தற்போது உலகம் வெப்பமயமாகி வருவதால் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வரட்சியும் பஞ்சமும் ஏற்படுமென #உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் வழமையான நாட்களில் கூட அதிகளவான மக்கள் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் ஏங்கும் நிலையில் உலக வங்கியின் இவ்வறிவிப்பானது மேலும், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் 20, 30 ஆண்டுகளில் உலக வெப்ப நிலையானது 2 டிகிரி செல்சியஸ் வரை உயருவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.
இதனால் இலட்சக்கணக்கான மக்கள் வறுமையில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆபிரிக்காவில் சகாரா பாலைவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பஞ்சம் அதிகம் ஏற்படுமென கூறப்படுகிறது. ஐ.நா. தகவல்களின் படி உலகில் பட்டினியின் தாக்கம் குறைவடைந்து செல்வதாகவும் ஆனால், சகாரா வலய நாடுகளில் இதன் தொகை மட்டுப்படவில்லையெனவும் தெரிவித்திருக்கும் நிலையில், உலகவங்கியும் தற்போது எச்சரித்துள்ளது. தெற்காசியாவில் தற்போது மழை பெய்யும் முறையும் மாறி வருகின்றதனால் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மின்சாரம், விவசாயம், குடிநீர் போன்றவற்றிற்கு தேவையான நீரினை பெற்றுக் கொள்ளவும் மக்கள் அதிக சிரமங்களை எதிர்நோக்கக் கூடும். இதனால் கடல் மட்டம் உயர்வு, வனப்பகுதிகளில் வரட்சி, மீன்வளம் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதுடன் தொழிற்சாலைகள் அதிகம் தோன்றாத காலத்தில் இருந்ததை விட தற்போது வெப்பம் 4 டிகிரி செல்சியஸால் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதாகவும், உலகவங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படியே தற்போது இந்தியாவில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. மக்கள் தமது அன்றாட கடமைகளை நிறைவேற்றவும் பொருளாதாரத்தில் நலிவடைந்தும் காணப்படுகின்றனர்.
தற்போது இந்தியாவில் அதிகரித்த வெப்பம் காரணமாக மேற்கு வங்கம், ஒரிசாவில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் இதுவரை 852 பேரும், தெலுங்கானாவில் 266 பேரும் வெயிலினால் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசம், ஜார்கண்ட், ஒரிசா, ராஜஸ்தான், டில்லி போன்ற பகுதிகளில் 122 டிகிரி வரையான வெப்பம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. வெயிலில் நேரடியாக தொழில் புரியும் சுமார் 50 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களே கடுமையாக பாதிக்கப்பட்டு இறப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் தமிழகத்திலும் கடுமையான வெப்பம் நிலவி வருவதாகவே தெரிகிறது. கடந்த வாரம் முதல் 104 டிகிரிக்கும் அதிகமான வெப்பமே நிலவி வருகிறது. சென்னை, வேலூர் ஆகிய இடங்களில் 107 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. கடந்த 1947 ஆம் ஆண்டிலேயே தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்சமாக 47.2 டிகிரி அளவிலான வெப்பம் பதிவாகியிருந்தது. ஆனால், தற்போது இதன் நிலை தலைகீழாக மாறியுள்ளது. இதற்கு முன்பு 2002-2003 ஆம் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருந்தனர். 2010 ஆம் ஆண்டு 300 பேர் வெப்பத்தால் உயிரிழந்திருந்தனர். ஆனால், தற்போது இத்தொகை கடுமையான எழுச்சியை கண்டுள்ளது.
இந்தியாவில் தற்போதுள்ள வெப்பம் தொடருமாயின் இன்னும் அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட கூடும். உலக நாடுகள் காலநிலையில் கவனம் செலுத்தாமையும் இதற்கு முக்கிய காரணமாகும். வருடா வருடம் காலநிலை மாநாடுகளை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றும் நாடுகள் செயற்பாடுகளை முன்னெடுப்பதில்லை. தற்கால தொழில் புரட்சியில் தொழிற்சாலைகளின் பெருக்கமே #காலநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாகும். ஆனால், அதனை தடைசெய்யவும் முடியாது. ஆதலால், இயற்கை வளங்களை பாதுகாப்பதனூடே இதற்கான தீர்வுகளை ஓரளவு எட்ட முடியும்.
க.பிரசன்னா
31/05/2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக