கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

19 பிப்ரவரி, 2015

ரஷ்யா - உக்ரைன் விவகாரம்: மேற்கத்தைய நாடுகளின் சமரச முயற்சி பலனளிக்குமா?



வல்லரசு நாடுகளின் அதிகாரப் போட்டியில் சிறிய நாடுகள் அடிபட்டு போவதென்பது உண்மைதான். அவ்வாறானதொரு நிலைமையே உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் அதிகாரப் போட்டியால் உக்ரைன் மக்களின் நிம்மதி சீர்குலைந்துவிட்டது. கடந்த வருடம் பெப்ரவரி மாதம் ஆரம்பமான இருநாட்டு உறவுகளின் விரிசல்களில் இன்றுவரையும் இணைப்பை காணமுடியவில்லை. தற்போது மேற்கத்தேய நாடுகள் இணைந்து அதற்கான பேச்சில் இறங்கியிருப்பது, சுமுகமான தீர்வை தரும் என எதிர்பார்க்கலாம்.

உக்ரைன் பிரச்சினை மூலம் ரஷ்ய எதிர்ப்பு நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் ஓர் சர்வாதிகாரியாக தென்பட்டார். தற்போது ரஷ்யா உக்ரைன் பிரச்சினைக்கான சமாதான தூதுவராக ஜெர்மனி சான்சிலர் அஞ்சலா மெர்கல் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த தினங்களில் மொஸ்கோவில், புடினுடனான சமரசப் பேச்சு வார்த்தைகளில் அஞ்சலா மெர்கல் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இச்சந்திப்பு பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதுடன் இதன் மூலம் 12 அம்சங்கள் அடங்கிய சமரசத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருந்தது.


அண்மைய செய்திகளின் படி, கடந்த புதன்கிழமை முதல் இடம்பெற்று வரும் ரஷ்யா உக்ரைன் சமாதான பேச்சு வார்த்தையில் சுமுகமான தீர்வுகள் எட்டப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். இன்று 15ஆம் திகதி நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. மின்ஸ்க்கின் நகரில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்களில் கனரக பீரங்கி ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை, கைதிகளை விடுதலை செய்தல், சர்வதேச எல்லை கட்டுப்பாட்டினை நிறுவுதல் போன்ற விடயங்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

பெலாரஸ்ஸின் மின்ஸ்கின் நகரில் நடைபெற்ற இப்பேச்சு வார்த்தை 15 மணி நேரங்கள் நீடித்திருந்தது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் தலைமையில் இடம்பெற்ற அமைதிக்கான பேச்சு வார்த்தை ஓரளவு வெற்றியடைந்துள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் முன்னேற்றங்களை காணலாம்.

உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை ரஷ்யா தன்னோடு இணைத்துக் கொண்டமை தொடர்பிலேயே இரு நாடுகளுக்குமான போர்ப் பிரகடனம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த 10 மாதங்களில் இரு நாடுகளுக்குமான கிரிமியா பிரச்சினையில் 5 ஆயிரம் பேர் உயிரிழந்ததுடன், 10 இலட்சம் போர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். எனினும், உக்ரைன் ரஷ்யா பிரச்சினை வெறுமனே புடின் காலத்தில் தோன்றியதல்ல. ஸ்டாலின் காலத்தில் தோன்றிய சோவியத் யூனியனின் பிரதிபலிப்பாக கூட இவை இருக்கலாம்.

1917ஆம் ஆண்டுக்குப் பிறகு ரஷ்யா தன்னுடன் சில நாடுகளை இணைத்துக் கொண்டு சோவியத் ரஷ்யா என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. இதில் உக்ரைனும் ஒன்று. இருப்பினும் உக்கரனை தனது முழுமையான அங்கமாக மாற்றிக்கொள்ள எடுத்த முயற்சிகளே ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான பிரிவினைவாத போக்குக்கு வழியேற்படுத்தியது எனலாம். தற்போது மேற்கு உக்ரைனில் உக்ரைனிய மொழி பேசுபவர்களும், கிழக்கு உக்ரைனில் ரஷ்யா மொழி பேசுபவர்களும் அதிகமாக உள்ளனர். ஆனால், சோவியத் யூனியன் காலத்தில் கிழக்கு உக்ரைனிலும் உக்ரைனிய மொழி பேசுபவர்கள் அதிகமிருந்தனர். 1932ஆம் ஆண்டு உக்ரைனில் ஏற்பட்ட பஞ்சத்தில் 1 கோடி பேர் உயிரிழந்தனர். அப்பகுதிகளில் கோடிக்கணக்கான ரஷ்யர்களை திட்டமிட்டு குடியமர்த்தியவர் ஸ்டாலின். மேற்கு உக்ரைன் போலாந்தின் ஒரு பகுதியாக இருந்தமையால் ரஷ்யர்களை அங்கு ஸ்டாலினால் குடியமர்த்த முடியவில்லை. இதற்கு வரலாற்றுப் பின்னணிகள் ஒரு காரணமாக கூறப்படுகிறது. சோவியத் யூனியன் உருவாகிய காலப்பகுதியில் ஏற்பட்ட ரஷ்யப் புரட்சியின் போது உக்ரைன் மக்கள் தங்களுக்கு சுதந்திரம் வேண்டி போராட்டத்தில் இறங்கியிருந்தனர். ஆனால், இதற்கு சோவியத் யூனியன் சம்மதம் தெரிவிக்காமல் அடக்குமுறையின் மூலம் உக்ரைனை தம்மோடு இணைத்துக் கொண்டது.

எனினும், உக்ரைன் சோவியத் யூனியனிலிருந்து விடுபடவே விரும்பியிருந்தது. இருப்பினும் ஸ்டாலின் அதனை விரும்பியிருக்கவில்லை. இந்நிலையில் சோவியத் யூனியனில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு கால கட்டத்திலும் விவசாய விளைச்சலுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. உக்ரைன் விவசாய விளைச்சல் அதிகமாக இடம்பெறும் இடமாகும் என்பதால் அங்கு தானியங்களை பதுக்கி வைக்கும் நிலையை தவிர்ப்பதற்காகவும் பழிவாங்கள் நடவடிக்கையாகவும் அங்கு இலக்கு ஏனைய நாடுகளை விடவும் அதிகரித்து நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உக்ரைனிலுள்ள விவசாயிகளின் வீடுகளுக்கு படையெடுத்த ரஷ்யப் படைகள் அவர்களுடைய விபரங்களை ரஷ்ய அதிகாரிகளுக்கு இரகசியமாக சமர்ப்பித்ததுடன், அவர்களில் ஒவ்வொருவராக ரஷ்யாவின் தண்டனைப் பகுதியான சைபிரஸுக்கு கடத்தப்பட்டு காணாமல் போயினர். என்பதுடன், உக்ரைனின் எல்லைப் பகுதிகளுக்குள் ரஷ்யப் படைகள் பலவந்தமாக உட்புகுந்தன. இதனால் உக்ரைனில் வரலாறு காணாத பஞ்சம் ஏற்பட்டிருந்தது. இதுவே உக்ரைன் மக்கள் சோவியத் யூனியனிலிருந்து சுதந்திரம் பெற விரும்பியமைக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. ஆனால், உக்ரைனின் வளங்களை பெருமளவுக்கு வீணாக்கிய பெருமை ஸ்டாலினுக்கே உண்டு.

இதன்பின் ஏற்பட்ட உலகப் போரின் பின் உக்ரைனியர்களில் ஒரு பகுதியினர் ஜேர்மனிக்கு ஆதரவாகவும் மற்றொரு பகுதியினர் சோவியத் யூனியனுக்கு ஆதரவாகவும் செயற்பட்டிருந்தனர். இப்போரின் பின் ஸ்டாலினின் ஆட்சி ஒரு முடிவுக்கு வரவே புதிய ஜனாதிபதியாக கோர்பஷேவ் பதவியேற்றுக் கொண்டார். ஸ்டாலினைப் போல் இல்லாது, உக்ரைனில் ஏற்பட்டிருந்த பாதிப்புகளை களைய அதிக முயற்சிகளை இவர் மேற்கொண்டிருந்தார். சோவியத் யூனியனில் இணைந்து கொண்டிருந்த நாடுகள் அனைத்தும் தமக்கென சுயாட்சிகளை கொண்ட நாடுகளாக இருந்ததால் கம்யூனிஷத்தை வலுவாக செயற்படுத்த விரும்பும் ரஷ்யாவுக்கு கீழ் அடிபணிந்து செயற்பட அவை விரும்பியிருக்கவில்லை.

அத்தோடு பொருளாதார வலிமையிலும் தன்னை நிலைநிறுத்த சோவியத் யூனியன் தவறியதால் பொருளாதார பின்னடைவை சந்திக்க நேரிட்டது என்பதுடன், லித்வேனியா, லத்வியா, உக்ரைன் போன்ற நாடுகள் சுதந்திரத்தை பெறவே விரும்பியிருந்தன. இதனால் சோவியத்தின் பலம் கேள்விக்குறியானதுடன், ரஷ்ய ஜனாதிபதி கோர்பஷேவ் தீவிர கம்யூனிஸ்ட்களால் கடத்தப்பட்டும் அவர்களுக்கு இராணுவ உதவி கிட்டாததால் அவரை விடுதலை செய்தனர். இதன் பின் 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் கலைக்கப்படுவதாக ரஷ்ய ஜனாதிபதி எல்வஸ்டன் உத்தியோகபூர்வமாக அறிவிக்க உக்ரைன் தன்னை தனி நாடாக பிரகடனப்படுத்திக் கொண்டது.

இருப்பினும், சோவியத் யூனியன் காலப்பகுதியில் காணப்பட்ட வீட்டோ அதிகாரம் மற்றும் அணுஆயுதங்கள் அனைத்தும் ரஷ்யாவுக்கே சொந்தம் என்ற நிலை உருவானதுடன், இன்றும் ரஷ்யாவுக்கு அருகே சோவியத் யூனியன் காலப்பகுதியில் இருந்த சில நாடுகள் இயங்கி வருவதால் அவை ரஷ்ய கூட்டமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு இவையே பிரதான காரணமும் கூட. தற்போது மேற்கு உக்ரைனிலுள்ள மக்கள் உக்ரைன், ஐரோப்பிய யூனியனோடு இணைந்து கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால், சோவியத் யூனியன் காலப்பகுதியில் (2000-2008) ஜனாதிபதியாக விருந்த புட்டின் மீண்டும் சோவியத் நாடுகளை ஒன்றிணைத்து ஏனைய மேற்கத்தைய நாடுகளுக்கு சவால் விட முனைகின்றார்.

இதன் ஆரம்பமே உக்ரைனின் கிரிமியா பகுதி ரஷ்யாவோடு இணைக்கப்பட்டதாகும். உக்ரைனில் உள்ள ஒரு பகுதிதான் கிரிமியா. இது டாரிக் தீபகற்பம் என்று அழைக்கப்படுகிறது. கருங்கடலின் வடக்கு கடற்கரையில் அமைந்திருக்கும் இப்பகுதியை ரஷ்யா, சோவியத் யூனியனில் இருந்து பிரிந்தபோது கிரிமியா உக்ரைனின் ஒரு பகுதியென்றே கூறியிருந்தது. உக்ரைனின் கிரிமியா பகுதியானது 18ஆம் நூற்றாண்டு முதல் ரஷ்யாவினதும் பின்பு சோவியத் யூனியனினதும் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. 1954 பெப்ரவரி, அப்போதைய சோவியத் தலைவர் கோர்பஷேவினால் உக்ரைனுக்கு, ரஷ்ய பேரரசில் இணைந்து 300 ஆண்டுகள் நிறைவின் நினைவாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யர்கள் அதிகமாக வாழும் கிரிமியப் பகுதி ஒரு சுயாட்சி நாடாகும். இதற்கென தனி பாராளுமன்றமும் உண்டு. 4.4 கோடி மக்கள் தொகையினை கொண்ட கிரிமியாவில் 58 சதவீத ரஷ்ய மக்களும், 24 வீத உக்ரைனியர்களும், ஏனைய மக்கள் 18 வீதமானோரும் வசிக்கின்றனர். ஆனால், கிரிமியாவில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் போது உக்ரைனின் அனுமதி அவசியம். ஆனால், கடந்த வருடம் கிரிமியா எம்.பி.க்கள் இணைந்து, தாமாகவே பிரதமரை தெரிவுசெய்து கொண்டனர். அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட செர்ஜி அக்சயனோவ் ஒரு ரஷ்ய ஆதரவாளராவர். இவரே கிரிமியாவை ரஷ்யாவோடு இணைப்பதற்கான மக்கள் வாக்கெடுப்பை நடத்துவதற்கு கோரியிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே கடந்தாண்டு மார்ச் மாதம் 16ஆம் திகதி கிரிமியாவில் பொது மக்கள் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

கிரிமியாவை ரஷ்யாவோடு இணைக்க வேண்டுமா? அல்லது உக்ரைனின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டுமா? என்ற பொது மக்களின் வாக்கெடுப்பில் வாக்களித்தவர்களில் 95 சதவீதமானவர்கள் ரஷ்யாவுடன் இணையவே விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால், இதனை ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் கடுமையாக எதிர்த்திருந்தன. அதையும் மீறி மார்ச் மாதமே ரஷ்ய பாராளுமன்றம் கிரிமியா ரஷ்யாவோடு இணைவதான தீர்மானத்தை நிறைவேற்றி, இணைத்தும் கொண்டது.

இதன் தொடர்ச்சியாக உக்ரைனின் டோன்பாஸ் பகுதியும் உக்ரைனிடமிருந்து பிரிந்து தம்மை குடியரசாக பிரகடனப்படுத்தியதோடு தமக்கான தேசியக் கொடியையும் உருவாக்கிக் கொண்டது. ஆனால், இங்கு பெரும்பான்மையான மக்கள் ரஷ்யர்கள் என்பதால் கிரிமியாவிற்கு அடுத்த படியாக ரஷ்யாவோடு இப்பகுதியும் இணைந்து கொள்ளுமா என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது. மறுமுனையில் கிரிமியாவை, ரஷ்யப் படைகளுடன் இணைந்து கிரிமிய இராணுவத்தினரும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், இதற்கு ரஷ்யா மறைமுகமாக ஆயுத உதவிகளையும் வழங்கியிருந்தது.

இதற்கு வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்திருந்த ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்திருந்தன. ஆனால், எதற்கும் ரஷ்யா இசைவாக்கமடைவதாக தெரியவில்லை. இந்நிலையிலேயே தற்போது அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் கூட்டு முயற்சியினால் சமரசப் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதுடன், சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ரஷ்யா, கிரிமியாவை ஆக்கிரமித்த பிறகு தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை தற்போது உச்ச கட்டத்தை அடைந்துள்ளன. ஆனால், இதன் ஆரம்ப காலப்பகுதிகளில் இதைவிடவும் மோசமான இராணுவத் தாக்குதல்களை உலகமும் சந்தித்திருந்தது. நெதர்லாந்திலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு உக்ரைன் வான் வழியாகச் சென்ற போயிங் 777 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 280 பயணிகளும் 15 பணியாளர்களும் உயிரிழந்தனர். ஆனால், இச்செயலுக்கு இருநாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டனவே தவிர, வேறெதனையும் செய்திருக்கவில்லை.

ஆனால், இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் பேராசையில் பலியானது வேறுநாட்டு பொது மக்கள் மாத்திரமே. இதில் ரஷ்ய தயாரிப்பான ஏவுகணையே பயன்படுத்தப்பட்டிருந்தது. அத்தோடு விமானம் பயணித்த அதே பயண வழியில் மற்றொரு விமானத்தில் புடினும் பயணம் செய்துள்ளதோடு, விபத்துக்குள்ளான விமானத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் பயணம் செய்ய விருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறெனின் இது வல்லரசுகளுக்கிடையிலான திட்டமிட்ட செயலாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால், ஆதாரங்கள் எவையுமில்லை.

தற்போது பிரச்சினை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக தனது பொருளாதார அஸ்திரத்தை எய்த தொடங்கியிருக்கிறது. ரஷ்யாவிலிருந்து உக்ரைன் இறக்குமதி செய்யும் எரிவாயுவுக்கு 80 மடங்கு விலையுயர்வை ஏற்படுத்தியுள்ளதுடன், இதுவரையும் எரிவாயுவுக்காக உக்ரைன் செலுத்த வேண்டிய 195 பில்லியன் அமெரிக்க டொலரையும் உடனடியாக செலுத்த வேணடும் என கூறப்பட்டுள்ளது. ஜோர்ஜியாவில் தொடங்கிய ரஷ்ய ஆக்கிரமிப்பு தற்போது கிரிமியாவையும் தாண்டி கிழக்கு உக்ரைனுக்கு மாறியுள்ளது.

தற்போது கிழக்கு, மேற்கு உக்ரைனில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள், பாரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த சில தினங்களில் மட்டும் 1500 படை வீரர்களையும், இராணுவ உபகரணங்களையும் ரஷ்யா அப்பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இருப்பினும் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருவதால் ஒருவேளை இது ரஷ்யா அமெரிக்க பிரச்சினையாக கூட மாறும் சாத்தியம் காணப்படுகிறது. ஐரோப்பிய யூனியனுடன் அமெரிக்கா இணைந்து செயற்பட்டு வரும் நிலையில், தம்மை தனிமைப்படுத்துவதாக எண்ணிக்கொண்டுள்ள ரஷ்யா தமது சோவியத் யூனியன் நாடுகளை தம்மோடு இணைத்து மீண்டும் கூட்டு சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்த விரும்புகிறது. இது தனிப்பட்ட வல்லரசு பிரச்சினையாயினும் அதிகாரங்களை தம்கையில் வைத்திருப்போர் மக்கள் மனதில் பிரிவினை வாதத்தினை விதைத்து, அதன் மூலம் அரசியல் இலாபங்களை அடைய முனைகின்றனர். இதில் உக்ரைன் என்ன விதிவிலக்கா? சுயாதீன ஆட்சி நிலவும் ஒரு நாட்டில் அத்துமீறி நுழைவது சர்வதேச குற்றம், இது சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு தெரிந்திருந்தும், அதிகாரப் போட்டியும், ஆயுதப் போட்டியுமே இங்கு சூழ்நிலையை தீர்மானிப்பதால் இப்பிரச்சினை நிறைவுக்கு வருமென்று எதிர்பார்க்க முடியாது.

ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பகுதி உக்ரைனின் சுயாட்சி பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும் அல்லது உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டும். இரண்டும் நடைபெறப் போவதில்லை. இங்கு வல்லரசுகளின் இடையில் ஆயுதங்கள் கொண்டு போர் இடம்பெறாவிட்டாலும் எதிர்காலத்தில் அதைவிடவும் பொருளாதாரம் ஒரு அஸ்திரமாகவும் பயன்படுத்தப்படக்கூடும்.

கிரிமியா பிரச்சினை

2014 பெப்ரவரி 21: உக்ரைனில் ஏற்பட்ட புதிய ஆட்சியை மேற்குலகு ஆதரிப்பு; ரஷ்யா எதிர்ப்பு.

பெப்ரவரி 26: ரஷ்யா கிரிமியாவை கைப்பற்றி பாராளுமன்றத்தை கலைத்தது.

மார்ச் 16: கிரிமியாவில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மார்ச் 17: உக்ரைனிடமிருந்து கிரிமியா சுதந்திரம் பெற்றதாக கிரிமிய பாராளுமன்றம் அறிவிப்பு.

மார்ச் 18: கிரிமியா ரஷ்யாவோடு இணைக்கப்பட்டதாக அறிவிப்பு.

மார்ச் 27: ஐ.நா.பொதுசபை ரஷ்யாவின் தீர்மானத்தை நிராகரித்தது.

ஏப்ரல் 15: கிரிமியா, ரஷ்யாவின் தற்காலிக ஆக்கிரமிப்பு பகுதியென உக்ரைன் பாராளுமன்றம் அறிவிப்பு.




க.பிரசன்னா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக