கடந்த 50 ஆண்டுகளாக தடைபட்டிருந்த அமெரிக்க கியூப உறவுகள் தற்போது துளிர்விடத் தொடங்கியுள்ளமை அனைவரும் அறிந்ததே. கடந்த ஐந்து வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த அமெரிக்க அரசின் உளவாளியான ஆலன் கிராஸ் கியூப நாட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதன் பின்னர் இருநாட்டு இராஜதந்திர உறவுகளையும் புதுப்பிப்பதற்கான சமிக்ஞைகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 18 மாதங்களாக இடம்பெற்றுவந்த இரகசிய பேச்சு வார்த்தைகளின் பிரதிபலிப்பாக இவை நோக்கப்படுகின்றன. இருநாட்டு உறவுகளை சீர்செய்வதில் கிராஸின் விடுதலை முக்கிய பங்கு வகித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கியூப பிரஜைகள் மூவர் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கம்னியூஸ நாடான கியூபாவினை ஜனநாயக பாதையில் திருப்புவதை நோக்காக கொண்டே அமெரிக்கா இதுநாள் வரையான காலப்பகுதியில் செயற்பட்டு வந்தது. இருநாட்டு உறவுகளின் சுமுகத் தீர்வு காரணமாக கடந்த 50 வருடங்களாக விதிக்கப்பட்டிருந்த பொருளாதார மற்றும் பயணத் தடைகளை தளர்த்துவதற்கும் அமெரிக்கா உத்தேசித்துள்ளது. ஹவானாவிலுள்ள அமெரிக்க தூதரகம் இன்னும் சில தினங்களில் திறப்பதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன.
இருநாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை புதுப்பிப்பதில் கனடா மற்றும் வத்திக்கான் போன்ற நாடுகள் மத்தியஸ்தம் வகித்திருந்தன. அத்தோடு அமெரிக்காவின் கடன் மற்றும் டெபிட் அட்டைகளை கியூபாவில் பயன்படுத்த அனுமதிப்பது, கியூபர்களுக்கு அனுப்ப முடியுமான தொகையை அதிகரிப்பது மற்றும் தொலைதொடர்பு உபகரணங்கள் மற்றும் சேவையை வழங்க அனுமதிப்பது போன்ற மாற்றங்களை அமெரிக்க அரசாங்கம் கொண்டுவர தீர்மானித்துள்ளது. எனினும், கியூபாவுக்கு சுற்றுலா செல்லும் அமெரிக்கர்களுக்குள்ள தடை நீடிக்கும் நிலை தோன்றியுள்ளது.
ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோவின் மூத்த சகோதரர் பிடல் காஸ்ட்ரோ 1956 ஆம் ஆண்டு புரட்சியின் மூலம் கியூபாவில் ஆட்சிக்கு வந்தார். கியூபா இடதுசாரி போக்கை பின்பற்றி முன்னாள் சோவியத் ஒன்றியத்துடன் நெருங்கியதையடுத்து 1961 ஆம் ஆண்டு அமெரிக்கா கியூபாடவுடனான இராஜதந்திர உறவை முறித்துக் கொண்டது. கியூபா-அமெரிக்காவுக்கு இடையில் ஏற்பட்ட உளவு, அகதி மற்றும் ஏவுகணை பிரச்சினைகளால் 1962 ஆம் ஆண்டு உலகம் அணு ஆயுத யுத்த அபாயத்தை எதிர்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்காவில் வாழும் கியூப அகதிகள் 1500 பேர் கொண்ட படை 1961 இல் தெற்கு கியூபாவிற்குள் நுழைந்தது. இதற்கான பயிற்சிகள் அமெரிக்காவால் வழங்கப்பட்டன. இருப்பினும் இதனை கியூபா முறியடித்திருந்தது. இதில் 115 பேர் கொல்லப்பட்டதுடன் 1189 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து காஸ்ரோவினை கொலை செய்வதற்கான முயற்சிகள் பலதடவை மேற்கொள்ளப்பட்டிருந்தன. கடந்த ஐம்பது வருடங்களில் 638 சந்தர்ப்பங்களில் பிடல் கஸ்ரோ அமெரிக்காவின் பிடியிலிருந்து தப்பியுள்ளார்.
அத்தோடு பிடல் கஸ்ரோவுக்கு ஹவானா நகரத்தில்20 வசிப்பிடங்கள் இருந்ததுடன் அவர் எங்கு வசிப்பார் என்பதும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. 1967 ஆம் ஆண்டு கஸ்ரோவின் நெருங்கிய நண்பரான சேகுவராவை பொலிவியாவில் வைத்து அமெரிக்காவின் உளவு நிறுவனம் கொலை செய்தது. இவ்வாறு கடந்த 60 வருடங்களாக அமெரிக்காவின் சதி முறியடிக்கப்பட்டே வந்தது. எனினும், அமெரிக்கா தனது யுக்தியை பொருளாதார ரீதியாக செயற்படுத்த தொடங்கியது. மருந்து இறக்குமதியை தடை செய்ததால் கியூப மக்களின் சுகாதார நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது.
சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தும் மயக்க மருந்துகள், குழந்தைகளுக்கான விசேட மருந்துகள் இன்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர். இதனால் ஆடம்பர பொருட்கள் எதுவுமற்ற நாடாக கியூபா விளங்கியது. கடந்த 50 ஆண்டுகளில் வாங்கிய கார்களையே இன்னும் கியூப மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு பிடல் காஸ்ரோ ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து தலைமைப் பொறுப்பை ஏற்ற ராவுல் காஸ்ரோவும் நாட்டில் ஒரு கட்சி அரசியல் முறையையே கடைபிடித்து வந்ததுடன் கடந்த சில மாதங்களில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்த முனைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இருப்பினும், குவாண்டனாமோ இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியை கியூபாவிடம் திருப்பி கொடுக்க வேண்டுமெனவும், அவ்வாறில்லையெனின் உறவு சாத்தியமில்லை எனவும் ராவுல் கெஸ்ரோ தெரிவித்துள்ளார். 1903 இல் கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி குவாண்டனாமோ விரிகுடாவை அமெரிக்கா முடிவற்ற குத்தகைக்கு பெற்றிருந்தது. இருப்பினும் 1969 ஆம் ஆண்டு ஐ.நா.வின் வியன்னா உடன்படிக்கையின் படி அமெரிக்க ஆக்கிரமிப்பு சட்டபூர்வமற்றதென கியூபா தெரிவித்து வருகிறது. அவ்விரிகுடாவின் தெற்குபகுதியில் அமெரிக்காவினால் 1898 இல் அமைக்கப்பட்ட மிகப்பெரிய கடற்படை தளம் அமைந்துள்ளது. கடந்த பல வருடங்களாக இத்தளம் போர்க் கைதிகளை சிறைவைக்கும் இடமாக மாறியுள்ளது. ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கைதுசெய்யப்பட்டவர்கள் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் குவாண்டனோமா பகுதிகளை திருப்பி தராவிட்டால் இருநாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் சாத்தியமில்லையென ராவுல் காஸ்ரோ தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் அமெரிக்காவுடன் அதிகளவில் முட்டி மோதிக் கொள்வதற்கு அதன் உளவு வேலைகளும் ஒரு காரணம். சகல நாடுகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அது எண்ணுகிறது. இந்நிலையே கென்னடி முதல் கிளிண்டன் வரையான அமெரிக்க ஜனாதிபதிகளால் கியூபா மீது கடைபிடித்து வரப்பட்டது. தற்போது ஒபாமா நிர்வாகம் அதனை தகர்க்க முயற்சிக்கிறது.
க.பிரசன்னா
01.02. 2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக