
உலக அளவில் இணையப் பாவனை என்பது மிக அத்தியாவசியத் தேவையாக மாறியுள்ளது. உலக நாடுகள் இன்று மக்களுக்கு அடிப்படைத் தேவைகளில் இணையத்தையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு இணையம் மக்களிடம் எப்படி ஊடுருவிச் சென்றதோ, அதேபோலவே பிரச்சினைகளும் அவர்களை நாடிவந்தன. சமூகத்தில் நடக்கும் குற்றங்களில் பெரும்பாலானவை இணையக் குற்றங்களேயாகும். அந்தவகையில் பிலிப்பைன்ஸில் இணையம் மூலம் வித்தியாசமான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
பொதுவாக இவ்வாறான சம்பவங்களில் அதிகமான ஆபத்து பெண்களுக்கென்றால் அது தவறு. பிலிப்பைன்ஸில் இடம்பெறும் இணையக் குற்றங்களால் பெண்ணிடம் ஆண்களே சிக்கி சகலதையும் இழந்து தவிக்கும் நிலை தோன்றியுள்ளது. இவற்றில் தற்போது குறிப்பிட்டுக் கூறும்படி பரவிவரும் மோசடிதான் ‘செக்ஸ்டார்ஷன்’ (sextortion) என்று அழைக்கப்படும் பாலியல் ரீதியான மிரட்டல் மோசடிகள். சைபர் குற்றங்களால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். ஆனால் இந்த செக்ஸ்டார்ஷன் மூலம் பாதிக்கப்படுவது ஆண்களாகவே இருக்கின்றனர். உலகம் முழுவதும் இணைய வழியாக நடைபெறும் இம்மோசடிகளால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஆண்கள் பலியாகி வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாடு உலகளவில் செக்ஸ்டார்ஷன் எனப்படுகின்ற ‘செக்ஸ் பிளாக்மெயில்’ குற்றத்துக்கு பெயர்போன நாடாக காணப்படுகிறது. இங்கு இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆபாச இணையத்தளங்கள் வழியாக பல்வேறு நாட்டினருடன் பழகுகிறார்கள்.
அவர்களுடன் ஆபாசக் கதைகள், படங்கள், பேச்சுகளை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களின் பலவீனத்தை அறிந்து அதற்கேற்றாற்போல் அவர்களை தங்கள் வலையில் சிக்க வைக்கின்றார்கள். ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட தொகையை கேட்டு பிளாக்மெயில் செய்கிறார்கள். குறிப்பிட்ட தொகையை தராவிட்டால், உங்கள் ஆபாசப் படங்களை வலைத்தளங்களில் வெளியிடுவோம் அல்லது குடும்பத்தவர் மற்றும் நண்பர்களிடம் காட்டிக் கொடுப்போம் என்று மிரட்டி பணம் பெறுகின்றனர். இப்படி பணம் பறிக்கும் கும்பல்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கின்றன. சமீபகாலத்தில் இவை பெரும் தொழிலாகவே வளர்ந்திருப்பதாக பிலிப்பைன்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருக்கும் குடிசைகள் இந்த இணையவழி மிரட்டல் பணம் பறிக்கும் கும்பல்களின் தலைமையகமாக செயற்பட்டு வருகின்றன. இப்படி செயற்படும் இணைய மிரட்டல் கும்பல்களை சமீபத்தில் இணைய குற்றங்களை கண்டுபிடிக்கும் காவல்துறையினர் சோதனை செய்தபோது இதற்காக முழுநேர வேளையில் இளம் பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
ஒரு நாளைக்கு மூன்று வேளையாக ஒரு தொழிற்சாலையில் பணிபுரிவதைப் போல் இவர்கள் செயற்படுகின்றார்கள். இவ்வாறு இக்கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் ஆண்களிடம் இணையங்களிலிருந்து ஆபாசப் படங்களை நீக்க ஒருவரை பொறுத்து 500 டொலர்கள் முதல் 2000 டொலர்கள் வரை பெற்றுக் கொள்கின்றார்கள். இந்த செக்ஸ்டார்ஷன் கும்பலிடம் சிக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் மன உளைச்சலினால் தற்கொலை செய்து கொண்டுள்ளான். இதையடுத்து செக்ஸ்டார்ஷன் கும்பல்களை சுற்றிவளைத்து மணிலா பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 250 கணினிகளும் மடிக்கணினிகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.
இவ்வாறு இணையங்களில் உலாவும் பாலியல் மிரட்டல் கும்பல்களை எவ்வாறு நாம் இனங்காண்பது என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தும் பின்விளைவுகள் தொடர்பில் யோசிக்காமல் களமிறங்கி இறுதியில் அனைத்தையும் இழந்து விடுகின்றனர். இவ்வாறான கும்பல்களை நாம் பின்வரும் விடயங்களைக் கொண்டு அறிந்துகொள்ளலாம். அழகான பெண்ணிடமிருந்து உங்களுக்கு இணையம் மூலம் அழைப்பு வரும். அடுத்த கட்டம் அந்தரங்கமாக இணைய கமரா மூலம் பேசலாமே என்று சிநேகமாகவும் செல்லமாகவும் கோரிக்கை விடுக்கப்படும். அந்தச் செல்ல சிணுங்கலுக்கு இசைந்து இணைய கமராவில் உரையாடுவதன் மூலம் உங்களுடைய உரையாடல்கள் அனைத்தும் பதிவு செய்யப்படும். இதில் பேசும் பெண்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான மனிதப் பெண்ணல்ல என்பதே இதில் பாதிக்கப்படும் ஆண்களுக்கு தெரியாது. கணினியில் உருவாக்கப்பட்ட அழகான பெண்களின் காணொளியை முன்கூட்டியே பதிவுசெய்து, கணினியில் தானியங்கி முறையில் பேசும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. எனவே ஆண்கள் பலர் பேசுவது கணினியின் செயற்கை பெண்களிடமே. இவ்வாறான மோசடி கும்பல்களை பிலிப்பைன்ஸ் பொலிஸார் கண்டுபிடித்து தண்டனை வழங்க முயன்றாலும் பாதிக்கப்பட்ட ஆண்கள் தமக்கு நேர்ந்த விடயங்களை முன்வைக்க தயங்குகின்றமையும் இக்குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் பிலிப்பைன்ஸில் தானே இடம்பெறுகிறது என்று நாம் அசட்டையாக இருந்துவிட முடியாது. இது போன்றதொரு சம்பவம் அண்டைய நாடான இந்தியாவிலும் பரவியிருப்பது முக்கியமாகும். இங்கு கும்பலாக இவ்விடயம் செயற்படுத்தப்படாவிட்டாலும் ஒரு தனி பெண்ணினால் இவ்விடயம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தன்னை மலையாள நடிகையென அறிமுகப்படுத்திக்கொள்ளும் கேரளாவைச் சேர்ந்த பி.எஸ்.நாயர் என்ற பெண், இணையங்கள் மூலம் தங்களிடம் சிக்கும் வயதான தொழிலதிபர்களிடம், காதல் பேச்சை தொடங்குவார். பிறகு சாட்டிங்கில் காதல் மொழிகளை பரிமாறுவர். இதையடுத்து தொலைபேசி இலக்கத்தை பெற்று பேசுவார்.
இவருடைய வலையில் விழும் ஆண்களிடம் உங்களுடைய குரலில் சிறந்த ஆண்மை இருக்கிறது. உங்களை போன்ற ஒருவரைத்தான் திருமணம் செய்துகொண்டு எனது வாழ்நாளை சுகமாக கழிக்க விரும்புவதாகக் கூறி பதிவுத் திருமணம் செய்துகொண்டு ஒருவருடம் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுவிட்டு அவர்களிடமிருந்து பல இலட்சங்களை பறித்துக் கொண்டு தலைமறைவாகிவிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இணையங்கள் மூலம் ஆண்களை இலக்குவைத்து சிலர் மேற்கொள்ளும் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டோர் ஏராளம். இணையம் என்பது பொழுதுபோக்கு என்ற நிலைமாறி தொழில் முறையில் வளர்ச்சி அடைந்தமையே இதற்குக் காரணம். ஆகவே இணையத்தில் உலாவுபவர்களாக நீங்கள் இருந்தால் இவ்வாறான விடயங்களை தவிர்த்துக் கொள்வது அவசியமாகும்.
க.பிரசன்னா
24/12/2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக