது முழுமையாக சேதமடைந்திருக்கிறது. விமானம் செவந்தோ விமான தளத்திலிருந்தே தனது பயணத்தை ஆரம்பித்திருக்கிறது.
இவ்விமானத் தளத்தைச் சுற்றி 2 கிலோமீற்றர் அளவில் நகர குடியிருப்பு பகுதிகளே அமைந்துள்ளன. பொதுவாக விமான தளம் அல்லது விமான நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் அமைக்கப்படுவது ஒழுங்குவிதிகளை மீறிய செயலாகும். ஆசிய நாடுகளில் பொதுவாகவே மிகவும் ஆபத்தான பல விமான நிலையங்கள் காணப்படுகின்றன. அவை விமான நிலையத்தோடிணைந்த குடியிருப்பு பகுதிகளை கொண்டுள்ளவையாகும். தற்போது விபத்தில் சிக்கிய விமானத்தில் கறுப்பு பெட்டிகள் எதுவும் இணைக்கப்பட்டிருக்கவில்லை என்பதோடு கடந்த முதலாம் திகதி விபத்து பகுதியில் மீட்கப்பட்ட விமானத்தின் இ-ரு இயந்திரங்களும் மேலதிக விசாரணைக்களுக்காக ஜகார்த்தாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இந்தோனேஷியாவின் தேசிய பயணபாதுகாப்பு முகவரமைப்பு தெரிவித்துள்ளது.
இ-130 ஹெர்குலஸ் விமானங்களானது அமெரிக்க தயாரிப்புகளாகும். நான்கு-- இயந்திரங்களை கொண்ட இவ்விமானங்கள் இந்தோனேஷியாவின் விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளதுடன் அவை விமானப்படை வீரர்களை ஏற்றிச் செல்வதற்கும், தளவாடங்களை எடுத்துச் செல்வதற்கும் இந்தோனேஷிய அரசால் பயன்படுத்தப்படுகின்றது. தொடர்ச்சியாக ஆசியாவில் இடம்பெற்ற அனைத்து விமான விபத்துக்களிலும் அமெரிக்க தயாரிப்பு விமானங்களே சிக்கியுள்ளன. ஆனால் அவையே விமான விபத்துக்கான காரணமென்று கூற முடியாது. திடீரென விமான இயந்திரங்களில் ஏற்படும் கோளாறுகள், காலநிலை மாற்றம், விமானியின் அசமந்தப் போக்கு என்பவற்றையும் காரணங்களாக கூறலாம். கடந்த மார்ச் மாதம் தாய்வானில்- இடம்பெற்ற விமான விபத்துக்கு விமானி தவறுதலாக இயந்திரத்தை நிறுத்தியதே காரணமென கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில் விமான நிறுவனங்கள் இன்னும் அதிகமாக விமானிகளின் திறமைகளில் கவனம் செலுத்தவேண்டிய நிலை தோன்றியுள்ளது. எனவே விமானப் போக்குவரத்தின் தேவை- இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துள்ள நிலையில் எதிர்காலத்தில் அவற்றை இன்னும் வலுப்படுத்துவது சிறந்ததாகும்.
க.பிரசன்னா
05.07. 2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக