கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

30 ஜூன், 2015

நிதி நெருக்கடியில் கிரேக்கம்


ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தற்போதைய தலைவலியாக இருக்கிறது கிரேக்கத்தின் நிதிநெருக்கடி. பல ஆண்டுகாலமாக குறிப்பாக 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னான காலப்பகுதியில் கிரேக்கம் மிகப்பெரிய நிதிநெருக்கடியை சந்தித்து வந்துள்ளது. தனியார்மயம்- சோசலிஷம் என கலவையான பொருளாதார முறைமையையே கிரேக்கம் கொண்டுள்ளது. இங்கு அரசை தங்கி வாழ்வோரின் தொகை அதிகரிப்பே நிதி நெருக்கடிக்கான பிரதான காரணமாக இருக்கிறது. தற்போது நடைபெற்று முடிந்துள்ள யூரோ வலய நாடுகளின் நிதி அமைச்சர்களின் கூட்டத்தில் கிரேக்கத்திற்கு உதவுவதற்கான சமிக்ஞை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வமர்வில் #கிரேக்கத்தின் கடன்நெருக்கடி, அதனால் ஏற்பட்டபாதிப்புகள், பொருளாதார பிரச்சினைகளை தவிர்த்தல், யூரோ வலய நாடுகளின் நிதி பாதுகாப்பு என்பன தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தன. யூரோ நாடுகள் இணைந்து கிரேக்கத்துக்கு 2500கோடி யூரோ கடன் அல்லது உத்தரவாத கடன் வழங்குவதுடன் இதன் மூலம் கிரேக்கம் நிதி திரட்டலில் சிக்கி, கெடுமுடிந்த கடனை திருப்பி செலுத்த முடியாத பட்சத்தில் அதற்கு யூரோ நாடுகள் அவசர மீட்பு உதவி வழங்கும். அவ்வாறு வழங்கப்படும் தொகையானது கிரேக்கம் 2010 ஆண்டு செலுத்தவேண்டிய கடன்தொகையில் 50 சதவீதத்திற்கு சமனாகும். அத்தோடு கிரேக்கமானது கடந்த மார்ச் முதல் முதுமைக்கால ஓய்வூதியத்தை முடக்குவது, ஆடம்பரப் பொருட்களுக்கான வரி அதிகரிப்பு என்பன போன்ற பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 480கோடி யூரோ வருமானமாக கிடைக்குமென கிரேக்கம் மதிப்பிட்டுள்ளது. தற்போது யூரோ வலய நாடுகள் மேற்கொண்டுள்ள அதிரடி திட்டங்களின் மூலம் கிரேக்கம் ஓரளவு நிதி நெருக்கடியை சமாளிக்கும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு கிரேக்கத்தின் நிதிநெருக்கடி காலங்காலமாக தொடர்வதற்கு யார் பொறுப்பு? அவ்வாறு தொடர்ந்த நெருக்கடிகளை ஏன் கிரேக்க அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை?
இதற்கு கிரேக்க மக்களும் ஒரு காரணமென்பது வெளிப்படையான உண்மை. தற்போது இந்நிலைமை கிரேக்க நாட்டினையே பிறருக்கு விற்கும் சூழலை தோற்றுவித்துள்ளது.கிரேக்கத்தின் நிதிநிலைமைகளை சாதகமாக பயன்படுத்திக்  கொண்டவர்களில் கிரேக்க மக்களும் உள்ளடங்குவர். கிரேக்கத்தில் அரச ஊழியர்களாக  பணியாற்றுபவர்கள் சிறிது கால இடைவெளியில் ஓய்வுபெறுவது வழமையாக இருக்கிறது. காரணம் ஊதியத்துக்கு இணையான ஓய்வூதியத் தொகையை கிரேக்கம் ஊழியர்களுக்கு வழங்குவேதயாகும்.
அத்தோடு கிரேக்கத்தில் பொது ஊழியர்களுக்கான ஊதியத்தொகை அதிகமென்பதுடன் 1999-2007 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இவர்களின் ஊதியத் தொகை 50 வீதமாக அதிகரித்திருந்தது. இதனால் ஊழியர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு தொழிலில் நீடித்து ஓய்வு பெற்று ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறை இருந்தது. இது கிரேக்கத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை தோற்றுவித்தது. இதனால் கிரேக்க அரசாங்கத்தின் #வருமானம் பெரிதாக அதிகரிக்கவில்லையென்பதுடன் இங்கு இடம்பெறும் வரி ஏய்ப்பினையும் கிரேக்கம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இவ்வாறான நிலையிலேயே 2004 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை கிரேக்கம் வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

இது கிரேக்கத்தின் நிதிபற்றாக்குறையை துரிதமாக அதிகரிக்க வழி செய்துவிட்டது. இதனால் கிரேக்கம் பெற்ற கடனையே திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதுடன் வேலையற்றோரின் தொகை அதிகரித்ததோடு #ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதால் ஓய்வூதியம் பெறுவோரின் நிலை மோசமானது. இதனால் நிபந்தனைகளுடன் ஐரோப்பிய ஒன்றியம்  உதவுவதாக அறிவித்தது. இதன் மூலம் அரசின் செலவுகள் குறைக்கப்பட்டதோடு கல்வி, சுகாதாரம் என்பவற்றுக்கான நிதியினையும் கிரேக்கம் குறைக்கும் நிலைக்கு ஆளானது.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பலம் பொருந்திய நாடான ஜேர்மனி, 10 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் வழங்க முன்வந்தது. ஆனால் கிரேக்கம் தமது துறைகளனைத்தையும் தனியார் மயப்படுத்தவேண்டுமென்ற முக்கிய நிபந்தனையை விதித்திருந்தது. இதனை ஏற்றுள்ள கிரேக்கம் தமக்கு சொந்தமான 70,000 சொத்துக்களை தனியாரிடம் விற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில் மிகப்பழைமை வாய்ந்த கிரேக்க மாளிகைகள், கேளிக்கை விடுதிகள், ரெட் ஐலாண்ட் தீவுகள், கடற்கரைகள், தீவுகள் என அனைத்தையும் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

கிரேக்கத்தில் 100 இல் 25 பேர் வேலையில்லா பிரச்சினையில் சிக்கியுள்ளதுடன், தொழில் செய்வோரில் 50 வீதமானோருக்கு பாதி தொகையே ஊதியமாகவும் வழங்கும் இக்கட்டான நிலைக்கு கிரேக்கம் தள்ளப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய கடன் நெருக்கடியை சந்தித்த நாடாக கிரேக்கம் மாறிப்போய்விட்டது. முறையான அணுகுமுறைகள் இல்லாமையே இதற்கு காரணம். தற்போதைய சூழ்நிலையில் இந்நிலைமாற நீண்டகாலம் ஆகலாம்.

க.பிரசன்னா
28.06. 2015



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக